Friday, June 30, 2017

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

இளையராஜா 40!:

"அட என்னப்பா இது எப்ப பாரு இளையராஜா 1000, இளையராஜா 2000ன்னு சொல்லிக்கிட்டு" என்று எனக்கே தோன்றுகிறது. இருந்தாலும் என்ன செய்ய. உண்மையில் இப்போது ராஜா ஆடுகளம் பேட்டைக்காரன் போல ஆகி விட்டார். ஊரில் உள்ள 70 வயது பெரியவர் போல "இப்பல்லாம் அந்தக் காலம் மாதிரி இல்ல. அப்பல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா" என்றாகி விட்டார்.

13 வருடங்களில் 500 படம் (1990 - அஞ்சலி), அதிலும் 90 சதவிகிதம் வெற்றி ஏற்ற பாடல்கள். அப்படிப்பட்ட ராஜா, அடுத்த 500 படங்கள் இசையமைக்க 26 வருடங்கள் ஆகி விட்டது. அதில் வெற்றி என்று பார்த்தால் 60 சதவிகிதம் இருக்கலாம். அதிலும் கடைசி 10 வருடங்கள் உண்மையில் "அவ்ளோல்லாம் ஒண்ணுமில்ல" கதைதான்.

இதற்கு மிக முக்கியமான காரணம் ராஜாவிடம் இருந்து அந்த திறமையை வெளிக் கொண்டு வரும் இயக்குனர்கள் யாருமில்லை. எனக்கு தெரிந்து அந்த அளவு திறமையான இயக்குனர்கள் யார் என்றால், மணிரத்னம், பாலு மகேந்திரா (மறைந்தாலும்), பாசில், மகேந்திரன் போன்றவர்கள்தான். இவர்கள் அனைவருக்கும் இசையமைத்த பாடல்கள், பின்னணி இசை அனைத்துமே வெற்றி பெற்றவை.

இவர்களில் இப்போது படம் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று சொல்லும் அளவிற்கும் யாருமில்லை. மகேந்திரன் இளையராஜாவுடன் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இணைவதாக சொல்லப்பட்டது. அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. பாசில் படம் இயக்குவதையே விட்டு விட்டார். மணிரத்தினம் ராஜாவுடன் இணைய வாய்ப்பு குறைவு.

இவர்கள் தவிர, ஓரளவு நம்பிக்கை தரக்கூடிய இருவர், கமல் மற்றும் பாலா. பாரதிராஜா கூட சந்தேகம்தான். அதுவரை "அந்தப் படத்துல இந்தப் பாட்டு கேட்ருக்கியா" என்று புராணம்தான். இதுவே என் பதிவு. அதுவே உங்கள் தலையெழுத்து.

பொதுவாக ராஜா மேல் உள்ள பொதுவான குற்றச்சாட்டு 'மெட்டுக்கு பாட்டு' போட்டதால் கவிதை நயமே இல்லை. தந்தன தந்தன, லாலாலாலா, ஜிங்கிடி ஜிங்கிடி, என ஏதேதோ வார்த்தைகள் எல்லாம் பாடல்களாக வந்து விட்டன என்பதுதான். இதை வேறொரு வகையில் பார்த்தால், ஒரு உரையாடலைக் கூட பாடலாக மாற்றி நம்மை முணுமுணுக்க வைத்துள்ளார். 

இந்த 3 பாடல்களைக் கேளுங்களேன் (பார்த்தால் வரும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல). ஆனாலும் நடுவில் வழக்கம் போல மாறி விடும்.

இசை பாடும் தென்றல் என்றொரு படம். அதில் வரும் "எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது" என்ற பாடல்.


நினைவு சின்னம் படத்தில் வரும் "ஊருக்குள்ள உன்னயப் பத்தியும் என்னைய பத்தியும்" பாடல்.


புது நெல்லு புது நாத்து படத்தில் வரும் "ஏய் மரிக்கொழுந்து, என்னம்மா கிருஷ்ணவேணி" பாடல்.


விமர்சனம்:

கடந்த சில மாதங்களாக எந்தப் படமும் அந்தளவிற்கு மனதைக் கவரவில்லை. குறிப்பாக சொன்னால், இந்த வருட ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான். விமர்சனங்கள் நன்றாக இருந்தாலும் கூட எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. குறிப்பாக பவர் பாண்டி. 3 நாட்களில் ஒரு காதல் முறிவு, அதற்கும் தெளிவான காரணமே இல்லை. சாதியா, பணமா, படிப்பா என்று எதுவும் சொல்லப்படவில்லை.

3 படம் மொக்கையாக இருந்தாலும் அதன் முதல் பாதி அதிலும் குறிப்பாக பள்ளிப்பருவ காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். ஏனென்றால் தனியாக டியூஷன் போய்ப் படித்த எல்லோருக்கும் அதன் நினைவுகளை தட்டி எழுப்பியிருக்கும். இதில் அது போல ஒன்றுமேயில்லை.

8 தோட்டாக்கள் படமும் அதே போலத்தான். லென்ஸ் படம் பரவாயில்லை. மரகத நாணயம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

திரைத்துறைக்கு யோசனை:

கல்யாணத்திற்கு முன்பு, எப்படியும் வாரம் ஒரு முறையாவது திரையரங்கம் சென்று விடுவோம். நான் தனியாக இருக்கும்போது கூட திரையரங்கில்தான் பார்ப்பேன். ஆனால், இப்போதெல்லாம் செல்ல முடியாததால் தரவிறக்கம்தான். ஆனால், முதல் நாளே ஏதோ ஒரு தளத்தில் சென்று பார்ப்பதெல்லாம் இல்லை. பொறுமையாக காத்திருந்து நல்ல பதிப்பு வந்த பிறகுதான்.

ஏன் வெளிநாடுகள் போல இங்கு இன்னும் படங்களை கொஞ்ச நாள் கழித்து இணைய தளத்தில் வெளியிட மறுக்கிறார்கள் என தெரியவில்லை. அமேசான் தளத்தில் ரொம்ப நாள் கழித்துதான் வருகிறது. இதை ஏதேனும் ஒரு வகையில் வரைமுறைப்படுத்தினால், நானும் அதை ஆதரிப்பேன்.

பணம் கட்டி இணையத்தில் பார்க்க, தயாரிப்பாளர் சங்கமோ, நடிகர் சங்கமோ ("இப்ப ரெண்டுமே ஒண்ணுதானே" என்ற குரல் கேட்கிறது) ஒரு இணையதளம் ஆரம்பித்து, படம் வெளியாகி 15 நாட்கள் கழித்து வெளியிடலாம். தரவிறக்கம் செய்யும் 100 பேரில், 25 பேராவது பணம் கட்டி பார்ப்பார்கள். எதுவும் இல்லாததற்கு இது லாபம்தான்.

இப்ப 120 ரூவா டிக்கட்டு 150 ரூவா ஆகுதாம். அதிலும் பெரிய வளாகங்கள் சென்றால், 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டணம். "அண்ணே, அவ 5 நிமிஷத்துல தூங்கிருவாண்ணே" என்றாலும் கேட்க மாட்டார்கள். கொஞ்சம் யோசித்து ஏதாவது செய்யுங்கள்.