Sunday, February 27, 2011

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அல்லாரும் நல்லா கீறிங்களா?? என்ன எழுத என்று தெரியாததால், வழக்கம் போலவே, ஓர் பிட்டை போட்டுவிட்டு போகலாம் என்றுள்ளேன். போன பிட்டை பார்க்க, ரசிக்க(?)

திரைப்படங்கள்:

இதுவரை பார்த்த படங்கள் அனைத்துமே மிக நன்றாகவே உள்ளன. 'ஆடுகளத்தில்' ஆரம்பம். பொங்கலுக்கு வெளியான மற்ற இரண்டு ரீமேக் படங்களின் ஒரிஜினலைப் பார்த்து விட்டதால், ஆடுகளமே முதலில் பார்த்தேன். படம் பார்த்தபோது பிடிக்கவில்லை. மிகவும் மெதுவாக போனது போல இருந்தது. பிறகுதான், அதைப் பற்றி யோசிக்கும்போதுதான் ஒரு திருப்தி வந்தது. ஆனாலும், படத்தில் எனக்கு அந்த காதல் பிடிக்கவில்லை. இறுதியில், தனுஷுடன் போனில் பேசும் அந்த காட்சி மற்றும் 'ஒத்த சொல்லால' பாட்டுக்காக பொறுத்துக் கொள்ளலாம்.

அதை சரிப்படுத்தும் வகையில், இந்த மாதம் வந்த அனைத்து திரைப்படங்களுமே எனக்கு மிகவும் பிடித்தன. 'யுத்தம் செய்', 'பயணம்' மற்றும் 'நடுநிசி நாய்கள்', அதே வரிசையில். ஏனென்றால், மூன்று படங்களுமே, ஒரு தமிழ் த்ரில்லர் படம் எப்படி இருக்க வேண்டும் என்று இருக்குமோ, அப்படி இல்லை. இருக்கை நுனிக்கு வரவைக்கும் காட்சிகள், 'பர பர' என ஓடுவது, திடீரென வரும் பின்னணி இசை, காதல், பாட்டு என்று இல்லாமல், எனக்கு பிடித்த மாதிரி இருந்தது. இந்த மூன்று படங்களுமே, தமிழில் வரவேற்கத்தக்க முயற்சி.

'யுத்தம் செய்' படத்தில், இடைவேளைக்குப் பின், ஓரளவிற்கு ஊகித்து விட்டாலும், திரைக்கதை, காட்சியமைப்புகள் அருமை. நிறைய பாத்திரங்களை வசனங்கள் மூலமே அறிந்து கொள்ள வேண்டியிருப்பதால், சற்றே முதலில் குழம்பினாலும், பின் சரியாகி விட்டது. ஒளிப்பதிவு, இசை அட்டகாசம். படம் மிகவும் இயல்பாக இருந்தது. ஆரம்ப காட்சிகள், காவல் நிலைய காட்சி போன்றவை மிகவும் புதிதாக இருந்தன. படத்தில், தர்பூசணி திருடும் காட்சியை விட, அதிகமாக சிரித்தது 'அப்புக்குட்டி' என்று சேரன் சொன்னபோதுதான். அந்த ஒரு கணம், இயக்குனர் சேரன் கண் முன்னே வந்து விட்டார்.

'பயணம்'. சரோஜா போலவே காமெடி திரில்லர். படம் பார்க்கும் நாமும், அந்த பயணிகள் போலவே ஜாலியாகவே இருந்தது போலவே இருந்தோம். இருக்கையின் நுனிக்கு வரவைக்கும் அளவிற்கு எந்த காட்சிகளும் இல்லை. வசனங்கள் அட்டகாசம். நகைச்சுவையாகவும் சரி, நாட்டு நடப்பானாலும் சரி. படம் சற்றே நெடுந்தொடர் போலவும், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பிரமாண்டமான (?) படம் போலவும் தோன்றியது.

'நடுநிசி நாய்கள்'. பாலியல் வன்முறையை வைத்து படம் எடுக்கும்போது, அதைப் பற்றி காட்சிகள் இல்லாமலேயே, அதன் அழுத்தத்தை உணர்த்த முடியும் என்று சில படங்கள் வந்தாலும், எல்லாவற்றையும் காட்டி, நம்மை எரிச்சலூட்டும் வகையில் இருந்த படம். தேவையே இல்லாத காட்சிகள், வசனங்கள் மூலம் சொல்லப்பட்டவை மீண்டும் காட்சிகளாக வருவது, லாஜிக் பொத்தல்கள் என்று பொறுமையை சோதித்து விட்டது. என்னைப் பொருத்தவரை முதல் பாதியின் நீளத்தை இன்னும் சற்று குறைத்திருக்கலாம். ஒளிப்பதிவு அருமை. படத்தில், மருத்துவமனையில் வாக்குமூலம் கொடுக்கும் காட்சியில், எனக்கென்னவோ பயணம் படத்தில் வரும் காட்சிதான் நினைவுக்கு வந்தது. "நீதான் யூசுப் கான், உலகமே உன்னப் பாத்து பயப்படுது.. ஏய், என்னடா, ஓவராக்ட் பண்றியா?, வாய ஒரு பக்கமா இழுக்குற."

மொத்தத்தில், காதலர் தினம் மட்டும்தான், காதலே இல்லாத படங்கள்தான்.

சிறுகதை:

ரொம்ப நாள் முன்பு குமுதத்தில் வந்த ஒரு பக்க சிறு கதை.

கல்லூரியில், மிக அழகான, பணக்காரியான பெண்ணிடம் பழக வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை. வழிபவர்களை வழக்கம் போலவே அவள் ஒதுக்குகிறாள். நாயகன் ஒரு முறை அவளிடம் நேராக சென்று "உன்னப் பாத்தா செத்துப் போன என் தங்கச்சி மாதிரியே இருக்க. என்ன உன் அண்ணனா ஏத்துக்குவியா?" என்று கேட்டு, ஒரு ராக்கியும் கட்டிக் கொள்கிறான். அவன் நண்பன் கேட்கிறான், "நீ லூசாடா? போய் தங்கச்சின்னு சொல்லிட்ட" என்றதும் அவன் சொல்கிறான். "நீங்க எப்பவும் சூப்பர் பிகர்னு பாக்கறீங்க. எனக்க அவ பிரண்ட் கொஞ்சம் சுமாரா இருந்தாலும், எனக்கு பிடிச்சுது. இப்ப எனக்கு அவளும் சிக்கிடுவா, இவகிட்டையும் நல்ல பேர். எப்பூடீ".

கொசுறு:

இதுவரை எழுதியதே கொசுறு என்பதால், எதுவும் இல்லை. மன்னிக்க!