Friday, December 7, 2007

இளையராஜாவும் நானும்

அனைவரும் நலமா? முதலில் வணக்கம் வைத்தாகி விட்டது. அடுத்து என்ன எழுத? கடவுளைப் பற்றி எழுதலாம் என்றால் நமக்கோ நம்பிக்கை இல்லை. எதையாவது எழுதி வீணாக அடி வாங்குவானேன்? எனவே, இசைக் கடவுளைப் பற்றி எழுதலாம் என்றுள்ளேன்.

10ம் வகுப்பு வரை அனைத்து பாடல்களையும் சும்மா கேட்டுக்கொண்டிருப்பேன். அனுபவித்தேனே தவிர ஆராயவில்லை. அப்போது வீட்டில் வெறும் ரேடியோ மட்டும்தான். திருச்சி மற்றும் இலங்கை நிலையங்கள் கேட்பேன். 11ம் வகுப்பு படிக்கும்போது சிங்கபூரிலிருந்த உறவினர் 'Philips 2 in 1' கொடுத்தார். அதற்கு பிறகுதான் ஒலி நாடாக்கள் வாங்க ஆரம்பித்தேன். வீட்டில் கொடுக்கும் பணத்தில் எல்லாம் வாங்க முடியாது. என் நண்பன் (பெரியம்மா பையன். 3 வயது பெரியவன்) 'மோகன் ஹிட்ஸ்', 'ரஜினி ஹிட்ஸ்', 'கமல் ஹிட்ஸ்' என்று வாங்க சொன்னான். அவன் சொன்ன காரணம், ஒரு படத்தின் ஒலி நாடாவில் நமக்கு பிடித்த பாடல் ஒன்றோ, இரண்டோதான் இருக்கும். அதற்கு பதிலாக இது போல வாங்கினால் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும். சரி, வயதில் பெரியவன் சொல்கிறானே என்று என்று நானும் நம்பி வாங்கினேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. கேட்க கேட்க இனிமையாக இருக்க, விவரங்களை தேடினேன். அதன் பிறகுதான் இளையராஜா எனக்கு மிகவும் நெருக்கமானார்.

கல்லூரிக்கு வந்த பின்பு, முதல் வருடம் மீண்டும் வானொலி மட்டும்தான். அப்போது கூட இளையராஜா என்ற பெயர் கேட்டால் கவனம் பாடல் மீதுதான். இரண்டாம் வருடம், எனது நண்பன் கணினி வாங்கி விட்டான். வழக்கம் போல அனைத்து பாடல்களும் இறக்கப்பட்டன. நான் இளையராஜா பாடல்கள் மட்டும் கேட்பேன். கொஞ்சம் கொஞ்சமாக பின்னணி இசையையும் உணர ஆரம்பித்தேன். ராஜா என்னுள் முழுமையாக இறங்கி விட்டார்.

இன்று வரை மட்டுமல்ல, நான் இறக்கும் வரை ராஜாவைத் தவிர வேறு யாரும் என் மனதை கவர மாட்டார்கள்.