Sunday, April 24, 2011

ஒளியில்லாத ஒலி



பொதுவாக, பல இளையராஜாவின் பாடல்களைக் கேட்டது மட்டுமே உண்டு. எனக்குள்ளேயே ஏதாவது கற்பனையில் அந்தப் பாட்டை ஓட விட்டுக் கொள்வேன். எப்போதாவது, அந்தப் பாடலைப் பார்த்து விட்டால், சற்றே மனம் நோகும். உதாரணமாக கீழே வரும் பாடல். இதைப் பற்றி ஏற்கனவே ஒரு முக்கியமான பதிவில் நான் கூறியுள்ளேன்.



இதே போல பல பாடல் உண்டு. ஆனால், திரையிலேயே வராத சில ராஜாவின் பாடல்களைப் பகிர விரும்புகிறேன். தீவிர ராஜா ரசிகர்களுக்கு இந்தப் பாடல்களை மிக நன்றாக தெரியும். ரி-மிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்யாமல், இதையே ஏதாவது வரப் போகும் புதிய படங்களில் நேரடியாக பயன்படுத்தலாமே.

புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை:

ஒரு காலை வணக்கத்தோடு ஆரம்பிக்கிறேன். எப்போதுமே, காலை எழுந்தவுடனே கேட்கும் பாடல் இதுதான். நாயகி பாடுவதாக வருவதாக இருக்கலாம்.



'உயர்ந்த உள்ளம்' படத்தில் வரும் காலைத் தென்றல்' பாடல் போலவே இருக்கும். காலையில் எழுந்தவுடனே எப்போதும் கேட்பதுண்டு.

தற்போது 'பா' ஹிந்திப் படத்தில் அருமையாக பயன்படுத்தியுள்ளனர்.



சொல்லாத ராகங்கள் - மகா நதி:



சிறையில் நாயகனும் நாயகியும் சந்திக்கும்போது வரும் பாடல். அட்டகாசமான பாடல். ஆனால், இந்தப் பட்டதில் தேவையேயில்லை என்று இதற்கு பதில், இதை விட அழகாக பின்னணி இசை போட்டு நிரப்பி விட்டார்.



சொல்லி விடு வெள்ளி நிலவே - அமைதிப்படை:

அல்வா விஷயத்தால், மற்ற நல்ல விஷயங்கள் இந்தப் படத்தில் வெளி வராமலே போய் விட்டது. அதில் இந்தப் பாடலும் ஒன்று. ஆனாலும், பின்னணி இசையாக கிடைக்கிற இடங்களில் அனைத்தும் ராஜா ராஜாங்கம் நடத்தியிருப்பார்.



புத்தம் புது பூ - தளபதி:

விருந்திலே எல்லாமே ரொம்ப நல்லா இருந்துச்சு.. ஆமாமா.. பாயாசத்துல முந்திரி இருந்துச்சா?? அடடா, சரியா கவனிக்கலையே.. மத்த எல்லாத்தையும் சாப்பிட்டதில, அத கவனிக்கலப்பா. லேசா தட்டுப்பட்ட மாதிரி தெரிஞ்சுது.

இதே போலவே, இந்தப் பாடலும். பின்னணி இசையாக லேசாக வரும். அப்படியே போய் விட்டது. மணி ரத்னமே இதை எங்காவது பயன்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.



உன் நெஞ்சத் தொட்டுச் சொல்- ராஜாதி ராஜா:

இந்தப் பாடல் பற்றிய ஒரு நல்ல தகவல் உள்ள பதிவு. அந்த காலத்தில், 'ராஜாதி ராஜா/சத்யா' இரண்டும் உள்ள கேசட் வாங்கினேன். இரண்டில் உள்ள பாடல்கும் மாறி மாறி வரும். எனவே, இந்தப் பாடல் எந்தப் படம் என்று பயங்கரமாக குழம்பி இருந்தேன். இரண்டு படத்திலும் வரும் என்று கூட நம்பிய காலம் அது.



ஒரு மாலை நேரம் வந்தது - நான் மகான் அல்ல:

இந்த பாடல் மட்டும் சொல்லக் காரணம் உண்டு. இதைப் படமாக்கிய பின்பு, யுவன் அதே ஒளியமைப்புக்கு, இன்னும் நன்றாக பாடல் இருக்க வேண்டுமென்றுதான் 'இறகைப் போலே' பாடல் போட்டதாக கூறப்பட்டது. இந்தப் பாடலுக்கு, அந்த ஒளியமைப்பும் நன்றாகவே பொருந்தும். சும்மா முயன்று பார்த்தேன்.



இதே போலவே, நிறைய பாடல்கள் உள்ளன. எனக்கு தோன்றியதை மட்டும் பதிவு செய்துள்ளேன்.