Friday, May 13, 2016

யாருக்கு வாக்களிக்கலாம்?

ஏற்கனவே தமிழக அரசியல் கட்சிகள் பற்றிய எனது பார்வை. அதைப் படித்து விட்டு இங்கே வந்தால் நலம்.

சரி இனி யாருக்கு வாக்களிக்கலாம் என்று யோசிப்போம்..

நோட்டா (NOTA):

'சார். இது வேஸ்ட். 49ஓ படம் பாத்தீங்களா. அதுல கவுண்டமணி சொல்வாருல்ல. இதுல நாம ஓட்டு போட்டா, கெட்டவனுக்கு போடலேன்னு வேணா ஆறுதல் அடையலாம். அதுக்கு யாருக்காவது சுயேச்சைக்கு போடலாம்" என்கிறார்கள். "எப்படி இருந்தாலும் 100க்கு 99 பேர் நோட்டாவுக்கு போட்டாலும், அந்த ஒரு ஓட்டு யாருக்கு விழுதோ, அவங்கதான் ஜெயிச்சவர் அப்டிங்கும்போது ஏன் இந்த நோட்டா" என்ற கேள்வியும் வரலாம். கொஞ்சம் பொறுங்கள். படியுங்கள்.

இப்போது விஜயகாந்திற்கு ஏன் இத்தனை தேவை என்று தெரியும் அல்லவா. அதையே நாம் ஏன் நோட்டாவிற்கு உருவாக்கக் கூடாது? அனைவருமே நோட்டாவிற்கு போட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால்,ஒரு தொகுதியில் 100 ஓட்டுகள், 4 வேட்பாளர்கள் முறையே 25, 20, 15, 10 ஓட்டுகள் வாங்குகிறார்கள். 10 பேர் ஓட்டே போடவில்லை. 20 பேர் நோட்டாவிற்கு போடுகிறார்கள். இப்போது வெற்றி வாய்ப்பை மாற்றியதில் முக்கிய பங்கு நோட்டா.

ஒரு கட்சி வேட்பாளர் இன்னொருவரின் வெற்றி வாய்ப்பைப் பறிக்கிறார் என்றால், அவரை, அந்தக் கட்சியை சரிக் கட்டுவது சுலபம். நோட்டாவில் வாக்களித்தவர்களுக்கு? இதே போல நிறைய தொகுதிகளில் நோட்டா கணிசமான வாக்குகள் வாங்கினால்? வேறு வழியில்லை. மக்களுக்கு ஏதாவது செய்தால்தான் அடுத்த முறை வேட்பாளர்களுக்கு ஓட்டு விழும். இல்லையென்றால், நோட்டாவிற்கே போகும் என்ற பயம் வரும். வர வேண்டும். இன்னும் குறிப்பாக சொன்னால், இளைஞர்கள் அனைவருமே நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும்.

பொதுவாக தாத்தா, பாட்டி இருவரும் சின்னங்களுக்கே வாக்களிப்பார்கள். பெற்றோர் கட்சி பார்த்து வாக்களிப்பார்கள். அதாவது பெரிய கட்சி போட்டியிடவில்லை என்றாலும், அதன் கூட்டணி கட்சிக்கு வாக்களிப்பார்கள். நானும், தங்கமணியும் (மிரட்டியாவது, அதாவது காலில் விழுந்து) நோட்டாவிற்கு.

"சொல்றது எல்லாம் சரிதாம்பா, ஆனா, நீ சொன்ன மாதிரி இந்த தேர்தலில் நோட்டாவுக்கு போட்டா இப்ப எதுவும் நடக்காதுல்ல, அடுத்த தேர்தலில்தான ஏதாவது நடக்கும்" என எண்ணாதீர்கள். அடுத்து உள்ளாட்சி தேர்தல் வரும், 3 வருடங்களில் பாராளுமன்ற தேர்தல் வரும். நல்லது நடக்கும் என காத்திருப்போம். இத்தன வருஷம் பொறுத்தாச்சு. இன்னும் கொஞ்ச நாள் பாப்போமே.

வேட்பாளர்:

"அதெல்லாம் முடியாதுங்க. நான் யாருக்காவது ஓட்டு போட்டே ஆகணும்" என்று விருப்பமா. முதலில் உங்கள் தொகுதியில் 35 வயதுக்கு உட்பட்ட, ஓரளவு படித்த ஆள் உள்ளாரா என்று பாருங்கள். அவரிடம் இப்போது உள்ள சொத்து, அவர் சம்பாதித்து வாங்கியதா என்று பாருங்கள். "யோவ், எங்களுக்கு வேற வேல இல்லையா" என முனகாதீர்கள். சில வாரிசுகள் நிற்கிறார்களே, அவர்களைப் பற்றி சொன்னேன். இருந்தால் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, நம்பி ஓட்டளிக்கலாம். மேஜையை தட்டினாலும், கொஞ்சம் நன்மை கிடைக்க வாய்ப்பு உண்டு.

பாமக, நாம் தமிழர் கட்சிகளில் சிலர் உள்ளனர். மொத்த வேட்பாளர் விவரங்கள் தொகுதி வாரியாக இங்கே பார்க்கலாம். பார்த்து முடிவெடுங்கள். எங்கள் ஊரில் கூட நாம் தமிழர் வேட்பாளருக்கு போடலாமா என்ற எண்ணம் உள்ளது. பார்ப்போம்.

கட்சி:

"முடியாது, நான் ஏதாவது கட்சி ஆளுக்குத்தான் போடுவேன்" என்பவரா. சரி, அப்படியென்றால் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களியுங்கள். அவசரப்படாதீர்கள். ஏன் என்று சொல்கிறேன். டெல்லியில் மாற்று சக்தி என்று கருதப்பட்ட ஆம் ஆத்மி என்ன சாதித்தது, இளம் ரத்தம் என்று வந்த அகிலேஷ் யாதவ் என்ன செய்தார், மோடியாலேயே முடியலாமா, விஜயகாந்த் செய்வாரா என்றெல்லாம் உடனே யோசிக்க வேண்டாம். விஜயகாந்தோ, மக்கள் நலக் கூட்டணியோ ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்பதுதான் உண்மை.

முதலில் இது ஒரு கூட்டணி ஆட்சியாக அமையும். எப்படியும் ஐந்து வருடங்கள் தாக்குப் பிடிக்காது. மக்களுக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கெட்டது அதிகம் நடக்காது. இது பெரிய கட்சிகளுக்கு ஒரு பாடமாக அமையும். அதே போல திமுக, அதிமுகவிற்கு அடுத்துள்ள பெரிய கட்சி என்பது இதுதான். அது மட்டுமில்லாமல் அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் இருக்கும். கூட்டணியின் பலமும், விஜயகாந்தின் தலைமை லட்சணமும் தெரியும். அதை விட முக்கியம், கருணாநிதி, ஜெயலிதா இருவரை விட நல்லதாகவோ, கெட்டதாகவோ வைகோ, விஜயகாந்த் இருவரும் மக்களிடையே தேர்தல் இல்லாத போது கூட ஓரளவு தொடர்பில் இருந்தனர்.

ஏன் பாமக, நாம் தமிழர் வேண்டாம் என்றால், இதேதான் காரணம். இரு கட்சிகளும், தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு, வெற்றி பெற்று, அந்த தொகுதிகளை முன்னேற்றி, அதை வைத்து அடுத்த தேர்தலில் வாக்கு கேட்கலாம். பாமகவுக்கு அந்தத் தகுதி குறைந்து விட்டது. "இல்லீங்க, ஜெயிச்சா முதலமைச்சர்தான்" என்றால் ஒன்றும் செய்ய முடியாது. நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம். ஆனால், நாம் கொடுத்த அந்த வாக்கு சதவிகிதம், அடுத்தடுத்த தேர்தல்களில் விலை போகாமல், மீண்டும் தனியாகவே கம்பீரமாக இருந்தால், அடுத்த முறை யோசிக்கலாம்.

ஒரு வேளை, தொங்கு சட்டசபை அமைந்து, இவர்களில் யாரவது திமுக அல்லது அதிமுகவிற்கு ஆதரவு அளித்தாலும் இதேதானே என்ற போல கூட்டணி ஆட்சிதானே என்ற கேள்வி வரலாம். ஆட்சியில் கூட்டணி கிடையாது என அவர்களே சொல்லி விட்டார்கள். அது மட்டுமின்றி, அவர்கள் யாரையும் விலைக்கு வாங்க தயாராக இருப்பார்கள். பல அசிங்கங்கள் நடக்கும்.

சில எண்ணங்கள்:

தேர்தல் அறிக்கை என்பது குழந்தைகளைத் தூங்க வைக்க சொல்லும் கதை போன்றது. எனவே, வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டு அதை நம்ப வேண்டாம். தமிழகத்தின் இப்போதுள்ள கடனை குறைப்பது பற்றியோ அடைப்பது பற்றியோ யாரும் தெளிவாக எதுவும் சொல்லவில்லை. தமிழகத்தின் முக்கிய பிரச்சினை சாதி பற்றி யாரும் சொல்லவில்லை. அதை விட முக்கியம் எல்லா அறிக்கைகளும் மறைமுகமாக 'நிபந்தனைகளுக்கு உட்பட்டவை'.

அனைத்து கட்சிகளும் தேர்தல் நேரத்தில்தான் மக்களோடு உறவாடும். மற்ற நேரங்களில் வெறும் அறிக்கைதான். எல்லா பத்திரிக்கைகளின் மின்னிதழ்கள் இணையத்தில் உள்ளன (2006 முதல்). ஓய்வு நேரத்தில் அவ்வப்போது படித்துப் பாருங்கள். கண்டிப்பாக நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

உண்மையில் நியாயமாக கல்விக்கும், விவசாயத்திற்கும் கடன் வாங்கியவர்கள் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிபார்க்க மாட்டார்கள். மாறாக, கொஞ்சம் தவணையை வேண்டுமானால் நீட்டிக்க எண்ணுவார்கள். 90 சதவிகித கல்வி மற்றும் விவசாய கடன்கள் வட்டி குறைவு என்பதால் மற்ற தேவைகளுக்காகவே வாங்கப்படுகிறது. எனவே, சரியாக விசாரித்து தேவைப்பட்டவர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்தால் வரிப்பணம் வீணாகாது.

இன்னொரு முக்கிய விஷயம். ஒரு வேளை நீங்கள் இப்போது உள்ள சட்டமன்ற வேட்பாளருக்கு, அல்லது ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்தாலோ அவர்கள் தண்டிக்கப்பட்டதாக எண்ண வேண்டாம். இவ்வளவு நாள் சம்பாதித்ததை இனி அதே வேகத்தில் சம்பாதிக்க முடியாது. அவ்வளவே. வந்தவரை லாபம். மற்றபடி பிடுங்கியதை திரும்ப வாங்கவே முடியாது.

நம் சமுதாயத்தில் இரண்டு கோடுகள் உண்டு. மேல் கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் வெயில் படாதவர்கள். எதையும் வளைக்கும் திறனுடையவர்கள். அரசியல்வாதிகள் அல்லது அவர்களைத் தீர்மானிப்பவர்கள். கீழ்க் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், அன்றைய தினம் கழிந்தால் போதும். அவர்களே அடி மட்ட தொண்டர்கள். அவர்களை நம்பித்தான் கட்சி. அப்படி இல்லாதவர்கள் தேர்தலின்போது பணம் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு வாக்களிப்பவர்கள்.

பெரும்பாலும் இவர்கள் வாக்கு திமுக அல்லது அதிமுகவிற்கே இருக்கும். வேட்பாளர்கள் கொடுக்கும் பணம் அப்போதைக்கு ஓரிரு நாட்கள் உதவுவதால், உடனே தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்துவிடுகிறார்கள் (இது என்னுடைய பொதுவான கருத்து)

இந்த இரண்டு கோட்டிற்கும் நடுவில் உள்ளவர்கள் தட்டிக் கேட்கவும் துணிவில்லாது, தேர்தலில் நிற்கவும் பயந்து, அடையாளம் கூட இல்லாமல் என்னைப் பதிவு எழுதுபவர்கள். இவர்களுக்கு யார் வந்தாலும் கவலை இல்லை, அவர்களால் இந்த மக்களுக்கு நன்மையையும் இல்லை, தீமையும் இல்லை. நம்மைப் போன்றவர்களே இந்த வெற்றியை தீர்மானிப்பவர்கள். அவ்வப்போது ஞானம் வரும். இதே போல பதிவிடுவோம். முகப்புத்தகத்தில் பகிர்வோம். அவ்வளவே. அதைத் தாண்டி ஒன்றும் கிழிக்க மாட்டோம். நமக்கு உள்ள ஒரே ஆயுதம் ஓட்டுதான்.

ஏன் வாக்களிக்க வேண்டும்:

"எதுக்கு சார் ஓட்டு போடணும், இவனுங்க திங்கறதுக்கா", " நான் ஒருத்தன் ஓட்டு போடலேன்ன குடியா முழுகிடும், எப்படி இருந்தாலும் ஒரு நல்லவன் வரப்போறதில்ல" என்றெல்லாம் புலம்ப வேண்டாம். சிறு துளிதான் பேரு வெள்ளம். உங்களை போலவேதான் இன்னும் பல பேர் எண்ணுவார்கள். அந்த எண்ணங்கள் ஒரே மாதிரிதான் இருக்கும், ஆனாலும் யாரும் வெளிக்காட்டாமல் "நாம சொல்றத எவன் கேப்பான்?" என நமக்குள்ளேயே புலம்பிக் கொள்கிறோம்.

நானே 2014 பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. காரணம் அது நடந்தது வியாழன் அன்று. எனது வாக்கு சொந்த ஊரில் உள்ளது. வெள்ளியுடன் சேர்த்து 4 நாட்களுக்கு எல்லோரும் விடுமுறை கேட்டால் நிறுவனம் என்ன செய்யும்? போக முடியவில்லை. ஆனால், இந்த முறை அதனால்தான் திங்களன்று வைத்துள்ளார்கள் என நினைக்கிறேன். இதையும் தாண்டி வெளியூரில் உள்ள வாக்காளர்களுக்கும் தபால் ஓட்டு வைத்தால் இன்னும் நலம்.

ஓட்டுக்கு பணம்:

திமுக, அதிமுக இரண்டு விளம்பரங்களிலும் நடித்த கஸ்தூரி பாட்டி நடித்த ஒரு நல்ல தேர்தல் விளம்பரத்தைப் பாருங்கள். அதை வைத்தே முடிவு செய்யலாம். எனக்கென்ன அது சொல்ல வருகிறது என்றால், பணம் வாங்கிக்கொண்டு அவனுக்கு போட வேண்டாம் என்பது போல உள்ளது. மற்றபடி உங்கள் விருப்பம்.


சரிங்க. ஓட்டு போட ஊருக்கு போறேன். சிந்திச்சு செயல்படுங்க. தேர்தல் நாளையும், அடுத்த 5 வருடங்களையும் மட்டும் நினைக்காமல், அடுத்த 50 வருடங்களிலாவது முன்னேற என்ன வழி என யோசித்து வாக்களியுங்கள்.

"என் ஒருத்தன் ஓட்டு என்னத்த மாத்திட போகுது" என்று எண்ணாதீர்கள். நம் படுக்கையறையில் ஒரு செங்கல் இல்லையென்றால் என்ன வீடா இடிந்து விடும்?

Sunday, May 8, 2016

இங்கு அரசியல் (தவிர வேறெதுவும்) பேசாதீர்!

அரசியல் பற்றிய இன்னொரு பதிவு. இதில் இப்போதுள்ள கட்சிகள் பற்றி எனது கருத்தைக் கூறி உள்ளேன். இனி உங்கள் பாடு. முதலில் கட்சிகள் பற்றி பார்ப்போம்.

திமுக - அதிமுக:


இருக்கும் கோவணத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என நினைப்போர் சத்தியமாக திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம். சுய நினைவுள்ள யாரும், திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் இரண்டு கட்சிகளுக்கும் போதுமான அளவு சந்தர்ப்பங்கள் கொடுத்தாகி விட்டது.

திமுக பற்றி 2008 வரை ஓரளவு நல்ல அபிப்ராயம் இருந்தது. ஆனால், அதன் பிறகு நீண்ட குடும்ப ஆக்டோபஸ் கரங்கள் தற்போது சுருண்டுள்ளன, வெட்டப்படவில்லை. பல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவதற்கு முழு முதல் காரணம் இவர்கள்தான். வெளியில் தெரியாமல் நடந்தது எவ்வளவோ உண்டு. இதில் நடுவில் ஸ்டாலினின் காமெடி வேறு. அவரிடம் ஏதோ ஒன்று, இல்லையில்லை எல்லாமே குறைகிறது.

ஜெயலலிதா பற்றி சொல்லவே வேண்டாம். எனக்குத் தெரிந்து ஜெயலலிதா தரையில் இறங்கியது, வைகோ நடைப்பயணம் போகும்போது இறங்கிப் பார்த்தாரே, அப்போதுதான். அதன் பின், அவர் கால் தரையில் பட்டதேயில்லை என நினைக்கிறேன். இப்போது வேட்புமனு தாக்கல் செய்ய வேறு வழியின்றி தரையில் கால் பட வேண்டியதாகி விட்டது.

சில உதா'ரணங்கள்':


பேருந்து கட்டண உயர்வு. அது சரிதான் வாதிடுபவர்கள், என்ன முன்னேற்றம் அடைந்தது சொல்லுவார்களா? ஓட்டுனர், நடத்துனர் வேலைக்கு ஆளுக்கு 3 லட்சம் வாங்கியதுதான் மிச்சம். இவ்வளவு உயர்வு தேவையற்றது என சொல்லக் காரணம் உண்டு. குறிப்பாக நாமக்கல்லிருந்து சேலம் போக 18 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக உயர்த்தினார்கள். ஆனால், தனியார் பேருந்துகள் வசூலிப்பதோ 25 ரூபாய்தான். இருக்கைகளும் நன்றாக இருக்கும். ஒளி ஒலி வசதியுடன். மக்கள் எதை தேர்ந்தெடுப்பார்கள்?

உண்மை என்னவென்றால், தனியாருக்கு லாபம் கிடைக்கவே இப்படி அரசு பேருந்துகள் உள்ளன. நாமக்கல்லிருந்து சென்னைக்கு சில ஆண்டுகள் அரசு விரைவுப் பேருந்து நிறுத்தப்பட்டது. தாங்கள் செந்தில் பாலாஜியிடம் சொல்லித்தான் அது நிறுத்தப்பட்டது என அவர்களே அதை பெருமையாக சொன்னதுண்டு.

அடுத்து மின் கட்டணம். இலவசமே கொடுக்காமல், பழைய மின் கட்டண முறை வைத்தாலே போதுமே. அதாவது 200 யூனிட் வரை ஒரு கட்டணம், 201வது யூனிட்டில் இருந்து அதிக கட்டணம். ஆனால், இப்போது 200 யூனிட்டிற்கு மேல் போனால், முதலாவது யூனிட்டில் இருந்தே அதிக கட்டணம். அதாவது நீங்கள் 200 யூனிட் உபயோகித்தால் 300 ரூபாய் கட்டணம். அதுவே 201 யூனிட் என்றால் 400 ரூபாய். எப்பூடி?

மக்கள் நலக் கூட்டணி:


கொஞ்சம் நன் மொழியில் சொன்னால், 'பல வீட்டு சாப்பாடு', இன்னும் சொன்னால், 'பிச்சைக்காரன் எடுத்த வாந்தி' போன்ற கூட்டணி. ஒன்று தவிட்டிற்கு இழுக்க, இன்னொன்று தண்ணிக்கு இழுக்கும்.

வைகோ மீதும் காலத்தில் நல்ல எண்ணம் இருந்தது. அவர் மகனின் சிகரட் கம்பெனிக்கு வக்காலத்து வாங்கியவுடனே அந்த எண்ணம் போய் விட்டது. ஒரு தலைவர் என்பவர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு 'தடை வந்தால்' என சொல்வது கேவலம்.

விஜயகாந்த் பாவம். முதல்வரை நாங்கள் வெற்றி பெற்ற பின்னால் தேர்ந்தெடுப்போம் என்று சொல்லி இருந்தால், ஒரு வேளை கூட்டணியை நம்பி இருக்கலாம். சுதீஷ் பாராளுமன்ற தேர்தலின் போது, சேலத்தில் வாக்கு எப்படி கேட்டார் என்றால் "நான் மந்திரி ஆனவுடன் இதை, அதை செய்வேன்" என. அதுக்கு நீ மொதல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஆகணுமேப்பா என்ற மக்களின் மனக்குரல் அவருக்கு கேட்கவில்லை. கூட்டணியும் செல்லாது செல்லாது.

பாமக:


இவர்கள் பரவாயில்லையே, நன்றாக சொல்கிறார்களே என நினைத்தாலும், பழைய கதைகள் நினைவுக்கு வருகின்றன. அன்புமணியும் சுதீஷ் போலவே பிதற்றுகிறார். முதலில் சட்டசபை உறுப்பினர் ஆகுங்க, அப்புறம் முதலமைச்சர் ஆகலாம். இதுவரை அவர்கள் வென்ற இடங்களில் எல்லாம் முன்னேறியுள்ளதா என்றால் இல்லை. எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள், அப்போதுதான் செய்வோம் என்றால் அது விதண்டாவாதம். அது மட்டுமின்றி அதிகார பகிர்வு இருந்தவரையும் அவர்கள் அவ்வளவாக செய்யவில்லை என்பது என் கருத்து.

நாம் தமிழர்:


இவர்கள் பற்றி சொல்ல வேண்டாம் என்றுதான் பார்த்தேன். ஆனாலும் சில வரிகள்.

வந்தேறிகள் நம் இடத்தை ஆளக்கூடாது, தமிழன்தான் ஆழ வேண்டும் என்கிறார். ஒரு நல்லவன் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் ஒரு நியாயம் உள்ளது. உண்மையில் தமிழன் என்பவன் யார்? பாரதிதாசன் சொன்ன "எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழன்தான், இங்கு பிறந்தாலும் அயலான் அயலான் தான்" கருத்தில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை.

நம்மாட்கள் குணம் (நண்டு கதை) உலகம் அறிந்தது. அமெரிக்காவில் உள்ள பல தமிழ்க் குழந்தைகளுக்கு (எல்லோரும் அல்ல) தமிழ் சுத்தமாக வராது. அவர்களே அவர்களை 'தமிழன்' என்று சொல்லிக்கொள்வதில்லை.

விஜய் டிவியில் ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி பார்த்திருப்பீர்கள். சில வாரங்களுக்கு முன், அதில் வெற்றி பெற்ற மாணவர்-ஆசிரியை இருவருக்குமே தமிழ் தாய்மொழி கிடையாது. ஆனாலும் தமிழர்களே வெட்கப்படும் அளவிற்கு அவர்களின் உச்சரிப்பு இருந்தது. அவர்கள் வீட்டில் கூட தமிழ் பேசுவது கிடையாது. அது தேவையும் இல்லை. ஆனால், வெளியில் மற்றவர்களுடன் தமிழில் சரளமாக உரையாட முடிகிறதே.

சரி, அதை விடுங்கள், சொந்த ஊர் நாமக்கல் என்றாலும், சென்னையில் பிறந்து வளர்ந்த ஆளுக்கு நாமக்கல்லின் பிரச்சினைகள் எப்படித் தெரியும், அதுவே, அங்கேயே பிறந்து வளர்ந்த வேற்று ஆளாக இருந்தாலும், என்னென்ன பிரச்சினைகள் என்றாவது தெரியும் அல்லவா. அதே போல தமிழன்தான் தமிழகத்திற்கு முதல்வராக வர வேண்டும் என்றால், கடலூருக்கு கடலூர்க்காரன்தான் சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம், தமிழன் என்பவன் பொதுவாக சாதிக்குள் அடங்குபவன். அவன் முதல்வராக வந்தால், அவனது சாதிக்குத்தான் முதலில் முக்கியத்துவம் தருவான். இது எல்லோருக்கும் தெரியும். முடிந்தால் 'தமிழர்கள் மட்டும் எனக்கு ஓட்டு போடட்டும், மற்றவர்கள் போட வேண்டாம்' என்று சொல்லுவாரா?

கடைசியாக ஒன்று. 'தமிழன்தான் ஆள வேண்டும் என்கிறார். நாம் தேர்ந்தெடுப்பது மன்னரை அல்ல. மக்கள் பிரதிநிதியை. அதே போல நீங்கள் ஆளப்போவது ஆயுசுக்கும் அல்ல. ஐந்து வருடங்கள்தான்.

பாஜக, விடியல் கூட்டணி பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

"இருக்கிற எல்லோரும் மோசம்னு சொல்ற. அப்புறம் யாருக்கு ஓட்டு போடறது, நோட்டவுக்கா?" என்கிறீர்களா. இன்னொரு பதிவில் யாருக்கு வாக்களிக்கலாம் என்ற எனக்கு தோன்றியதை சொல்கிறேன்.