Friday, September 21, 2018

திரை விமர்சனம்

நேரடியாக போய் விடலாம். 

கடைக்குட்டி சிங்கம்:


அருமையான குடும்பப் படம். சில இடங்களில் நாடகத்தனம் இருந்தாலும், கண்டிப்பாக ரசிக்கக்கூடிய படம்தான். கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். 5 பெண்களுக்கு பிறகு பிறக்கும் ஆண், அவனுக்காகவே வளர்ந்து நிற்கும் இரு அக்கா மகள்கள், பையனுக்கோ வெளியிலே காதல், இதனால் ஏற்படும் குடும்ப சிக்கல்கள், நடுவே ஒரு ஆணவக்கொலை வேறு. கடைசியில் எப்படி சுபமாக முடிக்கிறார் நாயகன் என்பதே கதை. 

நான் ஒரே பையன்தான். ஆனால், மிக நெருங்கிய சொந்தக்காரர் ஒருவருக்கு கிட்டத்தட்ட இந்த படத்தில் வந்த நிலைதான். தனது மகளைக் கட்ட வேண்டும், சொந்தம் விட்டுப் போக கூடாது என அக்காவும், அம்மாவும் இருக்க, இவரோ மறுக்க, பெரிய பஞ்சாயத்து. ஒரு வழியாக சமாதானம் ஆகி, வேறு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து முடித்திருந்தாலும், இன்னும் சுபம் ஆகவில்லை. யாரையாவது பலிகடா ஆக வேண்டும் என்ற நிலையில் என் தலை கூட வெட்டப்பட இருந்தது. அந்த ஒரு காரணமே என்னால் படத்துடன் ஒன்ற முடிந்தது. 

அது ஏன் தேவையே இல்லாமல் நிறைய படங்களில் இரு மனைவிகளை படத்தில் கொண்டு வருகிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் கூட ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போகும் பாத்திரம் என்பதால் ஒத்துக் கொண்டாலும், சுந்தர பாண்டியன், கோலி சோடா படத்திலும் தேவையே இல்லாத இரு மனைவிகள் பாத்திரம். குடும்பத்துடன் முகம் சுழிக்க வைக்காமல் ரசித்து பார்க்கலாம். 

விஸ்வரூபம் 2:


விஸ்வரூபம் முதல் பாகத்திலேயே, அடுத்தது நட்டுக்கொள்ளும் என்று தெரிந்து விட்டது. அடுத்த ஒரு வருடத்திற்குள் வந்திருந்தால் கூட ஓரளவு வெற்றி பெற்றிருக்கும். இப்போது அரசியலில் வேறு இறங்க போவதால் மக்கள் நிறைய எதிர் பார்த்திருப்பார்கள். பொறுத்திருந்து இந்தியன் 2 வந்த பிறகு வெளி விட்டிருக்கலாம். படம் பார்த்த பிறகு தோன்றியது 'விஸ்வரூபம் 1 பார்த்து விட்டு சிலிர்த்து போய் சில்லையெல்லாம் வீசி எறிஞ்சேன், பெரிய பதிவெல்லாம் வேற போட்டேன். 

பாதிக்கு மேல் பழைய படத்தில் வந்த காட்சிகள். மீதி கூட படத்தொகுப்பின் மிச்சம் மீதி இருந்த காட்சிகள் என்று தெளிவாக தெரிகிறது. கடைசி சண்டை கூட போன படத்தின் இறுதியில் சும்மா காண்பிப்பார்கள். அம்மா, ராணுவம், கொஞ்சம் லண்டன் காட்சிகள் மட்டும் புதிது. பேசாமல் கமல் இணையத்திலேயே விட்டுருக்கலாம். கோவணமும், கொஞ்ச நஞ்ச மானமுமாவது மிஞ்சியிருக்கும். குறைந்தது புதுமை (போன முறை சொன்ன D2H போல) என்றாவது சொல்லி இருக்கலாம். இந்தியனுக்காகவும், நாயுடுக்காகவும் காத்திருக்கிறேன்.' 

மேற்கு தொடர்ச்சி மலை:


எந்த பொருளுமே கொஞ்சமாவது கலப்படம் இருந்தால்தான் நன்றாக இருக்கும். தங்கத்தில் செம்பு போல. அப்படியே இருந்தால் கொஞ்சம் கஷ்டம். இந்தப் படத்தில் அதுதான் நடந்துள்ளது. நம்முடைய வாழ்க்கையை படமாக எடுத்தால் நன்றாக இருக்குமா? நாமே பார்க்க மாட்டோம். 

முதல் 30 நிமிடங்கள் ஊர் சுற்றிக் காண்பிக்கிறார்கள். படத்தில் எல்லோரும் நாயகனுக்கு நன்மையே செய்கிறார்கள். இயற்கையான மனிதர்கள் என்பதால் நடிப்பு இயல்பாக இல்லை. நிறைய நாடகத்தன்மை அதனாலேயே வந்து விட்டது. குறிப்பாக ஒரு காட்சி, முதலாளியிடம் ஏலக்காய் மூட்டை கணக்குப்பிள்ளை கேட்கும் காட்சி. என்னதான் இருந்தாலும், இப்படியும் இன்னும் இது போல மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை சொன்ன விதத்தில் படம் வெற்றி பெற்றுள்ளது. 

வர வர இளையராஜாவும் இசையை சுருக்கி விட்டார். பாடல்களும் படத்துடன் பார்க்க, கேட்க நன்றாக உள்ளது. சில சமயங்களில், மேற்கு தொடர்ச்சி மலை படங்களில் மொத்த பின்னணி இசை 15 நிமிடங்கள் கூட இருக்காது. ஆனாலும், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. இயல்பான பின்னணி இசையை நிறைய கொடுத்து விட்டார். மற்ற காதல் படங்களில் எல்லாம் (திருவாசகம் உட்பட) ஸிம்போனி இசை போல மாதா கோயில் மணி ஓசையும், 'ஓஓஓஓஓ' என்று வெளிநாட்டுக்காரர்கள் பாடுவதும் வேறு நிறைய வரும். மிஷ்கினின் சைக்கோவை எதிர்பார்க்கிறேன். மீண்டும் ஒரு நூறாவது நாள், 24 மணி நேரம் போல இருக்க வேண்டும். 

Memoir of a Murderer (கொரியன்):


முன்பெல்லாம் நிறைய உலகப்பட விமர்சகர்கள் இருந்தார்கள். ஆங்கிலம் தவிர கொரியா, ஜப்பான், மொழிப்படங்கள் பற்றி நிறைய பதிவுகள் வரும். நாமும் அதில் கொஞ்சம் பொறுக்கி எடுத்துக் பார்ப்போம். இப்போதெல்லாம் யாரும் கொரியப் படங்கள் பற்றி எழுதுவதில்லை. நாமும் சரி எதையாவது பார்த்து சொல்லலாம் என்றால், நமக்கென்று சரியாக அமையவேயில்லை. கடைசியாக தேறியது இதுதான். 

சிறு வயதில் தந்தையின் கொடுமையால் பாதிக்கப்பட்டு, அவரை முதல்கோலை செய்யும் ஒருவன், அதன் பிறகு அந்நியன் போல சமூகத்தில் இருக்கும் தவறான மனிதர்களை தொடர்ச்சியாக கொலை செய்கிறான். ஒரு முறை ஒரு விபத்து நடக்க, அதன் பின் தன மகளுக்காக சாதாரண மனிதனாக வாழ்கிறான். 15 வருடங்கள் கழித்து மறதி நோய் பாதிக்கிறது. அடிக்கடி தான் யார், எங்கே இருக்கிறேன் என்பதையே மறந்து, எங்கேயாவது போய் விடுகிறான். 

அதே நேரம் மீண்டும் தொடர்ச்சியாக கொலைகள் மீண்டும் நடக்கின்றன. அவனுக்கே, தான்தான் அந்தக் கொலைகளை செய்கிறோமோ என்ற குழப்பம், மகளின் காதலனான ஒரு காவலனின் மீது சந்தேகம், கடைசியாக இதில் தன் மகளே கொல்லப்பட போகிறாள் என்பதையும் உணர்கிறான். யார் உண்மையான கொலைகாரன், மகளை காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதே படம். 

உண்மையில் அட்டகாசமான உருவாக்கம். ஒரு காட்சி கூட தேவையின்றி இல்லை. முதல் காட்சியில் குனிந்து தனது வெள்ளைக் காலணியை பார்ப்பது கூட ஒரு காரணம் உண்டு. 

தமிழிலும் கூட மறதியை வைத்து படங்கள் வருகிறதே.

கஜினிகாந்த் - யப்பா முடியலடா சாமி.

60 வயது மாநிறம் - கன்னடத்தில் (கோதி பண்ணா சாதாரண மைக்கட்டு) ஏற்கனவே பார்த்து விட்டேன். முடிந்தவரை அதன் அசலை பார்த்து விடுவது. பிற்பாடு நேரம் போகவில்லை என்றால் நகலை பார்ப்பது. அதனால் தமிழில் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.

இத்தனைக்கும் ராதாமோகன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர், இளையராஜாவும் கூட இருக்கிறார். ஆனாலும் மொழி மாற்றுப் படங்களின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை. கஜினிகாந்த் கூட தெலுங்கில் பார்த்தேன். தமிழில் நகைச்சுவை நன்றாக இருக்குமோ (வானம் படம் போல) என்று நினைத்தேன். ஆனால் இல்லை.

U-Turn கூட ஏற்கனவே கன்னடத்தில் பார்த்து விட்டேன். 

பியார் பிரேமா காதல், ஒன்றும் சொல்வதற்கில்லை. 90களில் பிறந்தவர்களுக்கே அந்தப் படம் பார்க்க தகுதி இல்லையாம். நானெல்லாம் 80களின் ஆரம்பம். அப்புறம் எப்படி. 

RX 100 (தெலுங்கு):


மறுபடியும் ஒரு மொக்கை காதல் கதையா (ஊர் சுற்றும் நாயகன், பண்ணையார் வீட்டு நாயகி, காதலுக்கு எதிர்ப்பு) என்று சலிப்படைந்து தருணத்தில், படத்தில் வந்த அந்த திருப்பம். நாடோடிகள் படத்திலும் அதுதான் நினைத்தேன், அதற்கு மாறாக நடந்தது. இருந்தாலும், தலைப்பிற்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஒரே ஒரு இடத்தில, நீ இல்லாமல் நான் என் பைக்குடன் பேசிக்கொண்டு நாட்களை கடத்தினேன் என்கிறான் நாயகன். அவ்வளவுதான். அதை எரித்ததற்கு கூட ஒரு எதிர் வினையும் இல்லை. நம்ம செந்தூரப்பூவே ராம்கி கூட உள்ளார். 

இப்போதெல்லாம் பாலிவுட், ஹாலிவுட் அளவிற்கு போய் விட்டது. தெலுங்கு மற்றும் தமிழ்ப்படங்கள் பாலிவுட் அளவிற்கு வந்துள்ளன. எப்படி என்றால், ஹிந்திப்படங்களில் தேவையற்ற நிர்வாண, பாலுறவு காட்சிகள். நம்மூரில் முத்தம், முத்தம் முத்தம். அப்படி என்ன கதைக்கு தேவை என்று இதுவரை எனக்கு புரியவில்லை. அர்ஜுன் ரெட்டி, RX100 படங்களை என்ன தைரியத்தில் நம்மூரில் எடுக்கிறார்கள் என்று புரியவில்லை. சரி கலைக்கண்ணோடு பார்ப்போம்.

அர்ஜுன் ரெட்டி படத்தில், நாயகியின் தம்பியிடம் நாயகன், "நான் அர்ஜுன்" என்பான். அவன் உடனே " அர்ஜுன் what?" என்று கேட்பான். நம்மூரில் அப்படியா? "அப்புறம் தம்பி அப்பா அம்மா என்ன செய்யுறாங்க, எந்த கோயிலுக்கு போறீங்க" என்று போகும். பாலா எப்படி எடுத்திருக்கிறார் என்று பார்ப்போம். அவருக்கு பரோட்டாவிலேயே கொத்து பரோட்டாதான் பிடிக்கும். இதில் எப்படி கொத்தி இருக்கிறார் என்று பார்ப்போம். 

ஷூட்டர் - Shooter (ஆங்கிலம்):


உரிமை கீதம் என்றொரு படம். பிரபு, கார்த்திக் நடித்தது. RV உதயகுமாரின் முதல் படம். அதில் ஏழையான பிரபுவிடம் பணம் கொடுத்து ஒரு அரசியல்வாதியை பொதுக்கூட்டத்தில் கொல்வது போல நடிக்க சொல்வார்கள். கேட்டால், அப்போதுதான் அவர் மீது பரிதாபம் வரும், உனக்கும் எதுவும் ஆகாது என்பார்கள். பார்த்தால் நிஜமாகவே அவரை யாரோ சுட்டு விட, பழி பிரபு மீது விழும்.அந்த அரசியல்வாதியின் மகனாக கார்த்திக். இருவரும் எப்படி கெட்டவர்களை பழி வாங்குகிறார்கள் என்பதுதான் கதை. 


இந்தப் படத்தில் நண்பன் இறந்ததால், ராணுவத்தில் இருந்து வெளியேறும் நாயகன் (எவ்வளவு தூரத்திலும் சரியாக குறி பார்த்து சூடுபவன் - Sniper/Shooter). அவனிடம் அமெரிக்க ஜனாதிபதியை கொல்ல போவதாக தகவல் வந்துள்ளது எனவும், என்னென்ன வழிகள் இருக்கும் என கண்ணுட் பிடித்தும் சொல்ல சொல்வார்கள். அதே போல செய்தால், அதை வைத்து ஒரு கொலை செய்து பழியை நாயகன் மேலே போட்டு விடுவார்கள். இதை ஒரு அப்பிராணி FBI கண்டு பிடித்து விட, அவரையும் கொல்ல துரத்துகிறார்கள். எப்படி தப்பிக்கிறார்கள், பழி வாங்கினார்கள் என்பதுதான் படம். பரவாயில்லை. பார்க்கலாம். 

The Jackal (ஆங்கிலம்):


இதுவும் ஒரு வகை எலி பூனை கதைதான். எனக்கென்னவோ எலி பூனை என்பதை விட பாம்பு கீரி என்று சொல்லலாம் என நினைக்கிறேன். ரஷ்யாவில் ஒரு தீவிரவாதி தலைவனின் தம்பியை அமெரிக்கா, ரஷ்யா அதிகாரிகள் இணைந்து கொன்று விட, அதற்கு பதிலாக அமெரிக்காவின் ஒரு பெரிய மனிதரைக் கொல்ல சொல்லி அந்த தீவிரவாத தலைவன் ஒரு கூலிப்படை ஆளை அமர்த்துகிறான். இதை மோப்பம் பிடிக்கும் அரசு, அவனை பிடிக்க சிறையில் உள்ள ஒரு குற்றவாளியின் உதவியை நாடுகிறது. அவர்கள் இருவருக்கும் இடையே வேறு ஒரு பழைய கணக்கு உள்ளது. இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதே படம்.

அவ்வளவுதாங்க.    

Thursday, September 6, 2018

கலைஞர் கருணாநிதி முதல் கருணாநிதி வரை!

கருணாநிதி மறைவு செய்தி வந்தவுடனே, இணையத்தில் இரு பிரிவுகளின் மோதல் ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டை பிடித்த சாபம் போய் விட்டது என ஒரு பிரிவு, இனி தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என இன்னொரு பிரிவு. கருணாநிதி அவ்வளவு முக்கியமாக தமிழகத்துக்கு இருந்தாரா, என்னுடைய பார்வையில் இந்த பதிவு. என்னுடைய கேள்வி அறிவை வைத்தே இந்த பதிவு. ஏதேனும் தவறு இருந்தால், கருத்திடவும். திருத்திக்கொள்கிறேன். 


பொதுவாக, ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறதா என்றால், முதலிடம் என்று சொல்ல முடியா விட்டாலும், முதல் 5 இடங்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். இதற்கு அடித்தளம் இட்டவர்கள் இரண்டு பேர். பெரியார் மற்றும் காமராஜர். 

முதலாமர், எல்லோருக்கும் கல்வி வேண்டும், அனைவரும் சமமாக கல்வி கற்க வேண்டும் என்று சொன்னவர். இரண்டாமவர், நிறைய பள்ளிகளைத் திறந்தவர், மதிய உணவு போட்டவர். இன்றைய 30 வயதிற்குள் உள்ள இளைய தலைமுறையினரே, உங்களது பெற்றோரின் ஆசிரியர்கள் அல்லது உங்களது தாத்தா படித்தவராக இருந்தால் அவர்களிடம் கேளுங்கள், அதிலும் பெண்கள் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள். இவர்களது அருமையை சொல்வார்கள். எனக்கு இவர்கள் பற்றி முழுமையாக தெரிய வைத்தது என் அம்மாவும், என் அத்தையும்

காமராஜருக்குப் பிறகு அண்ணா. அவர் எதையும் பெரியதாக செய்வதற்கு முன்பே இறந்து விட்டார். அதன் பிறகு தமிழகத்தை ஆண்டது 3 பேர்தான். அதில் தமிழகம் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளது. அதற்கு முதல் காரணம் கருணாநிதி, காரணம், பெரியாரும் காமராஜரும் இட்ட அடித்தளத்தில், சரியான முறையில் கட்டடம் கட்டியவர் அவர்தான். பிறகுதான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா. 

இன்று பொறியியல் படிப்பு இந்த அளவுக்கு நாறிப்போய் கிடைப்பதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர். தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்க அனுமதி அளித்து, அதிலும் தனக்கு வேண்டப்பட்ட அனைவருக்கும் அனுமதி கொடுத்துள்ளார். சத்யராஜ் கூட ஒரு பேட்டியில் எம்ஜிஆர் தன்னை ஒரு பொறியியல் கல்லூரி வேண்டுமானால் ஆரம்பித்துக்கொள் என்று சொன்னதாகவும், தான் அதை மறுத்து விட்டதாகவும் கூறினார். அதற்காக இருவரும் எந்த நன்மையும் செய்யவில்லை என்று அர்த்தமில்லை. ஆனால், அதனைத் தொடர்ந்து இன்று வரை அதை நிறுத்தாமல் தொடர்ந்ததன் விளைவு, எல்லா திமுக,அதிமுக மாவாட்டும் செயலாளர்களும் ஆளுக்கு இரண்டு பள்ளிகள், நான்கு கல்லூரிகளும் வைத்துள்ளனர். 

பொதுவான வரலாறு என்னவென்றால், அண்ணா இறந்த பிறகு, 'அரசியல்' செய்து கருணாநிதி முதல்வராகிறார். அப்போது 'எமர்ஜன்சி' காலம். அதை எதிர்த்தார். 5 ஆண்டுகள் முடியும் முன்பே ஆட்சி கலைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் என்ன சாதனைகள் செய்தார் என எனக்கு தெரியவில்லை. அதன் பிறகு, 13 ஆண்டுகள் வனவாசம். மீண்டும் ஆட்சி கிடைத்தாலும், 2 ஆண்டுகளில் கலைக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை வேறு நடக்க, படு தோல்வி அடைகிறது கட்சி, ஆனாலும் அவருக்கு வெற்றி. 5 ஆண்டுகள் கழித்து வெற்றி பெறுகிறார். 5 ஆண்டுகள் முழுமையாக ஆளுகிறார், மீண்டும் தோற்கிறார். 5 ஆண்டுகள் கழித்து அரைகுறையாக வெற்றி பெற்று, எப்படியோ 5 ஆண்டுகளை ஓட்டுகிறார். அவ்வளவுதான், முற்றும்.

கருணாநிதி என்னென்ன நன்மைகள் செய்தார் என்பது இருக்கட்டும். ஆனாலும் எனக்கு என்ன சந்தேகம் என்றால், அரசியல் ஆளுமை உள்ள ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர் என பல ஆளுமைகளுடன் போட்டி போட்டு வென்ற கருணாநிதியால், கடைசி 15 ஆண்டுகளில் ஏன் ஜெயலிதாவை முழுமையாக தோற்கடிக்க முடியவில்லை. அது ஜெயலலிதாவின் வெற்றியா? கண்டிப்பாக இல்லை. கருணாநிதியின் தோல்வி. அது ஏன்? பிறகு பார்ப்போம். 

கருணாநிதி நமக்கு (சரி எனக்கு) என்னென்ன செய்தார் என்று பார்ப்போம். பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச பேருந்து பயணச்சீட்டு, முதலில் 8ம் வகுப்பு வரை இருந்தது, பிறகு 12ம் வகுப்பு வரை கொடுக்கப்பட்டது. இரண்டுமே கருணாநிதி ஆட்சியில்தான். கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் 15 சதவீத இட ஒதுக்கீடு. இது ஜெயலலிதா அரசால், சாமர்த்தியமாக ஒழிக்கப்பட்டது, மீண்டும் கொண்டு வரப்படவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று பல உள்ளன. மறுக்கவோ, மறைக்கவோ முடியாதது இட ஒதுக்கீடு. பல குடும்பங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் வெளிவந்து, நல்ல வேலையில் உள்ளனர் என்றால், அது கருணாநிதி கொண்டு வந்த பல திட்டங்களால்தான். 

சரி, மற்றவர்கள் கருணாநிதி ஏன் கெட்டவர் என்று சொல்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்தான் மதுக்கடைகளை திறந்தார். சரி, அதற்கு பிறகுதானே எம்ஜிஆர் வந்தார், அவர் மூடி இருக்கலாமே? ஜெயலலிதா வந்தார், அவைகளை அரசுடைமையாக்கி விட்டார். ஹிந்தி படிக்க விடாமல் செய்து விட்டார். இதற்கு எதை சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. ஹிந்தி கட்டாயம் என்பதைத்தான் எதிர்த்தார்கள். இன்னொன்றும் சொல்கிறேனே. ராஜாஜி குலக்கல்வி முறையை கொண்டு வந்தார். "சரி, இதிலென்ன தப்பு, படிக்கும்போதே ஒரு வேலைய தெரிஞ்சுக்கலாமே" என்றார்கள். ஆனால் அவர் சொன்னது தந்தையின் தொழிலைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று. அதைத்தான் எதிர்த்தார்கள். 

சரி, ஏன் வீழ்ந்தார். முதலாவது, குடும்ப ஆதிக்கம். ஸ்டாலின் உறுப்பினராகி, பிறகு படிப்படியாக தலைவர் ஆனார் என்பார்கள். சரிதான், ஆனால், ஸ்டாலினைத் தவிர வேறு யாருமே ஏன் அப்படி வரவில்லை, வந்த வைகோவையும் அனுப்பி விட்டீர்கள். அது அவரிடம் மட்டும் இல்லை. எல்லா திமுக ஆட்களிடமும் இருக்கிறது. 

அதே போல ஆரம்ப கட்டத்தில் வேலை வாய்ப்பு பதிவின் முதிர்வு அடிப்படையில் வேலை என்றாலும் கூட, அரசு வேலைகள் அனைத்தும் திமுகவை சார்ந்த நபர்களுக்கே தரப்பட்டன. தகுதியான நபர் என்பதை விட கட்சிக்காரர் என்பதற்குத்தான் முக்கியத்துவம். நடராசன் (சசிகலாவின் கணவர்) கூட ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்றுதான் அவருக்கு அரசு வேலை தரப்பட்டது, இதை அவரே சொல்லி இருக்கிறார். நெல்லுக்கு பாயும்போது, புல்லுக்கு பாய்வது போல சில சரியானவர்களுக்கும் வேலை கிடைத்தது. அதனாலேயே பொதுவாக வயதான பல அரசு ஊழியர்கள் கருணாநிதியின் விசுவாசிகளாக இன்னும் இருக்கிறார்கள். 

எல்லோரும் ஊழல் செய்கின்றனர். அதனாலேயே மாறி மாறி ஆட்சி நடந்தது. 2015 வெள்ளத்தின்போது அதிமுக அரசு காட்டிய அலட்சியம், அது முடிந்தவுடனே ஆளும் கட்சி விழாவிற்காக நடந்த அட்டகாசம், இவையனைத்தையும் தாண்டியும் ஏன் 2016ல் திமுக தோற்றது? ஏனென்றால், திமுக நேரடியாக மக்களின் வயிற்றில் அடித்தது. ஒரு பாலம் காட்டியதில் ஊழல், குட்கா ஊழல் எல்லாம் எந்த தனி மனிதனையும் பாதிக்கவில்லை, சமூகத்தை பாதித்தது (அதற்காக அதை நான் நியாயப்படுத்தவில்லை). 

2006-11 வரையிலான திமுக ஆட்சியில் மக்களின் நிலங்கள் மிரட்டியும், விரட்டியும் பிடுங்கப்பட்டன. அது மட்டுமே மிக முக்கிய காரணம். இன்னமும் பலர் வயிறெரிந்து சொல்வார்கள். பலர் இன்னும் கண்ணீருடன் அதை மீட்க அலைந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் குறிப்பாக சொன்னால், எங்கெங்கெல்லாம் பணம் வரும் என்பதை திமுக கண்டு பிடிக்கும், அதிமுக அதை தொடரும். 

2006 வரை கலைஞராக இருந்த அவர், பிறகு கருணாநிதியாக மாறியதற்கு காரணம் அவர் மட்டுமே. இலவசங்கள், பல விளம்பரங்கள், தேவையில்லாத பாராட்டு விழாக்கள், மதுரையில் தினகரன் அலுவலக தீ விபத்து, (அழகிரியின் மதுரை சாதனைகள் பற்றி தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை), 3 பேர் இறப்பிற்கு பின் இவர்களது குடும்பம் இணைய 'கண்கள் பனிக்க, இதயம் இனிக்க' என்று கூறியது, செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோயமுத்தூரில் நடந்த குடும்ப விழா என்று இன்னும் சில சம்பவங்கள் உள்ளன, அவற்றை நான் குறிப்பிட விரும்பவில்லை, எல்லோருக்கும் தெரியும். 

கடைசியாக சொல்வது என்னவென்றால், 2001 வரை இருந்த கலைஞர் கருணாநிதியை எனக்கு பிடிக்கும். அது வரை மக்களுக்காக உழைத்தார், அதன் பிறகும் மக்களுக்காகவே உழைத்தார், சொந்த மக்களுக்காக. அவர் ஒரு சில பேர் மீது கட்சி சார்பாக நடவடிக்கை எடுத்திருந்தால் கூட, 2016ல் ஆட்சியைப் பிடித்திருக்க முடியும். எல்லாவற்றையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிடியில் இருந்து கல்வி, அரசு, பதவிகளை கடைக்கோடி ஏழை வரை கொண்டு சென்றது கருணாநிதிதான் என்பதை மறுக்க இயலாது. 

பின் குறிப்பு: "சூப்பருங்க. இந்த திராவிட ஆட்சியாலதான் நாம் இப்படி இருக்கோம், இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது" என்று யாரும் வரவேண்டாம்.