Wednesday, April 24, 2013

உதிரிப்பூக்கள் - கதைக்குத் தேவையான கவர்ச்சி

நீங்க கவர்ச்சியா நடிப்பீங்களா?

கதைக்குத் தேவையான கவர்ச்சினா, கவர்ச்சி காட்றதுல தப்பில்ல.

எந்த நடிகையை எடுத்துக் கொண்டாலும், இந்த கேள்வி உண்டு. இதே பதிலும் நிறைய பேரிடம் வந்ததும் உண்டு. இந்த கேள்வி எனக்கு எப்படி தோன்றும் என்றால், இதற்கு எனக்கு ஒரு கேள்வி கேட்க வேண்டும் போல உள்ளது. அட, அதில்லீங்க, "படத்துல, நீங்க நகைச்சுவை நடிகரோட கை கோத்துக்கிட்டு போற மாதிரி ஒரு காட்சி" என்று சொன்னால், அதில் நீங்கள் நடிப்பீர்களா? கண்டிப்பாக மாட்டீர்கள். நாயகனுடன் மட்டும்தான் ஜோடியாக நடிப்பேன் என்பீர்கள்.

கதைக்கு அது தேவைதான், ஆனால், நடிக்க மாட்டீர்கள். சமீபத்தில் 'பத்ம' விருதை ஒதுக்கிய ஜானகி அம்மாளை ரசித்தேன். ஆனாலும், அவரது கருத்தில் ஒன்றே ஒன்றுதான் இடித்தது. அதாவது, ஒரு படத்தில், இவர் பாட வேண்டிய பாடல் நகைச்சுவை நடிகைக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அதனால் அதை தான் பாடவில்லை என்றும் சொல்லியிருந்தார். கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஜானகி அவர்கள், குரலை நன்றாக மாற்றிப் பாடக்கூடியவர். அவரால், அந்த நகைச்சுவை உணர்வைக் கொடுக்க முடியும் என்பதால்தான் அவர் அழைக்கப்பட்டிருப்பார்.என்னவோ போங்கள்.


உதிரிப்பூக்கள் என்ற (சீரியல் அல்ல) ஒரு பழைய படம் உள்ளது. நிறைய பேர், தமிழில் உள்ள உலகத் திரைப்படம் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால், படம் பார்த்தால் "அப்படி எதுவும் தெரியவில்லையே, படம் ஒரு சாதாரண கதைதான், இதில் என்ன உள்ளது என்று ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள்" என்றுதான் எல்லோருக்கும் தோன்றும். இதே கேள்வியை நான் ஒரு பதிவிலும் பார்த்திருக்கிறேன்.

நம்மவர்களுக்கு, உலகப்படம் என்றாலே ஒரு முறை பார்த்தால் புரியக்கூடாது, திரைக்கதை ஒரே நேர்க்கோட்டில் போவது போல இருக்கக்கூடாது என்று நிறைய நியதிகளை நாமே வகுத்து விட்டோம். அதனால்தான் இந்த படத்தில் அப்படி என்ன உள்ளது என்ற கேள்வி வருகிறது. இந்தப் படத்தை சிறு வயதிலேயே DDயில் பார்த்திருக்கிறேன். அப்போது இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை (கவனிக்க. புரியவில்லை என்று சொல்லவில்லை). ஏனென்றால் சண்டை இல்லை, கவுண்டமணி செந்தில் இல்லை.

இந்தப் படத்தில் ஏதோ உள்ளது என்று எப்போது தெரிந்தது என்றால், என் மாமா பொதுவாக படமே பார்க்க மாட்டார். அவரது மகன்களுக்காக ரஜினி படங்கள் மட்டுமே கூட்டிப் போவார். அவர் பார்த்து கண் கலங்கிய படம் 'உதிரிப்பூக்கள்'. இதை என் அத்தை என்னிடம் சொல்லியபோதுதான் முதன் முதலில் "இந்தப் படத்தில் என்னமோ உள்ளது போலவே?" என்று நினைத்தேன்.

இந்தப் படத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அலசி விட்டார்கள் நானும் என் பங்குக்கு, என்னுடைய புரிதல்களை பகிர்கிறேன்.



படத்தின் பாத்திரங்கள். படத்தில் கெட்டவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். விஜயனின் ஒரு சில குணங்களே, அவரைக் கெட்டவராக மாற்றும். தேவையில்லாமல் ஓவராக பேசும் குழந்தைகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் படத்தில் நாயகன் நாயகி என்று கூட சொல்ல முடியாது.

அதே போல படத்தின் வசனங்கள். விஜயனின் இரண்டாவது மனைவி, அவரின் குணம் தெரிந்து கிளம்பும்போது, விஜயன் தடுப்பார். அப்போது சொல்லுவார் "என்னை நாங்க இப்போதைக்கு தடுக்கலாம் ஆனா, நாளைக்கே நான் உங்களது சொத்துல விஷம் வைக்க முடியும்" என்பார். தேவையில்லாத அழுகையே இருக்காது. குறிப்பால் உணர்த்தும் காட்சிகள். கணவன் பூ, இனிப்பு எல்லாம் வாங்கி அனுப்பிவிட்டு, இரவு சினிமாவுக்கு போகலாம், சமைக்க வேணாம். வெளியே சாப்பிடப் போகிறோம் என்று சொல்லி அனுப்பியவுடன், அஷ்வினி மேலே பார்ப்பார் ("மழை வருதா என்ன" என்பது போல). ஒரு சாதாரண காட்சிதான். ஆனால், அது ஒரு அசாதாரண நிகழ்வு என்பதையும் உணர்த்தியிருப்பார். 

இந்தப் படத்தில், நாயகி குளிக்கப் போவது போல வரும். ஆனால், குளியல் காட்சி இல்லை. வறுமையால் நாயகி உடை கிழிந்திருக்கும் அனால் 'கிளிவேஜ்' இருக்காது. உடைகள் கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவாள். ஆனால், விரசம் இருக்காது.

படத்தில் பல முக்கியமான, கதைக்குத் தேவையான காட்சிகள் படத்தில் வராது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், இறுதிக் காட்சியில் விஜயன் தண்ணீரில் மூழ்கி இறக்கும் காட்சி, விஜயன் சரத்பாபுவை அடிப்பது போன்றவை.

படத்தின் இசை பற்றி தனியாக சொல்ல வேண்டுமா? இளையராஜா. 'அழகிய கண்ணே' பாடல் ஒன்று போதுமே. ஆனால், இங்கே உள்ளது படத்தின் ஆரம்பத்தில், இளையராஜாவின் குரலில் வரும் பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.


உதிரிப்பூக்கள் - பார்க்கப்பட மட்டுமல்ல போற்றப்படவும் வேண்டியது.

டிஸ்கி: கூகிள் போய் 'உதிரிப்பூக்கள்' என்று தேடினால் சன் டிவியில் வரும் சீரியல்தான் வருகிறது. திரைப்படங்களின் பெயர்களை இது போன்று சீரியல்களுக்கு பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும்..

Monday, April 8, 2013

பல குறும்படங்களும், சில விளம்பரங்களும்!!!

இங்கே நான் பகிர்ந்துள்ள நிறைய குறும்படங்களை அறிமுகப்படுத்திய அண்ணன் சுரேஷ் குமார் அவர்களுக்கு நன்றி.. நன்றி.. நன்றி..

சும்மா, நான் மிகவும் ரசித்த, ரசித்துக் கொண்டிருக்கின்ற குறும்படங்கள் பற்றிய பார்வை, விளம்பர இடைவேளைகளோடு உள்ளது. நிகழ்ச்சிக்குப் போவோமா?

ஜக்கு பாய்ஸ்:

நான்கு வருடங்கள் இருக்கும். அப்போதுதான் குறும்படங்கள் வந்த புதிது. ஆன் சைட்டில் இருந்து நண்பன் ஒரு இணைப்பை அனுப்பி, "கண்டிப்பாக பார்" என்று சொல்லியிருந்தான். சரி பாக்காலாம், என்று நாங்களும் விட்டு விட்டோம்.

ஒரு பொழுது போகாத நாளில், நான் மட்டும், அதை பார்க்க ஆரம்பித்தேன். இரண்டு நிமிடங்களில் "என்ன எழவுடா இது" என்று தோன்றியது. அதன் பின், சும்மா பர பரவென் பட்டாசு கிளப்பியது. இத்தனைக்கும், அப்போது நான் ஆணி பிடுங்கும் வேலையில் இல்லை. தானியங்கித் துறையில் இருந்தேன். இருந்தாலும், எனக்கும், அந்த குறும்படத்தில் வரும் சம்பவங்கள் பொருந்தியது என்பது உண்மை. இந்தப் படத்தைப் பின் தரவிறக்கம் செய்து, கிட்டத்தட்ட விளம்பரமே செய்தோம். ஆணி பிடுங்கும் துறை உள்ளவரை, இந்தப் படமும் நிலைத்திருக்கும்.



ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் சந்திப்போம்.

ஒரு காலத்தில், எல்லா வங்கி மற்றும் காப்பீடு நிறுவன விளம்பரங்கள் அனைத்தும், குழந்தைகளை மையப்படுத்தி, மிகவும் ரசிக்கும் வகையில் வந்தன. அதில், எனக்கு மிகவும் பிடித்தது இந்த விளம்பரம்தான். அதுவும், அந்த குழந்தையின் பாவனைகள், அப்பப்பா...



சரி, மீண்டும் குறும்படங்களுக்குப் போகலாம். 

குறும்படங்கள் எல்லாம் நல்ல இருக்கும் போலவே என்று என்று தினமும் வீட்டிற்கு வந்து குறும்படங்கள் பார்க்க ஆரம்பித்தோம். நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டோம். அப்பா, ஆள விடுங்கடா சாமி என்றாகி விட்டது. அதன் பின், எப்போதாவது நாளைய இயக்குனர் மட்டும் பார்க்க ஆரம்பித்தோம்.

துரு: 

அப்போதுதான் ஒரு நாள் இந்தக் குறும்படத்தைப் பார்த்தோம். பார்த்தவுடனே, அதை மீண்டும் பார்க்க வேண்டுமே என்று தோன்றியது. ஏனென்றால், நீங்களும் பாருங்கள், உங்களுக்கும் தெரியும். அதன் பின், இதையும் வலையுலாவி, கண்டு பிடித்தோம்.




இந்த குறும்படத்தின் இயக்குனர் 'கார்த்திக் சுப்பராஜ்' இப்போது பிட்சா என்ற வெற்றிப் படத்தின் இயக்குனர். வாழ்த்துக்கள். அவரின் அடுத்த படிப்பிற்காக காத்திருக்கிறோம். 

ராமசாமி: 

திடீரென, யாரோ பகிர்ந்த ஒரு படம். மொக்கையாகத்தான் இருந்தது. ஆனாலும், கடைசியில் வரும் 'ராமசாமி' பாத்திரம், அதற்காகவே ரசித்து சிரிக்கலாம். அதுவரை சற்றே பொறுமையாக பார்க்க வேண்டுகிறேன்.



மீண்டும் ஒரு விளம்பர இடைவேளை.

சமீபத்தில் வந்த காப்பீட்டு விளம்பரம். ஹிந்தியில்தால் பாடல் எனக்கு ரசிக்கும்படி உள்ளது. ஆண்கள் பற்றிய, ஒரு மிக நல்ல விளம்பரம். 



மீண்டும் நிகழ்ச்சிக்கு போவோமா?

Pastense:

இந்தப் படத்தைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. சிறு குறிப்பு மட்டும்தான். இதை ஒரு அழுகாட்சிக் காவியமாகாக் கூட எடுத்திருக்கலாம், ஆனால், கடைசி வரை நகைச்சுவை இழையோடும். கவனியுங்கள்.



"இப்படியே போனா பந்து கடைதான் வைக்கணும்", "என்னது, தேங்கா பேசுது?", "டேய் ஊறுகா சப்பி" இவை முதலிரண்டு நிமிடங்களில் வரும் வசனங்கள்.. கவனித்தீர்களா?

இவை இரண்டும் குறும் படங்கள் அல்ல. ஆனால், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு முதன் முதலில் வந்த விளம்பரங்கள். அட்டகாசம். இப்போது பார்க்கும்போதுதான் ஏன் அந்த இரண்டாவது விளம்பரம் என்று தெரிகிறது. முதல் காணொளியில், கடைசியாக வரும் சிறுவனின் பாவனைகள்.. ப்பா!!







ஆனால் ஒரு சந்தேகம். இதில் வரும் யாருமே படத்தில் வரவில்லையே, ஏன்? என்னாச்சு?!!!

இதே போல இன்னும் நிறைய (ஓரளவு தேர்ந்தெடுக்கப்பட்ட) திரைப்படங்களை சுரேஷ் குமாரின் இந்த அடையாளத்திலும், இந்தப் பதிவிலும் காணலாம். சும்மா.. மக்களுக்கு நாலு நல்லப் படத்தைப் பத்தி சொல்லலாமுன்னு வந்தேன்.. அம்புட்டுதேன்.. (பதிவு கணக்குல ஒன்னு சேத்துக்கப்பு)