Wednesday, March 26, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அலுவல் பணிகள் காரணமாக வெளியூரில் சுற்ற இருப்பதால் அவசரத்திற்காகவும், கணக்கு காட்டவும், இந்தப் பிட்டுப் பதிவு இடப்படுகிறது.

தேர்தல் 2014:

ஒரு வியாழன் அன்று தேர்தல் வருகிறது, அனைவரும் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்து, தங்களது ஜனநாக கடமையை செய்யத் துடிக்கின்றனர். நானோ, ஊரில் கோயில் திருவிழா என்று இரண்டு நாள் விடுமுறை எடுத்ததால், என்னால் எனது ஜனநாயக கடமையை இந்த முறை செய்ய முடியாமல் போய் விடும் போல உள்ளது. ஆதார் அட்டைக்காக அனைவரது கை ரேகையையும் எடுத்தார்களே, அதைப் பயன்படுத்தி, எந்த வாக்குச்சாவடியாக இருந்தாலும், நம் கை ரேகை வைத்தால், நம்முடைய தொகுதி வேட்பாளர்கள் சின்னம் வந்து 'தொடு திரை' மூலம் நமது வாக்கை பதிவு செய்வது போல வைக்கலாமே. இதன் மூலம், இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும், அனைவரது வாக்குகளும் பதிவாகுமே? சிந்திப்பார்களா? அல்லது நான் சர்வாதிரிகாரியாக மாறித்தான் நடக்குமா, தெரியவில்லையே. எது எப்படி இருப்பினும், நான் அளிக்கும் வாக்கு NOTAவிற்குத்தான். பரவாயில்லை. போன முறை நான் 49'O' என்று சொன்னவுடன், என்னை வளைத்துக் கட்டி தொலைத்து விட்டனர். இந்த முறை தவறுகிறது. பரவாயில்லை. அடுத்த முறை விட மாட்டேன்.

விமர்சனம்:


அவ்வளவாக எந்தப் படமும் பார்க்க முடியவில்லை. வீட்டில் தங்கமணி, குழந்தை இருவரையும் சமாளிப்பதே பெரிய படமாக எடுக்கலாம் போல. தவறிப் போய் பார்த்த கோலி சோடா படம் கூட, நன்றாக இருந்தாலும், 'இருக்க எடம் கொடுத்தா' என்ற பழமொழியை நினைவூட்டியதால், கவரவில்லை.
தெகிடி: லக்கி சொன்னது போலவே, ஒரு ராஜேஷ் குமார் கதை படிப்பது போலத்தான் இருந்தது. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், இடைவேளையும், இறுதிக் காட்சியையும் ஒரே மாதிரி வைத்தது. ஆனாலும், அந்த முடிவு, 2008ல் வந்த ஷெர்லக் ஹோம்ஸ் படம் போல உள்ளது. பார்ப்போம் அந்த முகமறியா வில்லன் யாராக இருக்கும் என்று. (இரண்டாம் பாகம் வந்தால். தயவு செய்து வேறு ஏதாவது மொக்கை படம் எடுத்து. தெகிடி-2 என்று எங்களை ஏமாற்ற வேண்டாம். வில்லாவில் பட்டதே போதும்).த்ரிஷ்யம்: திடீரென தமிழ்நாட்டில், 'கமல் ஹாசன் நடிக்கவிருக்கும்' என்று இதை திரையிட ஆரம்பித்து விட்டனர். எத்தனை நாள்தான் தமிழ்ப் படமே பார்ப்பது (எத்தனை நாள்தான் நல்ல பிரதிக்கு காத்திருப்பது?!?!) என்று போய்ப் பார்த்து விட்டேன். பற்றி சொல்வதற்கு முன்னால், ஒரு தெனாலி ராமன் கதை படித்து விட்டு வாருங்கள்.

இந்த நகைச்சுவையான கதையை, ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினையோடு இணைத்தால், அதுதான் 'த்ரிஷ்யம்'. அந்தப் பிரச்சினையில் இருந்து, தனது குடும்பத்தைக் காப்பாற்ற, இந்தக் கதையைப் பயன்படுத்துவதாகவே எனக்கு தோன்றியது. அதிலும் குறிப்பாக, பிணத்தைத் தோண்டி எடுக்கும் காட்சி. (அதற்கடுத்த இறுதிக் காட்சியை என்னால் யூகிக்க முடிந்தது, அட நெஜமாத்தாங்க. ஏனென்றால், படத்தின் ஆரம்பமே அங்குதானே ஆரம்பிக்கிறது)

இந்தப் படம் ஏன், மற்ற த்ரில்லர் வகைப் படங்களில் இருந்து தனித்து நிற்கிறது என்றால், எந்த 'த்ரில்லர்'' படமாக இருந்தாலும், இறுதியில் முடிச்சை அவிழ்க்கும்போது திடீரென புதுக் கதை வரும். (அதே கண்கள் படம் தவிர, ஏனென்றால், அதில் அந்தக் கதையை முன்பே அசோகன் சொல்லி விடுவார்).

ஆனால், இந்தப் படத்தில், கதை ஒரே நேர்க்கோட்டில் செல்கிறது, தன்னை அசிங்கமாக படம் எடுத்தவனை கொல்லும் மகள். அந்த பிணத்தை மறைக்கும் தாய், அதைப் பார்த்து விடும் இளைய மகள். கொலை செய்யப்பட்டவன் காவல் துறை உயர் அதிகாரியின் பையன். காவல்துறை விசாரணையில் இருந்தும், கொலைக் குற்றத்தில் இருந்தும் தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் குடும்பத் தலைவன். எப்படி என்பதுதான் படமே.

மோகன்லால் ஒரு அமைதியான,அடக்கமான குடும்பத் தலைவனாக வருகிறார். மகளை ஒரு காவல் துறை அதிகாரி அடிக்கும்போது கூட, , தடுக்கவே முயற்சி செய்கிறார். தமிழில்,அது கமலாக இருந்தாலும், தம்பி ராமையாவாக இருந்தாலும், திருப்பி ஒரு அடியாவது அடித்தால்தான் நமக்கு திருப்தியாக இருக்கும். பார்ப்போம்.

திரிஷ்யம் - கண்டிப்பாக பாருங்கள். சப் டைட்டில் இல்லாமலேயே படம் புரிந்தது.

புத்தகம்:

கடந்த இரண்டு வருடங்களாக புத்தக கண்காட்சிக்கு செல்லவில்லை. என்ன புத்தகம் கடைசியாக படித்தேன் என்று யோசித்தால், 'ஆனந்த விகடன்' கூட நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. கல்யாணம் ஆகி விட்டால், மூளை மங்கி விடும் என்று படித்தது உண்மைதான் போல.

6174 என்ற புத்தகத்தைப் பற்றி அதிஷா எழுதியதைப் படித்தவுடன், அதை வாங்க வேண்டுமென்று தோன்றியது. இன்னமும் நினைவில்தான் உள்ளது. வாங்கலாம் என்றால், விலையைப் பார்த்து விட்டால், தங்கமணியிடம் இருந்து கொமட்டில் ஒரு குத்து விழும். 'அதே காசுக்கு பொடவை கேட்டா, 1008 சாக்கு சொல்ல வேண்டியது, புத்தகம் ஒரு கேடா' என்று. சரி. காலம் கனியும் வரை காத்திருப்போம்.

வீடு:

இந்த சென்னைப் பட்டணத்தில், எனக்கு ஒரு ஆகாயத்தில் (நான்காவது மாடி) காணி நிலமும், அதிலே ஒரு வீடும் கட்டித் தருவதாக சொல்லி, நான் காசையும் கட்டி, அவர்கள் வீட்டையும் கட்டி விட்டார்கள். சரிடா, சாவியைக் கொடுடா, என்றால், அரசுக்கு இன்னும் 'முக்கியமான' பேப்பர் போகவில்லை, என்று இழு இழுவென இழுக்கிறார்கள். இப்போது என்னடாவென்றால், தேர்தல் வந்து விட்டது, இன்னும் ஒரு ரெண்டு மாசம்தான் சார், ஒரு வருஷம் பொறுத்தீங்க, இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க சார்' என்று சொல்கிறார்கள். நண்பனிடம் புலம்பினால், அவன் சொன்னான்' 'சரி விடுறா, எனக்கு இந்தா இந்தான்னு சொல்லி மூணு வருஷம் ஆச்சு, இன்னும் கொடுக்கல' என்றான். சரி, அவனப் பாத்து ஆறுதல் அடஞ்சுக்குவோம்னு விட்டுட்டேன்.

பின்னூட்டம்:

யாராவது, ஏதாவது போட்டா உண்டு, அதுவம், இந்த பதிவு சம்பந்தமா இருந்தா பரவால்ல. இந்தப் பதிவுல 10 பின்னூட்டம் இருந்தாலும், அதுல ஒன்னு கூட பதிவுக்கு சம்பந்தமே இல்ல. (அதுல பாதிக்கு மேல நானே போட்டது). அந்த மாதிரி இதுக்கு இல்லாம இருந்தா பரவால்ல.