Wednesday, February 25, 2009

ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!!

நான் இளையராஜா மற்றும் கமலின் பரம ரசிகன். கல்லூரி நாட்களில், விடுதியில், இரவு உணவு முடிந்த பின், படுக்கப் போகும் வரை தினமும் சண்டைதான் நடக்கும். நான்கு நாட்கள் இளையராஜா ரஹ்மான். மூன்று நாட்கள் கமல் ரஜினி. இப்போது யோசித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. இந்த சண்டைக்காகவே ரஹ்மான் பற்றியும் ரஜினி பற்றியும் நிறைய தெரிந்து கொண்டேன்.

கொஞ்ச நாட்களுக்கு முன் கமலை ஒரு விழாவில் ஆஸ்கார் நாயகனே என்று புகழ, டென்சனான கமல், ஆஸ்கார் என்பது அமெரிக்க படங்களுக்கு, அமெரிக்கர்களால் கொடுக்கப்படுவது. அதற்காக நாம் ஒன்றும் அலைய வேண்டியதில்லை என்றார். சரிதான் என்று எண்ணிக் கொண்டேன். [இப்போது கூட அவர் ரஹ்மானை பாராட்டும்போது கவனமாக வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார்]

ரஹ்மானுக்கு ஆஸ்கார் என்றவுடன் கூட சாதாரணமாகத்தான் ஒ! அப்படியா? என்றேன். சற்றே யோசித்துப் பார்த்தால், நான் சற்று பொறாமைப்படுவது எனக்கே தெரிந்தது. ராஜாவுக்கு கிடைக்கவில்லையே என்று சற்று அபத்தமாகக் கூட யோசித்தேன். ராஜாவின் தீவிர ரசிகனாகி விட்டபின், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் மற்றவர்களை அணுகுகிறேன். ஆனாலும், ஏதாவது நான்கு நல்ல வார்த்தை சொல்ல வேண்டுமல்லவா? அதுதான் இந்த பதிவு.

ரஹ்மானிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அவர் படங்களை தேர்வு செய்வதுதான். அவர் இசையமைத்த படங்களை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். இசையைத் தவிர மற்றவையும் ஓரளவு ரசிக்கும்படி இருக்கும். இருந்தாலும் அவ்வப்போது தவறுவது சகஜம்தான். 'வண்டிச்சோலை சின்ராசு' முதல் 'சக்கரக்கட்டி' வரை அது நடந்துள்ளது. இருந்தாலும் இது ரஹ்மானின் மிகப் பெரிய பலம்.

அது மட்டுமன்றி அவரின் பெருவாரியான படங்கள் தேசப் பற்றை மையமாகக் கொண்டவை. தனது பங்கை ரஹ்மான் அவற்றில் சரியாக செய்திருப்பார். ராஜாவுக்கு அது போல கிடைத்தவை குறைவுதான். 'சிறைச்சாலை' போன்றவற்றில் நன்றாக செய்திருந்தாலும், இன்னும் செய்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

ராஜாவின் பலம், பலவீனம் இரண்டுமே அவர் தேர்வு செய்யும் படங்கள்தான். அவரின் ஆரம்ப காலம் முதல், 2000த்தின் இறுதி வரை, அவர் இசையமைத்த பாடங்களில் பாதிக்கு மேல் அவரின் இசைக்காக மட்டுமே அறியப்படுபவை. அவரின் பல நல்ல பாடல்கள் இது போல அறியப்படாத பாடங்களில் உள்ளன. 'புதுப்பாட்டு' என்ற ராமராஜன் படத்தில், 'நேத்து ஒருத்த ஒருத்தர் பாத்தோம்' என்ற ஒரு அட்டகாசமான பாடல். எனது நண்பன், [ரஹ்மானின் வெறியன்] அவனுக்கும் பிடித்த பாடல். அந்த பாடலை ஒரே ஒரு முறை பார்த்தோம். நானே கலங்கிப் போய் விட்டேன். இதே போல நிறைய பாடல்கள். ராஜா இசைதான். ஆனால், என்ன படம், யார் நடித்தது என்று தெரியாது. ராஜா மட்டும்தான் தெரிவார். அதுதான் ராஜா.

நேரம். வருடத்திற்கு ஓரிரு படங்கள் மட்டும் வரும்போது, எதிர் பார்ப்புகள் கூடும். ரஹ்மான் அதை சரியாக செய்தார். இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த எதிர் பார்ப்புகளை சரியாக பூர்த்தி செய்தார். ஆரம்ப வருடங்களில் சறுக்கினாலும், பின் சுதாரித்து விட்டார்.

ராஜாவோ, எதை எடுப்பது, எதை விடுப்பது என்று தெரியாத அளவுக்கு அள்ளிக் கொடுத்து விடுகிறார். ஒருவேளை, ராஜாவுக்கு 34 வயதில் கிடைத்த முதல் வாய்ப்பு, ரஹ்மான் போல 25 வயதிலேயே கிடைத்திருந்தால், இன்னும் பல அருமையான பாடல்கள் கிடைத்திருக்கும். அவற்றில் பாதிக்கு மேல், ஒரு குறிப்பிட்ட மக்களுக்குள்ளேயே அடங்கியிருக்கும். அதாவது ராஜாவின் தீவிர ரசிகர்கள். ராஜாவின் சமீப கால பாடங்களில் கூட, தனம், அஜந்தா மற்றும் மது போன்றவை தீவிர ரசிகர்களால் மட்டுமே ரசிக்கப்பட்டன.

இப்போது கூட, பாடல்களை ரி-மிக்ஸ் செய்வதற்கு பதில், 'சுப்ரமணியபுரம்' போல நேரடியாக பயன்படுத்தலாம். படமும் வெற்றியடையும். பாடல்களும் அனைவரையும் சென்றடையும். முன்பெல்லாம், சன் மியுசிக்கில், குறிப்பாக இசையருவி ஆரம்பிக்கப்பட்ட புதிதில், 'தனிக்காட்டு ராஜா' படத்தில் வரும் 'நான்தான் டாப்பு' பாடல் அடிக்கடி வரும். எனது நண்பர்கள், அதை தேடி எடுத்து, இன்னும் ரிங் டோனாக வைத்துள்ளனர்.

பின்னணி இசை. ராஜாவின் சிறப்பு, நாம் கண்ணை மூடிக்கொண்டாலும், காட்சிகள் கண் முன் விரியும். பெரும்பாலும், படத்திற்கான தீம் ஒன்று, மற்றபடி காட்சிகளுக்கேத்தான் அவர் இசை இருக்கும். பாத்திரத்துக்கென்று தனி இசை எனக்கு தெரிந்து குறைவுதான். அவரிம் பின்னணி இசைத் தொகுப்பை நிறைய வைத்துள்ளவன்/கேட்டுள்ளவன் என்ற முறையில் சொல்கிறேன்.

ரஹ்மானின் பின்னணி இசையில், படத்திற்கென்று ஒரு தீம் இருக்கும், அந்த கதாநாயகனுக்கும் ஒரு தீம் இருக்கும். அவை தனியே கேட்டாலும் அருமையாக இருக்கும். ஜென்டில்மேன் முதல் சிவாஜி வரை தொடர்கிறது. இவையாவும் எனது நண்பர்களுக்கான ரிங் டோன்.

இயக்குனர்களை இயக்கம் விதம். ரொம்ப நாள் முன் படித்த செய்தி. ரஹ்மானைப் பற்றி. மணி ரத்னம், ஷங்கர் மற்றும் ஹிந்தியில் சுபாஷ் கை போன்றோர்க்கு மட்டும் ரஹ்மானே உடன் அமர்ந்து, மெட்டமைத்து, திருப்தி இல்லையெனில் புது மெட்டு அமைப்பாராம். கதிர், பிரவீன் காந்த் போன்றோர்க்கு, தான் போட்டு வைத்துள்ள மெட்டுக்கள் அமைந்த குறுந்தகடை கொடுப்பாராம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் மெட்டுக்களுக்கு, இசையமைப்பாராம். எப்போதாவது வருபவர்களுக்கு, ஹிந்தி பாடல்கள். 'தெனாலி' படத்திற்கு முதலில் ஹிந்தி பாடல்களைத்தான் கொடுத்தாராம். கமலே நேரடியாக வந்து, பேசி புது மெட்டுக்கள் வாங்கியதாக வதந்தி. இவை உண்மையா, இல்லையா என்பது தேவையில்லை. ஆனால், ரஹ்மான் தனது திறமையை வெளிக்காட்டுவது மணி, ஷங்கர் படங்களில்தான் என்பது என் எண்ணம்.

ராஜாவும் கிட்டத்தட்ட அப்படித்தான் என நினைக்கிறேன். புது இயக்குனர்கள் கதை சொல்லும்போது, அவரே இந்தந்த இடங்களில் பாடல்கள் வைக்கலாம் என்பாராம். அவர் என்ன செய்வார்? சரியென்று சொல்ல வேண்டியதுதான். அவர் நினைத்தது எப்படியோ? வசந்த், கதிர் போன்றோர் அதனால்தான் தமது முதல் படங்களுக்குப் பின் ராஜாவை பயன்படுத்திக்கொள்ளவில்லை என நான் நினைக்கிறேன்.

நவீன தொழில் நுட்பங்கள். அவரின் ஆரம்பகால படங்கள் வெளிவந்த போது, என் வீட்டில் இருந்ததோ ஒரு ஓட்டை ரேடியோ. அதில் பாட்டு ஓடுகிறது என்பதை கண்டு பிடிப்பதே பெரிய விஷயம். அதனால், இசை நுட்பங்கள் புரியவில்லை. ஆனால், ராஜாவின் பாடல்களுக்கு, அந்த நுட்பம் தேவைப்படவில்லை. ஆனால், தெரிந்த பின், துல்லியமான இசையை சேர்த்து அனுபவிக்க முடிந்தது.

மெல்லிசை மன்னர் காலத்துப் பாடல்களில், வரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ராஜாவின் காலத்தில், இசையாக மட்டுமே பெரும்பாலும் ரசிக்கப்பட்டது. அவரின் நிறைய பாடல்களுக்கு அர்த்தம் அறிந்தால், 'சீச்சீ' என்றாகி விடும். 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் அர்த்தம் புரிந்த நண்பன், கடைசியா 'அங்கதான்' வராங்களா என்றான். அதே போல 'சிந்திய வெண்மணி' பாடல். இவை யாவும் 'இல்லை மறை காய் மறை' போல. இனிய இசையில் மறைந்துவிட்டன. ரஹ்மான் இசையில், பெரும்பாலும் இசையே ஆக்கிரமித்தது போல தோன்றும். விதி விலக்கும் உண்டு. வித்தியாசமான பாடகர்களும் பாடுவது நன்றாக இருக்கும். ஆனாலும், ஒரு சில பாடல்கள்.. குறிப்பாக 'ரட்சகன்' படத்தில் வரும் 'லக்கி லக்கி' பாடலை சுக்விந்தர் சிங்கும், பாலுவும் பாடியிருப்பார். படத்தில், பாடல் காட்சியில் நடித்தவர்கள் நாகார்ஜுனாவும், பாலுவும். சுக்விந்தர் குரலுக்கு பாலுவும், பாலு குரலுக்கு நாகார்ஜுனாவும் நடித்திருப்பார். அது சற்றே ஒரு மாதிரி இருக்கும். ஆனால், சமீபத்தில் பாலு அதைப் பற்றி புகழ்ந்து பேசினார். ஆனாலும், பாடல் அருமை.

என்னதான், சால்ஜாப்பு சொன்னாலும், இதுவரை நம்மவர்கள் செய்யாததை, முதல் முறையாக அடைந்ததில் நாம் அனைவரும் கண்டிப்பாக பெருமை கொள்ள வேண்டும். இது வெறும் ஆரம்பம்தான். இனி வரும் கால கட்டங்களில், ரஹ்மானும் நிறைய விருதுகளை வாங்க வேண்டும். நம்மவர்களில் திரையுள்ள மற்றவர்களும் ரஹ்மான் சொன்னது போல, நிறைய வாய்ப்புகள் பெற்று ஆஸ்கார் விருதை, நம்ம ஊர் கலைமாமணி போல ஆக்க வேண்டும் என்று கூறி, இத்துடன் எனது பதிவை முடித்துக் கொள்கிறேன்.

                                                      "ஜெய் ஹோ ரஹ்மான்"

டிஸ்கி : எனக்கு ரஹ்மானை பற்றி பேசும்போது எப்படியாவது ராஜாவைப் பற்றி பேசுவேன். முடிந்த அளவு நன்றாக எழுதியுள்ளதாகவே எண்ணுகிறேன். தவறென்றால் சுட்டிக்காட்டவும். தயவு செய்து சண்டை வேண்டாம். ஏனென்றால், 'நான் அந்தளவுக்கெல்லாம் வொர்த் இல்லப்பா!'