Saturday, June 21, 2014

வாழ்க்கை என்பது

எச்சரிக்கை: இந்தப் பதிவு எப்போதோ குருட்டாம் போக்கில் எழுத ஆரம்பித்தது, என்னென்னவோ யோசித்து, எப்படியெல்லாமோ மாற்றி, ஒரு வழியாக போட்டுள்ளேன். முடிந்தால், தலைவலி தைலமோ அல்லது மாத்திரையோ எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவும். பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

வாழ்க்கை என்பது,

இன்பம், துன்பம், காகித ஓடம், கானல் நீர், பொய், நேர்க்கோடு, வட்டம், சாலை, வாழ்வதற்கே, முழுவதும் சாவதெற்கே, மோசமான ஆசிரியர், இந்த கணம், விடுகதை, தொடர்கதை, கணக்கு, வேதியியல், ஆறு, கடல், போர்க்களம், சுமை, முள் கிரீடம், கடலில் கார் ஊட்டுவது, சாலையில் சைக்கிள் ஓட்டுவது, உண்பது, உறங்குவது, விழுவது, விழுந்து எழுவது, ஓடுவது, துரத்துவது, ............. சிவாஜி நடித்த படம்........இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், அதற்காகவே ஒரு தொடர் பதிவு கூட போடலாம். ஆனால், இது சும்மா, என்னுடைய புலம்பல்களை ஓர் நாலு பேர் படிக்கட்டுமே என்பதற்காக ஒரு பதிவு. இதில் உள்ளவை அனைத்தும் என்னுடைய கருத்துக்கள் அல்ல. பிச்சைக்காரன் எடுத்த வாந்தி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

உலகில் எந்த விஷயத்திற்கு உதாரணங்களும், பழமொழிகளும் அதிகம் என்றால், காதலை விட வாழ்க்கைக்குத்தான் இருக்கும். அட, அதுதானே இது என்று குழப்ப வேண்டாம். வாழ்க்கையின் ஒரு அங்கமே காதல், என்னைப் பொருத்தவரை.

முதலில் வாழ்க்கை என்பது கை ரேகை போல. உலகில் ஒரே மாதிரி கை ரேகை இன்னொருவருக்கு இருக்காது என்பார்கள். அதே போலத்தான், வாழ்க்கை என்னும் தத்துவமும், கோட்பாடும். கண்டிப்பாக உலகில் இரண்டு பேருக்கு அது பொதுவாக இருக்காது. (எனக்கென்னவோ இந்த விஷயத்தைத்தான் மக்கள் தவறாக புரிந்து கொண்டு ஜோசியக்காரர்கள் பின்னால் அலைகிறார்கள் என்று நினைக்கறேன்.)

குறிக்கோள் அல்லது லட்சியம். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் கண்டிப்பாக இருக்கும். அது அடுத்த வேளை சோறாகவும் இருக்கலாம், அடுத்த அம்பானியாகவும் இருக்கலாம். கண்டிப்பாக அதன் மூல காரணம் ஒன்றுதான், மகிழ்ச்சி.மக்கள் ஆற்று நீர் போல. மகிழ்ச்சி எனும் கடலை நோக்கிப் போக வேண்டும். வழியில் பல தடைகள் அல்லது. அது வேறு வேறு கிளைகளாக மாறி செல்ல வேண்டும். அந்த பாதைகள் நல்லதா கெட்டதா, அதில் சென்றால் விரைவாக போவோமா அல்லாத தாமதமாகுமா என்பதை யோசிக்க விடாமல், நம்மை தள்ளிக் கொண்டு போய் விடுகிறார்கள். அப்படி போகும்போது கடலை நோக்கித்தான் போகிறோம் என்று நினைப்போம். ஆனால், முடிவு எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இருப்பதால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க உருவானவைதான் மதம், இனம், மொழி, கலாச்சாரம் கடைசியாக சட்டம். இவை அனைத்தும் இது சரி, இது தவறு என்று ஒவ்வொரு விஷயத்தையும் பிரித்துள்ளன.

இன்னும் கொஞ்சம் குழப்ப வேண்டுமென்றால், பொதுவாக வாழ்க்கை இரண்டே வகைதான். இந்த நொடிக்காக வாழ்வது அல்லது நாளைய ஓய்வுக்காக இன்று ஓடுவது. இரண்டு வழிகள். ஒன்று, எப்படியாவது, எவனுக்கு என்ன ஆனாலும், நாம் நம் காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும். இரண்டு, முடிந்த அளவு மற்றவர்களைக் கெடுக்காமல் செல்வது. இந்த பெர்முடேசன் காம்பினேஷன் (permutation and combination - தமிழ்ல என்னன்னு மறந்து போச்சு) வைத்து, ஆளுக்கொரு வகையாக வாழ்ந்து வருகிறோம்.

ஒரு உதாரணம். கொஞ்சம் மிகைதான், இருந்தாலும் புரிதலுக்காக. கல்லூரி நண்பர்கள் இருவர். ஒருவன் நிறைய இனிப்புகள் சாப்பிடுவான். இன்னொருவனோ கையிலேயே தொடமாட்டான். இந்த இரு எதிரெதிர் செயல்களுக்கும் காரணம் ஒன்றுதான்.

முதலாமவன்: எங்க அப்பா, அம்மா, தாத்தா எல்லோருக்கும் சுகர் இருக்கு. எனக்கும் எப்படியும் வயசான காலத்துல வரத்தான் போகுது, அப்புறம் ஏன் நான் இப்பவே வாயக் கட்டனும். நல்லா சாப்பிட்டுகிட்டு, பின்னாடி கண்ட்ரோல் பண்ணிக்குவேன்.

இரண்டாமவன்: எங்க அப்பா, அம்மா, தாத்தா எல்லோருக்கும் சுகர் இருக்கு. எனக்கும் எப்படியும் வயசான காலத்துல வரத்தான் போகுது, இப்பவே கண்ட்ரோல் பண்ணிக்கிட்டா பின்னாடி பிரச்சினை இல்ல பாரு. 

இருவரில் யார் சரி, யார் தவறு? அனைவருக்கும் ஒவ்வொன்று தோன்றும். இந்த இடத்தில் 'சமுதாயம்' என்ற கண்ணோட்டத்தில் யோசித்தால், இரண்டாமவனே சரி என்று தோன்றும். ஏனென்றால் நம் சமுதாயம் சொல்லுவது, "இப்ப கஷ்டப்பட்டா, பின்னாடி சொகுசா இருக்கலாம்". நீங்கள் பனிரெண்டாம் வகுப்பு படித்திருந்தால், இதை நிறைய கேட்டிருக்கலாம்.

இதே பல பேருக்கு தவறாக தோன்றும். "ஒரு வேளை, நாளைக்கே அவனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா?" என்பார்கள். இந்த வார்த்தையும், நமது சமுதாயத்தைப் பொருத்தவரை தவறு.

அதே போல இந்த சமுதாயம் சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயம். "அடுத்தவனின் மகிழ்ச்சியே நமது சந்தோஷம்". அதாவது, நம்மை சார்ந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நாமும் மகிழ்வோம்.

இங்குதான் பிரச்சினையே. தமிழ் இலக்கியத்திலோ, சமுதாயத் தொண்டிலோ ஆர்வமுடையவனிடம் "எப்பா, எப்படியாவது படிச்சு டாக்டர் ஆயிட்டேன்னா, எங்களுக்கு சந்தோசமப்பா. அப்படி இல்லீன்னா நல்ல எஞ்சினீரிங் காலேஜுல படிச்சு நாலு வருஷத்துல வேல வாங்கி, பக்கத்து வீட்டுக்காரன் ரெண்டு வருஷத்துல அமெரிக்கா போன மாதிரி இல்லாம, ஒரே வருஷத்துல போயிடனும் " என்று சொல்லி, பெற்றவர்களின் சந்தோசத்திற்காக தன்னை தொலைக்கின்றான்.

ஒரு வேளை அவன் விருப்பத்திற்காக, தமிழ் இலக்கியம் படிக்கின்றான் என்றால், சமுதாயம் "நல்ல மார்க் வாங்கி இப்படி நாசமா போயிட்டானே, கற்றது தமிழ் படம் மாதிரி கொலைதான் செய்யப்ப் போறான்" என்று தூற்றும். இவை எதையும் காதில் வாங்காமல், அவன் தனக்குப் பிடித்ததை மட்டும் செய்து கொண்டிருந்தால், அவன் மகிழ்ச்சியாக இருக்கலாம். மற்றவர்கள், பெற்றோர்கள்?

இன்னொரு மிக முக்கியமான விஷயம். கசப்பை அவ்வப்போது சுவைத்தால்தான் இனிப்பின் அருமை புரியும். அதே போல கஷ்டப்பட்டால்தான் மகழ்ச்சியை உணர முடியும். நம்முடைய மகிழ்ச்சி அடுத்தவனுக்கு கஷ்டம், நமது கஷ்டம் அடுத்தவனுக்கு மகிழ்ச்சி. எனவே, நமக்கானதை நாம் நம்முள்ளே தேட வேண்டும். அதை விட்டு விட்டு "அவன மாதிரி பண்ணா என்ன?" என்றால், காலிதான். 

அதே போல, விதி விலக்கு (Exception) என்பதும் எல்லாவற்றிற்கும் உண்டு. இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கும்தான்.

சரி, குழப்பம் எதற்கு. தெளிவாக சொல்கிறேனே. நாம், வாழ்வதற்காக தினம் தினம் சாகிறோம். இறுதியில் சாவதற்காக தினமும் வாழ்கிறோம். இதைப் புரிந்து கொண்டால் நல்லது. எங்க?

ஆனாலும், இவை எல்லாவற்றையும் தாண்டி, தினமும் எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டாலும், ஏதாவது ஒரு கணத்தில் கிடைக்கும் சந்தோசத்திற்காக அவை அனைத்தையும் தாங்கிக் கொள்கிறோமே.அது தான் வாழ்க்கை. (உபயம், ஏதோ ஒரு தமிழ் படம் அல்லது நெடுந்தொடர் அல்லது கதை)