Tuesday, December 30, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

எப்படியோ இன்னொரு வருடமும் ஓடிப்போய் விட்டது. போன வருடத்தை விட இந்த வருடம் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இருந்தாலும், மாதம் ஒன்று என்ற கணக்கு வந்து விட்டது.

பதிவு ஆரம்பித்து 7 வருடங்கள் ஆகி விட்டது. 50 பதிவுகள் போட 5 வருடங்கள் ஆனது. அடுத்த இரண்டு வருடங்களில் ஓரளவு எண்ணிக்கையை கூட்டி விட்டேன். அடுத்த வருடத்தில் 100ஐ தொட லட்சியம். 90 நிச்சயம்.

வாழ்க்கையில் பெரிதாக மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. சொந்த வீட்டிற்கு மாறினேன். அவ்வளவுதான். "எவ்ளோ சந்தோசமான விஷயம், இவ்ளோ சோகமா சொல்றியே" என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

இந்த வருடம் என்னென்ன செய்ய வேண்டும். குழந்தைக்கு இரண்டரை வயது ஆகப்போகிறது. பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விசாரிக்க ஆரம்பித்தால், கண்ணைக் கட்டுகிறது. அபியும் நானும், குங்குமப் போட்டு கவுண்டர் படங்களில் வருவதெல்லாம் வெறும் துளிகள்தான். உண்மையில் அது ஒரு கடல். நான் பதினாறு வருடங்கள் படித்த படிப்புக்கான செலவு, என் மகளின் ஒரு வருடத்திற்கு பத்தாது.

முன்பெல்லாம் குழந்தை என்பது ஒரு வரம். இப்போதெல்லாம் குழந்தை என்பது ஒரு பொருள். மற்றவர்கள் முன்பு "பாத்தியா என்னொடத, எவ்ளோ சூப்பரா இருக்கு. சூப்பர் சிங்கர், ஸ்கூல் டாப்பர், மெடிக்கல் சீட்டு புக் பண்ணியிருக்கேன்" என்று அளவில் உள்ளது. குழந்தையை நாம் குழந்தையாக பார்த்தாலும், நம்மை சுற்றியுள்ளவர்கள் அதை மாற்றி விடுகிறார்கள்.

சரி விடுங்கள். அனைவருக்கும் 2014 மங்களகரமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். வரும் ஆண்டு இன்னும் வளமாகவும், செழிப்பாகவும் இருக்கும் என வாழ்த்துகிறேன். போன ஆணைப் பற்றி என்ன கூறலாம்? போன வருடம் போட்டது போலவே விருதுகள் தரலாமா? இல்ல இப்படியே இழுத்து மூடலாமா? பதிவு சின்னதா இருக்கே? ஏதாவது மொக்கைய போடுவோம்.

பிடித்த படங்கள்:

ஆரம்பத்தில் ஜில்லா, வீரம் என்று மொக்கையாக ஆரம்பித்தாலும், வழக்கம் போல நாம் எதிர் பார்க்காத படங்களே நம் மனதைக் கவரும். அந்த வகையில் என்னைக் கவர்ந்த அந்த படங்கள்,

தெகிடி
யாமிருக்க பயமே
பூவரசம் பீப்பி
சதுரங்க வேட்டை
சலீம்
திருடன் போலிஸ்
வேலையில்லா பட்டதாரி (சிறப்பு இடம்)
செவன்த் டே (மலையாளம்)

இவைகளில் பாதிக்கு மேல், நான் திருட்டுத்தனமாக பார்த்தவைதான். சொல்ல வெட்கமாகத்தான் உள்ளது. உண்மையில் கத்தி, அஞ்சான், லிங்கா படங்களைப் போய் பார்த்ததற்கு பதில், இவைகளில் அனைத்தையும் பார்த்திருக்கலாம். ஆனால், நன்றாக உள்ளது என தெரிவதற்குள் படம் ஒரு காட்சியாக மாற்றப்படுகிறது. எப்படியாவது போக வேண்டும் என்று நினைப்பததற்குள் தூக்கப்படுகிறது. இது ஒரு நொண்டி சாக்குதான் என்றாலும், இதுதான் உண்மை. இனிமேல், இந்த தவறுகளை குறைத்துக்கொள்ள எண்ணியுள்ளேன். இந்த மாத கடைசியில் வந்த சில படங்கள் பார்க்கவில்லை.

இன்னொரு சொல்ல வெட்கப்பட வேண்டிய விஷயம், ஒரு உருப்படியான புத்தகத்தையும் படிக்கவில்லை. இதற்கு முன்பு மட்டும் ஒன்றும் கிழிக்கவில்லை என்றாலும், ஏதாவது ஒரு கதைப்புத்தமாவது படிப்பேன். இந்த வருடம் சுத்தம். அவ்வப்போது பயணங்களில் ஆனந்த விகடன் படித்ததோடு சரி. இந்த சேத்தன் பகத்தின் அனைத்து கதைகளையும் படித்துள்ளேன். இந்த சமீபத்திய கதை 'Half Girl Friend' இன்னும் படிக்கவில்லை.

அது கூட பரவாயில்லை. ஒரு முழுமையான தமிழ் புத்தகம் கூட படிக்கவில்லை. இத்தனைக்கும், ஊரில், என் வீட்டின் அருகேயே நூலகம் உள்ளது. ஒரு காலத்தில், அதே நூலகத்தில், எந்த புத்தம் எங்கே இருக்கும் என எனக்கு மட்டும்தான் தெரியும். நான்தான் அங்கே தொகுப்பு வாரியாகவும், ஆசிரியர் வாரியாகவும் அடுக்கியே வைப்பேன். எந்த புத்தகமாக இருந்தாலும், முதலில் நான்தான் படிப்பேன், குறைந்தது இரண்டு பக்கங்களாவது, அதை என்ன தொகுப்பில் வைப்பது என்று. சிறுகதைகளோ, நாவல்களோ முழுதும் படித்த பின்தான் அது நூலகமே போய்ச் சேரும். அது ஒரு காலம்.

ஒரு விளம்பரம்: நான் தமிழ் படிக்கும் வேகம் மிக அதிகம். எப்படி என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை. நண்பர்களே "நீ படிக்கிறியா இல்ல சும்மா பாக்குறியா" என்றுதான் கேட்பார்கள். இன்னொரு காரணமும் உண்டு, ஒரு புத்தகம் ஒரே மூச்சில் படித்து விட்டு திரும்ப யாரிடமாவது கொடுத்தால் "என்னாச்சு, புடிக்கலையா, அதுக்குள்ள கொடுத்திட்ட" என்று (அனைவருமே) கேட்பார்கள்.

"சரி, இப்ப என்ன அடுத்த வருஷம் படிச்சு கிழிக்க போறியா" என்று கேட்டால், இல்லை. ஆனால் மகளுக்கு எப்படியாவது மடிக்கணினி, கைப்பேசியை விட மதிப்பு வாய்ந்தது புத்தகங்கள்தான் என உணர வைக்க வேண்டும். இரண்டு வயது குழந்தைதான். கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைப்பேன். கண்டிப்பாக அவளிடம் இருந்து, நான் மீண்டும் படிக்க கற்றுகொள்வேன் என நம்புகிறேன். நம்பிக்கைதான வாழ்க்கை.

அனைவருக்கும் அனைத்தும் சிறக்க வாழ்த்துக்கள்!

Saturday, December 13, 2014

லிங்கா: அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல

முன் குறிப்பு, முக்கிய குறிப்பு: நான் ரஜினி ரசிகன் அல்ல. கொஞ்சம் சொந்தக்கதையும் உள்ளது. மொக்கையான பதிவு.அஞ்சான் பார்த்து நோஞ்சான் ஆனதால், இந்த முறை முன் பதிவு செய்யவில்லை. வெள்ளியன்று படம் பார்த்து விட்டு, சமூக வலைத்தளங்களும், நமது பதிவர்களும் கொடுத்த விமர்சனங்களில் இருந்து முதலுக்கு மோசமில்லை என்று முடிவு செய்து காலைக்காட்சிக்கு முன் பதிவு செய்தேன். 

நான் மட்டும் என்பதால், ஒரே ஒரு டிக்கட், வேளச்சேரி லுக்சில் கிடைத்தது. காலை 7:45க்கு படம். எனவே, 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். சீக்கிரம் கிளம்பி, நண்பன் வீட்டில் வண்டியை விட வேண்டும் (இல்லேன்னா 100 ரூவா அழனும்) என்றெல்லாம் எண்ணிக்கொண்டே, அலாரம் வைக்காமல் தூங்கி விட்டேன். எழுந்து பார்த்தால் மணி 6:45. அவசர அவசரமாக ஹீட்டர் போட்டு காத்திருந்தால், அது என்ன பிரச்சினையோ சுடு தண்ணீர் வரவில்லை. அவசர அவசரமாக அடுப்பில் வைத்து, குளித்து கீழே வந்தால், பேய் மழை. என்னடா இது சோதனை என்று கவசங்களை அணிந்து, கிளம்பி, வேறு வழியில்லாமல் நேராக தியேட்டருக்கே வந்து விட்டேன். 

150, அதோட இன்னொரு 100. கவுண்டமணி போல 'என் பணத்துக்கு வொர்த்தா இருக்கும்' என்று நம்பி உள்ளே போனேன். நான் உள்ளே போகும்போதே கால்மணி நேரம் தாமதம். ரஜினி அறிமுகப் பாடல் முடிந்து, அனுஷ்காவே வந்து விட்டார். அப்படி ஒன்னும் முக்கியமான காட்சி முடிந்திருக்காது என்று தெரியும் என்பதால், பொறுமையாய் போய் அமர்ந்தேன்.

கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எல்லா ரஜினி படம் போலவே, பெரிய ரஜினி மக்களுக்கு அணை கட்டி நல்லது செய்து சொத்துக்களை இழந்து, ஊர் மக்களால் அனாதையாக்கி துரத்தப்படுகிறார். பொதுவாக மகன் ரஜினி வந்து அவப்பெயரை துடைப்பார். ஆனால், இதில் பேரனின் பெயர் உள்ளதால், பேரனாக வந்து தாத்தாவின் களங்கத்தைத் துடைக்கிறார். 

பொதுவான ரஜினி படங்களின் எல்லா மசாலாக்களும் இதில் உள்ளது. ஆனால், இந்தப் படத்தில் ரஜினிக்கு சரியான எதிரியே இல்லை. தாத்தா ரஜினிக்கு எதிரியாக வரும் ஆங்கிலேயரை, அவரது மனைவியே திருத்துகிறார். பேரன் ரஜினிக்கு "யாரையாவது வில்லனாக்கனுமே?" என்று யோசித்து, வழக்கம் போல ஊரில் உள்ள ஒரு அரசியல்வாதியை வில்லன் ஆக்கி விட்டார்கள். 

முதலில் பாராட்டப்பட வேண்டியது இயக்குனர்தான். இந்த குறைந்த காலத்தில், இத்தனை நடிகர்களைக் கொண்டு பிரம்மாண்டமான காட்சிகளை எடுத்துள்ளார். அதிலும் அந்த அணை கட்டும் காட்சிகள், பிரமாதம். என்னதான் பணம் நிறையக் கொடுத்தாலும், அதற்கேற்றார்போல வேளை நடக்க வேண்டுமே. ரவிக்குமார் நடத்தியிருக்கிறார். அதே போல, ஓரளவு நல்ல கதை, திரைக்கதையை பக்காவாக தயார் செய்யவெல்லாம் நேரமில்லை, அதான் ரஜினி இருக்காரே என்று துணிந்து இறங்கி உள்ளனர். அதனால்தான், முதலில் அவரை திட்டவும் வேண்டி உள்ளது. 

படத்தின் இடைவேளை வரும்போதுதான் "என்னாது, இப்போதான் இடைவேளையா?" என்று தோன்றியது. அதன் பின் ஓரளவு பரவாயில்லாமல் போனாலும், மீண்டும் இறுதியில் சலிக்க ஆரம்பித்து விட்டது. அதுவும் இறுதி சண்டைக்காட்சிகளில் ரஜினி ரசிகர்களே நக்கலாக சிரிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு அபாரம். இசை பரவாயில்லை. பொதுவாக ரஹ்மான் ரஜினிக்காக கொடுக்கும் பின்னணி இசை எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும். எந்திரனில் கெட்ட சிட்டிக்கு வரும் இசை, சிவாஜியில் சிங்கப்பாதையை தேர்ந்து எடுத்தவுடன் வரும் இசை, மொட்டை ரஜினிக்கு வரும் இசை, முத்துவில் ராதாரவி வரும்போது வரும் பின்னணி என நான் தேர்ந்தெடுத்து கேட்பவை நிறைய. இதில் அப்படி சொல்வது போல, இப்போது தெரியவில்லை. ஆனாலும், டிரைலரில் வரும் இசையும், ரயில் சண்டைக்காட்சியில் வரும் இசையும் அபாரம்.1939ம் ஆண்டு காட்சிகளுக்காக ரொம்பவெல்லாம் கஷ்டப்படாமல் எடுத்திருக்கிறார்கள். மொபைல் போன் காண்பிக்கவில்லை, நாயகிக்கு ரவிக்கை இல்லை. ஒரு பழைய கார். கொஞ்சம் வெள்ளைக்காரங்க. ரஜினி எப்பவும் கோட்டு சூட்டு. சுதந்திரத்திற்கு முன்னால், என்பதால், சுதந்திரத்திற்காக போராடுகிறோம் என்று ஒரு சண்டை, அவ்ளோதான். ஆனால், அந்தக் கதையை மட்டுமே, இன்னுமொரு வலுவான வில்லன் பாத்திரம் சேர்த்து படமாக எடுத்திருக்கலாம். படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மற்றபடி, நான் செலவு செய்த 250ரூபாய்க்கு, இந்தப் படம் எனக்கு திருப்தியைத் தரவில்லை. படத்தில், தாத்தா ரஜினி வரும் வரை கூக்குரல் இட்ட ரசிகர்கள் கூட, இடைவேளைக்கு பிறகு அடங்கி விட்டனர். நான் புக் செய்யும்போது, நாந்தான் கடைசி இடம். ஆனால், படம் பார்க்க வந்த பொது பாதிக்கு மேல் காலியாகத்தான் இருந்தது. இதற்கு கண்டிப்பாக மழை மட்டுமே காரணம் இல்லை என்று நான் நினைக்கிறேன். .

தமிழில் சூப்பர் ஹீரோ படங்களே இல்லை. ரஜினி நடிக்கும் (வரும்?) எல்லாப் படங்களுமே சூப்பர் ஹீரோ படம்தான். அதில் என்ன லாஜிக் மீறல் இருந்தாலும், ரஜினியால் அதை செய்ய முடியும் என்று மறந்து விடுவோம். அதே போலத்தான் இந்தப் படமும் எனலாம், இன்னும் சற்று பட்டை தீட்டி இருந்தால்.

படம் முடிந்த உடனே மனதில் தோன்றியவை: 

பென்னி குயிக் தனது சொத்துக்களை விற்று அணை கட்டினார். இவர்களோ, அவர்கள் சம்பாதிக்க அதைப்பற்றி படம் எடுத்து, அவருக்கும் கெட்டப் பெயரை உண்டாக்கி, பணம் சம்பாதிக்கிறார்களே? (பக்கத்தில் உட்கார்திருந்த ஒருவர் பேசியது, "ஏ மச்சி, ஒரு வேளை அந்த முல்லை பெரியாறு அணையையும் நம்மாளுதான் எவனாவது கட்டியிருப்பானோ?", அதற்கு பதில் "ச்சே ச்சே, அப்படி இருந்தா அது இன்னும் இவ்ளோ நல்லா இருக்குமா").

ரஜினி படம் பார்ப்பதற்கு பதிலாக 'ர' படம் பார்க்க போயிருக்கலாமோ?

சில கேள்விகள்:

"எங்களுக்கு எதுவும் தேவையில்லை. ரஜினி வந்தால் மட்டும் போதும்" என்றுதானே ரசிகர்கள் நினைக்கிறார்கள். அப்புறம் ஏன் தேவையில்லாமல் இரண்டு நாயகிகள், தேவையில்லாத பாடல்கள். என்னதான் படம் என்றாலும், ரஜினி நாயகிகளுடன் கொஞ்சும்போது, எனக்கே ஒரு மாதிரி இருக்கிறது. ஏன், திரைக்கதையில் அவர்களை திணித்து உள்ளீர்கள்? தாத்தா ரஜினி ஏற்கனேவே திருமணம் ஆகியுள்ளவர் போலவும், அனுஷ்கா பாத்திரத்தை ஆண் பாத்திரமாகவும் வைத்திருக்கலாமே? என்னுடைய கேள்விக்குக் காரணம், ரஜினி கொடுத்த பேட்டிதான்.

மக்களுக்கு தேவை ரஜினி திரையில் ஆட வேண்டும், அடிக்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக இருபது வயது பெண்ணுடனும், ஐஸ்வர்யா ராயுடனும்தான் ஆட வேண்டும் என்று யாரும் எதிர் பார்ப்பதில்லை. (இது கமலுக்கும்தான்)

ரஜினியைப் பிடிக்காதவர்கள் ரஜினி அமிதாப் போல நடிக்க வேண்டும் என்று கூறுவது மேற்கூறிய காரணத்திற்காக மட்டுமே. ரஜினி மட்டும் ஜோடி இல்லாமல், ஒரு முழு நீள அதிரடிப் படத்தில் நடிக்கட்டுமே, கண்டிப்பாக இப்படி சொல்லியவர்கள் வாயை மூடுவார்கள். நானும்தான்.