Sunday, September 15, 2013

சில பல விமர்சனங்கள்

சிங்கம் 2:

பொதுவாக பல படங்களின் இரண்டாம் பாகம் என்றாலே, அதே கதையைத்தான் சற்று வித்தியாசமாக எடுப்பார்கள். சில படங்கள் வெற்றி பெறும் (முனி-2 காஞ்சனா), பல மட்ட ரகமாய் தோல்வி அடையும் (நான் அவன் இல்லை). ஆனால், இந்தப் படம் அது போல இல்லை. முடிவில் இருந்து தொடர்ச்சியாய் எடுத்து, அதிலும் புது ஆட்களைப் புகுத்தி, ஹரி வெற்றி கண்டுள்ளார்.

இந்தப் படத்திற்கு ஏன் எதிர்ப்பு கிளம்பவில்லை? இதில் அனைத்து மதத்தினரையும் புண் படுத்தியுள்ளனர். எங்கே, ஏன், எப்படி என்று யாரும் கிளம்ப வேண்டாம். சும்மா. முக்கிய வில்லன் தங்கராசு, நாயகன் துரைசிங்கம். இதற்கும், அதற்கும் சரியாகப் போய் விட்டது. இரண்டாம் வில்லன் முஸ்லிம், அடுத்த ஆள் கிறித்துவன். நாயகனுக்கு உதவி புரிபவர்களில் ஒருவர் முஸ்லிம், ஒருவர் கிறித்துவன் என்று சரியான மசாலை கலக்கி விட்டார்.

எனக்கென்னவோ, மூன்றாம் பாகமும் எடுத்து விட்டார் என்றே தோன்றுகிறது. எனவேதான், விஸ்வரூபம் போல, படத்தை அந்தரத்தில் விட்டு விட்டார். வில்லனை கொண்டு வந்து சிறையில் அடித்தவுடன் 'பாஞ்சாலி கூந்தலை முடிந்துவிட்டாள்' என்று பாஞ்சாலி சபதம் முடிந்ததைப் போல இருந்தது. அடுத்த பாகத்தில் மத்திய உள்துறை அமைச்சரையும் உள்ளே தள்ளினால்தான் படம் முடியும்.

ஹரியும் இதுவரை 12 படங்கள் எடுத்து விட்டார், ஆனாலும் அவர் படத்தில் காமெடியும் பாடல்களும் மனதில் நிற்கவே மாட்டேன் என்கிறது. ஹரி பாடல்களும், நகைச்சுவை காட்சிகள் இல்லாமலும் படம் எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

ஆதலால் காதல் செய்வீர்:

குமுதம் விமர்சனத்தில் வந்த வரி இது. அப்பாக்கள் நெகிழ்கிறார்கள். பையன்கள் சிரிக்கிறார்கள். உண்மைதான். படம் பார்த்து விட்டு வந்த நண்பன் சொன்னது "ஒரு மாத்திரை வாங்கி சாப்பிடிருந்தா வேலை முடிஞ்சிருக்கும், அத விட்டிட்டு" என்றான். படம் சொல்ல வந்ததை யாரும் புரிந்து கொள்ளவில்லை. எப்போது பெற்றவர்களின் வேதனை நாம் பிள்ளைகளை வளர்க்கும்போதுதான் தெரியும். அதே போலத்தான் இந்தப் படமும். 

அந்த கால படங்களில் எல்லாம், அநாதரவான பெண்கள் தங்களை இழந்து, குழந்தையைப் பெற்று விட்டு இறந்து விடுவார்கள் அல்லது அவர்களை கஷ்டப்பட்டு வளர்த்து பின் இறப்பார்கள். இப்போதெல்லாம், அனைவருக்கும் வேறு வேலை இருப்பதால், பிள்ளைகள் நேரடியாக அனாதைகள் ஆகிறார்கள்.

சுசீந்திரன் அவர்களே, வாழ்த்துக்கள். இதே போல தங்களின் படைப்புகளை தொடர வேண்டுகிறேன்.

தலைவா மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ்:


இந்த இரண்டு படங்களையும் பார்க்கும்போது, எனக்கு நிறைய மற்ற படங்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு படங்களிலும் கேவலமான பாத்திரத்தில் சத்தியராஜ். மட்டமான வில்லன்கள். ஷாரூக், தன்னை படத்தில் தாழ்த்திக்கொண்டு, நிஜத்தில் வெற்றி பெற்று விட்டார். விஜயோ, சரி விடுங்கள். அதை சொல்ல விரும்பவில்லை.


தலைவா படத்தில், இறுதிக் காட்சியைத்தான் மிக சிறந்த நகைச்சுவைக் காட்சி என்று என்று எல்லோரும் சொன்னார்கள். மொத்தப் படமுமே காமெடிதான். சரி விடுங்கள். இருந்தாலும், என்னால் சிரிப்பை அடக்க முடியாத காட்சி என்றால், அது ரவுடிகளைப் பார்த்து, சந்தானம் வந்திருக்கும் போது 'கெட் அவுட்' என்பாரே. தேவனின் 'மைதிலி' என்ற நாவலில் ஒரு வர்ணனை வரும். 'ராஜ பார்வை என்று நினைத்து, ஒன்றரைக் கண்ணில் கேனப் பார்வை பார்த்தான்' என்று. அதுதான் நினைவுக்கு வந்தது.

இன்னும் சொன்னா புரியாது, பட்டத்து யானை, புல்லுக்கட்டு முத்தம்மா போன்ற படங்கள் பற்றி சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தேசிங்கு ராஜா, தங்க மீன்கள் இன்னும் பார்க்கவில்லை. அவ்வளவுதான்.