Thursday, November 27, 2008

மகிழ்ச்சியாய் இருந்தது (இருப்பது) எப்போது??

தனிமையில் இருக்கும்போது அடிக்கடி தோன்றுவது இதுதான்.. நான் எப்போது சந்தோஷமாய் இருந்துள்ளேன்? அறியா வயதிலா, பருவ வயதிலா, கல்லுரியிலா அல்லது வேலைக்கு போன பிறகா?

கொஞ்சம் ஆழமாய் யோசிக்கும்போது, ஒரு காலகட்டத்தை கடந்த பின், அதைப்பற்றி நினைக்கும்போது, அந்த கால கட்டத்தில்தான் மிக மகிழ்ச்சியாய் இருந்ததாய் தோன்றுகிறது.

ஆனால் அந்தந்த காலகட்டங்களிலோ, அதற்கு அடுத்த கட்டத்தில்தான் மகிழ்ச்சியாக இருப்போம் என்று எண்ணியதுண்டு.. இதனாலேயே, முழுவதுமாக அந்த மகிழ்ச்சியை அனுபவித்ததில்லையோ என தோன்றியதுண்டு. இதைப்பற்றி தனிப்பதிவு இடுகிறேன்.

ஆனால், தினசரி வாழ்க்கையில் வரும் அற்ப சந்தோஷங்கள்தான் நாம் உண்மையாக அனுபவிப்பவை. என்னுடைய அற்பத்தனத்தை பதிவிட்டுள்ளேன். உங்களுடையவை பின்னூட்டத்தில்...

தினசரி பேருந்திலும், ரயிலிலும் கும்பலில் நசுங்கி, பிதுங்கி பயணிக்கும்போது, எவனாவது செல்பேசியில் சத்தமாக பாட்டு போட்டால் எரிச்சலாக வரும். அப்போது நமக்கு மிகவும் பிடித்த, ரொம்ப நாள் கேட்காத பாடல் வரும்போது, அந்த நான்கைந்து நிமிடங்கள்...

அதே பயணத்தில் ஏதாவது அழகான பெண், அதுவும் நாம் பார்க்கும் கோணத்தில் இருந்தால், அது ஒரு சுகானுபவம். அந்த பெண்ணும் நம்மை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டால், இறங்கவே மனம் வராது.

ஏதாவது நெடுந்தூர பயணத்தில், நாம் அரைத்தூக்கத்திலும், பேருந்து பயண நெரிசலில் அதிக நேரம் நிற்கும்போது, ஓட்டுனர் வண்டியை இரண்டடி நகர்த்தும்போது, ஏதோ சொந்த ஊரையே அடைந்து விட்டது போல சந்தோஷம்.

கடற்கரையில் சுண்டல் வாங்கி சாப்பிட்டபின், அந்த சுண்டல் மடித்த தாளில் நல்ல கவிதை/கட்டுரை/கதை இருக்கும்போது.

என்றாவது வீட்டில் பழைய பொருட்களை நோண்டிக்கொண்டிருக்கும்போது, எப்போதோ தேடிய பொருள் கிடைக்கும்போது வரும் நினைவுகள்..

'றேடியோஸ்பதி' புதிருக்கு விடை தெரியும்போது..

'ஒரு பதிவிட்டபின், அதுவும் தமிழ்மணத்தில் வந்த பின், வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதும், அவர்கள் பின்னூட்டமிடும்போதும்.. இப்போதைக்கு மகிழ்ச்சியான விஷயம் அதுதான்..

என்னதான் இதே போல பல சந்தோஷங்கள் இருந்தாலும், முல்லாவோ/தெனாலிராமனோ/பீர்பாலோ அவருடைய மன்னருக்கு சொல்லி புரியவைத்த 'அந்த' செயல்தான் உண்மையிலே சந்தோஷமான விஷயம். புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளவும். புரியாதவர்கள் எங்கேயாவது படித்து, சிரித்துக்கொள்ளவும்.

Sunday, November 23, 2008

நேர் காணல்

மக்களே, மீண்டும் உங்கள் கண்களை குளமாக்குவதற்கு மன்னிக்கவும். பழைய விகடனிலிருந்து , உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க(?) அடுத்த பதிவு. இதில், சில, பல பேட்டிகள் உள்ளன. (முந்தைய பதிவு)

கார்த்தி ராஜா, பவதாரிணி மற்றும் யுவனின் பேட்டிகள் உள்ளன. யுவனின் வெள்ளந்தியான பதில்கள் (படிப்பு வரல சார், அதான் ஸ்கூலுக்கே போகல.. ரஹ்மானின் இசையில் 'காதல் ரோஜாவே' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்) நன்றாக உள்ளன. அந்த பக்கம் மட்டும் (இன்னும்) கொஞ்சம் கண்ணைச் சுருக்கிப் படிக்கவும்.ஆர். கே. செல்வமணி பேட்டி: 'வளர்ப்பு மகன்', 'அடிமை' (பார்த்திபனின் சோத்துக்கட்சி) போன்ற படங்கள் என்ன நிலை என்று முரளி கண்ணன் சொல்ல வேண்டுகிறேன். வழக்கம் போல, ரஜினி பற்றியும், ரோஜா பற்றியும் கூட உள்ளன.பி. சி. ஸ்ரீராம் பேட்டி: குருதிப்புனல் படம் பற்றி சொன்ன முக்கிய விஷயம். "என் பையன் ரஜனி ரசிகன். அவன் முத்து படம்தான் பார்ப்பான். அவனும் விரும்பி பார்க்கும்படி குருதிப்புனல் பண்ணனும்". பையன் (அப்போது) பார்த்தானா தெரியவில்லை.

படத்தில் தனுஷாக வரும் அரவிந்த் நானல்ல.. (என்னளவிற்கு புகைப்படம் எடுப்பதில் சிறந்தவர் இல்லையென்றாலும்) அவர்தான் புதுப்பேட்டை, குசேலன்(?) படங்களின் ஒளிப்பதிவாளர் 'அரவிந்த் கிருஷ்ணா' என்று நினைக்கிறேன். சரியா?
(இந்த பதிவை உங்களுக்கு வழங்கியவர்கள் சங்கர நேத்ராலயா மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை. )

Sunday, November 16, 2008

பேரம் பேசுவது எப்படி???

சக பதிவர் இம்சை அரசியின் பதிவை படித்தபோதே நானும் அதைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், நாம் இருக்கும் 'பிசி'யில்... சரி அதை விடுங்க..

நமக்கும் பேரம் பேசுவதற்கும் 'ஒளியாண்டு' கணக்கில் தூரம். பேரம் பேசுவதாய் நினைத்து கடைக்காரர் சொன்னதை விட அதிகமாக கொடுத்துதான் எனக்கு நடந்தது. அவ்வளவு உருகிய கதை சொன்னார். ஆனால், இது அதைப்பற்றியதல்ல.

கல்லூரி படிக்கும்போது, 10 நாட்கள் குல்லு, மணாலி என்று பயணம் போயிருந்தோம். மணாலியில், ஏதோ இடத்தில், பனியில் விளையாடிக்கொண்டிருந்தோம். பின், நானும் இன்னும் இரு நண்பர்களும், ஒரு சிறிய குட்டிச்சுவரில் உட்கார்ந்தோம்.

அப்போது ஒரு மலைவாசி போல ஒரு ஆள் வந்து, குங்குமப்பூ விற்றுக்கொண்டிருந்தான். (நம்முடைய ஹிந்தி அறிவிற்கு, அது இன்னொருவர் சொல்லி தெரிய வந்தது.) நாங்கள் அவரையே பார்த்துக்கொண்டிருந்ததால், எங்களருகில் வந்தார். மிகவும் சிறிய கண்ணாடி பாட்டில்களில் போட்டு வைத்திருந்தார். மீறிப்போனால், ஒரு பாட்டிலில் உள்ள பூ, 10 கிராம் கூட தேறாது.

என் நண்பன் நாராயணன் என்பவன், வீட்டில் குங்குமப்பூ கேட்டார்கள் என்று வாங்க போவதாக சொன்னான். எனவே, பேச்சு வார்த்தை தொடங்கியது. நாங்கள் அரைகுறை ஆங்கிலம், அவை ஹிந்தி. உங்களுக்காக சப்-டைட்டில் மட்டும்.

"எவ்வளவுங்க இது"

"அம்பது ரூவாப்பா"

நாராயணன் ஒரு கணம் யோசித்து "ஏக் ரூப்யா' என்றான். (இது முக்கிய தருணம்.. சற்றே கற்பனைக் குதிரையை தட்டி யோசித்தி பாருங்கள்.. )

நான் குட்டி சுவற்றின் பின்னால் எட்டிக் குதித்து விட்டேன். இன்னொருவன் கீழே குதித்து பத்தடி ஓடிப்போய் நின்று கொண்டான். நாராயணனோ அசையவில்லை.

அவர் அவனை ஏற, இறங்க பார்த்து விட்டு அப்படியே சென்று விட்டார். நாங்கள் திரும்பி வந்து, அவன் உயிருக்கு ஆபத்து (நமக்கும்தான்) இல்லை என்று உறுதி செய்து கொண்டு கேட்டோம். "அது எப்பிடிரா மனசாட்சியே இல்லாம அப்படி கேட்ட?? ஒருவேளை அடி விழுந்திருந்தா??'

அவன் பொறுமையாக சொன்னான். "அது ஒன்னும் அவ்வளவு காசில்ல. பேரம் படியலேன்னா அவ்வளவுதான்.. அதுக்கேன் கை வைக்கிறான்".

அப்போது திரும்பி வந்தார். நாங்கள் இருவரும் மறுபடியும் தயாரானோம். அவரோ, "நாப்பது ரூவா கொடுங்க" என்றார்.

நம்மாள் மீண்டும் சொன்னான். "ஏக் ரூப்யா.'

இப்போது அவர் ஒரு முறை முறைத்து விட்டு போனார். எனக்கோ சற்று உதற ஆரம்பித்து விட்டது. "டேய். அந்தாளு ஆளுங்களை கூட்டிக்கிட்டு வரதுக்குள்ள ஓடிரலாண்டா" என்றேன். அவனோ 'ச்சீ.. சும்மா இரு.. அத வாங்காம போறதில்ல" என்றான்.

இப்போது அவர்கள் இரண்டு பேராக வந்தார்கள். இன்னொருவன் நடுங்குவது எனக்கு பார்க்கும்போதே தெரிந்தது. எனக்கும்தான். அவர்கள் அருகே வந்து "சாப், ரொம்ப கஷ்டப்பட்டு, காட்டுல அலைஞ்சு, திரிஞ்சு எடுத்தது சாப்.. இருவத்தஞ்சாவது கொடுங்க சாப்" என்றார். (அவர் இன்னும் பயங்கர சோகமாக சொன்னார்.. எனக்கு கண்ணில் கண்ணீர் வந்து விட்டது).

நம்மாள் மீண்டும் அதே டயலாக்.. விலை இருபது, பதினைந்து, பத்து, எட்டு என்று வந்து விட்டது.. நான் நாராயணனிடம் மெதுவாக, "டேய். அந்த பாட்டிலுக்காவது எட்டு ரூவா கொடுக்கலாண்டா" என்றேன். ஒரே வார்த்தை "பாக்கலாண்டா"..


ஐந்து ரூபாய்க்கு வரும்போது, அவன் பரந்த மனதோடு, "சரி.. ரெண்டு ரூவா" என்றான். அவர்களுக்கு பயங்கர சந்தோஷம். எப்படியாவது நான்கு ரூபாய்க்கு முடித்துவிட வேண்டும் என்ற நோக்கம் புரிந்தது. எங்களாலும் தாங்க முடியவில்லை. (இந்த சம்பவம் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நடந்தது.) "டேய். இவ்வளவு நேரம் பசினதுக்காவது மூன்ருவா கொடுக்கலாண்டா" என்றோம். அதற்கும் அவர்கள் பேரமும் மூன்று ரூபாய்க்கு வந்தது. நல்லபடியாகவும் முடிந்தது. எங்களுக்கும் போன உயிர் திரும்ப வந்தது.

ஐந்து பாட்டில்கள், பதினைந்து ரூபாய். அவர்கள் கிளம்பிய பின் கேட்டோம். "ஏண்டா.. அப்படி பேரம் பேசி வாங்கி இத என்ன பண்ணுவ?? பாவம் ஒரு பத்து ரூவாவாவது கொடுத்திருக்கலாம்".


அவனோ "இதுவே அவனுக்கு பெரிய லாபமா இருக்கும். இல்லேனா யாருமே கொடுக்க மாட்டாங்க" என்றான்.

"உனக்கு மனசில பெரிய புத்திசாலின்னு நெனப்பா?? சரி. ஒருவேளை இது போலியா இருந்தா" என்று கேட்டோம்.

மிக பொறுமையுடன் சொன்னான்.

"அவன் நம்ம எல்லார விட புத்திசாலின்னு நான் ஒத்துக்கிறேன்"

ஆனால், எங்களால் யார் புத்திசாலி என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பயணத்தின் நடுவே, நாராயணன் அந்த பாட்டில்களை தவற விட்டு விட்டான்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்???