Friday, June 29, 2018

திரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்!

எல்லோரும் நல்லா இருக்கீங்களா? வாங்க படிப்போம். இந்த முறை மொத்தமாக திரைப்படங்கள் மட்டுமே. 

இன்னும் 'காலா' பார்க்கவில்லை. குடும்பத்துடன் போகலாம் என்றால் அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, காத்திருக்கிறேன். மற்றபடி பார்த்ததில் (போன பிட்டுக்கும் இந்த பிட்டுக்கும் நடுவில்) அவ்வளவு ஒன்றும் பெரிதாக கவரவில்லை. 

மெர்க்குரி படம் திரையரங்கில் சென்று பார்த்து நொந்தே விட்டேன். 'சில சமயங்களில்' படம் இணையத்தில் (Netflix) பார்த்தேன். வித்தியாசமான முயற்சி. ஆனால், சற்றே இழுவை. 'பக்கா' என்று ஒரு படம். சத்தியமாக முடியவில்லை. தமிழ் படம் போல மற்ற படங்களை கிண்டல் அடிக்கிறார்களா அல்லது சீரியஸாகவே எடுத்துள்ளார்களா என்றே புரியவில்லை.  தியா, இரவுக்கு ஆயிரம் கண்கள் செம, காளி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்றவை ஒரு முறை பொழுது போக்கிற்கு பார்க்கலாம். 

இரும்புத்திரை: பார்க்க பார்க்க பயமுறுத்துகிறார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்துகிறேன். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, எங்கே சென்றாலும், அங்கே அலை பேசி எண்ணை கேட்டால் கொடுத்து விடுவேன். திருமணம் ஆன புதிதில் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு மனைவி முன் 'கெத்தாக' பணம் கொடுத்தேன். அலைபேசி எண்ணையும்தான். 

அதன் பிறகு ஆரம்பித்தது தொல்லை, 'சார் எங்களுக்கும் உதவி பண்ணுங்க சார்" என்று தினமும் அழைப்புகள், தொலைபேசி எண்ணையே மாற்றி விடலாமா என்று கூட தோன்றியது. பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக எங்கே போனாலும் கொடுக்காமல் உள்ளேன். "சார், நம்பர் கொடுத்தா 15% டிஸ்கவுண்ட்" என்பார்கள். அடித்தாலும் கொடுக்க மாட்டேன். ஆனால், எப்போதோ கொடுத்ததன் விளைவை இன்று வரை அனுபவிக்கிறேன். இன்றும் கூட தினமும் 2,3 அழைப்புகள் கடன் அட்டை, லோன் என்று வந்து கொண்டே இருக்கிறது. 

கொஞ்சம் ஜாக்கிரதையாக உபயோகிப்பதால் பெரிய தொந்தரவு இல்லை. ஆனால், என் மனைவிக்கு ஸ்டேட் பேங்கில் கணக்கு உள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது "மேடம் உங்க கார்டு எக்ஸ்பைரி ஆக போகுது" என்று உடைந்த தமிழில் அழைப்பு வரும். என் மனைவியோ "எல்லாம் என்ற வூட்டுக்காரனுக்குத்தானுங்க தெரியும்" என்று சொல்லி வைத்து விடுவார். 

இந்த படத்தில் வருவது போல ஒரே ஆள் எல்லாவற்றையும் செய்வதில்லை. மற்றபடி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதில் பாதி உண்மைதான். எளிமையாக சொன்னால், அதிகம் ஆசைப்படாமல் இருந்தாலே போதும். 

நடிகையர் திலகம்: இரண்டு வருடங்களுக்கு முன் தினமலர்-வாரமலரில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தொடர் வந்தது. அப்போதே "ச்சே எப்படி வாழ்ந்து கெட்டிருக்காங்க" என்று தோன்றியது. படத்தில் அதில் படித்ததில் பாதி கூட வரவில்லை. ஜெமினியை கெட்டவனாக காட்டி, சமந்தா-விஜய் காதல் கதை வேறு குறுக்கே குறுக்கே. இன்னும் அவரது சிறப்புகளையும், அந்த பிடிவாத குணம் பற்றியும் நன்றாக சொல்லி இருக்கலாம். சந்திரபாபு வரவேயில்லை. 

இந்த படத்தை அமேசான் பிரேமில் தான் பார்த்தேன். ரொம்ப நாளாக எந்த தமிழ் படமும் அதில் வரவே இல்லை. நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் தமிழ் திரையுலகம் அதை வீணடிக்கிறது என்று நினைக்கிறேன். 

தினமும் அலுவலகத்திற்கு அலுவலக வாகனத்தில் பயணிப்பதால் நிறைய படங்களை பார்ப்பதுண்டு. மொழி பேதம் கிடையாது. அந்த வகையில் பார்த்த ஒரு நல்ல திரைப்படம் (Feel Good) ராணி முகர்ஜீ நடித்த Hichki, ஹிந்தி திரைப்படம். 

நரம்பு குறைபாட்டால் (திடீரென தலையாட்டி, ஒரு வினோதமான சப்தம் எழுப்புவார். என் அத்தை ஒருவருக்கு இதே போல உள்ளது. அவர் சப்தம் எழுப்ப மாட்டார். ஆனால், தலை தன்னை அறியாமல் ஆடும்) பாதிக்கப்பட்ட ராணி முகர்ஜீ பள்ளி ஆசிரியராக ஆசைப்படுவார். அவரை, அவர் படித்த பணக்கார பள்ளியில், கல்வி உரிமையின் கீழ் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு ஆசிரியராக சேர்க்கிறார்கள். யாரையும் மதிக்காத, யாராலும் மதிக்கப்படாத அந்த மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். எப்படி ராணி சமாளிக்கிறார் என்பதே படம். 

பொதுவாக விளையாட்டு (இறுதி சுற்று, கேக் தி இந்தியா, தங்கல், இன்னும் பல) மற்றும் கல்வி (ஹிந்தி மீடியம், தாரே ஜமீன் பர், சாட்டை, பசங்க 2 இன்னும் சில) எல்லவற்றிலும் பார்த்தால், நாயகன்/நாயகி வருவார். அவர் கண்டிப்பாக தோல்வி அடைந்தவராக இருப்பார். அவரிடம் இருப்பதிலேயே மோசமான குழுவோ, தனியாளோ வருவார்கள். அவர்களிடம் உள்ள தனித்திறமையை கண்டறிந்து வெற்றி பெற வைப்பார்கள். இதுதான் கதை. ஆனால், திரைக்கதையில் உள்ள வித்தியாசம்தான் படங்களை வெற்றி அடைய வைக்கும். அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நமக்கு தெரியும். இருந்தாலும் அதை சலிப்பு தட்டாமல் கொண்டு போகிறார்கள். கண்டிப்பாக பார்க்கலாம். 

அட்லீ சுட்ட இட்லி: 

The Frighteners, Judgement Night என்று இரண்டு படங்கள் பார்த்தேன். "ஏற்கனவே எங்கேயோ பாத்திருக்கமே, அதுவும் ஒரே ஆளோடதாச்சே" என்று பார்த்தல், நம்ம வெங்கட் பிரபு. மாஸ் என்கிற மாசிலாமணி, சரோஜா படங்களின் மூலம். அடச்சே என்று தலையிலடித்துக் கொண்டேன். 

அதே போல 'தெறி' என்ற மட்டமான படம். இருந்தாலும் அதில் ஒரு சில காட்சிகள் கொஞ்சம் பிடிக்கும். பாரிஸ் கார்னரில், குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்களை அடிப்பது. அதில் சண்டை ஆரம்பிப்பதற்கு முன், ரவுடி "பாத்தல்ல, நாங்க எத்தனை பேருன்னு" என்பார். உடனே விஜய் "என்ன, 5 பேரு" என்றவுடன், "கணக்குல பெயிலா நீ. நாங்க 11 பேர்" என்றவுடன், விஜய் " நான் மொதல்ல இவன அடிப்பேன். அப்ப 2 பேர் ஓடிருவானுங்க" என்றெல்லாம் கணக்கு சொல்வார். "படம் மொக்கையா ஈ அடிச்சான் காப்பியா இருந்தாலும், நல்ல சீன்லாம் வச்சிருக்காம்பா" என்றெல்லாம் எண்ணினேன். (காணொளியை 02:20ல் இருந்து காணவும். அதே வசனம்)  


Jack Reacher என்றொரு படம். அதில் இதே காட்சி அப்படியே இருந்தது. அடேய் அட்லீ, அடுத்தவன் மாவு எடுத்து இட்லி சுட்டா பரவாயில்லடா, ஆனா, அடுத்தவன் இட்லியையே ஏண்டா சுடர. (காணொளியை 02:50ல் இருந்து காணவும். அதே வசனம்)


மீண்டும் சந்திப்போம். மற்றபடி மிக மிக ஆவலாக பார்க்க வேண்டும் என்று காத்திருப்பது தமிழ் படம் 2.O தான்.Thursday, May 10, 2018

நுழைவுத் தேர்வு கட்டாயம் தேவை!

தமிழகத்தின் தற்போதைய பிரச்சினை நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வுதான். அதைப்பற்றி என்னுடைய சிறு பார்வை. என்னுடைய சொந்த அனுபவத்தையே சொல்கிறேன். 

2006 வரை இந்த நுழைவுத்தேர்வு இருந்தது. அப்போதைய மாநில அரசின் மருத்துவம் மற்றும் பொறியியலுக்கான நுழைவுத்தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவது, இப்படித்தான் இருக்கும். 

சனி காலை - தாவரவியல் மற்றும் விலங்கியல் - 90 வினாக்கள் - 50 மதிப்பெண்கள். 
சனி மதியம் - இயற்பியல் மற்றும் வேதியியல் - 90 வினாக்கள் - 50 மதிப்பெண்கள். 
ஞாயிறு காலை - கணிதம் - 90 வினாக்கள் - 50 மதிப்பெண்கள். 

மருத்துவம் படிக்க, முதலிரண்டு தேர்வுகளும், பொறியியல் படிக்க கடைசி இரண்டு தேர்வுகளும் எழுத வேண்டும். நுழைவுத் தேர்வு 'சரியான விடையை தேர்ந்தெடுக்கும் முறை (4 பதில்களில் சரியான விடையை தேர்ந்துதெடுப்பது). இந்த கேள்விகள் அனைத்தும் மாநில பாட திட்டத்தில் இருந்தே கேட்கப்படும். மொத்தம் 4 வகையில் கேள்வித்தாள்கள் இருக்கும், வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும். மொத்த கேள்விகள் ஒன்றுதான், ஆனால், வரிசை மாறி இருக்கும். தவறாக விடையளித்தால் மதிப்பெண் குறைக்கப்படாது.  

மற்றபடி எல்லோருக்கும் தெரிந்ததுதான், எப்படி மதிப்பெண்கள் கணக்கிடுவது என்பது. நாம் பொறியியலை எடுத்துக் கொள்வோம். 
கணக்கு மதிப்பெண்கள் - 100க்கு. 
இயற்பியலின் மதிப்பெண்கள் - 50க்கு, 
வேதியியலின் மதிப்பெண்கள் 50க்கு, 
கணித நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் - 50க்கு, 
இயற்பியல் மற்றும் வேதியியல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் - 50க்கு. 
மொத்தம் 300க்கு எவ்வளவு என்று கணக்கிடப்படும். 

கீழே ஒரு உதாரணம் 


அப்போது ஒவ்வொருவரும் கட் ஆப் (cut-off) மதிப்பெண்கள் இரு தசமத்தில் இருக்கும். .0.01 வித்தியாசமெல்லாம் சாதாரணம் (90 வினாக்கள், 50 மதிப்பெண்கள்தான் காரணம்). அந்த நுழைவுத் தேர்வு ஒன்றும் சிம்ம சொப்பனம் கிடையாது.

சந்தித்த பிரச்சினைகள்: 

எப்போதும் உள்ள பொதுவான பிரச்சினைகளைத்தான் சந்தித்தோம். தவறான கேள்விகள், நான்குமே தவறான விடைகள், ஆங்கிலத்தில் ஒன்றும், தமிழில் வேறு மாதிரியும் இருப்பது, கேள்வி முன்னரே வெளிவருவது, விடைகளை பென்சிலால் கருமையாக வேண்டும். சரியாக, முழுமையாக செய்யாவிட்டால் அவ்வளவுதான் என நிறைய பஞ்சாயத்துகள் நடந்தன. 

இவை பொதுவானவை. தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு பெரிய பிரச்சினை எனக்கு தெரிந்து எதுவும் இல்லை. அப்போது பொதுத் தேர்வுகள் முடிந்து எப்படியும் 45 நாட்கள் கழித்து நுழைவுத்தேர்வு இருக்கும். அதற்காக தனி வகுப்புகள் நடக்கும். 

அந்தியூர், ராசிபுரம், திருச்செங்கோடு எல்லாம் உண்டு, உறைவிடத்தோடு வகுப்புகள் நடக்கும். பல ரகசிய வழிமுறைகள் எல்லாம் சொல்லித் தந்து "வெளிய யார்கிட்டயும் சொல்லக்கூடாது" என்று சத்தியம் வாங்குவார்கள். இறுதி தேர்வில் 10 மதிப்பெண்ணிற்கு வரும் வினா இங்கே இருக்கும், அதற்காக அரை மணி நேரம் செலவு செய்ய முடியாது. அதை ஒரு நிமிடத்தில் தீர்க்கும் வழிமுறைகள் எல்லாம் அப்போதுதான் சொல்லுவார்கள். வீட்டிலேயே படிக்கும் மாணவர்களுக்கு அது மிகவும் கஷ்டம். புரிந்து படிப்பவர்களுக்கு சுலபம்.

நுழைவுத் தேர்வில் ஒரு கேள்வி தவறானாலும் 0.56 மதிப்பெண்கள் அவ்வளவுதான். தலையெழுத்தே மாறி விடும். ஆனால், முடிவில், ஒரே மாதிரி மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் குறைவு. அப்படியே இருந்தாலும், முதலில் கணிதம், பின் மற்ற பாடங்களை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். முதல் மதிப்பெண் எப்போதுமே 299.xx என்று வரும். அதுவும் ஓரிருவரே. 298.75க்கும் 299.00க்கும் நடுவில் ஒவ்வொரு 0.01 வித்தியாசத்தில் நிறைய பேர் இருப்பார்கள். 

அப்போது திருச்சியில் உள்ள REC (தற்போதைய NITயில் கூட 50 சதவீதம் சேர்த்தார்கள்). மற்ற மாநிலங்களில் உள்ள RECல் சேர அகில இந்திய அளவல் நடக்கும் தேர்வு எழுத வேண்டும். இதே நீட் போல அதற்கும் தமிழ்நாட்டில் மொத்தம் 10 மையங்கள்தான், ஆங்கில மற்றும் ஹிந்தியில்தான் எழுத முடியும் என்றெல்லாம் இருந்தது, அதனாலேயே எழுதவில்லை. 

ஆனால், CBSE மாணவர்களுக்கு "இதெல்லாம் சப்ப" என்றுதான் சொல்வார்கள். அவர்களால், பொதுத்தேர்வில் அவ்வளவு மதிப்பெண்கள் பெற முடியாது. நிறைய பேர் (என்னுடைய நண்பர்கள்) 10ம் வகுப்பு வரை CBSEல் படித்துவிட்டு, பின் மாநில பாடத்திட்டத்திற்கு மாறினார்கள். 

நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டவுடன் என்ன நடக்கிறது. 

2001க்கு பின், நாமக்கல்லில் புற்றீசல் போல நிறைய பள்ளிகள் முளைத்தன (தமிழகம் முழுவதும்தான்). நுழைவுத் தேர்வு இல்லை என்றவுடனே, எல்லா பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு மனப்பாடம் செய்வதை ஊக்குவித்தன. புத்தகத்தை அப்படியே முழுங்கி, தேர்வில் போய் வாந்தி எடுக்க வேண்டியதுதான். அது மட்டுமில்லாமல் 11ம் வகுப்பில் இரண்டாம் மாதத்திலேயே 12ம் வகுப்பை ஆரம்பித்து விடுவார்கள். "கேள்வியைப் படி. 5 முறை பார்த்து எழுது. பிறகு, 10 முறை பார்க்காமல் எழுது". இதுதான் நடக்கும். இனி 11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்பதால், இந்த தொந்தரவு குறையலாம்.  

பொதுவாக நிறைய தவறுகள் நடப்பது ஒரு மதிப்பெண் கேள்விகளில்தான் (சரியான விடையை தேர்ந்தெடுப்பது, கோடிட்ட இடங்களை நிரப்புவது, பொருத்துக என ) மதிப்பெண்கள் இப்படித்தான் இருக்கும். எல்லா தனியார் பள்ளிகளும் எப்போதும், அவர்களுடைய பள்ளிகளே தேர்வு மையங்களாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். எனவே, எல்லா மாணவர்களுக்கும் இந்த 30 மதிப்பெண்கள் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். இன்று வரை இதுதான் நடக்கிறது. மற்ற 2, 5 மற்றும் 10 மதிப்பெண் கேள்விகள் அதே வாந்தி, பேதிதான்.

பொதுவாக இறுதி தேர்வுகள் பாடங்களின் முடிவில் இருக்கும் கேள்விகளையே மீண்டும் கேட்டிருப்பார்கள். அதிலும், இயற்பியலில் மின்னணுவியல் (Electronics) என்ற பாடம் உண்டு, அதிலிருந்து கேள்வியே வராது என்று எல்லோரும் சொல்வார்கள், அதை படிக்க தேவையில்லை என்று ஆசிரியரும் சொல்வார். ஒரு 10 மதிப்பெண் கேள்வி கட்டாயம் எழுத வேண்டும். அதற்கும், குறிப்பிட்ட 10 கேள்விகளே மீண்டும் மீண்டும் வரும். எனவே, நன்கு மனப்பாடம் செய்ய தெரிந்தாலே போதும் என்ற நிலைதான். 

கட் ஆப் இப்போது 200க்கு மட்டுமே. இதன் விளைவாக 200க்கு 200 மதிப்பெண்களே ஒரு 30, 40 பேர் வாங்குகிறார்கள். அடுத்தது 199.75, அதில் ஒரு 100 பேர். இவர்கள் அனைவருக்கும் கணிதம், மற்ற பாடங்கள், மொத்த மதிப்பெண்கள் என பார்த்து தரவரிசை அளிக்கப்படும். இவை எல்லாமே ஒரே மாதிரி இருந்தால், பிறந்த தேதியைப் பொறுத்து முன்னுரிமை. கொடுமையோ கொடுமை. 

2006க்கு முன் மருத்துவம், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர்களில் அரசு பள்ளிகளிலும், தமிழ் வழியிலும் படித்த மாணவர்களின் சதவிகிதமும், நுழைவுத் தேர்வு நீக்கப்பட்ட பின் படிப்பவர்களின் சதவீதத்தையும் பாருங்கள், பயங்கரமாக குறைந்திருக்கும். நான் படிக்கும்போது ஒவ்வொரு வருடமும் குறைந்தது 30 சதவீதமாவது தமிழ் வழிக்கல்வியில் படித்திருப்பார்கள். அதன் பின் படிக்க போன என்னுடைய தெரிந்த, சொந்தக்காரர்களிடம் (அவர்கள் தனியார் பள்ளி, ஆங்கில வழி கல்வி) விசாரித்தால், 10 சதவீதம் கூட தமிழ் வழி படித்தவர்கள் இல்லை. அரசு பள்ளிகளில் படித்தவர்கள் இன்னும் குறைவு. 

2001 வரை இந்த மக்கள் அதிகம் இருப்பார்கள். காரணம் கருணாநிதி 1998ல், கிராமப்புற பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு அளித்தார். 2001ல் ஆட்சி மாறி ஜெயலலிதா வந்தவுடன், அதாவது மே மாதம் ஆட்சிக்கு வந்த உடனே, அதை 25 சதவிகிதமாக மாற்றினார். நான் உள்பட பல பேர் இதனால் பாதிக்கப்பட்டோம். (ஏனென்றால் 11,12ம் வகுப்பை நாமக்கல்லில் படித்தேன்), ஆனால் பல கிராமப்புற மாணவர்கள் பயன் பெற்றனர். 

ஆனால், எதற்காக ஜெயலலிதா அதை மாற்றினாரோ அதுதான் நடந்தது. சில பேர் வழக்கு போட்டனர். நீதிமன்றம் 25 சதவிகிதத்தை நீக்கியது. மேல் முறையீடு செய்யப்படவில்லை. மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலும், இது கொண்டுவரப்படவில்லை. ஏனென்றால் முக்கால்வாசி அரசியல்வாதிகள் பள்ளி, கல்லூரி முதலாளிகள் ஆகி விட்டிருந்தனர். 

சரி இனி என்ன செய்யலாம்: 

இந்தியா முழுவதும் ஒரே நுழைத்த தேர்வு என்றால், ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். 
இல்லையா, அந்தந்த மாநிலங்களே நுழைவுத் தேர்வு நடத்தி, அந்த மாநிலத்தில் உள்ள 90 அல்லது 95 சதவிகித இடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
கண்டிப்பாக அரசுப்பள்ளிகளுக்கு, தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முன்னர் இருந்த மாநில அளவிலான நுழைவுத் தேர்வில் இருந்த குழப்பங்களை களைந்து, இப்போதுள்ள சமச்சீர் பாடதிதிட்டத்தில் கீழ் உருப்படியான ஒரு நுழைவுத்தேர்வை கொண்டு வரலாம்.

மீண்டும் சொல்கிறேன். நுழைவுத் தேர்வு கட்டாயம் தேவை. ஆனால், நீட் (NEET) சரியான தேர்வு அல்ல. 

இதற்கெல்லாம் நான் சர்வாதிகாரி ஆனால்தான் முடியும். 

Sunday, April 29, 2018

தேடல்

பொழுது போகாத ஒரு நாளில், திடீரென நீயா நானா - இளையராஜா ரேடியோ ரசிகர்கள் என்ற காணொளியைப் பார்க்க நேர்ந்தது. 80களில் இளையராஜா பற்றிய கலந்துரையாடல். 50 வயதுக்கு மேற்பட்ட பலர் கலந்து கொண்டு அவர்களது வாழ்வில் இளையாராஜா எப்படி தாக்கத்தை உண்டாக்கினார் என்பது பற்றிய விவாதம். நன்றாகவே இருந்தது. மொத்தமாக பார்த்ததில் தோன்றிய சில விஷயங்கள். 

பல பேருக்கு அவர்கள் சொன்ன பாடலுக்கு ராஜா இசை இல்லை என்பதே தெரியவில்லை. 80களின் இசை என்று தலைப்பு வைத்திருக்கலாம். 

கலந்து கொண்டவர்கள் அனைவருமே "கேட்டுண்டே இருக்கச்சே" வகையினர். அது மட்டுமில்லாமல் அனைவரும் படித்து, உயர் பதவியில் உள்ள மேல்குடி மக்கள். அந்த காலத்திலேயே "நாங்களே ரெக்கார்ட் பண்ணி பாடிந்திருந்தோம்" என்றனர். 

உண்மையில் ராஜாவின் பாதிப்பை மிகச்சரியாக சொன்னது சிறப்பு விருந்தினராக வந்த தாமிரா. கீழக்கரையில் பீடி சுற்றும் பெண்கள் எப்படி கேட்ட மாத்திரத்தில் அந்த பாடலை பாடுவார்கள் என்று சொன்னார்.

எல்லாவற்றையும் விட முக்கியம். தேடல். முன்பெல்லாம் ஒரு பாடலை நினைத்தவுடன் கேட்டு விட முடியாது. அதில் ஒருவர் சொன்னது போல ஒரு பாடல் ஒலிபரப்பாகும், அது என்ன படம் என்று தெரியாமல் தேடுவோம் என்றார். அது போன்ற பாடல்கள் நம் மனதை விட்டு மறக்காது. 

எனக்கெல்லாம் 2001ல் சென்னை வரும்வரை அந்த பிரச்சினை இருந்தது. மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது(?) தனி வகுப்பு எல்லாம் முடித்து விட்டு கடைசி பேருந்தில் ஊருக்கு செல்ல கிட்டத்தட்ட 30 நிமிடம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருக்கும். அப்போது வரிசையாக உள்ள கேசட் கடைகளில் பாடல்கள் ஓடிக் கொண்டிருக்கும். எங்கே நமக்கு பிடித்த பாடல் ஓடுகிறதோ அங்கே சென்று கேட்க வேண்டியது. 


ஏதாவது பாடல் கேட்க நன்றாக இருந்து, என்ன படம் என்று தெரியவில்லை எனில், அவர்களிடமே கேட்டுக்கொள்வேன். பின், கையில் கொஞ்சம் காசும் (T60 கேசட் என்றால் 45 ரூபாய், மொத்தம் ஒரு மணி நேர பாடல்கள் கிடைக்கும். T90 என்றால் 60 ரூபாய், 90 நிமிடம்), 10 பாடல்களும் சேர்ந்த பின், அவற்றை பதிவு செய்து கொள்வேன். அல்லது, மொத்தமாக ஒரு கலவையான படங்கள் உள்ள கேசட். அது 25 அல்லது 30 ரூபாய் மட்டுமே. அப்போது எல்லோரும் படிப்பு படிப்பு என்று தொந்தரவு செய்து தொலைக்காட்சியை பார்க்கவே விட மாட்டார்கள். இது மட்டும்தான் ஒரே பொழுதுபோக்கு. 


ஒரு கலவையான படங்கள் உள்ள கேசட்


அதே போல ஒரு படம் பார்க்கவும், அதாவது பழைய படங்கள், நிறைய காத்திருக்க வேண்டும். அப்போது சன் மூவீஸ் என்றொரு சேனல் இருந்தது. 24 மணி நேரமும் படம்தான். நமக்கு படித்த படம் அதிகாலை 3 மணிக்கு கூட போடுவார்கள். வீட்டில் உதைப்பார்களே என்ற காரணத்தில், அதை பார்ப்பதில்லை.

ரஹ்மான் கூட இந்த தேடல் குறைகிறது என்றபொழுது அவர் தேடலை உருவாக்கினார். அதைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். இன்றைய தலைமுறையிடம் அந்த தேடல் என்பதே கிடையாது. எதுவாயினும் உடனே கூகுளாண்டவர்.

25 வயதிற்கு மேல் உள்ளவர்களிடம் அந்த காலத்தில் ஒரு படம் பார்க்க திரையரங்கம் செல்வது எப்படி என்று கேட்டுப் பாருங்கள் தெரியும். இப்போதெல்லாம், படம் வந்த அடுத்த நிமிடம் மொபைலில் வந்து விடுகிறது. அடுத்தடுத்து, பழையதை மறந்து விட்டு, புதியதை தேடி ஓடுகிறார்கள். 

உங்களுடைய முதல் மொபைல் எதுவென்று உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால், அதன் பின் எத்தனை மாற்றி இருப்பீர்கள் என்று தெரியாது. தேடல் தொலைவதற்கு இன்னொரு காரணம் பெற்றோர். அதைப் பற்றி சொல்ல ஒரு பதிவு போதாது. என்ன சொல்ல. வழக்கம் போல பெரு மூச்சு விட்டு கொண்டு, "அந்த காலத்துல எல்லாம்" என்று ஒரு பதிவிட்டு விட்டு போக வேண்டியதுதான்.

Sunday, April 1, 2018

கமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா?

எப்படியோ ஒரு வழியாக வரவே மாட்டேன் சொன்ன கமலும், இந்தா வந்து விடுகிறேன் என்று நான் ஐந்தாவது படிக்கும்போது சொன்ன ரஜினி, என் மகளுக்கு ஐந்து வயது ஆன பின்பும் அரசியலுக்கு வந்து விட்டனர். என்னதான் இருந்தாலும், கமல் ரசிகன்தானே. அவருக்குத்தான் முட்டுக்கொடுக்க வேண்டும். இருந்தாலும் சில விஷயங்கள் பற்றி விவாதிப்போம். 


கமலை ஏன் ஆதரிக்கக் கூடாது: 

ஒரு வருடம் முன்பு வரை கூட, கமலிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால், "நான் அரசியலில் இல்லை என்று யார் சொன்னது" என்பார். அல்லது "அரசியலில் இறங்கித்தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றில்லையே" என்பார். அப்படி இருக்கையில் திடீரென ஏன் அரசியலில் இறங்க வேண்டும்? கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருந்தபோது இது போல ஒவ்வொரு விஷயங்களுக்கும் கருத்து சொல்லவில்லையே? அப்படி என்றால், வெற்றிடம் உள்ளது என்று இறங்குகிறீர்களா? 

ஒரு சில நேரங்களில் அவர் சொல்வது நான் முதலமைச்சர் ஆனால்" என்றே உள்ளது.ஆனால், கண்டிப்பாக கமலை விட திறமையான ஆளுமை உள்ளவர்கள் உண்டு, அவர்களை ஆக்குவாரா என்றும் சொல்லவில்லை. 

இப்போது தமிழ் திரையுலகம் பிரச்சினையில் உள்ளது. ஒரு தலைவராக, தான் இதுவரை சார்ந்துள்ள துறையில் உள்ள பிரச்சினைகளை ஏன் தீர்க்கவில்லை, அல்லது தீர்க்க முடியவில்லை. அவர் 60 வருடங்கள் இருந்த துறையிலேயே பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை என்றால், எப்படி அவர் சாராத துறைகளின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்? 

இப்போது அவர் பேசுவது எப்படி உள்ளது என்றால், இந்த ஒரு வருடத்தில் தமிழகம் அழியும் நிலைக்கு வந்து விட்டது போலவும், இதற்கு முன் இருந்தவர்கள் இன்னும் குறிப்பாக எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் எப்படி ஆட்சி செய்தனர். நல்லதா இல்லை கெட்டதா என்று அவர் சரியாக கூறவில்லை. 

தினமும் கட்சி சார்பில் ஏதேனும் அறிக்கையோ, பேசுவதோ யார் என்றால், கமல், கமல், கமல் மட்டுமே. அவருக்கு பதிலாக, அல்லது அவருக்கு அடுத்து யார்? ஸ்ரீப்ரியா, ஞானசம்பந்தன் என்றால், அவர்கள் ஏன் அறிக்கையோ, பேட்டியோ கட்சி சார்பில் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். 

பொதுவாக கமல் படங்களில், இயக்குனரையும் தாண்டி கமல் மட்டுமே தெரிவார், அந்த படங்கள் அத்தனையும் என்ன ஆகின என்று எல்லோருக்கும் தெரியும். இதே போல நடந்தால், கமலுக்கு அரசியலும் அப்படிதான் ஆகும். 

மற்ற கட்சிகளில், ஏதாவது ஒருவர் தவறாக சொல்லி விட்டால், ஒன்று அதற்கு ஆதரவாக பேசியாக வேண்டும், அல்லது அது அவரது சொந்தக் கருத்து என்று தப்பிக்க வேண்டும். இது போல நடந்து விடக்கூடாது என்பதற்காகவே இப்படி செய்கிறீர்களா?  

"ஏம்பா, ஒரு பொம்பள கூட உருப்படியா, ஒத்துமையா இருக்க முடியல, எப்படிப்பா ஊருல எல்லோருக்கும் இவரு நல்லது பண்ணுவார்?" என்று பொதுவாக கூறுகிறார்கள். அதற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் கருத்து வேற்றுமை என்பது தான் இங்கே கூற விழைவது. 

இன்னும் தமிழ்நாட்டில் உள்ள நிறைய பிரச்சினைகளுக்கு கமல் கருத்து கூறவில்லை. நெடுவாசல், கூடங்குளம், மணல் கொள்ளை, என பல விஷயங்கள். 

தேர்தல் காலத்தில் கூட்டணி அமைப்பாரா? அப்படி அமைத்தால் என்ன மாதிரி கட்சிகளுடன் கூட்டணி? ஒரு வேளை அவரது ஆதரவு தேவைப்பட்டால், யாருக்கு அளிப்பார். கெஜ்ரிவால் போல எதிரிகளுடன் கூட கூட்டணி அமைப்பாரா? 

அடுத்து, மிக முக்கியமான ஒன்று பேச்சுத் திறமை: கமலிடம் அது நிறையவே உள்ளது. ஆனால், அது நேரடியான, எல்லோருக்கும் புரியும்படியாக இல்லை. இது மிகப் பெரும் குறை. "நீங்க புரியற மாறி பேசணும்னு சொல்லல, ஆனா, பேசுனா நல்லாருக்கும்னுதான் சொல்றோம்". 

இதன் விளைவு என்னவென்றால், கமல் நம்மில் ஒருவர் என்றில்லாமல், அவர் எங்கேயோ இருப்பவர் என்றாகிறது. 

கமலை ஏன் ஆதரிக்க வேண்டும்: 

தேசியம், கழகம் என்று பெயரை வைத்து ஊரை ஏமாற்றவில்லை, மக்களை குழப்பவில்லை. 

ஒரு விஷயம் செய்வதற்கு முன், நிறைய ஆராய்ந்து, அல்லது ஆராய்வது போல தோற்றமளிக்க வைக்கிறார். கொசஸ்தலம் செல்வதற்கு முன், 'பூவுலகின் நண்பர்கள்' மூலம் தகவல் பெற்றது. கட்சி ஆரம்பிப்பதற்கு முன் நல்லகண்ணு, கருணாநிதி, வக்கீல்களை சந்தித்தது. எதுவாக இருந்தாலும், முந்திரிக்கொட்டை போல பேசாமல், சற்றே அலசி ஆராய்ந்து கருத்து சொல்வது. 

எதிரிக்கட்சியாக இல்லாமல், சில நல்ல விஷயங்களையும் பாராட்டுவது. குரங்கணி தீ விபத்தில், அரசை குறை கூறாமல் நிவாரப்பணிகளை மேற்கொண்டதில் குறைகள் கூறாமல் இருந்தது. 

மக்களை ஏமாற்றாமல் எப்படி செயல்படுவேன் என்று கூறுவது. மது விலக்கை உடனே அமுல்படுத்த முடியாது என்றும், அது ஏன் என்றும் கூறியது. அது உண்மைதான். 

இன்னும் குறிப்பாக சொன்னால், இப்போது மத்தியில் உள்ள ஆளும் கட்சி "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை 50க்கு கீழ் குறையும், வருமான வரி விலக்கு 5 லட்சம்" என்றெல்லாம் கூவினார்களே, அதெல்லாம் செய்ய முடியாது என்று அவர்களுக்கும் தெரியும், ஆனால், ஏமாற்றினார்கள். 

அதே போல கமல் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம், "நான் ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை ஒழிப்பேன். ஸ்கூட்டரும் கிடையாது, குவாட்டரும் கிடையாது" என்று. அந்த தைரியம். தனித்துவம். 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கமலை எதிர்க்கின்றன. கமல் பொதுவாக ஒரு கருத்து சொன்னாலும், உடனே எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றனர். அந்த பயம் நல்லது. 

பொதுவாக கமல் ரசிகர்கள் எல்லோரும் கண் மூடித்தனமாக அவரை தொடர்வதில்லை, யாரும் இதுவரை கட்சி ஆரம்பிப்பார், பதவி கொடுப்பார் என இருந்ததில்லை. எனவே, சம்பாதிக்க வேண்டும் என்று வருபவர்கள், குறைவாக இருக்கலாம். 

அதே தனித்துவம். "ஏதோ சொல்றாருப்பா. கண்டிப்பா செய்வாருப்பா" என்று சில (மிகச்சிலர்) நம்புகின்றனர். 

மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை, அப்படியே தமிழில் மசாலா கலந்து அடிப்பதில் வல்லவர். எனவே, மற்ற மாநிலங்களிலோ அல்லது நாடுகளிலோ உள்ள நல்ல திட்டங்களை கண்டிப்பாக, சொந்த திட்டம் போல கொண்டு வருவார்.

மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால், கமல் கொஞ்சம் வேகமாக போவது போல தோன்றுகிறது. விஜயகாந்தும் இதே போல எடுத்தவுடன் முதலமைச்சராவேன் என்று 234 தொகுதிகளிலும் நின்றார். அது மாதிரி இல்லாமல், ஒரு குறிப்பிட்ட 10 அல்லது 20 தொகுதிகளில் மட்டும் நின்று, அதில் சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றி ஒரு முன் மாதிரியாக செய்யலாம். நிழல் அமைச்சரவை அமைக்கலாம். (இதையேதான் ராமதாஸும் செய்கிறார். ஆனால், அவர் மீது விழுந்த கறை அப்படி) 

இன்னும் கொஞ்சம் முன் மாதிரியாக மற்றவர்களிடம் இருந்து எந்தளவிற்கு வேறுபட்டு செயல்படுகிறார் என்பது முக்கியம். ஆனால், ஒரு சாமானியனுக்கு அந்த வித்தியாசமே ஒரு அவ நம்பிக்கையை உண்டாக்கி விடக் கூடாது. 

இதுநாள் வரை என் வாக்கு NOTAவிற்கே. இனி உங்களுக்குத்தான் என இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாள் இருப்பதாக நான் கருதுகிறேன். 

வாழ்த்துக்கள் கமல்.   

Sunday, March 18, 2018

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

அனைவருக்கும் வணக்கம். முன்பே கூறியது போல இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை. தேடிக்கொண்டே இருக்கிறேன். பழைய நிறுவனத்தில் கூட துண்டு போட்டுள்ளேன். யோசித்துப் பார்த்தால், அந்த நிறுவனத்தில் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் போக வேண்டி இருக்கும். அதனால், அங்கு சென்ற போதெல்லாம் அடிக்கடி பதிவுகள் போட முடிந்தது. இப்போதே முழுக்க இங்கேயே இருப்பதால், அலுவல் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை என ஏதாவது வந்து விடுகிறது.

அது மட்டுமின்றி, பழைய நிறுவனத்தில் அலுவல் நேரம் நம் இஷ்டம்தான் (Flexible timings). எனவே, அலுவலகத்தில் இருந்து நள்ளிரவில் வந்து, ஓரிரு மணி நேரத்தில் பதிவிட்டு விடுவேன். இப்போதோ இரவு 8 மணிக்கு வந்தால், மனைவி, மக்களோடு சண்டை போட்டு விட்டு, மகளுக்கு கதை சொல்லி தூங்க வைத்து விட்டு, கொஞ்ச நேரம் அலுவலக வேலை, பிறகு தூக்கம். சனி, ஞாயிறு ஏதாவதொரு வேலை.

இதுவரை நான் சொன்ன எல்லாமே நொண்டி சாக்குதான். இதே போல ஒரு நிலைமையில்தான் 10 வருடங்களுக்கு முன் டைரி எழுதுவதை விட்டேன், அதே போல பதிவிற்கும் ஆகி விடக்கூடாது. அப்புறம் என்னுடைய ரசிகர்கள் நிலை என்னாவது. 

அமேசான் பிரைம்: 

முன்பு நிறைய படங்களை தமிழ் ராக்கர்ஸில் தரவிறக்கம் செய்து பார்ப்பேன். சற்றே குற்ற உணர்ச்சியுடன்தான். இப்போது அமேசான் பிரைம் வந்த பிறகு, அதில்தான் பார்க்கிறோம். வருடத்திற்கு 500/- எனும்போதே வாங்கி விட்டேன். அடுத்த வருடம் ஆயிரமாம். 

இன்னும் மலையாளப் படங்கள் வரவில்லை. அதே போல இன்னும் நிறைய படங்கள் வரவில்லை. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே வருகிறது. தெலுங்கில் வரும் அளவிற்கு தமிழில் வரவில்லை. நெட்பிலிக்ஸ் அல்லது சன் நெக்ஸ்ட் பரவாயில்லையே என்றும் தோன்றுகிறது. 

நெட்பிலிக்ஸ் தமிழில் எப்படி என்று தெரியவில்லை. பல நல்ல, சுமாராக ஓடிய, புது முகங்கள் இருந்த திரைப்படங்களை (பலூன், உள்குத்து, திருட்டுப் பயலே 2) இன்னும் எதிலும் காண முடியவில்லை. தமிழ் ராக்கர்ஸ் தவிர. 

இன்னும் வருடத்திற்கு மொத்தமாக இரண்டாயிரம் செலவழிப்பது பிரச்சினை இல்லை. ஏனென்றால், குடும்பத்துடன் அரை நாள் செலவிட்டு ஒரு படம் பார்க்கவே ஆயிரம் ருபாய் தேவைப்படும்போது, வருடம் முழுவதும் வீட்டில் இருந்து பார்க்க 2000 செலவழிப்பதில் தவறில்லை. 

இப்போது இன்னும் நிறைய இணைய தொடர்கள் (web series) வேறு வருகிறது. என்ன, கெட்ட வார்த்தைகளும், படுக்கையறைக் காட்சிகளும் நிறைய வருகின்றன. 

திரைப்பார்வை: 


போன ஜூன் மாதப் பதிவில் திரைப்படங்கள் பற்றி எழுதியது. அதன் பின் எழுதவேயில்லை. இன்னும் சொல்லப் போனால், எழுதும் அளவிற்கு என்னை இந்தப் படங்களும் கவரவில்லை. ஓரளவிற்கு பரவாயில்லை என்றால், இவன் தந்திரன், விக்ரம் வேதா, நிபுணன், அறம், திருட்டுப் பயலே 2, அருவி. இவை எல்லாம் 2017ல் வெளியானவை. 

இந்த வருடம் வந்த படங்களில் உருப்படியாக, என் பெண் உள்பட அனைவரும் ரசித்த படம் குலேபகாவலி மட்டும்தான். இனியாவது நல்ல படங்கள் வரும் என நம்புகிறேன். 

அரசியல்: 

இன்னும் நான் மட்டும்தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என நினைக்கிறேன். மற்ற அனைவரும் ஆரம்பித்து விட்டார்கள். சந்தானம் "திட்றதுக்கு கெட்ட வார்த்த கிடைக்காம திட்டினதையே திட்டிக்கிட்டிருக்க" என்பது போல சில கட்சிகள். 
தேசியமும் இல்லை, திராவிடமும் இல்லை, மய்யம் என ஒன்று, 
அம்மா என்றாலே அதில் அண்ணா, தேசியம், எல்லாமும் அம்மாவிற்குள் அடக்கம் என்றொரு கட்சி. 
பகுதி நேர அரசியல்வாதி ஒருவர், 
ஏற்கனவே உள்ள பெயரில் 'இ' மட்டும் சேர்த்து ஒரு கட்சி என நகைச்சுவைக்கு குறைவில்லை. இன்னும் கொஞ்ச நாள் பார்ப்போம். 

ஆலோசனை தேவை: 

அடிக்கடி பதிவின் முகவரி .in மற்றும் .com இடையே அல்லாடுகிறது. முன்பு ஒரு முறை DD அவர்கள் (திவ்யதர்ஷினி இல்லீங்க, திண்டுக்கல் தனபாலன் அண்ணாச்சி) .inக்கு பதிலாக .comல் திறக்க ஒரு வழி சொன்னார். இதுவரை அதுதான் உள்ளது. இப்போது திடீரென .com போட்டால் .in என்று மாறி, வலைப்பதிவு திறக்க மாட்டேன் என்கிறது. சில முறை அதுவே .com என மாறிக் கொள்கிறது. ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் கூறவும். நான் வன்பொறியாளன், மென்பொறியாளன் அல்ல.  

Tuesday, December 26, 2017

குக்கரன்! 'தில்'கரண்!!

ரொம்ப நாளாக திரைப்படங்கள் பற்றி பதிவே போடவில்லையே. வருட கடைசியில் ஒன்று போடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இன்றைய தேர்தல் முடிவுகள் என் எண்ணத்தை மாற்றி விட்டன. இது போன்ற பரபர, விறுவிறு காட்சிகள் எல்லாம், இப்போது படங்களில் கூட வருவதில்லை. யார் நாயகன், யார் கெட்டவன், யார் குணச்சித்திரம் என்று நாம் எண்ணுகிறோமோ, அப்படியே எதிர்மறையாக மாறுகின்றன. இன்றைய முடிவுக்கு குறித்து எனது சில கருத்துக்கள். 

பணநாயகம் வென்றது. இது உண்மைதான் என்றாலும், இது மட்டுமே உண்மை கிடையாது. எனது நிறுவனத்தில் உள்ள ஒருவர், அதே தொகுதியில் இருப்பவர். அவர் சொன்னது, திமுக பணம் கொடுக்கவில்லை, அதிமுக 6000 கொடுத்தார்கள், ஓர் ஓட்டிற்கு. தினகரன் அணியோ, முதலில் ஒரு குக்கர், பின் அந்த 20 ருபாய் நோட்டு. 

வென்றால், ஓர் ஓட்டிற்கு 10000 ருபாய், உறுதியாக. இதுதான் அவர்களது வாக்கு. சரி பணத்திற்காக வாக்களித்தீர்களா என்ற கேள்விக்கு அவரது பதில், "அதில் என்ன தவறு?, அது மட்டுமின்றி, நாங்கள் ஏன் திமுக, அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும், ஏதாவது ஒரு காரணம் நீங்களே சொல்லுங்கள்" என்றார். உண்மைதான். இவ்வளவு நாள் அவர்கள் இருவரும்தான் மாறி மாறி இருந்துள்ளனர், என்ன ஆயிற்று. ஒன்றுமே ஆகவில்லை. மீண்டும் ஏன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். 

எவனாக இருந்தாலும், எப்படி இருந்தாலும் திருடத்தான் போகிறான். அதில் எங்களுக்கு யார் நிறைய பங்கு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கிறேன் என்பதுதான் அவரது கூற்று. ஆனால், அது மட்டுமே 50 சதவிகித வாக்கு தினகரனுக்கு கிடைக்க காரணமா என்றால், கண்டிப்பாக இல்லை.

முதலில் இருந்தே பார்ப்போமே, ஜெயலலிதா இறந்தவுடன், சசிகலா எதுவுமே வேண்டாம் என்பது போல நடிக்க, மற்ற அடிமைகள் எங்களை காக்க வைக்க தெய்வமே நீங்கள்தான் என்பது போல கதறி அழ, உங்களுக்காக எனது வாழ்க்கையை நான் அர்ப்பணிக்கிறேன் என சசி அழ, பொதுக்குழுவில் சசி தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நிமிடம் பிரம்மாண்டமான போஸ்டர் அடுத்த நொடியே மாறியதை யார் பார்த்திருந்தாலும் "என்னா நடிப்புடா சாமி" என்று கண்டிப்பாக தோன்றியிருக்கும்.

எனக்கு 'காஸநோவா' கதைதான் நினைவுக்கு வந்தது.

ஆனால், அடுத்தடுத்த திருப்பங்கள், சசி உள்ளே போக, அதற்குள் தினகரனை உள்ளே நுழைக்க, பன்னீர் தியானம் செய்ய, ஒரு நாளில் பன்னீர் காமெடியனாக இருந்து நாயகன் ஆனார். அப்போது அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில், தினகரனும் உடனே உள்ளே நுழைய ஆசைப்பட, "இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும் யுவர் ஹானர், இவங்க கண்டிப்பா ஜெயலலிதாவை கொன்னுருப்பாங்க" என எனக்கு நானே நீதிபதிகள் தீர்ப்பு எழுதி விட்டனர். அதற்குள் தேர்தலையே நிறுத்தி விட்டனர். அதற்குள் தர்மயுத்தம் நாடகம் முடிந்து எடப்பாடியும், பன்னீரும் சேர்ந்து விட தினகரன் தனித்து விடப்பட்டார். நிற்க.

நிறைய படங்களில் நாயகன் திருடனாக இருப்பார். அடுத்தவர்களிடம் திருடுவார், கொள்ளை அடிப்பார். அவர் ஏதாவது பிரச்சினையில் சிக்குவார். உடனே நமக்கு என்ன தோன்றும். "ஐயோ பாவமே, அவன் எப்படியாவது தப்பிக்கணுமே" என்றுதான் தோன்றும். அதே போலத்தான், "எடப்பாடி, பன்னீரை எல்லாம் பெரிய ஆளாக்குனது ஜெயலலிதா இல்ல, சசிகலா போல, அவங்களுக்கு போய் துரோகம் பண்ணிட்டாங்களே" என்று முதலில் பரிதாபம் முதலில் வந்தது. "ஒரு வேளை, இவங்கதான் ஜெயலிதாவை கொன்னுருப்பங்களோ" என்ற சந்தேகத்தையும் முதல் நாள் வெளியிட்ட காணொளியில் நிவர்த்தி செய்து விட்டார்கள். முடிந்தது. 

அதை விட முக்கியமான இன்னொரு விஷயம். பேச்சுத்திறன். ஜெயலலிதா ஏன் எந்த மங்குனி அமைச்சர்களையும் பேச விடாமல் வைத்திருந்தார் என்று எல்லா அமைச்சர்களும் நிரூபித்து வருகின்றனர். ஆனால், தினகரனோ எந்த கேள்விகளையும் தவிர்த்ததில்லை, மங்குணித்தனமாக பதிலளிக்கவில்லை. அதிலும் பாண்டேவை திணறடித்ததெல்லாம் தனிக்கதை. அது ஒரு தனித்துவமான திறன். ஜெயலலிதாவுக்கு கூட அந்த திறன் இல்லை. 

இந்த வருட அரசியல் நிகழ்வுகளினால் அறியப்படும் நீதி. 

1. எதிலும் அவசரப்படக்கூடாது. (சசிகலா பொது செயலாளர் ஆனது). 
2. பரிதாபத்தை உருவாக்கக் கூடாது, உருவாக வேண்டும். (பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் மூலம் உருவாக்கினார். ஆனால், தினகரனுக்கு பன்னீரும், எடப்பாடியும் செய்த வேலையால் பரிதாபம் உருவானது.) 
3. மக்கள் முட்டாள் அல்ல. மக்களுக்கு தெரிந்தது இரட்டை இலையும், உதயசூரியனும்தான் என்ற எண்ணம். (இரட்டை இலை இரண்டாக பிரிந்ததால், நமக்கு வாக்கு வரும், 2G விடுதலை என அளவுக்கதிமான தலைக்கனத்தில் திமுக அழிந்தது.) 
4. வாய்மை. இது நேர்மையை குறிப்பிடவில்லை. மற்றவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது. 
5. அடுத்தது என்ன செய்வோம். ஒவ்வொருவரும், அடுத்தவரை குற்றம் சொல்லியே வாக்கு கேட்டனர். தினகரன் உட்பட. திமுக, அதிமுக இதுவரை உருப்படியாக அந்த தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. தினகரனோ, குறைந்தது அடுத்து ஆட்சியை (?) பிடிக்கவாவது ஏதாவது நல்லது செய்வார் என்ற நப்பாசையும் மக்களுக்கு இருந்திருக்கலாம். 

எது எப்படியோ, இது அனைவருக்கும் ஒரு பாடம். பார்ப்போம். இதே போல தமிழ் ஹிந்துவில் இரண்டு கட்டுரைகள் வந்துள்ளன. உங்களுக்காக. 

ஆர்.கே.நகரில் தினகரன் சாதித்தது எப்படி?

ஜெயலலிதா பாதி... கருணாநிதி பாதி..! - இது தினகரன் ஸ்டைல்?

Monday, November 13, 2017

பதிவுலகில் பத்து வருடங்கள்!!

இன்றோடு பதிவு எழுத ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகி விட்டது. 120 மாதங்கள், 120 பதிவுகள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விளையாட்டாக ஆரம்பித்தது, இன்னும் விளையாட்டாகவே போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்சம் பின்னே சென்று வருவோம்.

2005லேயே தமிழ் பதிவுகள் பிரபலமாக ஆரம்பித்து விட்டாலும், இணையம் சென்றால் படம் தரவிறக்கம், இளையராஜாவின் யாஹூ குழுமம், செய்திகள் என்றே என் பிழைப்பு ஓடியது. அதிலும், ரஹ்மானின் யாஹூ குழுமம் மற்றும் மற்ற குழுமம்(Forum)களில் ராஜா மற்றும் ரஹ்மானின் சண்டைகள் பற்றி படிப்பேன்.

இந்த நிலையில்தான் குமுதம், ஆனந்த விகடனில் தமிழ் பதிவுகள் பற்றி எழுத ஆரம்பித்தனர். முதல் வாரமே இட்லிவடை பற்றிதான். அதன் பிறகு கேபிள்சங்கர் என நிறைய பேர் பற்றி வாராவாரம் வர ஆரம்பிக்கவும், அது என்னடா பதிவர் என்று தேட ஆரம்பித்தால், ஒரு முறை மிக தெளிவாக பதிவு என்றால் என்ன, அப்படி என செய்முறை விளக்கம் எல்லாம் போட்டிருந்தார்கள். நமக்குத்தான் கூகுளாண்டவர் அருள் ஏற்கனவே இருந்ததால், உடனே பதிவு ஆரம்பித்தாகி விட்டது. ஆனால், பெயர் வைக்கவே ஒரு மாதம் ஆகி விட்டது.

முதலில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. சும்மா, இளையராஜா, கமல் என ஜல்லி அடித்துவிட்டு, மீண்டும் ஆறு மாதம் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. அதன் பின் ஆரம்பித்தது, அவ்வப்போது 3 மாதம், 4 மாதம் என இடைவெளி விழுந்தாலும், பின் எழுந்து சென்று கொண்டே உள்ளேன். நமக்கு கணக்கு பிடிக்கும் என்பதால், ஒரு சில புள்ளி விவரங்கள் அங்கங்கே வரும்.

ஏற்கனவே வேலை பற்றிய பதிவில் சொன்னது போல எனது இரண்டாவது நிறுவனத்தில் (2008-2011) செய்த சித்ரவதையால் அந்த வருடங்களில் பதிவுகள் குறைந்து விட்டன. அதன் பின் அவ்வப்போது வெளிநாட்டுப் பயணங்கள் போகும்போதெல்லாம், நிறைய பதிவுகள் போட ஆரம்பித்துவிட்டேன். அதனால்தான் முதல் 5 வருடங்களில் 50 பதிவுகள் என்பது அடுத்த 5 வருடங்களில் 70ஆக அதிகரித்துள்ளது. எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், எப்படி சிலர் ஒரு மாதத்திற்கே 50 பதிவுகள் எழுதுகின்றனர் என்பதுதான்.

நான் பதிவு எழுத ஆரம்பித்த உடன், என் நண்பர்கள் சிலரும் பதிவு எழுத ஆரம்பித்தனர். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் நிறுத்தி விட்டனர். அப்போது பிரபலமாக இருந்த பாதிக்கு மேலான பதிவர்கள், இப்போது பதிவே எழுதுவதில்லை, அப்படியே எழுதினாலும் மிகக் குறைவு. இனி ஒரு சில மலரும் நினைவுகள்.

லிங்குசாமி: என்னுடைய பதிவுலக வரலாற்றில், இரண்டு பதிவுகள் மிக அதிகமாக படிக்கப்பட்டன. அஞ்சான், உத்தம வில்லன். இரண்டுக்குமே காரணம் லிங்குசாமி. அப்போது பாதிக்கப்பட்டவரை இன்று வரை மீட்க இயலவில்லை. சண்டைக்கோழி 2ல் கண்டிப்பாக மீது வர வாழ்த்துக்கள்.

என் அத்தை: எனது தந்தையின் தங்கை பற்றிய எனது பதிவு திடீரென நிறைய பேர் படிக்கும் பதிவாக உள்ளது. என் அத்தை என்றவுடன் ஏதாவது கில்மா பதிவு என்று நினைத்து விட்டார்களா என்று தெரியவில்லை. பகுதி 1, பகுதி 2 என இரண்டு இருந்தாலும், முதல் பகுதி மட்டும் அதிகம் படிக்கப்படுகிறது.

புகழ்: ஆரம்ப காலங்களில் நமது பதிவுகள் மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமெனில் மற்றவர்களின் பதிவுகளுக்கு போய், பின்னூட்டங்கள் இட்டு, பின் எனது பதிவிற்கும் வாருங்களேன் என்று அழைப்பு விடுக்க வேண்டும். அதை செய்தாலும், பின் ஏதோ ஒரு மாதிரி இருந்ததால், அதன் பிறகு அதை விட்டு விட்டேன். சில பதிவர்கள், தாங்கள் ரசித்த புது பதிவர்கள் என்று அறிமுகப்படுத்தினார்கள். அதன் மூலம் இன்னும் கொஞ்சம். ஒரு கட்டத்தில் யார் படித்தால் என்ன, நாம் பாட்டுக்கு எழுதுவோம் என்று எழுதிக்கொண்டிருந்தேன்.

திடீரென யாராவது இளையராஜா பற்றியோ, கமல் பற்றியோ கேவலமாக ஒரு பதிவு போட்டால், உடனே அதை எதிர்த்து ஒரு பதிவு போட்டால்தான் மனது அடைக்கும். அந்தப் பதிவில் ஏதாவது கருத்துக்கள் இட்டு, அது வேறு பஞ்சாயத்து ஆகி, அது தனிக்கதை. இருந்தாலும், வயது ஆகிறது அல்லவா. இப்போது கொஞ்சம், கொஞ்சம்தான் பக்குவம் வந்துள்ளது. அது போல ஏதாவது பதிவு படித்தால், முதலில் சிரிப்பு வரும். பின், அதைத் தவிர வேறு எதையாவது நினைக்க ஆரம்பித்தால், அது மறந்து விடும். பின் ஆற அமர ஏதாவது பதிவு எழுதுவேன்.

அதன் பிறகு திடீரென தமிழ் ஹிந்துவில் எனது பதிவு பற்றி வந்தது. என் வாழ்க்கையிலேயே மிகவும் பெருமையா தருணம் அது. நமது படைப்புகளுக்கு கிடைக்கிற அங்கீகாரம், அந்த போதையே தனி சுகம். இது போல அவ்வப்போது கிடைக்கும் பாராட்டுகளே இன்னும் என்னை எழுத வைக்கிறது.

சில நல்ல பதிவுகள்:

இந்தியாவின் சாலை விதிகள்

நாமக்கல் கல்விப் பண்ணைகள்

தவறுக்குக் காரணம் பெற்றோர்களே!! மாணவர்களே!!

சென்னையின் வாகன ஓட்டிகள்

திரைப்படங்கள்/திரையிசை பதிவுகளில் சில நல்ல பதிவுகள்:

நான் ரீமேக் செய்ய விரும்பும் படங்கள்!!! 

ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!!

விஸ்வரூபம் - தவறு கமல் மீதுதான்


தங்களின் ஆதரவிற்கு நன்றி!!