Friday, December 26, 2008

வாழ்த்துக்கள்!!

பதிவின் பக்கமே வந்து பல நாட்களாகி விட்டதால், சும்மா ஒரு பதிவு. அனைவருக்கும் சற்றே தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

எனக்கு இந்த புது வருட கொண்டாட்டங்களில் ஆர்வம்
கிடையாது. ஒவ்வொரு நாள் எழும்போதும் அது புது நாள். ஏன் ஒரு நாளை மட்டும் கொண்டாட வேண்டும்? பிறந்த நாள் கூட கடமைக்குத்தான்.. இருந்தாலும் பதிவு போட ஏதாவது வேண்டாமா? அதனால் தான்..

என்னுடைய புத்தாண்டு லட்சியம் ஒன்றே ஒன்றுதான். எங்காவது தேதியை எழுதும்போது வருடத்தை 2009 என்று எழுத வேண்டும். ஏனென்றால் குறைந்தது இரண்டு மாதமாவது ஆகும் எனக்கு. . உங்களுக்கு???

Thursday, November 27, 2008

மகிழ்ச்சியாய் இருந்தது (இருப்பது) எப்போது??

தனிமையில் இருக்கும்போது அடிக்கடி தோன்றுவது இதுதான்.. நான் எப்போது சந்தோஷமாய் இருந்துள்ளேன்? அறியா வயதிலா, பருவ வயதிலா, கல்லுரியிலா அல்லது வேலைக்கு போன பிறகா?

கொஞ்சம் ஆழமாய் யோசிக்கும்போது, ஒரு காலகட்டத்தை கடந்த பின், அதைப்பற்றி நினைக்கும்போது, அந்த கால கட்டத்தில்தான் மிக மகிழ்ச்சியாய் இருந்ததாய் தோன்றுகிறது.

ஆனால் அந்தந்த காலகட்டங்களிலோ, அதற்கு அடுத்த கட்டத்தில்தான் மகிழ்ச்சியாக இருப்போம் என்று எண்ணியதுண்டு.. இதனாலேயே, முழுவதுமாக அந்த மகிழ்ச்சியை அனுபவித்ததில்லையோ என தோன்றியதுண்டு. இதைப்பற்றி தனிப்பதிவு இடுகிறேன்.

ஆனால், தினசரி வாழ்க்கையில் வரும் அற்ப சந்தோஷங்கள்தான் நாம் உண்மையாக அனுபவிப்பவை. என்னுடைய அற்பத்தனத்தை பதிவிட்டுள்ளேன். உங்களுடையவை பின்னூட்டத்தில்...

தினசரி பேருந்திலும், ரயிலிலும் கும்பலில் நசுங்கி, பிதுங்கி பயணிக்கும்போது, எவனாவது செல்பேசியில் சத்தமாக பாட்டு போட்டால் எரிச்சலாக வரும். அப்போது நமக்கு மிகவும் பிடித்த, ரொம்ப நாள் கேட்காத பாடல் வரும்போது, அந்த நான்கைந்து நிமிடங்கள்...

அதே பயணத்தில் ஏதாவது அழகான பெண், அதுவும் நாம் பார்க்கும் கோணத்தில் இருந்தால், அது ஒரு சுகானுபவம். அந்த பெண்ணும் நம்மை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டால், இறங்கவே மனம் வராது.

ஏதாவது நெடுந்தூர பயணத்தில், நாம் அரைத்தூக்கத்திலும், பேருந்து பயண நெரிசலில் அதிக நேரம் நிற்கும்போது, ஓட்டுனர் வண்டியை இரண்டடி நகர்த்தும்போது, ஏதோ சொந்த ஊரையே அடைந்து விட்டது போல சந்தோஷம்.

கடற்கரையில் சுண்டல் வாங்கி சாப்பிட்டபின், அந்த சுண்டல் மடித்த தாளில் நல்ல கவிதை/கட்டுரை/கதை இருக்கும்போது.

என்றாவது வீட்டில் பழைய பொருட்களை நோண்டிக்கொண்டிருக்கும்போது, எப்போதோ தேடிய பொருள் கிடைக்கும்போது வரும் நினைவுகள்..

'றேடியோஸ்பதி' புதிருக்கு விடை தெரியும்போது..

'ஒரு பதிவிட்டபின், அதுவும் தமிழ்மணத்தில் வந்த பின், வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதும், அவர்கள் பின்னூட்டமிடும்போதும்.. இப்போதைக்கு மகிழ்ச்சியான விஷயம் அதுதான்..

என்னதான் இதே போல பல சந்தோஷங்கள் இருந்தாலும், முல்லாவோ/தெனாலிராமனோ/பீர்பாலோ அவருடைய மன்னருக்கு சொல்லி புரியவைத்த 'அந்த' செயல்தான் உண்மையிலே சந்தோஷமான விஷயம். புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளவும். புரியாதவர்கள் எங்கேயாவது படித்து, சிரித்துக்கொள்ளவும்.

Sunday, November 23, 2008

நேர் காணல்

மக்களே, மீண்டும் உங்கள் கண்களை குளமாக்குவதற்கு மன்னிக்கவும். பழைய விகடனிலிருந்து , உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க(?) அடுத்த பதிவு. இதில், சில, பல பேட்டிகள் உள்ளன. (முந்தைய பதிவு)

கார்த்தி ராஜா, பவதாரிணி மற்றும் யுவனின் பேட்டிகள் உள்ளன. யுவனின் வெள்ளந்தியான பதில்கள் (படிப்பு வரல சார், அதான் ஸ்கூலுக்கே போகல.. ரஹ்மானின் இசையில் 'காதல் ரோஜாவே' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்) நன்றாக உள்ளன. அந்த பக்கம் மட்டும் (இன்னும்) கொஞ்சம் கண்ணைச் சுருக்கிப் படிக்கவும்.ஆர். கே. செல்வமணி பேட்டி: 'வளர்ப்பு மகன்', 'அடிமை' (பார்த்திபனின் சோத்துக்கட்சி) போன்ற படங்கள் என்ன நிலை என்று முரளி கண்ணன் சொல்ல வேண்டுகிறேன். வழக்கம் போல, ரஜினி பற்றியும், ரோஜா பற்றியும் கூட உள்ளன.பி. சி. ஸ்ரீராம் பேட்டி: குருதிப்புனல் படம் பற்றி சொன்ன முக்கிய விஷயம். "என் பையன் ரஜனி ரசிகன். அவன் முத்து படம்தான் பார்ப்பான். அவனும் விரும்பி பார்க்கும்படி குருதிப்புனல் பண்ணனும்". பையன் (அப்போது) பார்த்தானா தெரியவில்லை.

படத்தில் தனுஷாக வரும் அரவிந்த் நானல்ல.. (என்னளவிற்கு புகைப்படம் எடுப்பதில் சிறந்தவர் இல்லையென்றாலும்) அவர்தான் புதுப்பேட்டை, குசேலன்(?) படங்களின் ஒளிப்பதிவாளர் 'அரவிந்த் கிருஷ்ணா' என்று நினைக்கிறேன். சரியா?
(இந்த பதிவை உங்களுக்கு வழங்கியவர்கள் சங்கர நேத்ராலயா மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை. )

Sunday, November 16, 2008

பேரம் பேசுவது எப்படி???

சக பதிவர் இம்சை அரசியின் பதிவை படித்தபோதே நானும் அதைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், நாம் இருக்கும் 'பிசி'யில்... சரி அதை விடுங்க..

நமக்கும் பேரம் பேசுவதற்கும் 'ஒளியாண்டு' கணக்கில் தூரம். பேரம் பேசுவதாய் நினைத்து கடைக்காரர் சொன்னதை விட அதிகமாக கொடுத்துதான் எனக்கு நடந்தது. அவ்வளவு உருகிய கதை சொன்னார். ஆனால், இது அதைப்பற்றியதல்ல.

கல்லூரி படிக்கும்போது, 10 நாட்கள் குல்லு, மணாலி என்று பயணம் போயிருந்தோம். மணாலியில், ஏதோ இடத்தில், பனியில் விளையாடிக்கொண்டிருந்தோம். பின், நானும் இன்னும் இரு நண்பர்களும், ஒரு சிறிய குட்டிச்சுவரில் உட்கார்ந்தோம்.

அப்போது ஒரு மலைவாசி போல ஒரு ஆள் வந்து, குங்குமப்பூ விற்றுக்கொண்டிருந்தான். (நம்முடைய ஹிந்தி அறிவிற்கு, அது இன்னொருவர் சொல்லி தெரிய வந்தது.) நாங்கள் அவரையே பார்த்துக்கொண்டிருந்ததால், எங்களருகில் வந்தார். மிகவும் சிறிய கண்ணாடி பாட்டில்களில் போட்டு வைத்திருந்தார். மீறிப்போனால், ஒரு பாட்டிலில் உள்ள பூ, 10 கிராம் கூட தேறாது.

என் நண்பன் நாராயணன் என்பவன், வீட்டில் குங்குமப்பூ கேட்டார்கள் என்று வாங்க போவதாக சொன்னான். எனவே, பேச்சு வார்த்தை தொடங்கியது. நாங்கள் அரைகுறை ஆங்கிலம், அவை ஹிந்தி. உங்களுக்காக சப்-டைட்டில் மட்டும்.

"எவ்வளவுங்க இது"

"அம்பது ரூவாப்பா"

நாராயணன் ஒரு கணம் யோசித்து "ஏக் ரூப்யா' என்றான். (இது முக்கிய தருணம்.. சற்றே கற்பனைக் குதிரையை தட்டி யோசித்தி பாருங்கள்.. )

நான் குட்டி சுவற்றின் பின்னால் எட்டிக் குதித்து விட்டேன். இன்னொருவன் கீழே குதித்து பத்தடி ஓடிப்போய் நின்று கொண்டான். நாராயணனோ அசையவில்லை.

அவர் அவனை ஏற, இறங்க பார்த்து விட்டு அப்படியே சென்று விட்டார். நாங்கள் திரும்பி வந்து, அவன் உயிருக்கு ஆபத்து (நமக்கும்தான்) இல்லை என்று உறுதி செய்து கொண்டு கேட்டோம். "அது எப்பிடிரா மனசாட்சியே இல்லாம அப்படி கேட்ட?? ஒருவேளை அடி விழுந்திருந்தா??'

அவன் பொறுமையாக சொன்னான். "அது ஒன்னும் அவ்வளவு காசில்ல. பேரம் படியலேன்னா அவ்வளவுதான்.. அதுக்கேன் கை வைக்கிறான்".

அப்போது திரும்பி வந்தார். நாங்கள் இருவரும் மறுபடியும் தயாரானோம். அவரோ, "நாப்பது ரூவா கொடுங்க" என்றார்.

நம்மாள் மீண்டும் சொன்னான். "ஏக் ரூப்யா.'

இப்போது அவர் ஒரு முறை முறைத்து விட்டு போனார். எனக்கோ சற்று உதற ஆரம்பித்து விட்டது. "டேய். அந்தாளு ஆளுங்களை கூட்டிக்கிட்டு வரதுக்குள்ள ஓடிரலாண்டா" என்றேன். அவனோ 'ச்சீ.. சும்மா இரு.. அத வாங்காம போறதில்ல" என்றான்.

இப்போது அவர்கள் இரண்டு பேராக வந்தார்கள். இன்னொருவன் நடுங்குவது எனக்கு பார்க்கும்போதே தெரிந்தது. எனக்கும்தான். அவர்கள் அருகே வந்து "சாப், ரொம்ப கஷ்டப்பட்டு, காட்டுல அலைஞ்சு, திரிஞ்சு எடுத்தது சாப்.. இருவத்தஞ்சாவது கொடுங்க சாப்" என்றார். (அவர் இன்னும் பயங்கர சோகமாக சொன்னார்.. எனக்கு கண்ணில் கண்ணீர் வந்து விட்டது).

நம்மாள் மீண்டும் அதே டயலாக்.. விலை இருபது, பதினைந்து, பத்து, எட்டு என்று வந்து விட்டது.. நான் நாராயணனிடம் மெதுவாக, "டேய். அந்த பாட்டிலுக்காவது எட்டு ரூவா கொடுக்கலாண்டா" என்றேன். ஒரே வார்த்தை "பாக்கலாண்டா"..


ஐந்து ரூபாய்க்கு வரும்போது, அவன் பரந்த மனதோடு, "சரி.. ரெண்டு ரூவா" என்றான். அவர்களுக்கு பயங்கர சந்தோஷம். எப்படியாவது நான்கு ரூபாய்க்கு முடித்துவிட வேண்டும் என்ற நோக்கம் புரிந்தது. எங்களாலும் தாங்க முடியவில்லை. (இந்த சம்பவம் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நடந்தது.) "டேய். இவ்வளவு நேரம் பசினதுக்காவது மூன்ருவா கொடுக்கலாண்டா" என்றோம். அதற்கும் அவர்கள் பேரமும் மூன்று ரூபாய்க்கு வந்தது. நல்லபடியாகவும் முடிந்தது. எங்களுக்கும் போன உயிர் திரும்ப வந்தது.

ஐந்து பாட்டில்கள், பதினைந்து ரூபாய். அவர்கள் கிளம்பிய பின் கேட்டோம். "ஏண்டா.. அப்படி பேரம் பேசி வாங்கி இத என்ன பண்ணுவ?? பாவம் ஒரு பத்து ரூவாவாவது கொடுத்திருக்கலாம்".


அவனோ "இதுவே அவனுக்கு பெரிய லாபமா இருக்கும். இல்லேனா யாருமே கொடுக்க மாட்டாங்க" என்றான்.

"உனக்கு மனசில பெரிய புத்திசாலின்னு நெனப்பா?? சரி. ஒருவேளை இது போலியா இருந்தா" என்று கேட்டோம்.

மிக பொறுமையுடன் சொன்னான்.

"அவன் நம்ம எல்லார விட புத்திசாலின்னு நான் ஒத்துக்கிறேன்"

ஆனால், எங்களால் யார் புத்திசாலி என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பயணத்தின் நடுவே, நாராயணன் அந்த பாட்டில்களை தவற விட்டு விட்டான்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்???

Friday, October 31, 2008

தீபாவளி படங்களின் (சூடான) விமர்சனம்

கமல், ரஜினி, மம்முட்டி, சரத் என்று, தீபாவளி ஒரே கலக்கல்தான் போங்க..


கடுப்பாகி அடிக்க வர வேண்டாம். கொஞ்ச நாட்களுக்கு முன், ஒரு பழைய ஆனந்த விகடன் கையில் கிடைத்தது. சமீப காலமாக அவர்களே பழைய கட்டுரைகளை போடுகிறார்களே என்றுதான் நினைத்தேன். ஆனால், அந்த இதழ் வர இன்னும் நாளாகும் என்பதால் நானே பதிவிடுகிறேன். அதை கொண்டு வர முடியாத சூழலில் இருந்ததால், Digi Camஇல் புகைப்படமாக எடுத்து வந்தேன். படங்களை கிளிக்கி பெரிதாக்கி படித்துக் கொள்ளவும். கொஞ்சம் தெளிவாக நானே தட்டச்சு பண்ணி பின்பு இடுகிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான். மன்னிக்கவும். உங்களுடைய கருத்துக்கள் பின்னூட்டத்தில்..

இன்னும் சில பல கட்டுரைகளும் உள்ளன. நானே என்றாவது ஒரு நாள்தான் பதிவிடுகிறேன் என்பதால், அதெல்லாம் பிற்பாடு இடுகிறேன். அதுவரை பின்னூட்டம் கோரி, உங்களிடமிருந்து விடை பெறுவது..ரவிந்த்

Tuesday, October 14, 2008

சினிமா சினிமா

சமீப காலமாக வலைப்பூவில் தொற்று வியாதி பரவியுள்ளது. தசாவதாரத்தை தொடர்ந்து அப்படி வந்துள்ளது 'சினிமா சினிமா' பதிவுகள்.
இது ஒருவகை MLM (Multi-Level Marketing - தமிழில் என்ன??) வகையில் வருகிறது. ஒவ்வொருவரும் தனது நண்பர்களை பதிவிட அழைக்கின்றனர். இது 'இட்லி வடையார்' சொன்னது போல நமக்கு நாமே திட்டமல்ல. ஏனென்றால் அவர் அழைத்த 94 பேரில் நானும் ஒருவன்.. (ஆனால் நான் ஆயிரத்தில் ஒருவன்.. அதுவும் அவ்வப்போது பதிவிடும் பத்தாயிரத்தில் ஒருவன்..).சரி.. சரி.. தொழில்ல இறங்குவோம்..


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


எல்லோரும் சொல்வது போல எனக்கும் சுத்தமாக நினைவில்லை. பக்கத்தூரிலுள்ள டூரிங் டாக்கீஸில் ஒரு படம். பிரபு, பிரேம், செந்தில்,ரூபிணி நடித்தது. பெயர் சுத்தமாக நினைவில்லை. அடுத்து ஓரளவு நினைவில் உள்ளது 'அபூர்வ சகோதரர்கள்'. அதுவும் புலி வரும் காட்சியை வைத்து அனுமானித்து சொல்கிறேன். நன்றாக நினைவிலுள்ள படம் 'சின்ன பசங்க நாங்க'. முரளி, ரேவதி நடித்தது.
உணர்ந்தது எதுவுமில்லை.


2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?


'பொய் சொல்ல போறோம்'. மிகவும் ரசித்து, சிரித்து பார்த்தேன். அதற்கு முன் 'ச-ரோ-ஜா'. அது பயங்கரமாக ரசித்தேன். நண்பர்களுடன் சென்றதால் அருமையாக இருந்தது.


3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


தொலைக்காட்சியிலும், டிவிடியிலும் பொதுவாக எதையும் முழுதாக பார்ப்பதே இல்லை. திடீரென சில நாட்களுக்கு முன் 'பஞ்ச தந்திரம்' டிவிடி கையில் சிக்கியது. ஏற்கனேவே எண்ணிலடங்கா முறை பார்த்திருப்பேன். ஆனாலும் மீண்டும் ஒரு முறை ரசித்தேன். அடுத்த முறையும் பார்ப்பேன் என நினைக்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ஏதாவது ஒரு காட்சியில், பின்னணியில் நடிப்பவர்களின் அசைவுகளை கவனிப்பேன். ஏதாவது புதியதாக தெரியும். அனுபவிப்பேன். ஆனால் ஆராய்ந்து சொல்ல தெரியவில்லை.


4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா.


'மகாநதி'. சிறு வயதில் படம் பார்க்கும்போது எந்த சோக காட்சி வந்தாலும் அழுவேன். ஓரளவு நினைவு தெரிந்த பின், அதே காட்சிகளை பார்த்தபோது சிரித்தேன். ஆனால், நிறைய முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் கண்கள் கலங்குவது இந்த படத்திற்கு மட்டும்தான். இது என்னை மிகவும் பாதித்த படம்.

என்னை தாக்கிய படம் என்றால், அது பமீலா ஆண்டேர்சனின் ஒன்று விட்ட பிரதர் சாம் ஆண்டெர்சன் கடித்த, ச்சீ நடித்த 'யாருக்கு யாரோ'. நானும், என் நண்பனும் மிகவும் கஷ்டப்பட்டு, வலையுலாவி, பதிவிறக்கம் செய்தோம். பாதியில், அவன் என்னை தாக்கியதில் எனக்கு ரத்தக்காயம். நான் படத்தை தொடர்ந்து பார்த்ததில், பீதியில், 'அது' ஆகி, பொட்டுக்கடலையும், வெறும் பரோட்டாவும் சாப்பிட வேண்டியதாகி விட்டது.


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தமிழகத்தின் தற்போதைய பெருந்தலைவர்கள் (கலைஞர், ஜெ, விஜயகாந்த், ராமதாஸ், திருமா) என அனைவரும் திரைப்பட உலகத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால், வித்தியாசமே தெரியவில்லை. என்ன, வெளியாகாத படத்தில் நடித்து விட்டு, 'நாளைய தமிழகமே' என்பதை பார்க்கும்போதுதான், நம் தலைவிதியை நினைத்து சிரிப்பு வரும்.

5-po. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தசாவதாரத்தில், கல்லை மட்டும் கண்டால் பாட்டில் வரும் கிராபிக்ஸ். படகு போவதை எடுக்க கமலுக்கு ஒரு ஆறு கூடவா கிடைக்கவில்லை என்று தோன்றியது. மற்றபடி படத்தில் எனக்கு குறையில்லை.

சிறு வயதில், வெளிநாடு சென்று வந்திருந்த ஒருவர், வாக் மேனோடு வீட்டுக்கு வந்திருந்தார். அதில், இளமைக்காலங்களில் வரும் 'ஈரமான ரோஜாவே' பாட்டைக் கேட்க வைத்தார். அதில், ஆரம்பத்தில் வரும் இசை இந்த காதிலிருந்து அந்த காதுக்கு போனது. எனக்கு லேசாக தலை சுற்றி விட்டது. அந்த பாட்டை கேட்கும் போதெல்லாம், சிறு புன்னகை தோன்றும்.

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இல்லை. நம்ப மாட்டீர்களே. சிறு வயதில், செய்தித்தாளை படிக்கும்போது, வண்ணமயமாக கண்ணை கவர்வது சினிமாதான். இப்போதும் கூட, கண்கள் முதலில் சினிமா செய்தியைத்தான் தேடும். இருக்கவே இருக்கிறது இணையம்.

7.தமிழ்ச்சினிமா இசை?

இசையராஜா. பாடல்கள் மட்டும்தான் இசை என்று நினைத்தபொழுது, பின்னணி இசையை உணர வைத்தவர். ஒரு முறை தொலைக்காட்சியில் 'அபூர்வ சகோதரர்கள்' படம் ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்க்க முடியாத சூழல். ஆனால் கேட்க முடிந்தது. அப்போதுதான் பின்னணி இசையின் அருமையை உணர்ந்தேன். Yahoo Groupsல் பின்னணி இசை பதிவிறக்கத்தை நிறுத்திய பின், நானே டிவிடி வாங்கி தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நமக்கு தமிழே 'டண்டணக்கா'. ஆங்கில படங்களையே தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட பின்தான் பார்ப்பேன். அதையும் மீறி, sub-title இன்றி பார்த்தபோது என்னை கலங்கடித்த படம் 'தாரே ஜமின் பார்'. தெலுகு, மலையாள படங்கள் பார்ப்பதுண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஓரிரு படப்பிடிப்புகளை பார்த்ததுண்டு. மற்றபடி எதுவுமில்லை. நேரடி சம்பந்தம் இல்லாததே தமிழ் சினிமா வளர உதவும் என்று நம்புகிறேன். இதை பற்றி பின்னர் விரிவாக சொல்கிறேன்.

10.தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக வந்த படங்கள் பெரும்பாலானவை தமிழ் சினிமா மரபுகளை உடைத்து வந்துள்ளன. எனவே, எதிர்காலம் மிகவும் நன்றாகவே இருக்கும்.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

முக்கால்வாசி பேருக்கு மேல் பைத்தியம் பிடித்து விடும் (என்னையும் சேர்த்துதான்). மீதி பேருக்கு தெளிந்து விடும்.

ஒருவேளை அப்படி நடந்து விட்டால், எனக்கு அந்த 366ஆவது நாளையும், அதற்கடுத்து வரும் நாட்களையும் நினைத்து பயமாக உள்ளது.

நான் யாரையும் அழைக்கவில்லை. இந்த பதிவை முதலில் படிக்கும் 5 பேரை (நம்பிக்கைதான் வாழ்க்கை) அழைக்கிறேன். ஒருவேளை அவர்கள் முன்னமே பதிவிட்டிருந்தால்,

'சமர்த்து.. சொல்றதுக்கு முன்னாடியே செஞ்சுட்டியே.. very Good'.

(தப்பிச்சண்டா சாமீ)


மீண்டு(ம்) வருகிறேன்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை அடிக்கடி பதிவு போடவேண்டும் என்றிருந்தேன். ஆனால் விதி செய்த சதியால் அது முடியாமல் போய் விட்டது. ஆனாலும் I'm Back..

சும்மா ஏதாவது பதிவிட்டால் கணக்கில் வராதாம். எனவே நான் சுட்ட கவிதைகள் இரண்டு. இட்ட கவிதைகள் இரண்டு.

கொஞ்ச நாள் முன்பு வரை ஆனந்த விகடனில் வந்த மொக்கை கவிதைகளில், எனக்கு மிகவும் பிடித்த, மனதில் நின்ற இரண்டு கவிதைகள்.

யாரும் கேட்பதில்லை என்றாலும்
சத்தமின்றி வருவதில்லை
நீலப்படங்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற இரண்டு ரகசிய வழிகள்..
1. ரகசியங்களை வெளியில் சொல்லாதீர்கள்.
2. #!$%*$^&*&^%$# (அது மட்டும் ரகசியம்)

இனி எனது (மொக்)கவிதைகள்

படுக்கையில்
கொலை
மூட்டைப்பூச்சி.

கல்லெறிந்து
உடைத்தேன் நிலவை
கிணற்றில்.

இவை இரண்டையும் மாற்றி மாற்றி சொல்லி கல்லூரியில் நான் பெரிய கவிஞன் என்று நண்பர்களிடம் டபாய்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் என்னை அவர்கள் உதைத்துதான் மிச்சம். இப்போது கூட பின்னூட்டத்தில் செருப்பால் அடிக்க முடியாது என்பதால்தான் நான் பதிவிட்டுள்ளேன்.

Thursday, July 10, 2008

சும்மா

பத்து நாள் முன்பு வரை பெரிய பதிவும் போடவில்லை. தமிழ் மணத்திலும் இணைக்கவில்லை. வருகை தந்தவர்களின் எண்ணிக்கையும் இருபதைத் தாண்டவில்லை. சரி என்று தசாவதாரம் பற்றி ஒரு பதிவு போட்டேன். வருகை தந்தவர்களின் எண்ணிக்கை எழுநூறை தாண்டிவிட்டது. சரிதான், நாமும் பெரிய ஆளாகி விட்டோம் என்ற மிதப்பில் தமிழ் மணத்துடன் இணைத்து விட்டேன். பதிவர்களின் ஆதரவை எதிர் பார்க்கிறேன்.


நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடிக்கும்போது, திடீரென வாக்குவாதங்கள் ஆரம்பித்துவிடும். நான் கமல் மற்றும் இளையராஜா ரசிகன் என்று உங்களுக்கு தெரியுமென்பதால் வாக்கு வாதம் எதைப்பற்றி என சொல்ல தேவையில்லை.

நண்பர்களை அவர்களுக்கும் திரைப்படம் கமலின் பொழுதுபோக்கிற்கு மட்டும்தான். அவர்களுக்கும் கமலின் நகைச்சுவை திரைப்படங்கள் பிடிக்கும். ஆனால், யதார்த்த திரைப்படங்களை ரசிக்க மாட்டார்கள். கேட்டால், எத்தனை முறை பார்த்தாலும் புரியவில்லை என்பார்கள். சரி. கமலின் நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி. மகாநதியில், சிறையில் வரும் காட்சி. தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தும் காட்சி.


Tuesday, July 8, 2008

எனது கலைத்திறமை

எனது கலைத்திறமைகள்.


நான் பெரிய கலைஞன் இல்லை. ஆனாலும் ஏதோ என்னால் முடிந்தது. பின் வருபவை அனைத்தும் எனது கலைத்திறனே. மேலே உள்ளது எனது ஊரில், என் வீட்டிலிருந்து எடுத்தது. மற்றவை கீழே.

எனது ஊரில்
எனது ஊரிலிருந்து, கொல்லி மலை
கொல்லி மலை
வட்டப்பாறை, நாகர்கோயில்.

ஊட்டி
எங்கோ
ஊட்டி
தனியே, தன்னந்தனியே. ஊட்டியில்
படகு சவாரியில், ஊட்டி.

கொடைக்கானலில் நானும், என் நண்பர்களும்

சுற்றுலா சென்றபோது எடுத்த படம் என்று சொல்ல வந்தேன். அதற்குள்!!!


போற்றுவோர் போற்றவும், தூற்றுவோர் தூற்றவும். (அட! பின்னூட்டம்தாங்க)
Tuesday, July 1, 2008

தசாவதாரம்

தசாவதாரம்:
பல நாட்களாக புதிதாக எந்த பதிவும் போடவில்லை. இதற்காகவே பதிவர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவதாக செய்தி வந்தது. புதிதாக போட்டாலும் தசாவதாரம் பற்றி போடாவிட்டால் நீக்கி விடுவார்களாம். எனவே நானும் பரங்கிமலை சீச்சி.. மன்னிக்கவும். ஜோதியில் கலக்கிறேன்.

படத்தின் கதை பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. படத்தை பற்றிய என்னுடைய கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.முதலில் 10 வேடங்களில் வருவது பற்றிய வாதம். ஏற்கனவே 27 வேடங்களில் ஒருவர் நடித்துள்ளார். 12 வேடங்களில் மற்றொருவர் நடித்துள்ளார் என சில பதிவுகளில் பார்த்தேன். முதலில் தோற்றங்களுக்கும், வேடங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்ள வேண்டும். கமல் 'எல்லாம் இன்பமயம்' படத்தில் 10 தோற்றங்களில் வருவார். தசாவதாரத்தில் 10 வேடங்களில் வருகிறார். இதில் கமல் இரண்டாமிடம்தான் என நான் நினைக்கிறேன்.

கதை. அனைவரின் வருத்தமும் இதில் அழுத்தமான கதை இல்லை என்பதுதான். என்னுடைய கருத்து என்னவென்றால், ஒரு சாதாரண ஒரு வரிக் கதையை, 3 மணி நேர திரைக்கதையாக்கி, அதில் 10 வேடங்களை இணைப்பது கொஞ்சம் கடினம் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய செயல். ஒரு திரைக்கதையாசிரியராக கமல் வென்றுள்ளார் என்பது என் கருத்து.

வசனம். சில இடங்களில் சுஜாதா (நம்பி), பல இடங்களில் கிரேசி மோகன் (நாயுடு, அசின்-கோவிந்த்), அவ்வப்போது கமல் என பல விதம். இயக்கம்: ரவிக்குமார் உள்ளதால்தான் இது ஒரு 'நல்ல பொழுதுபோக்கு படமாக' உள்ளது. ஒருவேளை கமல் இயக்கியிருந்தால், நடு நடுவே வரும் கடவுள் உள்ளாரா இல்லையா என்ற கேள்விக்கு இடமின்றி எல்லாமே தற்செயல் என கொண்டு வந்திருப்பார் என்பது என் கருத்து. படம் கண்டிப்பாக 'நல்ல படமாக' இருந்திருக்கும். ஆனால், 'ஹே ராம்' படம் போல மக்கள் ஏதோ சொல்ல வராருப்பா, ஆனா என்னானுதான் தெரியல என்பர். பொதுவாக தமிழ் மக்களுக்கு கதையில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் வரும் காட்சிகளால் ஆர்வம் இன்னும் கூடும். (சந்திரமுகி படத்தில் வரும் பாம்பு ஒரு நல்ல உதாரணம்).

ஒப்பனை. கமல் ஏன்தான் இப்படி சப்பாத்தி மாவு, கடலை மாவை முகத்தில் அப்பிக்கொண்டு வருகிறாரோ தெரியவில்லை. வலது கண்ணுக்கு கீழ் ஒரு மச்சம். ஒரு வேடம் முடிந்தது. இடது கண்ணுக்கு கீழ் ஒரு மச்சம். இன்னொரு வேடம் முடிந்தது. சற்றே சிறிய தாடி. கலிஃபுல்லாகான் முடிந்தது. அதை விட்டு விட்டு தேவையில்லாமல் சேச்சே.. கமல் சுமார் இருபது வருடங்களுக்கு முன் செய்ததுதான். இப்போது மக்கள் மாறியிருப்பார்கள் என நினைத்தது அவர் குற்றம்தான். என்ன செய்ய..

படத்தில் நிறைய்ய்ய இடங்களில் லாஜிக் இடிக்கிறதாம். இடித்தால் தள்ளி உட்கார வேண்டியதுதானே?? வில்லன் கமல் சென்னையை நன்றாக தெரிந்தவர் போல சுற்றுகிறாராம். அவர் எப்போதுமே கோவிந்த் கமலை தொடர்ந்துதான் செல்வார். மற்றபடி வேட்டி அழுக்கு ஆகவில்லை, அவர் 'சூச்சாவே' போகவில்லை என்று சொல்பவர்களுக்கெல்லாம் )(*&^%$#!#%^.

இசை. எத்தனை பேர் வந்தாலும், நம்மவர்கள் போல வராது என நிரூபிக்கின்றனர். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு அருமை என்ற ஒரு சொல் பத்தாது. பொறுமையோடு உழைத்த அனைத்து கலைஞர்களின் உழைப்பு வீண் போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கமல் நிறைய தயாரிப்பாளர்களை அழித்து விட்டார் என்பவர்களே, அப்படியெனில் ஏன் இன்னும் அவரை நம்பி படம் எடுக்கிறார்கள். படத்தில் குற்றம் சொல்லும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எவ்வளவு கேவலமான படமாக இருந்தாலும், அதில் குறைந்தபட்சம் ஒரு ரசிக்கக்கூடிய விஷயம் இருக்கும். குறை கூறலாம். குறை மட்டும் கூறக்கூடாது என்பது என் கருத்து. இதிலும் குறைகள் உண்டு. அவை தவிர்க்க முடியாதவை என்பது என் கருத்து. நாயுடுவையும் அதி புத்திசாலியான ஆளாக கொண்டு போயிருந்தால் இப்போது போல அதை ரசிக்க முடியாது.

கமல் அவர்களே, உங்களின் வருங்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இப்படிக்கு, ஒரு உண்மையான கமல் ரசிகன்.

(ஒரு எண்ணம்: மல்லிகா வரும் பாட்டில், செப்டம்பர் 11ல் Twin Tower சாய்ந்தது, என் Tower சாய்வதில்லை என்று வரும். இதை வைரமுத்து மிகவும் பெருமையாக ஒரு பேட்டியில் சொன்னார். யாரும் அதை கண்டு கொள்ளவில்லையா?? இல்லை அவர் அப்படித்தான் என விட்டு விட்டார்களா??)

Monday, January 7, 2008

கமலும் நானும்

இளையராஜா போல கமல் எனக்கு அறிமுகம் ஆகவில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலே எனக்கு அவரைப் பிடிக்கும். அந்த வயதில் என் நண்பர்கள் அனைவருக்கும் ரஜினியைப் பிடித்திருக்க, எனக்கு மட்டும் ஏன் கமல் பிடித்தது என தெரியவில்லை. அது தவறில்லை என விவரம் தெரிந்த பின் புரிந்தது.

நான் சின்ன வயதில் (ஓரளவு விவரம் தெரிந்து) பார்த்த படம் 'அபூர்வ சகோதரர்கள்'. உடனே அது எனக்கு பிடித்து விட்டது. அதன் பின் 'மைக்கேல் மதன காம ராஜன்'. சொல்லவே தேவையில்லை. அவ்வப்போது சில படங்கள் புரியாவிட்டாலும் (சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, ராஜ பார்வை போன்ற பரீட்சார்த்த திரைப்படங்கள்) எனக்கு கமலை மிகவும் பிடித்து போனது.

இப்போது என்னுடைய திரைப்பட திரட்டுக்களில் முதன்மையானவை கமலின் பரீட்சார்த்த திரைப்படங்கள்தான். அவற்றை பார்க்காவிட்டாலும், தொலைக்காட்சியில் போடும்போது கண்டிப்பாக தவறவிடமாட்டேன். இல்லாதபோதுதான் அருமை தெரியும் என்பார்கள். நான் அதை கமலின் திரைப்பட திரட்டுக்களின் மூலம் உணருகிறேன்.