Friday, May 22, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

விமர்சனம்:

நான் முந்தைய பதிவில் கூறியது போல, உத்தம வில்லன் மட்டுமே பார்த்தேன். அதன் பிறகு வேறு எதுவும் பார்க்கவில்லை. இந்தியா பாகிஸ்தான் படம் நன்றாக உள்ளது எனப் படித்தேன். விஜய் ஆண்டனியை நான், சலீம் படங்களில் பேசா மடந்தையாக ரசிக்க முடிந்தது. ஆனால், அவரது காமெடி நமக்கு பிடிக்குமா என்று தெரியாததால் பார்க்கவில்லை. 36 வயதினிலே படத்திற்கு ரொம்ப நாள் முன்பே How Old Are You? பார்த்து விட்டேன். முடிந்தால், மனைவியைக் கூட்டிக் கொண்டு போய் பார்க்கலாம் என்றுள்ளேன்.

சமீப காலங்களில் எல்லா படங்களும் நன்றாக உள்ளது, ஓரளவு ஓடுகிறது என்று படிக்கும்போது தமிழ் சினிமா பிழைத்து விடும் போல உள்ளது. கண்மணி - காஞ்சனா இரண்டுமே நல்ல வெற்றி, வை ராஜா வை - உத்தம வில்லன் இரண்டுமே சுமாரான வெற்றி, இந்தியா பாகிஸ்தான், புறம்போக்கு, 36 வயதினிலே, இவை யாவும் நன்றாக உள்ளன என்ற மக்கள் கருத்து. எந்த படமும் மொக்கை, ஊத்திக்கொண்டது எனக் கேட்கவில்லை. எனவே, தமிழ் சினிமா நல்ல திசையில் பயணிக்கிறது என நினைக்கிறேன். இதே போல 'மாஸ்' படமும் தொடர்ந்தால் நல்லது.

சொல்ல மறந்து விட்டேனே. அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' படத்திற்கும் காத்திருக்கிறேன். ஏனென்றால், சென்னையின் திகில் இடங்கள் பற்றி ஏற்கனவே தெரியும், அதே போல ஒரு இடம் பயமுறுத்துவது போல இருக்கும் என்றால், நான்கு இளைஞர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தோன்றுமோ, அதே போன்ற கதை போல இருக்கும் போல. ஏமாற்றாமல் இருந்தால் சரி.

இவரா இப்படி (அ) இவர் இப்படியா?

நமக்கு முன் பின் தெரியாத, அல்லது பழகி இராத மனிதர் ஒரு தப்பான ஆள் என அப்போது நாம் நினைப்போம்?

1. அவரை முதலில் பார்த்தவுடன் நம் மனதில் தோன்றும் எண்ணம். ஆள் கருப்பாக, குண்டாக, பரட்டை தலை போல, லுங்கி அல்லது கசங்கிய உடை என்று இருந்தால், நம்மையும் அறியாமல் "மோசமான ஆளா இருப்பான் போல" என்று தோன்றும். 

2. அவர் பற்றிய செவி வழி தகவல்கள் அல்லது, நமக்கு தெரிந்த யாரோ ஒருவர் சொல்லும் எதிர்மறைக் கருத்துகள்.

3. இதுவே அவர் ஒரு பிரபலமாக இருப்பின், நமக்கு பிடித்தால் சரி, பிடிக்கவில்லை எனில், அவரைப் பற்றிய எதிர் மறையான செய்தி எதில் வந்தாலும், உடனே "ஓ அப்படியா" என நாமே இன்னும் சில கற்பனைகளை சேர்த்துக் கொள்வோம்.


விஜயகாந்த்: பொதுவாக இவரைப் பற்றி 'படித்தவர்கள்' யாரும் ஒழுங்காக சொல்வதே இல்லை. என்னைப் பொருத்தவரை இவர் ஒரு அப்பாவி. விவரம் தெரிந்தவர்கள் இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். 'பங்காளி' என்ற சத்தியராஜ் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் அவரை மதுவுக்கு அடிமையாக்கி, தனது சொல்படி ஆட்டி வைத்துக் கொண்டிருப்பார்கள். இவரும் அதே போலத்தான்.

பழைய படங்களில், அதாவது 80களில், 'சூப்பர் டைட்டில்ஸ் - கரிசல் ராஜா' என்று வரும் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. அவரின் பேட்டி ஒரு முறை பல ஆண்டுகளுக்கு முன், குமுதத்திலோ, விகடனிலோ வந்திருந்தது. அதில் அவர் சொன்ன ஒரு விஷயம் இன்னும் என் மனதில் உள்ளது. "எனக்கு எல்லா நடிகர்களையும் தெரியும். என் கல்யாணத்திற்கு எல்லாரையும் பாத்து பத்திரிகை கொடுத்திருந்தேன். ஆனா, என்னையும் ஒரு சக தொழிலாளியா மதிச்சு, என் கல்யாணத்துக்கு வந்த ஒரே ஆள், விஜயகாந்த் மட்டும்தான்" என்று சொல்லி இருந்தார்.

அதே போல, அவரது கட்சியில் ஜெயித்து, சட்டமன்ற உறுப்பினர் ஆகி, இப்போது அம்மா பக்கம் தாவி உள்ள அருண் பாண்டியன் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது. "நான் கஷ்டப்பட்ட காலத்துல எனக்கு உதவி செஞ்சது விஜயகாந்த் தான். அப்புறம் படத்துல நடிக்க ஆரம்பிச்ச பின்னாடி, நான் ஒரு முடிவு செஞ்சேன். என்னோட நூறாவது படம் நானே இயக்கணும், அதுல கண்டிப்பா விஜயகாந்த் நடிக்கணும். அதுக்காக காத்திருந்து நான் இந்தப் படத்த எடுக்கிறேன்" என்று தனது நூறாவது படமான 'தேவன்' பட வெளியீட்டின்போது கூறினார்.

இனி நான் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் மக்களுக்குத் தெரியும். இருந்தாலும், விஜயகாந்த் தனக்கு முக்கிய திருப்பு முனையாக அமைந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் இயக்குனர் சந்திரசேகர், தனது மகன் விஜயை தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க கஷ்டப்பட்டபோது, விஜயுடன் கவுரவ தோற்றத்தில், சந்திரசேகர் இயக்கத்தில் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார். அதே போல சூர்யாவுக்காக 'பெரியண்ணா' படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தார். நடிகர் சங்க தலைவராக இருந்தபோது, சிங்கப்பூர் மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, நடிகர் சங்க கடனை அடைத்தார். காவல் துறையினருக்கு ஒரு மதிப்பை தன் படங்கள் மூலம் அளித்தார். அதே போல, முடிந்தவரை, சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார். தனது அலுவலகத்தில் எப்போதும் அன்னதானம் அளிப்பார்.

கொஞ்சம் சுயமாக யோசித்து, சொந்தமாக முடிவுகள் எடுப்பார், சொந்தக்காரர்களை விட்டுவிட்டு வேறு சிறந்த ஆட்களை தன்னை சுற்றி வைத்துக் கொள்வார் என்றால், என் ஓட்டு இவருக்குத்தான். ஆனால், நடக்குமா எனபது சந்தேகம்தான்.

ஒலகப்படம்:

கல்லூரி வந்து சேரும் வரை, தமிழ்ப்படங்களைத் தவிர வேறு எதுவும் பார்த்ததில்லை. ஆங்கிலப் படம் என்றாலே 'ச்சீ' என்று எல்லார் முன்னாலும் சொல்லி விட்டு, பின் சத்தம் இல்லாமலும், யாரும் இல்லாமலும் பார்த்தே பழக்கம். ஜாக்கிசானைத் தவிர வேறு எந்த வெளிநாட்டு நடிகரையும் தெரியாது. கல்லூரி வந்த பிறகுதான் ஓரளவு ஆங்கிலப் படங்களும், பிற திராவிட மற்றும் ஹிந்தி மொழிப் படங்கள் பார்க்க ஆரம்பித்தோம். அதுவும், ஏதாவது ஒரு படம் வேறு மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டால், அதைப் பார்த்து விட்டு, பின் அந்த மொழியிலும் பார்ப்போம். போக போக, முதலில் அந்த மூலப்படத்தை பார்த்து விட்டு, தேவைப்பட்டால் நகலைப் பார்க்க ஆரம்பித்தோம்.

அதன் பின், பதிவுலகம் வந்த பின் பல பதிவர்கள் மூலமாக பல்வேறு மொழிப் படங்களைப் பற்றி தெரிந்தாலும், எல்லாமே பார்க்க மாட்டேன். துப்பறிவது, மர்மம், பேய், சண்டைப் படங்களையே பொதுவாக தேர்வு பார்ப்பேன். அவ்வப்போது காமெடி. அவ்வப்போது சில 'ஒலக படங்களைப்' பார்த்தாலும் அவை எனக்கு ஏனோ அவ்வளவாக பிடிக்கவில்லை. எந்த படமாக இருப்பினும், அதில் பல காட்சிகளை நம் அனுமானத்திற்கு விட்டு விடுவது ஏன் என எனக்குப் புரியவில்லை. எல்லாப் படங்களிலும் லாஜிக் நிறைய இடித்தது. ஆனாலும், நம்மை அதைப்பற்றி யோசிக்க விடாமல், "ஒரு வேளை இப்படித்தான் இருக்குமோ, இல்ல அப்படி இருக்குமோ" என்று வேறு வகையில் நம் கவனத்தை திருப்பி விடுகிறார்கள்.

விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களும் கொஞ்சம் இப்படித்தான் சில விஷயங்களை நம் அனுமானத்திற்கு விட்டிருந்தன. கமல் ரசிகன் என்று சொல்லிக் கொல்லும் (சரியாகத்தான் டைப்பி உள்ளேன்) எனக்கே அது பிடிக்கவில்லை. அப்புறம் எப்படி இந்த உலகப் படங்களை நான் ரசிப்பது.

அதற்கும் வழி உள்ளது. நிறைய நேரம் இருக்க வேண்டும், தனியாக இருக்க வேண்டும். ஒரே படத்தை குறைந்த பட்சம் இரண்டு முறை பார்ப்பதற்கு பொறுமை வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம் "யார் யாரெல்லாம் உத்தமர்களோ, அவர்களுக்கு மட்டுமே இந்தப் படம் புரியும்" என்ற மனநிலை. கீழே வரும் காணொளியில் 2:01:24ல் இருந்து பார்க்கவும். அதன் பின் "நேக்கு புரிஞ்சிடுத்து" என்று சொல்லுவீர்கள்.


இவையெல்லாம் இருந்தாலும், "ஒரு லக்கினத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவனாக" இருக்க வேண்டும். ஒலகப்பட விமர்சகராகப் போகும் எனக்கு, நானே இந்த காணொளியை சமர்ப்பித்துக் கொள்கிறேன்.


ஆமாங்க. நானும், இனி ஏதாவது ஒலகப்படம் பாத்து விமர்சனம் எழுதலாம்னு இருக்கேன். ஏன்னா, ஏற்கனவே நிறைய பேர், நெறைய எழுதி இருக்காங்க. அங்கங்கே கொஞ்சம் எடுத்து, பட்டி, டிங்கரிங் எல்லாம் பாத்து போட்டா, ஒரு பதிவு சூடா தயார்.

Friday, May 8, 2015

அம்மா!


அம்மா. உலகத்தில் 99 சதவிகித பேருக்கு பிடித்த (அல்லது பிடிக்கும் என்று சொல்கின்ற) பெண். நான் ஒரே மகன்தான் என்றாலும், செல்லம் எல்லாம் கிடையாது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது கூட துரத்தி துரத்தி அடித்துள்ளார்கள். நான் பொய் சொல்லவில்லை. எதற்காக, எதுவாக இருந்தாலும் ஓரளவுதானே? அளவிற்கு மீறினால் அடிதான்.

சிறு வயதிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து விட்டேன். அதுவும் குறிப்பாக சாப்பிடும்போது படித்துக் கொண்டே சாப்பிடுவேன். ஓரிரு முறை "சாப்டுட்டு படிடா" என்பார்கள். கேட்கவில்லை என்றால், முதுகு பழுத்து விடும். அதே போல தேர்வு நேரங்களில் "மத்த நாள் மாதிரி இல்ல. பரிட்ச வருது. இப்ப பாடத்த படி. லீவுல கத புக்க படிக்கலாம்" என்பார். கொஞ்ச நேரம் மட்டும் படிக்கறேன் என்று ஆரம்பிப்பேன். அப்புறம், ம்ம்ம் (அழுவுறேங்க).

அந்த காலத்து SSLC. எனவே நான் ஐந்தாவது படிக்கும் வரை அவரே சொல்லித் தந்தார். நானும் டை கட்டி ஸூ போட்டுக் கொண்டு LKG போக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், பக்கத்தில் அப்படி பள்ளியும் இல்லை, பணமும் இல்லை. எனவே 6 வயதில் காது தொட முடிந்தவுடன் (புரியும் என்று நினைக்கிறேன்) ஒன்றாம் வகுப்புதான் சேர்க்க முடியும். அப்போதெல்லாம் மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலமே வரும். ஆனால், எனக்கு வீட்டிலேயே ABCD, அ ஆ இ ஈ எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.

பத்தடி எடுத்து வைத்தால் பள்ளிக்கூடம். தலைமை ஆசிரியரும் சொந்தக்காரர்தான். எனவே, சும்மாவே போய் கொஞ்ச நாள் பள்ளியில் இருந்தேன். ஆறாம் வகுப்பு பக்கத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பள்ளியில்தான் அனைவரும் சேருவார்கள். சைக்கிள் தேவை. ஆனால், என்னையோ 5 கிலோ மீட்டர் தள்ளி உள்ள பள்ளியில் சேர்த்தார். எங்க ஊரில் இருந்து யாரும் அங்கு சேர மாட்டார்கள். பேருந்தில்தான் போய் வர வேண்டும். சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்று சொல்லி விட்டார். இல்லையென்றால் நாமக்கல்லில் இருந்து அந்தப் பள்ளிக்கு எங்கள் ஊர் வழியாகத்தான் போக வேண்டும். எனவே, நிறைய ஆசிரியர்கள் அப்படித்தான் போவார்கள். அவர்களுடன் போய் வரலாம். அதை விட முக்கியம். அப்போது இருந்த தலைமை ஆசிரியர் சொந்தக்காரர். எனக்கோ எரிச்சல்.

அப்போது எட்டாவது வரையே இலவச பாஸ். "சரி அப்புறம் சைக்கிள் வாங்கித்தானே ஆகணும்" என்று விட்டு விட்டேன். என் நேரம், நான் எட்டாவது வரும்போது கருணாநிதி பனிரெண்டாம் வகுப்பு வரை இலவச பாஸ் என்று சொல்லி விட்டார். எப்போதும் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும், அதாவது தனித்துத் தெரிய வேண்டும் என்று சொல்லுவார். அது நல்ல விதமாக இருக்க வேண்டும், பைத்தியகாரத்தனமாக அல்ல. ஏனென்றால் என்னை அங்கெ சேர்த்த வேண்டாம் என்று எல்லோரும் சொன்னார்கள். "ஊர்ல எல்லாப் பசங்களும் இங்கதான் போறாங்க. அவங்களோட ஒண்ணா போயிட்டு வரலாம், அத விட்டுட்டு, இப்படி தனியா போவனுமா" என்றார்கள். 

தேர்வுகளில் மிக கடினமான கேள்விகள், யாரும் பொதுவாக எழுதாத கேள்விகளையே எழுத சொல்லுவார். ஆசிரியர்கள் எல்லாம் திட்டுவார்கள். "நல்ல கையெழுத்து. அதனால் எல்லோரும் எழுதுற கேள்விக்கு பதில் எழுதுனா, ஒரு ரெண்டு வரி மட்டும் படிச்சிட்டு மார்க் போட்டுடுவாங்க. வேற கேள்வி எழுதுனா, அத படிச்சு, தப்பு எதுவும் இருந்தா மார்க் கொறஞ்சு போயிரும்" என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். என் அம்மாவோ, "மார்க் எல்லாம் வரும். நீ எழுது" என்பார். அதை விட முக்கியமாக அவர் சதவிகிதத்தை (percentage) விட சதமானமே (percentile) முக்கியம் என்றார். அதாவது, நான் 10 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதினால் போதும், ஆனால், அந்த 10 மதிப்பெண்களை முழுதாக வாங்க வேண்டும். எனவே, தெரியவில்லை என்றல் ஏனோ தானோ என்றெல்லாம் எதையும் எழுதாதே, ஒழுங்காக தெரிந்ததை மட்டும் எழுது என்றுதான் சொல்வார்.

எனக்கு கணக்கு பிடிக்கும். அதற்கு அவர்தான் தூண்டுகோல். சிறு வயதில் ஊரில் உள்ள வயதான கிழவிகளிடம் கதைப்பாட்டு பாடச் சொல்லி என்னை விளக்கம் கேட்பார். "மேல கொஞ்சம் குருவி, கீழ கொஞ்சம் கதிரு, கதிரொக்குரு குருவி ஒக்காந்தா, ஒரு குருவிக்கு எடம் இல்ல. கதிருக்கு ரெண்டு குருவி ஒக்காந்தா, ஒரு கதிரு மிச்சம்" என்பது ஒரு புதிர். இது என்னிடம் கேட்கப்பட்டபோது நான் மூன்றாம் வகுப்பு படித்தேன். (இப்போதெல்லாம் இதை மூன்று வயதிலேயே சொல்லி விடுகிறார்கள்). அது மட்டுமில்லாமல், நான் புத்தகம் படிப்பதை அவர் தடுக்கவில்லை.

பத்தாம் வகுப்பு வந்தவுடன், கொஞ்சம் பயத்தில் "நல்லா படிக்கணும், இதுல விட்டா அவ்வளவுதான். எப்படியாவது ஸ்கூல் பர்ஸ்ட் வந்துடு, காசு கொடுத்து தினத்தந்தில வர வச்சுறலாம்" என்றெல்லாம் சொன்னார். நான் அவருக்கு அந்த செலவை வைக்கவில்லை. பத்தாம் வகுப்பிற்குப் பின், அவர் எல்லாமே என்னையே முடிவு எடுக்க சொல்லி விட்டார். அதன் பின், இன்று வரை, வீட்டில் எது செய்தாலும், என்னைக் கேட்டு விட்டுதான் செய்வார். நான் அவரைக் கேட்காமல் செய்தாலும் என்னை எதுவும் அவர் கேட்பதில்லை.

கல்லூரியில் சேர்ந்தால் பணம் அதிகம் தேவைப்படும் என்று சிங்கப்பூரில் தெரிந்த வீட்டிற்கு வேலைக்காக சென்றார். உண்மையில் நான் அப்போது வருத்தப்படவே இல்லை. "அப்பா, இனி நம்மள படி படின்னு தொந்தரவு செய்ய மாட்டாங்க" என்றுதான் எண்ணினேன். அங்கே அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று பின்னால் உணர்ந்தேன். ஊரில், எப்போதும் அரட்டை அடித்துக்கொண்டு சுற்றிலும் தெரிந்தவர்களோடு இருந்து விட்டு, திடீரென யாரோ ஒருவர் வீட்டில், தனியாக, எங்கேயும் வெளியே போகாமல் இருக்கும் கஷ்டம் எனக்கும் சென்னை வரும்போதுதான் புரிந்தது.

அவரது திட்டமிடல் தெளிவாக இருக்கும். என்னிடம் அவர் சொன்னது "நீ காலேஜ் முடிக்கிற நாலு வருஷத்துக்கும் உனக்கு என்னென தேவையோ எல்லாமே வந்துடும். அதுக்கப்புறம் நீ சம்பாதிச்சு எங்களுக்கு கொடுக்கணும்னு அவசியம் இல்ல. உன்ன நீ பாத்துக்கிற மாதிரி இருந்துக்கோ" என்றார். இன்று வரை என்னுடைய சம்பளத்தை எதிர் பார்த்து அவர் இல்லை. தேவையில்லாமல் எதுவுமே வாங்கவில்லை. வீட்டில் டிவியே நான் வேலைக்கு போக ஆரம்பித்த பின்தான் வாங்கினோம். அதுவரை வீட்டில் சைக்கிள் கூட இல்லை. என் தாத்தாவின் பழைய சைக்கிள்தான்.

நான் சம்பாதிக்க ஆரம்பித்து கொஞ்சம் கன்னாபின்னாவென்று செலவு செய்ய ஆரம்பித்தவுடனே (புது அலை பேசி, மடிக்கணினி, ஐ-பாட்) உஷாராகி, மாதா மாதம் என்னிடம் இருந்த பணம் வாங்கி என் திருமணத்திற்கு தங்கம் வாங்கினார். அவரே சேமிக்கவும் ஆரம்பித்தார். அவருடைய ஆசை என்னவென்றால் எப்போதும் கடன் மட்டும் இருக்கக்கூடாது. எனவேதான் எதுவாக இருந்தாலும் முடிந்தவரை அது தேவையா என பார்த்து வாங்க வேண்டும் என்பார். அதனால்தான் கார் கூட வேண்டாம் என்றார். இந்த வீட்டுக் கடனைக் கூட எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைக்க வேண்டும் என்பதுதான் அவர் ஆசை. இன்னும் கூட அவருக்கு என் சம்பளம் எவ்வளவு என தெரியாது, ஆனால் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கினேன், எப்படி கட்டிக்கொண்டு இருக்கிறேன், வங்கி வீட்டுக்கடனில் எவ்வளவு மீதி உள்ளது என்பது மட்டும் விசாரித்துக் கொண்டே இருப்பார்.

இதுவரை அவர் என்னிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று எதுவுமே கேட்டதில்லை. எனக்கு முதல் மாத சம்பளம் மட்டும் கையில் பணமாக கொடுத்தார்கள். அதை அப்படியே கொடுத்து விட்டேன். அதன் பின் ஒரு முறை ஆனந்த அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று ஒரு புடவை எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தேன். "என்கிட்டே காசு கொடு, எனக்கு என்ன வேணுமோ நான் எடுத்துக்கிறேன்" என்று அதிர்ச்சி அளித்தார். (இதே போல, இன்னும் கேவலமாக என் மனைவியிடமும் திட்டு வாங்கினேன்.அது வேறு கதை).

அவருக்கு சிறு வயதில் இருந்தே புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற ஆசை என நான் நினைக்கிறேன். எந்தக் கல்யாணத்திற்கு போனாலும் என்னை அப்படியாவது, முடிந்தவரு அங்குள்ள தெரிந்த செல்வாக்கான சொந்தக்காரர் யாரையாவது பிடித்து என்னை ஒரு புகைப்படமாவது எடுக்க எடுக்க வைத்து விடுவார். அப்படியாகவே என்னுடைய ஓரிரு சிறு வயது படங்கள் வீட்டில் உள்ளன. சம்பாதிக்க ஆரம்பித்த உடனே அவர் வாங்க வேண்டும் என்று என்னிடம் சொன்ன ஒரே விஷயம் கேமராதான். இப்போதும் கூட என் மகள் என்ன செய்தாலும் உடனே என்னை புகைப்படம் எடுக்க சொல்லுவார். ஆனால் அவர் இதுவரை ஒரு புகைப்படமும் எடுத்ததில்லை. நான் கேமரா கொடுத்தபோது கூட "எனக்கெதுக்கு, நீ எடு" என்றார்.

அவருடன் போனில் பேசுவது வாரம் ஒரு முறைதான். அவரும் தேவை இல்லாமல் எல்லாம் பேசவும் மாட்டார். கல்லூரிக் காலங்களில், வெளியில் பூத்தில் இருந்து போன் செய்ய வேண்டும், அதுவும் ஊரில் போன் கிடையாது. பக்கத்துக்கு வீட்டிற்கு போன் செய்து, சென்று கூட்டி வர வேண்டும். எனவே, தேவை இல்லாமல் போன் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அது இன்று வரை தொடர்கிறது.

நண்பர்கள் அனைவரும் "ம் சாப்டுட்டேன், ஆபிஸ் கெளம்பறேன். வந்துட்டேன், தூங்கப் போறேன், சரிம்மா, பாத்துகிறேம்மா" என்றெல்லாம் பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். திருமணம் நிச்சயம் ஆனவுடன், "ஏண்டா, ஆளுக்கு உன் ஆளுக்கு மட்டும் அர மணி நேரத்துக்கு ஒரு வாட்டி அப்டேட் கொடுப்ப. உங்க அம்மாகிட்ட வாரத்துக்கு ஒரு வாட்டி, ரெண்டு நிமிஷம் மட்டும் பேசுவியா" என்பார்கள். என் அம்மாவிற்கும் அது தெரியும். ஆனால், நானோ, என் அம்மாவோ இதுவரை அதைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. ஆனால், சென்னைக்கோ அல்லது தூரமாக வேறு எங்கு சென்றாலும், சென்றவுடன் மட்டும் "நான் வந்து சேந்துட்டேன்" என்று மட்டும் சொல்லி விட வேண்டும். அது கல்லூரி முதல் இன்று வரை தொடர்கிறது.

இந்தப் பதிவு கூட அன்னையர் தினத்திற்காக இல்லை. இதே வாரம் வந்த என் அம்மாவின் (சான்றிதழில் உள்ள) பிறந்த நாளிற்காக. அவருக்கும் உண்மையான பிறந்த நாள் தெரியாது. எனவேதான் எனக்கு தேதி எல்லாம் மாத்தி எழுத வேண்டாம். சரியான தேதியே சான்றிதழ் எல்லாவற்றிலும் இருக்கட்டும் என்று சொல்லி விட்டார்.

என் அத்தையைப் பற்றி பதிவு போட்ட பின், அம்மா பற்றி சொல்ல வேண்டும் அல்லவா? அதுதான் இந்தப் பதிவு. இன்னும் கூட நான் இப்படி பதிவெல்லாம் எழுதுகிறேன், அதையும் கூட சில பேர் படிக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாது. எனக்கே அவரிடம் சொல்ல வெட்கமாக உள்ளது. அதில் இன்னும் அவரைப் பற்றியும் எழுதியுள்ளேன் என்று அவரிடம் சொன்னால் அவர் இன்னும் எவ்வளவு வெட்கப்படுவாரோ தெரியவில்லை.

Wednesday, May 6, 2015

உத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு?

படத்திற்கு பொதுவாக கலவையான விமர்சங்களும், கண்டிப்பாக கமலின் தீவிர ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றும் சொன்னதால் படம் பார்த்து விட்டேன். எனது தீர்ப்பை நான் இறுதியாக கூறுகிறேன்.


படத்தின் பலம்:

1. பாத்திரங்களின் தேர்வு மற்றும் நடிப்பு. நீங்கள் எந்த விமர்சனம் படித்திருந்தாலும், அதில் யாருடைய நடிப்பையும் குறை சொல்லி இருக்க மாட்டார்கள். கமல் முதல் அவரின் வாகன ஓட்டியாக ஒரு காட்சியில் வரும் நடிகர் வரை அனைவரும் நன்றாகவே செய்திருப்பார்கள்.

2. ஒரு பிரபல பிரபல நடிகன் என்றால், அவன் மிக சந்தோசமாக இருப்பான். அவன் வாழ்வில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. சினிமாவில் காட்டுவதை விட அவன் மிக நல்லவனாக இருப்பான். சினிமாவில் அனைவரும், எல்லோருடனும் நட்பாக இருப்பார்கள், அவர்கள் குடும்பங்களில் எல்லாம் பிரச்சினையே இருக்காது என்று கண் மூடித்தனமாக நம்புவர்களை செவிட்டில் அடித்தது போல "இங்கேயும் நாத்தம்தான்" என்பது போன்ற கதை. (நமக்குப் பிடித்த ஆளைப்பற்றி கிசுகிசு வந்தால் அது கட்டுக்கதை, பிடிக்காத ஆளைப்பற்றி வந்தால், இன்னும் இதுக்கு மேல ஏதாவது இருக்கும் பேசுவது).

3. பாயாசத்திலோ, கேசரியிலோ அங்கங்கே பரவியிருக்கும் முந்திரி போன்ற வசனங்கள் மற்றும் காட்சிகள் (கமல் மகள் மற்றும் மகன் சார்ந்த காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தது, "25 வருஷத்துக்கு முன்னாடி" என கொசுவர்த்தி சுத்தாமல் இரண்டு கடிதங்கள் மூலமே அதை சொன்னது, பட்டாபி பாஸ்கர் கண்ணீர் விட்டு அழுவார். கமல் கோபமாக சொல்லுவார் "அழாதே, உன் மூஞ்சுக்கு அது செட் ஆகலே").

4. வில்லுப்பாட்டுக்காரர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம், தெய்யம் கலை, பாலசந்தரின் நடிப்புத் திறமை போன்றவற்றை மக்களுக்கு தெரிய வைத்தது.

5. அழுது, கண்ணீர் சிந்தும் அளவிற்கு இறுதிக்காட்சி இருந்தாலும், அதை அப்படியே காட்சியாக்காமல் கடந்து சென்றது (இது பலமா பலவீனமா என சரியாக தெரியவில்லை)

படத்தின் பலவீனம்:

1. படத்தின் நீளம், அதில் வரும் உத்தமனின் கதை.

2. படத்தில் வரும் குறியீடுகள். அந்தக் கதைக்கு ஒருவர் கோனார் உரை வேறு அளித்துள்ளார். இதே போலத்தான் விஸ்வரூபம் படத்திற்கும் ஒரு காணொளி உள்ளது. இன்னும் நம்மூரில் பாதி பேர்க்கு மேல் உலகப்படம் எல்லாம் பார்ப்பதில்லை. அவர்களுக்கு படத்தில் வரும் குறியீடுகளும் தேவையில்லை. இரண்டரை மணி நேர பொழுதுபோக்கு மட்டுமே தேவை.

3. இசை. பொதுவாக கமல் கதை, திரைக்கதை எழுதி, யாரோ ஒருவர் இயக்கினால், கமல்தான் இயக்கினார் என்று ஊருக்கே தெரியும். இப்போது அதே போல ஜிப்ரான் பெயரில் அவரே இசை அமைக்கிறார் என நினைக்கிறேன். ஏனென்றால் இளையராஜாவே ஒரு முறை கமலுக்கு இசையமைக்கும் வகையில் நல்ல இசை ஞானம் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

4. முந்திரி பருப்பு நன்றாக இருந்தாலும் திகட்டிய பாயாசம்/கேசரி போல உள்ளது படம். (ஜெயராம் பாத்திரம் பார்க்கும்போது, ஒரு சாமானியன் எனக்கே தளபதி ஜெய்சங்கர் நினைவுக்கு வருகிறாரே, இவ்வளவு மோசமாகவா இருப்பது?)

சில எண்ணங்கள்:

கமல் ஒரு வேளை ஊர்வசிக்கு பதிலாக சரிகாவையும், ஆண்ட்ரியாவிற்கு பதிலாக சிம்ரன் அல்லது கவுதமியையும் மகள் மற்றும் மகன் பாத்திரங்களில்,இரண்டு மகள்களாக ஸ்ருதி, அக்ஷராவையும் போட்டிருந்தால் படம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.

கமல் முன்பு எப்படி என்றால், ஒரு கமல் படம் (அவரே கதை, வசனம் எழுதுவது), இவை கண்டிப்பாக தோல்வியடையும். கமல் ரசிகர்களால் கொண்டாடப்படும், அடுத்த சில வருடங்களில் காவியமாக கூட மாறும். (அன்பே சிவம், மகாநதி) அடுத்து ஒரு காமெடி/மசாலா படம் (முழுவதும் மற்றொரு இயக்குனரின் கதை, வசனம், இயக்கத்தில் நடிப்பது). இது வசூல் ரீதியாக வெற்றி அடையும். ஆனால், அவர் இப்போது வசூல் ரீதியாக குறைந்த பட்சம் நஷ்டம் அடையாது என நினைப்பதை சொந்த தயாரிப்பிலும் (விஸ்வரூபம்), மற்றவைகளை அடுத்தவர் காசிலும் (ஆளவந்தான், மன்மதன் அம்பு, உத்தமவில்லன்) எடுக்கிறாரோ என தோன்றுகிறது.

ஏற்கனவே லிங்குசாமி அஞ்சானால் நோஞ்சான் ஆகிக் கிடக்கிறார். நீங்கள் இந்த படம் மூலம் அவருக்கு வசூலை கொடுத்து உத்தமன் ஆவீர்கள் என்று பார்த்தால், கடைசியில் வில்லன் ஆகி விட்டீர்களே.

கமல் அவர்களே, பிரகாஷ்ராஜ் போல மற்றவர்கள் படங்களில் நடிக்க மட்டும் செய்யுங்கள், அனைவரும் பார்ப்பார்கள். உங்கள் பணத்தில், உங்கள் படத்தை எடுங்கள், தீவிர ரசிகர்களான நாங்களாவது கண்டிப்பாக பார்ப்போம்.

எனக்கென்னவோ பாபநாசம் டிரைலரை பார்த்தால் சர்வ நாசம் என சொல்லத் தோன்றுகிறது. நான் ஏற்கனவே த்ரிஷ்யம் பார்த்து விட்டேன் (மூன்று மொழிகளிலுமே - மலையாளம், தெலுங்கு, கன்னடம்). இதுவரை எந்தப் படமும் இப்படி பார்த்ததில்லை. பாபனாசமும் பார்ப்பேன். என்ன சொன்னாலும் மலையாளம்தான் சிறந்தது. மோகன்லால்தான் சூப்பர். ஏனென்று தெரியவில்லை.

இதுவரை கடந்த 15 வருடங்களில் வந்த எந்த கமல் படமும் எனக்கு பிடிக்காமல் போனதில்லை. குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பார்த்திருப்பேன். கடைசி இரண்டு இடங்கள் 'உன்னைப் போல் ஒருவன்' (ஹிந்தியில் பார்த்து விட்டதால்) மற்றும் 'மன்மதன் அம்பு'. பாபநாசம் கண்டிப்பாக இதில் வரும்.

உத்தம வில்லன் இந்த அளவிற்கு மோசமாக இல்லாவிட்டாலும், ஒரு பாதியில் வைக்கலாம். ஆனாலும், நான் கமலை நம்புகிறேன், காத்திருக்கிறேன். மீண்டு வாருங்கள்.