Friday, December 4, 2009

சூப்பர் நாவல் - சுபா

அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

க்ரைம் நாவல் -ராஜேஷ் குமார் பற்றிய பதிவை படித்திருப்பீர்கள். உடனே,எனக்கு அடுத்து நினைவுக்கு வருவது சூப்பர் நாவல் - சுபாதான்.

சுபா
(சுரேஷ்-பாலா):

சூப்பர் நாவல், க்ரைம் நாவலைப் போலஅவ்வளவு சீரியஸாக இருக்காது. சில துணுக்குகள் இருக்கும். அது மட்டுமின்றி நாவலின் அட்டைப் படமும் ரணகளமாக இருக்கும். காரணம், புகைப்பட நிபுணர் கே.வி.ஆனந்த். அதன் பிரதி பலனாகவே, அவர் இயக்கும் படங்களுக்கு சுபா திரைக்கதை அமைக்கின்றனர் என்று நினைக்கிறேன். அது மட்டுமன்றி சூப்பர் நாவலில், சுரேஷ் பாலா இருவரும் நடுவில் சில காலம், அலுவல் காரணமாக பிரிந்திருந்த பொது நடந்த மடல்பரிமாற்றங்கள் வேறு தொடராக வந்தது.

சுபாவின் கதைகளில், துப்பறியும் காட்சிகள் நன்றாக இருக்கும். நம்மால் அதை மனதில் ஓட்டிப் பார்க்கும்படி விவரித்திருப்பார்கள்.பொதுவாக
எல்லா கதாசிரியர்களும் தங்களது கதைகளின் நாயகர்களாக ஒரே பாத்திரத்தை வைத்திருப்பார்கள். ஆனால், எனக்கு தெரிந்து சுபாவிற்கு இரண்டு விதமான நாயகர்கள்.

ஈகிள்ஸ் தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த நரேந்திரன் - வைஜெயந்தி, எம்.டி ராமதாஸ், ஜான்-அனிதா, அப்புறம் ஒரு நாய் (பெயர் மறந்து விட்டது), அவர்களின் காவல்துறை நண்பர் பால் ராஜ்.

நரேன் வைஜ் வரும் கதைகள், அவர்களது ஊடல்,கூடலுடன் அழகாக பயணிக்கும் எனக்கு அவர்கள் தோன்றும் கதைகள் படிக்கும்போது,அந்த கால கமல் ராதாதான் நினைவுக்கு வருவார்கள். அது மட்டுமின்றி, இணைபாத்திரங்களும் நன்றாக படைக்கப்பட்டிருக்கும்.நரேனின் நண்பனாக வரும் ஒரு இணை கதாபாத்திரத்தை, ஆரம்ப கால கதைகளிலேயே போட்டுத் தள்ளி விட்டார்கள். அதன் பின்தான் ஜான் பாத்திரம் வந்தது.

இன்னொரு நாயகன் செல்வா. செல்வா மற்றும்முருகேசன். ராணுவத்தில் குண்டடி பட்டதால் தனியே வந்து துப்பறியும் நிறுவனம் நடத்தும் பாத்திரம். முருகேசனும் அவனுடைய அத்தைகளும் பற்றி சுபா தனியே எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். செல்வா வரும் எல்லா கதைகளிலுமே வரும் நாயகி, செல்வாவுடன் சகஜமாக சுற்றி விட்டு, கடைசியில் 'எஸ்' ஆகிவிடுவார்கள். (கிட்டத்தட்ட வசந்த் போலவே).செல்வா முருகேசன் கதைகளில், கதை எப்போதும் செல்வாவின் பார்வையில்தான் பயணிக்கும். இந்த இரண்டு பாத்திரங்களும் இணைந்து கலக்கிய கதை ஏதோ ஒன்று மட்டும் படித்ததாக ஞாபகம். மக்கள் யாரேனும் படித்திருந்தால் கூறவும். நான் படமாக்க விரும்பும் கதையாக முதலில் சுபாவின் நாவலைத்தான் கூறியுள்ளேன்.

இன்னும் நிறைய பேர் உள்ளனர்.. விரைவில் வரும்.

Wednesday, December 2, 2009

க்ரைம் நாவல். ஆசிரியர் - ராஜேஷ் குமார்

யார்ரா இவன்?? பெரிய ______ மாதிரி சொல்ல வந்துட்டான்னு நெனக்காதீங்க... சும்மா எனக்கு தெரிஞ்சத சொல்லலாமுன்னு நெனச்சேன்.. அம்புட்டுதேன்.. அதுவுமில்லாம, நான் சொல்ல வந்தது நம்ம மாத நாவலாசிரியர்கள் பத்திதேன்.. நெறைய சொல்லனுமுன்னு ஆசங்க.. கொஞ்ச கொஞ்சமா சொல்றேன்..

ராஜேஷ் குமார்:

ஒரு காலத்தில், ராஜேஷ் குமாரை விட சிறந்த நாவலாசிரியர் உலகத்திலேயே கிடையாது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அந்தளவிற்கு வெறித்தனமான ரசிகனாக இருந்தேன். அவரது மாத நாவல் 'க்ரைம் நாவல்'. எனக்கு தெரிந்து தமிழ் மாத நாவல்களில் விலை அதிகமானதும், அதிகம் விற்பனையாவதும் அதுதான். எனவே, அப்போது பழைய புத்தக கடைதான் அந்த நாவலுக்கு. பழைய புத்தக கடையில், மற்றவர்களின் புத்தகங்கள் பாதி விலை என்றால், ராஜேஷ் குமாரின் நாவல் மட்டும், பாதிக்கு மேல், ஒரு ரூபாய் அதிகம். இதிலிருந்து அவரின் பெருமை தெரியும் என்று நினைக்கிறேன்.

அந்த நாவலில் 'ட்ரங்க் கால்', 'விளக்கம் ப்ளீஸ் விவேக்' (இது தனியே புத்தகமாகவும் வெளியானது) மற்றும் அரட்டை (ஞாபகம் இல்லை) பகுதிகளும் நன்றாக இருக்கும். சமீப காலங்களில்தான் படிப்பது சற்றே குறைந்து விட்டது. பள்ளியில் படிக்கும்போது, வீட்டில் திட்டுவார்கள் என்று அங்கங்கே ஒளித்து வைத்த க்ரைம் நாவல்கள் இன்னும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அவரது நாவல்களில் வரும் துப்பறியும் நாயகன் விவேகானந்தன் என்கிற விவேக், புலனாய்வுதுறை உயரதிகாரி. அவரது மனைவி ரூபலா. காவல்துறையில் அவரது நண்பர் கோகுல் நாத். இப்போதெல்லாம், விஷ்ணு என்கிற உதவியாளரும். எனக்கு தெரிந்து, நாவலாசிரியர்களின் நாயகர்களில், விவேக் மட்டும்தான் அரசாங்க அதிகாரி. நிறைய முறை, ஸ்காட்லாந்து போலீஸால் துப்பறிய முடியாத வழக்குகளையும், விவேக் கண்டு பிடித்துள்ளார். பல வருடங்களுக்கு முன், ஒரு கதையில் நடந்த விவேக்-ரூபலா திருமணத்திற்கு மொய்ப்பணம் மட்டும் சில ஆயிரங்கள் தேறியதாக படித்துள்ளேன்.

விவேக் - ரூபலா வரும் நாவல் என்றால் எப்பாடு பட்டாவது அதை வாங்கி விடுவேன். ஊருக்குள், புத்தக மாற்று முறையில், விவேக் வரும் ஒரு புத்தகத்திற்கு, இரண்டு புத்தகங்களைக் கொடுத்தெல்லாம் வாங்கியுள்ளேன். அது மட்டுமன்றி, அவரது கதைகளின் தலைப்பு, எதுகை மோனையோடு இருக்கும். அஞ்சாதே அஞ்சு (இது தொடராக வந்தது), விட்டு விடு விவேக், தப்பு தப்பாய் ஒரு தப்பு, இந்தியனாய் இரு எனப் பல. அவரது இன்னும் சில நாவல்களும் தொலைக்காட்சியில் தொடராக வந்துள்ளன.

அவரது கதைகளில், தொழில் நுட்பங்கள் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். கம்ப்யுட்டர், அதில் 'பாஸ் வேர்டு' என்ற பாதுகாப்பு உள்ளது என்பதெல்லாம் எனக்கு க்ரைம் நாவல் மூலம்தான் தெரியும். கிரிப்டோகிராபி பற்றியெல்லாம், தமிழில் பல வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். தற்போது ஓரளவிற்கு விவரம் தெரிந்தாலும், அதற்கு முன்னோடி ராஜேஷ் குமார்தான். மற்ற தமிழ் கதாசிரியர்களுடன் பார்க்கும்போது, அவர் டெக்னிக்கலாக, சற்று முன்னுள்ளார் என்பது என் கருத்து.

பொதுவாக அவரது கதைகள் கடைசி இரு அத்தியாயங்களுக்கு முன் வரை பயங்கரமாக இருக்கும். கடைசியில் (என்னைப் பொறுத்த வரை) நம்ப முடியாமல் இருக்கும். பெரும்பாலும் இரு கதைகளாக பயணித்து, இறுதி அத்தியாயத்தில் ஒன்று சேரும். இதை கலாய்த்து, அவரே ஒரு கதை எழுதியுள்ளார். கடைசி வரை அவை இரு வேறு கதைகளாகவே வரும்.

ரமணா படத்தில் வரும் மருத்துவமனையில் பிணத்தை வைத்து வியாபாரம் செய்யும் காட்சி, அதற்கு ரொம்ப நாள் முன்பே அவரது கதையில் வந்து விட்டது. படத்தில் அதற்காக நன்றி தெரிவித்தது போல தெரியவில்லை. யாரும் அதைப் பற்றியும் சொல்லவும் இல்லை.

திரையுலகில் அவரது எந்த கதையும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. தற்போது ஏதோ ஒரு படத்திற்கு (படத்தின் பெயர் அகராதி) கதை, திரைக்கதை அமைத்துள்ளார். மேலும் ஆனந்த விகடனில் ஒரு தொடரும் எழுதி வருகிறார். (தலைப்பு: இனி, மின்மினி). விவேக், அவரது உதவியாளர் விஷ்ணு துப்பறியும் கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.அவரைப் பற்றி இன்னொரு பதிவு இங்கே.

Sunday, October 25, 2009

நான் படமாக்க விரும்பும் கதைகள் - 1

இதுவரை நிறைய கதைகளை படித்திருந்தாலும் (கை மண் அளவில், ஒரு துகளின் கோடியில் ஒரு பங்கை விட குறைவாக படித்து விட்டு இந்த அலட்டு தேவையா என்று நினைப்பது புரிகிறது). ஒரு சில புதினங்களைப் படிக்கும்போதுதான் அந்த காட்சிகள் அனைத்தும் நம் கண் முன்னே அப்படியே விரியும். நமக்கு பிடித்த, பிடிக்காத உருவங்களை அந்த கதாபாத்திரங்களில் பொருத்திப் பார்ப்போம்.

இது பொதுவாக எந்தக் கதைகளைப் படித்தாலும் வரும். இருந்தாலும், ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரஸ்யமாய் இருந்தால்தான் படம் பார்ப்பது போல தோன்றும். எனக்கு அப்படி தோன்றிய கதைகள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

மனித வேட்டை/மேனியெல்லாம் சிறகுகள்:

ஒரு நாவலையே கிட்டத்தட்ட திரைக்கதை வடிவில் எழுதி, கண் முன்னே கதைக் களத்தை கொண்டு வந்த நாவல். சுபாவின் கற்பனையில் உருவான இந்த நாவல், கிட்டத்தட்ட ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இருக்கும். (தழுவலா என்பது எனக்கு தெரியாது. மக்கள்தான் கூற வேண்டும்)

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன், ஏதோ ஒரு பழைய புத்தக கடையில் வாங்கிய 'சூப்பர் நாவலில்' வந்த கதை. அதன் தலைப்பு 'மனித வேட்டை'.

கதையின் ஆரம்பமே,தலைப்பு அத்தியாயம் எதுவுமின்றி ஆரம்பிக்கும். ஒரு மலைப்பகுதியில், உயிருக்கு பயந்து ஓடும் ஒரு மனிதனை, நான்கு ஜோடிக் கால்கள் துரத்துகின்றன. அவர்களிடம் சிக்கி உயிரிழக்க விரும்பாமல் அருவியில் குதிக்க முயல, கீழே விழுவதற்கு முன்பே அவர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகிறான்.

முதல் அத்தியாயம். டென்னிஸ் பந்து வலையைத் தாண்டி போகிறது. ஒரு இளம் கணவன் மனைவி, நான்கு, தங்களின் தந்தை வயதையொத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சமீப காலத்தில் ஏற்பட்ட புதிய நட்பு.

அவர்களின் திருமண நாள் அன்று, கணவன் அலுவலக வேலைகள் காரணமாக வெளியில் சில வேலைகள் செய்து விட்டு, அலுவலகம் வர, மனைவியிடமிருந்து சில குழப்பமான தொலைபேசி அழைப்புகள். தான் தன் தாயின் வீட்டுக்கு செல்வதாகவும், திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது அழைப்பதாகவும் சொல்கிறாள். குழப்பமான நாயகன், வேலைகளை முடித்து விட்டு கிளம்ப நினைக்க, காவல் துறை அதிகாரிகள் வந்து, நாயகியின் பிணம் ஒரு கிணற்றில் கிடப்பதாக சொல்லி, சந்தேகத்தில் அவனைக் கைது செய்கிறார்கள்.

அனைத்து ஆதாரங்களும் அவனுக்கு எதிராகவே இருக்கிறது. அவனுடைய மூத்த நண்பர்கள் முடிந்த அளவு உதவி செய்கின்றனர். ஆனாலும், அனைத்து ஆதாரங்களும் எதிராகவே திரும்ப, வேறு வழியின்றி அவன் தப்பிக்க உதவி செய்கின்றனர். கொஞ்ச நாட்களுக்கு தலைமறைவாக இருக்க, இரண்டு பேர், அவனை ஒரு தீவிற்கு கூட்டிக் கொண்டு போகின்றனர். ஆளரவமற்ற அந்த தீவில், அவனுக்கு நல்ல உணவு, உடற்பயிற்சி கொடுக்கப்படுகிறது. துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகளும்.

ஒரு நாள், காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது, அந்த நான்கு பேரும் அவன் முன் உள்ளனர். அவனது கை கால்கள் கட்டப்பட்டுள்ளன. அவனுக்கு ஒரு வீடியோ காட்டப்படுகிறது. அவன் மனைவி அந்த நான்கு பேரால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்படுகிறாள். அவர்களுக்குள் இருக்கும் அந்த மூர்க்கத்தனத்தையும் அவன் உணருகிறான். வேட்டையாடி பொழுதை கழிக்க, அவர்கள் வாங்கிய அந்த தீவில், மிருகங்களே இல்லாததால், மிருகங்களை கொண்டு வந்து, வேட்டையாடி, அதுவும் போரடித்ததால், மனிதர்களைக் கொண்டு வந்து வேட்டையாடுகின்றனர். அதுவும், சாதாரண மனிதர்கள் எதிர்த்துப் போராடாமல் தோற்பதும் பிடிக்கவில்லை. எனவே, மனிதனைத் தூண்டி விட்டு, உணர்ச்சிகளுடன் அவர்கள் ஆடுவது மனித வேட்டை.

---இடை வேளை---

அவனிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி, அவனை முடிந்தால் அந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, தப்பித்துப் போய், நிரபராதி என்று நிரூபித்து கொள்ள சொல்கிறார்கள். அவனுக்காக, ஒரு படகும் கடற்கரையில் தயாராக உள்ளது.

அவன் எப்படி அவர்கள் நால்வரையும் அழித்து, தப்பிச் செல்கிறான் என்பதை, இரண்டாம் பாதியில் அட்டகாசமான திரைக்கதையோடு அமைத்து சொல்லியிருக்கிறார்கள் சுபா.

நான் முன்பே கூறியது போல, இந்த நாவலின் சிறப்பே, திரைக்கதை வடிவில் எழுதியதுதான். அத்தியாயம் ஆரம்பிப்பதற்கு முன்பே, நடக்கும் முதல் கொலை. நாயகனிடம் உண்மைகளைக் கூறி, நன்றாக கோபம் வரும்படி செய்து விட்டு, பின் அவனை தப்பித்து ஓடச் சொல்லி விட்டு, அரைமணி நேரம் கழித்து கிளம்பும்போது முதல் பாதியை முடித்து விட்டு, பின் இரண்டாம் பாதி தொடங்கும்.

பழைய புத்தக கடையில், இரண்டு ரூபாய்க்கு வாங்கிய சூப்பர் நாவல். மீண்டும் தேடும்போது கிடைக்கவில்லை. ரொம்ப நாள் கழித்து, எதேச்சையாக நூலகத்தில், 'மேனியெல்லாம் சிறகுகள்' என்ற புத்தகத்தைப் படித்தால், அதே நாவல். உடனடியாக, அந்த பிரசுரம் சென்று புத்தகத்தை வாங்கி விட்டேன்.
சமீப காலமாக, சுபாவின் நாவல்கள் படமாக்கப் படுவது போல, இந்த நாவலையும் படமாக்கலாம். அருமையான மசாலா திரைக்கதை. நடுவில் வரும் காதல் கதையில் டூயட். ஒரு சோகப் பாடல். ஒரு க்ளைமாக்ஸ் பாட்டு (சிங்கம் போல).

ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு பஞ்சமேயில்லை. நால்வரையும் தனித் தனியாக, பிரித்து, ஒவ்வொருவராக கொல்லும் காட்சிகளும் வைக்கலாம். முதல் பாதியில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு வாய்ப்புள்ளது. இரண்டாம் பாதியில் தேவையில்லை.
நாவல் பற்றிய விவரங்கள்:
தலைப்பு : மேனியெல்லாம் சிறகுகள்
ஆசிரியர் : சுபா
வெளியிடுவோர் : மூவர் நிலையம், இராயப்பேட்டை, சென்னை.
விலை : ரூ.70/-

Sunday, October 4, 2009

ரஜினி vs கமல் / மம்முட்டி vs மோகன் லால்

ஒரு வருடத்திற்கு சற்றே முன்பு, தசாவதாரத்தைப் பற்றி எழுதாமல் ஒரு பதிவர் இருந்தால், ஏதோ அவர் பதிவுத் துரோக குற்றம் செய்தவர் போல அனைவரும் பார்த்தனர். இப்போது அதே போல 'உன்னைப் போல் ஒருவன்'. பதிவு போடவில்லை என்றால், நீ என்னைப் போல் ஒருவன் இல்லை என்று ஒதுக்கி விடுவார்கள் போல. எனவே, என்னுடைய பங்கு, பதிவு.

எல்லோரும் படத்தைப் பற்றி அனைத்து விதங்களிலும் அலசி விட்டார்கள். நீரஜ் பாண்டே மற்றும் கமல் கூட அதைப் பற்றி யோசித்து இருக்க மாட்டார்கள். சாண்ட்விச் சாப்பிடுகிறார், உயர்தர செருப்பு அணிந்திருக்கிறார், துப்பாக்கி வைத்திருக்கிறார், கண்ணாடி போட்டிருக்கிறார், சட்டை வேறு அணிந்திருக்கிறார் என்பது வரை சொல்லி விட்டார்கள்.

நானும் ஒரு பதிவிட வேண்டும் என்று எண்ணியபின், எல்லாமே வந்து விட்டதே, ஏதாவது ஒரு நல்ல பதிவை எடுத்து ரீமிக்ஸ் பண்ணலாமா என்றும் யோசித்தேன். பிறகுதான் இந்த தலைப்பு ஞாபகம் வந்தது. பதிவும் வந்து விட்டது.

பதிவின் தலைப்பிற்கேற்ப, தளபதி மற்றும் உன்னைப் போல் ஒருவன் ஆகிய இரு படங்களைப் பற்றி எனது கருத்துக்களை எழுதுகிறேன்.

ஒரு புதன்கிழமை (A Wednesday) நான் ஏற்கனவே பார்த்திருந்ததால், கமல் அதை எப்படி தமிழ்ப்படுத்தியிருப்பார் என்ற எதிர் பார்ப்பு மட்டுமே இருந்தது. அதுவும் பாடல் வெளியிட்ட பின், அது இன்னும் எகிறி விட்டது. அந்த படத்தில் பாடல்களா என்று. ஆனால், கமல் நம்மைப் போல ஒருவர் இல்லையே! கலக்கி விட்டார்.

தளபதி. ரஜினி, மம்முட்டி, மணி ரத்னம், இளையராஜா, சந்தோஷ் சிவன் என்று அனைத்து ஜாம்பவான்களும் இணைந்து, இசைந்து(?) பணியாற்றிய படம். பொதுவுடமையாக்கப்பட்ட ஒரு கதையின் நவீன காலத்து ரீமேக்.

இரு படங்களுக்கும், கடினப்பட்டு, நான் கண்டு பிடித்த ஒற்றுமைகளாவன. இரண்டுமே ரீமேக். இரு படங்களிலும் தலா ஒரு முன்னணி தமிழ் மற்றும் மலையாள நாயகர்கள் நடித்துள்ளனர். மம்முட்டி, கமல் இருவரும் முதலில் கெட்டவர்கள் போல சித்தரிக்கப்படுவார்கள். இரு படங்களிலும் அருமையான பாடல்கள் படமாக்கப்படவில்லை. ரஜினி, கமல் இருவருமே தனது உண்மையான பெயரை சொல்லிக்கொள்ள மாட்டார்கள். (ரஜினி 'தளபதி என்று சொல்லிக்கொள்வார்). இருவரும் தான் செய்யும் வன்முறை/தீவிரவாத செயல்களுக்கு, பெண்களுக்கு நிகழ்ந்த வன்செயல்களை முக்கிய, தங்கள் செயல்களை நியாயப் படுத்த காரணமாக சொல்வார்கள். வேறெதாவது இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லவும்.

நடிப்பைப் பொறுத்தவரை, ரஜினி தவிர மற்ற மூவரும், விருதுகளுக்கான போட்டியில் சற்று முன், பின்னேதான் இருக்கிறார்கள். ரஜினியோ விருது பெறவில்லையே தவிர, சற்றும் சளைத்தவரல்ல என்பதை பல படங்களில் நிரூபித்துள்ளார்.

தளபதி படத்தில் நடிப்பதற்கான இடங்கள் அதிகம். ஆனால், உன்னைப் போல் ஒருவனில், வெறும் பேச்சு மட்டும்தான். இந்த இரு பாடங்களில், என்னைப் பொறுத்தவரை முதலிடம் மோகன் லாலுக்குத்தான். அலட்டிக்கொள்ளாமல், நவரசத்தையும் முக பாவங்களிலேயே காட்டி, அசத்தி விட்டார்.

திரைக்கதை, வசனம் இரண்டிலும் என்னைப் பொறுத்தவரை உன்னைப் போல் ஒருவன் முந்துகிறது. (இன்னும் சொல்வதென்றால், A Wednesday இன்னும் நன்றாக இருந்தது என்பது என் கருத்து. ஆங்கில வசனங்கள் அதில் நன்றாக பொருந்தியது. குறிப்பாக அந்த ஹாக்கர் முதலில் சொல்லும் He is good, but not the best அதன் பின் He is not just good, he is the best என்பதும், எனக்கு மிகவும் பிடித்தது.) ஒரு பொது மனிதன் இப்படி மாறுவதற்கு சொல்லும் காரணங்கள் ஹிந்தி படத்தில் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். பெயரே தெரியாத, தினசரி உடன் பயணிக்கும் பயணியின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும் அந்த காட்சி. அதே போல உணர்ச்சியை தமிழில் கொடுக்கவே 'கருவறுத்தல்' போன்றவற்றை கமல் கொண்டு வந்திருக்க வேண்டும். அது நடந்தது யாருடைய மகளுக்கு என்பதை நம்முடைய அனுமானத்திற்கு விட்டிருப்பதும் அந்த உணர்ச்சிக்காகத்தான்.

தளபதியில் நிறைய விஷயங்களை காட்சிகளிலும், பின்னணி இசையிலும் புரிய வைத்து விடுவார்கள். ரஜினியும், மம்முட்டியும் அரவிந்தசாமியை சந்திக்கும் காட்சியில், "தேவா, சூர்யா ரெண்டு பேர்" என்ற வசனம் வரும்போது தேவா வரும் இடத்தில் ரஜினியையும், சூர்யா எனுமிடத்தில் மம்முட்டியையும் காட்டுவார்கள். நட்பின் ஆழத்தைக் காட்டும் இடம். பின்னணி இசைக்கு எதை சொல்ல, எதை விட? அந்த கோயில் காட்சி ஒன்று போதுமே.

A Wednesday படத்திற்கும், உன்னைப் போல் ஒருவனுக்கும் மேலோட்டமாக பார்த்தால், அந்த புதன் கிழமையைத் தவிர வேறு வித்தியாசமே இல்லை (வசனங்களை விட்டு விடுவோம்). நான் முதலில் போக்கிரி தெலுங்கு பார்த்தேன். பின் தமிழில் பார்த்த பின் நண்பர்களிடம், "எதுக்கு தேவையில்லாம திரும்ப எடுத்தாங்களோ? கிராபிக்ஸ்ல விஜய் முகத்த மட்டும் மகேஷ் பாபு முகத்துக்கு பதிலா மாத்தியிருக்கலாம், இலியானாவும் இருந்திருக்கும்" என்றேன். இப்போது உன்னைப் போல் ஒருவனை பார்த்த பின், எனக்குள் முதலில் எழுந்த எண்ணமும் கிட்டத்தட்ட அதேதான். கமலின் மற்ற ரீமேக் படங்களில், திரைக்கதையில் வித்தியாசங்கள் காட்டியிருப்பார். ஆனால், ஒரு நல்ல படத்தை அதன் சாரம் குறையாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க, கமல் செய்ததில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

மக்கள் கூறுவது போல, ஏதாவது ஒரு குப்பனோ, சுப்பனோ அந்த பாத்திரத்தில் நடித்திருந்தால், "அவர் குண்டு வைப்பதும், மோகன் லாலுக்கு சவால் விடுவது நம்பும்படியே இல்லை. வேறு யாராவது பெரிய ஆளை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று சொல்வார்கள். அக்கரைப் பச்சை. கமலும் காய்த்த மரமல்லவா!!

மொத்தத்தில் இரண்டுமே அருமையான படங்களே. இரண்டு படங்களும் இந்த ஒரு காரணத்தால்/நபரால் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது என்று கூறி, இடப் போகும் பின்னூட்டங்களுக்கு நன்றி கூறி, விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம்.

இந்த இரு படங்களையும் ஒப்பிடுவது போல, வேறு மடத்தனம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். நானும் அதைத்தான் நினைத்தேன். ஆனாலும் என்ன செய்ய. ஏதாவது செய்ய வேண்டுமே. உங்களது கருத்துக்களை இட வேண்டும்.


Wednesday, August 5, 2009

நான் ரீமேக் செய்ய விரும்பும் படங்கள்!!!

பல படங்களைப் பார்த்த பின்பு, 'அடடா, நல்லாத்தான் இருந்தது.. என்ன, நடுவுல அந்த சீன மட்டும் கொஞ்சம் மாத்தியிருந்தா படம் சூப்பரா இருந்திருக்கும்.. தேவையில்லாம லவ்வு சீன் வேற. அந்த பாட்டு வேற தேவையில்லாம' என்று நமக்கு பல கருத்துக்கள் தோன்றும்..

இது போல பல படங்கள் தேவையில்லாத காட்சியமைப்புகளாலேயே தோல்வியடைந்துள்ளன. சில படங்கள் ஆங்கிலப் படங்களை காப்பி அடித்திருந்தாலும், ஒழுங்காக அதை செய்யாததாலேயே தோல்வியடையும். நான் பார்த்த சில தமிழ் படங்கள், எனக்கு மிகவும் பிடித்தவை, ஆனாலும் சில காரணங்களால் தோல்வியடைந்திருக்கும். அவற்றைப்பற்றி என்னுடைய பார்வை. ஏன், எதனால், எப்படி போன்ற காரணங்கள் என்னுடைய மாறுகண்ணின் ஓரப்பார்வையில் அலசப்படுகின்றன..

சின்ன ராஜா:

கார்த்திக் இரு வேடங்களிலும், ரோஜா, பிரியா ராமன் மற்றும் மணிவண்ணன் நடித்து, வெளிவந்த படம்.. ஆங்கிலப்படத்தின் தழுவலா என்று தெரியவில்லை.

கார்த்திக்கின் தந்தைக்கு இரட்டைக் குழந்தைகள்.. இரண்டும் கார்த்திக்தான். ஒருவர் பாட்டியிடம் நல்லவராகவும், இன்னொருவர் பணக்கார தந்தையிடம் செல்லமாகவும், பொறுப்பற்ற ஊதாரியாகவும் வளருவார். இதை சகிக்க முடியாமல், அவரது அப்பா, சொத்தை நல்ல கார்த்திக் பெயரில் எழுதி வைத்து விடுவார். அதனால் கோபத்தில் அவரைக் கொன்று விடுவார்.

பழியும் கெட்ட கார்த்திக் மேல்தான் விழும். ஆனால், சின்ன ஆள்மாறாட்டம் செய்து, நல்ல கார்த்திக் பெயரில் அவர் வீட்டுக்கு வந்து விட்டு, அவரை சிறைக்கு அனுப்பி விடுவார். காதலி ரோஜா, பாட்டி அனைவரையும் தான்தான் நல்ல கார்த்திக் என்று நம்ப வைத்தும் விடுவார். மணிவண்ணனுக்கு மட்டுந்தான் சந்தேகம் இருக்கும். ஆனாலும், அதையும் காட்டிக்கொள்ளாமல் உடனிருப்பார்.

பிரியா ராமன் வக்கீலாக வந்து, சிறையிலுள்ள கார்த்திக்கு ஆதரவாக இருப்பார். அவர்தான் நல்ல கார்த்திக் என்று நிரூபிக்க அனைத்து ஆதாரங்களும், எதிராகவே திரும்பும். பார்த்தால், அவரும் கெட்ட கார்த்திக்கின் ஆள்தான். இறுதியில், சிறையில் சிறு சண்டையில் ஆளை மாற்றி விட்டு வெளியே வருவார். இதற்கு நடுவில் பிரியா, மணிவண்ணனையும் கொன்று விடுவார்கள். இறுதியில் சுபம்.

படம் பார்த்து வெகு நாட்களாகி விட்டது. எனவே, என்னுடைய திரைக்கதையும் உள்ளே இருக்கலாம். ஷொட்டு, குட்டு இரண்டும் எனக்கே சொந்தம்.

படம் பார்க்க எனக்கு மிகவும் பிடிந்திருந்தது. ஆனாலும், ஒரு சீரற்ற திரைக்கதையால் தடுமாறும். சின்ன வயதிலிருந்து வளர்த்த பாட்டியால் கூட கண்டு பிடிக்க முடியாமலிருப்பது. வழக்கம் போல காவல் துறை போன்றவை. இப்போது யாராவது நல்ல திரைக்கதை அமைத்தால் கண்டிப்பாக நான் பார்ப்பேன்.

சுதேசி:

விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு நல்ல ஆரம்பப்புள்ளியாக வந்திருக்க வேண்டிய படம். நிஜமாகவே நல்ல கதை. மொக்கை திரைக்கதை. தேவையில்லாமல் அத்தை மகள், டூயட் எல்லாம் வைத்து சொதப்பி விட்டார்கள்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்ததே, கொலை செய்த காட்சியை வைத்து முதலமைச்சரை மிரட்டி, மக்களுக்கு நன்மை செய்ய வைப்பார். இறுதியில் அவர் திருந்தி, விஜயகாந்தை அரசியலுக்கு அழைப்பார். தான் சிறைக்குப் போவதாகவும் சொல்வார். ஆனால் அவரோ நீங்களே செய்யுங்கள். மக்களை பொறுத்தவரை நீங்கள் நல்லவராகவே இருங்கள். அந்த ஆதாரம் என்னிடமே இருக்கட்டும் என்று சொல்வார். இதிலிருந்து ஒரு பாதியை சுட்டு 'வாமனன்' படத்தை எடுத்திருப்பார்கள்.

கண்ணோடு காண்பதெல்லாம்:

அர்ஜுன் வித்தியாசமாக, எதிர் மறை கதாபாத்திரத்தில் நடித்த படம். தான் துரத்தி துரத்திக் காதலிப்பவளை, பெண் பார்க்க வரும் அர்ஜுனிடம், நாயகன் அவள் தன் காதலி என்று சொல்ல, அவரும் பெருந்தன்மையாக விலகி விடுவார்.

ஆனால் நாயகனின் தொந்தரவு தாங்க முடியாத நாயகி, அர்ஜுன் தன்னை திருமணம் செய்யப் போவதாகக் கூற, அவனோ இருக்காது என்று மறுக்க, இருவரும் அர்ஜுனைப் பார்க்க போவார்கள். அர்ஜுன் தன் கனவுப் பெண்ணைப் பார்த்து, அவளிடம் தனது காதலை சொல்லும் நேரத்தில், இவர்கள் வந்து குழப்பி விட, காதலி கோபித்துக் கொண்டு போய் விடுவாள். இதற்கிடையே, நாயகன் நாயகி இடையே காதலும் வந்து விடும். அர்ஜுனோ அவர்கள் சேரக்கூடாது என்று துரத்த, கடைசியில் வழக்கம் போல சொதப்பி இருப்பார்கள்.

படத்தில் ஒரு நல்ல பாடலும், சோனாலி பிந்த்ரே என்ற சுமாரான பிகரும் உண்டு. பரவாயில்லை.

சபாஷ்:

பார்த்திபன், திவ்யா உண்ணி, ரஞ்சித் நடித்தது.

அருமையான திரில்லர் படம். மனைவியை மானபங்கப்படுத்தி, தற்கொலைக்கு தூண்டிய நெருங்கிய நண்பனை (மனைவியின் பழைய காதலன்) பழி வாங்கும் நாயகன். கண் தெரியாதவன் போல நடிக்கும் நாயகனை எப்படியாவது மாட்ட வைக்கத் துடிக்கும் நண்பன். இறுதியில், நண்பனுக்கு தண்டனை கிடைக்க தன் பார்வையையே இழக்கும் நாயகன்.

படத்தில் பாடல்களையும், தேவையில்லாத காதல் காட்சிகளை நீக்கினால் அருமையான ஆங்கிலப் படம் போல இருக்கும். சமீபத்தில் இதே போல தோன்றிய படம் 'நியுட்டனின் மூன்றாம் விதி'.

புதிய முகம்:

லாஜிக் பொத்தல்களை மட்டும் தைத்து விட்டால், உண்மையிலே அருமையான படம். (எல்லா படமுமே அப்படித்தான் என்கிறீர்களா!?!) அருமையான பாடல்கள், பின்னணி இசை. ஆனாலும், மற்ற துறைகள் ஒத்துழைக்காததால், சற்று சறுக்கி விட்டது.

படத்தில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பின், குள்ளமான, ஒல்லியான வினீத், உயரமாக, குண்டாக மாறிவிடுவார். இது ஒரு பொத்தல் என்பது என் கருத்து. இதே போல நிறைய அங்கங்கே..

ஆஹா:

அருமையான, குடும்பப்பாங்கான, சிறு சிறு திருப்பங்களுடன் கூடிய நல்ல படம். நம்பவே முடியாமல் தேவா அருமையாக இசையமைத்த 'முதன் முதலில் பார்த்தேன்' என்ற பாடலும் உள்ள படம். 'பெப்சி' விளம்பரம் தந்த படம். தமிழர் கலாச்சாரத்தை காப்பாற்றும் இன்னொரு படம். ஆனாலும் ஏதோ குறையும் படம். கண்டு பிடித்துக் கொடுத்தால் 'ஆஹா!!' என்று சந்தோஷப் படுவேன்.

இவை தவிர நிறைய படங்கள் கிளைமாக்சில்தான் சொதப்பியிருப்பார்கள். அவற்றை தனிப்பதிவில்தான் இட வேண்டும். நான் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் (ஆஹா, புதிய முகம் தவிர) அவ்வளவாக தெரியாத படங்கள் என்று நான் நினைக்கிறேன். உங்களது தேர்வையும் பின்னூட்டத்தில் குறிப்பிடவும். நன்றி.