Wednesday, August 24, 2011

நமக்கேன் வம்பு. இதுவே எங்க ஊரா இருந்தா??

சென்னையில் ஒரு பிரபல மூன்று நட்சத்திர விடுதியிலுள்ள உணவு விடுதிக்கு, முதல் முறை வெளிநாடு செல்லும் நண்பன் (மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன்), திருமணம் நிச்சயிக்கப்பட்ட புது மாப்பிள்ளைகள் இருவர், மற்றும் இரு புதுமணத் தம்பதியினர், கடைசியாக போனால் போகட்டும் என்று இரு கட்டை பிரமச்சாரிகள் என்று பத்து பேர் சாப்பிடப் போனோம். எங்களுக்கே தெரியும், அங்கு ஒரு நாள் சாப்பிட ஆகும் செலவில் பத்து முறை பத்து பேர் வெளியில் நன்றாக சாப்பிடலாம் என்று. இருந்தாலும், இது எப்போதோ ஒரு முறை (அதுவே கடைசி முறையாகி விட்டது) என்று கிளம்பிப் போனோம்.

ஒரு காலத்தில் அந்த இடத்தை வெளியிலிருந்து பெருமூச்சோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். அப்படியேவே போயிருக்கலாம். உள்ளே போனவுடன், சற்று நேரம் அனைவரும் வரும் வரை காத்திருந்தோம். அதன் பின், அனைவரும் வந்தவுடன் உள்ளே போனோம். நண்பனின் ஒரு வயது குழந்தையின் காலில், நடந்தால் சத்தம் வரும் காலனியை அணிவித்திருந்தார்கள். அவன் அங்குமிங்கும் ஓட, சத்தம் சற்று அதிகமாகவே வந்தது. உடனே வந்து அதை எடுத்து விடுமாறு கூறினர். சரி, மற்றவர்களுக்கு அது தொந்தரவுதானே என்று நாங்களும் கழற்றி விட்டோம்.

அங்கு சாப்பிட வந்த எல்லோரையும் எங்கேயோ பார்த்தது போலவே இருந்தது. குறிப்பாக ஒருவர், பின்புதான் நண்பன் சொன்னான் 'அவர்தான் குருநாத் மெய்யப்பன், CSK முதலாளி'. சரிதான் என்று நினைத்துக்கொண்டு, 'இரண்டாம் பக்கத்தில் நாலாவதாக உள்ளது, முதல் பக்கத்தில் மூன்றாவதாக உள்ளது' என்று தடுமாறி சொல்லி விட்டோம். பின் வழக்கம் போல நாங்கள் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். சொன்ன அனைத்தும் வந்தன.

எங்களில் சைவ பட்சிகள் நால்வர். மற்ற ஆறு பேரும் அசைவம். சைவப் பிராணிகள் பச்சை நிற மேலாடையும், அசைவப் பிராணிகள் சிகப்பு மேலாடையும் அணிய வேண்டுமாம். எங்களுக்கு முழுதும் சிகப்பு மட்டுமே வைத்திருந்தனர். நாங்கள் அனைவரும் அதை மடித்து பத்திரமாக வைத்திருந்தோம். வந்தவுடனே அசைவத்தை மாற்றிப் பரிமாறி விட்டனர். இங்கே இல்லை அங்கே என்றவுடன் மேலாடையை அணிய வேண்டியதுதானே? என்றனர். அதன் பின்பே பச்சை உடையும் கொடுத்தனர்.

சரி எல்லாம் வந்து விட்டன என்று முள்கரண்டி (அட Spoon & Fork) கேட்டால், இங்கு இந்திய கலாச்சாரப்படி சாப்பிட வேண்டும், அதெல்லாம் கொடுப்பதில்லை என்றனர். சற்றே கோபம் வந்தாலும், சரி நாம் எப்போதும் சாப்பிடுவதுதானே என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தோம். பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு 'பணக்காரத்தனமிக்க' தம்பதியினர் அவர்களுக்கு உணவு வந்தவுடன் ஒரு பார்வை பார்த்தனர். உடனே தோசை சுடும் கரண்டி வரை எல்லாமே அங்கே போய் விட்டது. சரிதான் இதற்கு மேல் இருந்தால் சரிப்படாது என்று கடைசியாக முடிக்கலாம் என்று ஒரு பரிமாறுபவரை அழைத்தோம். அவரிடம் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே மேலாளர் ஒருவர் வந்து "அங்கே போய்க் கவனி, இங்கே என்ன வேலை" என்று சொன்னார். பில் கொடுப்பதற்கு முன், அந்த விடுதியின் சிறப்பு அட்டை இருக்கிறதா என்று கேட்டார். இல்லை, வேறு ஏதாவது கடன் அட்டைக்கு எதுவும் தள்ளுபடி உண்டா என்றவுடன், "அது எதுவும் இல்லை என்றதால்தான் கேட்டேன்" என்றார். தலையில் அடித்துக் கொண்டு மிச்சமுள்ள மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று கிளம்பி விட்டோம்.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில், அளவுக்கு மீறி ஆசைப்படக்கூடாது. மீறி ஆசைப்பட்டாலும், நம் சத்தம் அதிகமாக இருக்க வேண்டும். Spoon கொடுக்க முடியாது என்றவுடனே கத்தியிருக்க வேண்டும். நமக்கு அதெல்லாம் வந்தால்தானே. சராசரியிலும் சராசரிக்கு கீழேதான் நாங்கள். 'நமக்கேன் வம்பு', சரி பொறுத்துப் போகலாம் என்று வந்ததற்கு, ஒரு பதிவுதான் மிச்சம்.

நான் நான் என்று பேசி எதுவும் நடக்காது. நாம் சேர்ந்துதான் செய்ய வேண்டும். மற்றவர்களின் அனுபவங்களை அங்கேயும், இங்கேயும் படிக்கலாம். இதற்காக முகப்புத்தகத்தில் ஒரு குழுமமும் உள்ளது. மக்களின் நலன் கருதி வெளியிடுவது அரவிந்த்.

'என் விகடனில்' ஒரு முறை இயக்குனர் வெற்றி மாறன் சொன்னார், சென்னையில் சாலையில் ஒருவருக்கு ஒரு விபத்து அல்லது பிரச்சினை என்றால், உதவிக்கு வருபவர்கள் கண்டிப்பாக சென்னையை சேர்ந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள். அதுவும் உண்மைதான். எங்கள் வீட்டில் எல்லாம், எந்தப் பிரச்சினைக்கும் போக வேண்டாம், அது நம்ம ஊரில்லை என்று சொல்லி சொல்லி எல்லாமே மரத்து விட்டது. நமக்கென்ன, நமக்கேன் வம்பு என்றே ஒதுங்கி ஒதுங்கி போகிறோம். பெரிய இடமானாலும் சரி, சின்ன இடமானாலும் சரி. வெளியூர்க்காரர்கள் அனைவரும் சென்னையில் ஒரு பிரச்சினையில் சிக்கி, எப்படியாவது தப்பித்து வந்த பின் சொல்லும் வார்த்தை, "இதே எங்க ஊரா மட்டும் இருந்தது, அவ்ளோதான்".

நான் ஊரில் இருந்தால் சாலையில் வண்டியில் போகும்போது, நடந்து செல்பவர்கள் திரும்பிப் பார்த்தாலே, "வரிங்களா?' என்று கேட்பேன். இங்கோ, வயதானவர்கள் கையை நீட்டினால் கூட நிற்பதில்லை. ஒரு முறை பட்ட அனுபவம் அப்படி. "நான் நேரா போகணும், இங்க எறங்குங்க" என்றவுடன் "இவ்ளோ தூரம் வந்துட்ட இல்ல, இன்னும் கொஞ்சம் உள்ள போனா என்னவாம்" என்று திட்டு வாங்கியதுதான் மிச்சம். இதற்குதான் சொல்லியிருக்கிறார்கள் " கால் வயித்துக் கஞ்சினாலும், நம்ம வூட்டு கஞ்சியா இருக்கணும்".

"இப்படி எல்லாம் பெரிய ________ மாதிரி எழுதுறியே, நீ என்ன பண்ணப் போற" என்று கேட்கிறீர்களா? நான் இது போல சம்பவங்கள் நடந்த பின், தனியாக என் கற்பனையில் அவர்களை அடிப்பேன். சென்னையைப் பொறுத்தவரை, யார் முதலில் குரலை உயர்த்திப் பேசுகிறார்களோ, அவர்களே நியாயஸ்தர்கள். நம் மீது எந்தத் தவறும் இல்லை என்று சமாதானப் படுத்திக் கொண்டு பொறுத்துப் போனோம், போகிறோம், போவோம். இதற்காக உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்றாலும், அந்த ஒரு கணத்தில் வரும் கோபம், குறைந்தது அந்த முழு நாளையே அழித்து விடும்.

காலையில் ஆறு மணிக்கு அலுவலுக்கு வண்டியில் வேளச்சேரியில் இருந்து தரமணி போகும்போது, எதிரில் Wrong sideல் வேகமாக வரும் வண்டியைப் பார்த்து பயந்து ஓரமாக ஒதுங்கும்போதும் சரி. வேளச்சேரி புறவழிச்சாலையில் இருந்து, குருநானக் கல்லூரிக்கு திரும்ப அதிகம் 12 வினாடிகள் கொடுப்பார்கள். அதற்கும் இடம் தராமல், இரு பக்கமும் வண்டி போகும்போது தடுமாறி அந்தப் பக்கம் செல்லும்போதும் வண்டி ஓட்டும் அன்பர்கள் அசிங்கமாக சொல்லுவார்கள் "ஏண்டா பேமானி. பாத்து வர மாட்ட?" அப்போது மட்டும் சற்றே சத்தமாக கத்துவேன். கேட்குமோ என்னவோ தெரியாது.


"நீங்க போய் உலகத்த காப்பாத்துங்க. எனக்கு அவசர வேல எதுவும் இல்ல". அதன் பின் நினைத்துக் கொள்வேன். "மவனே, நீ மட்டும் எங்க ஊருக்கு வா.."