Thursday, October 7, 2010

எந்திரன் - நானும் நானும்!!!

வழக்கம் போல, மக்களோடு மக்களாக, நானும் ஐக்கியமாகிறேன்.

சில எண்ணங்கள்:

எந்திரன் ஒரு அசாதாரமான படம். எந்திரன் ஒரு குப்பை. எந்திரன் போல ஒரு படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை. இப்படி ஒரு படம் வந்ததே தேவையற்றது. இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். எந்திரன் படத்தை புறக்கணிப்போம். நல்ல வேளை கமல் தப்பித்து விட்டார். இந்நேரம் கமலுக்கு வயிறெரிந்து வயிறே ஓட்டை ஆயிருக்கும். உஸ் அப்பாஆஅ!!! கண்ணக் கட்டுதப்பா.

சாதாரணமாக, படம் பார்க்கும்போதும், முடிந்தவுடனேயும், இந்த கீழே உள்ள ஏதாவது ஒரு நிலைதான் இருக்கும்.

படம் முழுதும் சிரித்துக் கொண்டு, படம் முடிந்த பின்னரும், அதில் வரும் ஏதாவது ஒரு காட்சியைப் பற்றி பேசி சிரிப்பது. (பாஸ் எ பாஸ்கரன், ஓரம்போ, கோவா போன்ற படங்கள்.)
இடைவேளை வரை அல்லது அதற்கு சற்று அடுத்து வரை சிரித்து விட்டு, அதன் பின் அமைதியாய் பார்த்து விட்டு, சற்றே சோகமாய் வருவது. (பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், ரேணிகுண்டா போன்ற படங்கள்)
படம் முழுதும் அல்லது பிற்பாதியில் ஒரு வித ஆக்ரோஷத்துடன் பார்ப்பது (நேரம் போவதே தெரியாமல்). சண்டைக்காட்சிகள், சவால் விடும் காட்சிகளில் நாமும் கத்துவது என்று. படம் முடிந்து வீட்டிற்கு வந்து யோசிக்கும்போதுதான், லாஜிக் கழுதை உதைக்கும். (சிங்கம், பில்லா, நான் மகான் அல்ல போன்றவை).
எப்படா படம் முடியும். ஏன்தான் வந்தமோ என்று தன்னைத்தானே நொந்துக் கொள்வது (மாயக்கண்ணாடி, கந்தசாமி, ராவணா, விண்ணைத் தாண்டி வருவாயா போன்றவை)

ஆனால் , எந்திரன் இதில் எந்த வகையிலும் வரவில்லை. கிட்டத்தட்ட கடைசி வகைதான். ஆனால் சிட்டி ver2.0 அதை சற்றே முன்னே கொண்டு போய் விட்டார். (சந்திரமுகி வேட்டையனைப் பார்த்த பின், இந்த படத்திற்காக மிக ஆவலோடு காத்திருந்தேன். ஏமாற்றவில்லை / ஏமாறவில்லை). என்னைப் பொறுத்த வரை, படத்தின் நீளத்தை மட்டும் குறைத்தால் கண்டிப்பாக அட்டகாசமாக இருக்கும். கிளிமஞ்சாரோ மற்றும் இரும்பிலே ஒரு இதயம் பாடல்களையும், (ரஹ்மான் மன்னிப்பாராக. அவர் பாட்டெல்லாம் நன்றாகத்தான் இசையமைத்து தருகிறார். ஆனால், படத்தில் சரியாகவே ஒட்டி வருவதில்லை. ராவணா, எந்திரன் இரண்டிலும் எனக்கு அப்படித்தான் தோன்றியது) நகைச்சுவை என்று சொல்லப்படும் சில காட்சிகளையும் நீக்கலாம். எந்திரனின் ஒரு கை மட்டும் குப்பையிலிருந்து வரும் காட்சியில் இடைவேளை விட்டால், ம்ம்ம்ம்.

நான் ஒன்றும் ஆண்டனி அல்ல. அரவிந்த் தான். ஆனாலும், இது என்னுடைய பதிவாக்கும்.

சில சம்பவங்கள்:

சன் டிவியின் நேரடி ஒளிபரப்பில், ரஜினி, ஐஸ்வர்யா, ஷங்கர், ரஹ்மான், எல்லோரும் கலந்து கொண்டு, அழைப்பவர்களிடம், "சீக்கிரம் எந்திரன் பாருங்கம்மா, குழந்தைகளையும் கண்டிப்பா கூட்டிட்டுப் போய் பாருங்க, அவங்க ரொம்ப என்ஜாய் பண்ணுவாங்க. கொசு கூட பேசற மாதிரி நகைச்சுவை காட்சிகள் எல்லாம் வருது. இப்ப உங்களுக்காக ஒரு காட்சி வருது. பார்த்து ரசிங்க" என்று பேசலாம்.

"எந்திரன் முதல் காட்சி - இடைவேளை விடும் விழா". எந்திரன் இடைவேளையில் மசால் வடை விற்ற சிறப்பு நிகழ்ச்சி (சமோசா அடுத்த வாரம்). விற்பவர் "கலாநிதி மாறனுக்கு ரொம்ப நன்றி சார். அவர் மட்டும் இல்லேன்னா, இந்த மசால் வடை எல்லாம் வித்தே தீர்ந்திருக்காதுங்க" என்று சொல்லாவிட்டால், கத்தரிக்கப்படும். (நான் அவர் கொடுக்கும் பேட்டியை சொன்னேன்).

ரஜினி மனதிற்குள் "நூறு நூத்தம்பது படம் நடிச்சுட்டு சந்தோசமா காச வாங்கிட்டு போயிட்டு இருந்தேன். இந்த ஒரு படம் நடிச்சுட்டு, நான் படற அவஸ்தை இருக்கே, அய்யய்யோ" என்று மருவிக்கொண்டிருக்கலாம்.

சன்னில் வரும் எல்லா நெடுந்தொடர்களிலும், எந்திரனை வைத்து ஒரு நாள் அல்லது ஒரு வாரம் ஓட்டப்படும்.

சில சந்தேகங்கள்:

தமிழ் மற்றும் தெலுங்கு போஸ்டர்களில், சற்றே தொலைவில் இருந்து பார்த்தால், "சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன்" தான் நன்கு தெரியும். ஷங்கர், ரஜினி, ரஹ்மான் பெயர்களை விட. ஆனால், ஹிந்தியில் அப்படி இல்லை. ஏன்? (சத்தியமா எனக்கு தெரியலீங்க).

"எந்திரன் உருவான விதம்" என்று கண்டிப்பாக நிகழ்ச்சி வரும். அதில் டிரெயின் சண்டைக்காட்சி மற்றும் நடனக் காட்சிகளை எப்படி எடுத்தோம் என்று போடுவார்களா??

படம் கொஞ்சம் சுமாரா இருக்கும்போதே இவங்க அலும்பு தாங்கலியே? ஒரு வேளை ரொம்ப நல்லா எடுத்திருந்தா?? (என்னங்க, அப்படி எடுத்தாதான் இவ்வளவு அலும்பு தேவை இல்லையேன்னு சொல்றீங்களா.. சரிதான். )

மேலே கூறியது போல எந்த நிகழ்ச்சி போட்டாலும், அதையும் உட்கார்ந்து பார்க்கிறேனே. இது வரை, Indian rupee450/- செலவு செய்து, இரண்டு முறை பார்த்துள்ளேனே. நான் என்ன லூசா??

டிஸ்கி:


கடைசிக் கேள்விக்கு எப்படியும், யாரும் "இல்லை" என்று பதிலளிக்கப் போவதில்லை. எனவே, "ஆம்" என்று பின்னூட்டமிட்டு நேர விரயம் வேண்டாம்.

Tuesday, September 21, 2010

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

இப்போதெல்லாம் பெரிய பதிவர் ஆக வேண்டும் என்றால் இது போல மசாலா மிக்ஸ் பதிவுகள் இடவேண்டும் என்று மரத்தடி ஜோசியக்காரர் சொன்னார். அதை விட முக்கியம் என்ன பதிவிடலாம் என்று பொழுதை ஓட்டுவதை விட, இது போல நாலு வெட்டி விஷயங்களைப் பற்றி எழுதி ஒப்பேற்றி விடலாம் என்றுள்ளேன். இனி உங்கள் தலைவிதி.

கமல் காப்பி:

கமல் காப்பி குடிப்பாரா இல்லை டீ குடிப்பாரா என்று நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். வாதி, பிரதிவாதிகள் நிறைய பேர் உள்ளனர். ஒவ்வொருவரும் தாங்கள் நினைத்ததை எழுதவே பதிவுலகிற்கு வருகின்றனர். அனைவருக்கும் கமலை விட ரஜினியை விட மோசமான பிரச்சினைகள் (அ) மகிழ்ச்சியான நிகழ்வுகள் வீட்டிலோ, அலுவலகத்திலோ நடக்கும். ஆனால், அதைப் பற்றி எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள் என்பதால் இவர்கள் சிக்குகிறார்கள். அந்த மீடியாக்காரங்கதான் அப்படின்னா நீங்களுமா??

பொதுவாக ஒருவர் செய்வது சரியா தவறா என்பது, அவர் நமக்கு பிடித்தவரா, இல்லையா என்பதைப் பொறுத்த விஷயம். நமக்கு மிகவும் பிடித்த ஒருவர் தவறு செய்தால், நமக்கு தெரிந்தாலும் மூன்றாம் நபரிடம் "இல்லை, இல்லை. அது சரிதான்" என்றே வாதிடுவோம். அதேதான் நடக்கிறது.

இப்போதுதான் Technology has very much improved இல்லையா. ஏன் ராபின் வில்லியம்ஸ்க்கு ஒரு மெயில் அனுப்பக் கூடாது? "பாருங்க சார். உங்க படத்த அப்படியே தமிழ்ல டப் பண்ணி இருக்காங்க" என்று. அதை விட்டு விட்டு சும்மா பதிவிட்டால்? மக்கள் அதைப் படித்து விட்டு உடனே "நீங்க காப்பி அடிக்கிறீங்க, உங்க படத்த நாங்க பாக்க மாட்டோம்" என்று புரட்சி செய்வார்களா என்ன?

நான் கமல் மற்றும் இளையராஜாவின் ரசிகன். இதுவரை படித்ததில் புரிந்திருக்கும். அதற்காக ரஜினி, ரஹ்மானை நான் வெறுத்ததில்லை. ஆனால், பொதுவாக விவாதம் நடக்கும்போது (கல்லூரிக் காலங்களில், இப்போதல்ல. சற்றே தெளிந்து விட்டேன்) இவர்களை ஆதரிக்க அவர்களைப் பற்றி தவறான தகவல்களையே தர முயற்சிப்பேன். இப்போது நினைத்தாலும் வெட்கமாக உள்ளது. ராஜாவின் பாடல்களை விட, ரஹ்மானுடையதே அதிகம் கேட்பேன். ஏதாவது, எங்கேயாவது கேட்டது போல இருக்காதா? rahman copy என்று அடிக்கடி google செய்வேன்.

கமல், ரஜினி பற்றி எப்படி எழுதினாலும் நமக்கு எந்த வித ஆதாயமும் கிடையாது. சிவாஜி அதிகம் வசூலித்ததா இல்லை தசாவதாரம் அதிகம் வசூலித்ததா என்று பட்டிமன்றம் நடக்கையில், இதைப் பற்றி கவலைப்பட வேண்டியது AVMமும், ரவிச்சந்திரனும்தானே, நாம் ஏன்? என்று நினைத்தேன். AVMன் பேர் சொல்லும் பிள்ளை கமல் என்று அவர்களே படம் எடுத்தார்களே? (உடனே AVMன் எஜமான் ரஜினிதானே என்று சொல்ல வேண்டாம்).

இதனால் நான் சொல்வது என்னவென்றால், ரசிப்போம். சிரிப்போம். தவறென்றால் என்ன செய்யலாம்? செய்தவர் பிடித்திருந்தால் மன்னிப்போம். இல்லையென்றால் பதிவிட்டுக் கிழிப்போம்.

சிறுகதை:

பல வருடங்களுக்கு முன், குமுதத்தில் படித்த சிறுகதை. முடிவிற்குப் பின் இன்னொரு முடிவைக் கொடுத்துள்ளேன்.

ஒரு பேருந்துப் பயணம். ஒருவருக்கொருவர் அறிமுகமற்ற ஒரு முதியவரும், ஒரு இளைஞனும் அருகருகே அமர்ந்து பயணிக்கின்றனர். முதியவர் களைப்பாக இருப்பதால், தூங்கி தூங்கி இளைஞன் மேல் விழுகிறார். சொல்லி சொல்லிப் பார்க்கும் இளைஞன், ஒரு கட்டத்தில் கடுப்பாகி, அவர் விழும்போது எழுந்து விட, பெரியவர் பொறுமையாக சொல்கிறார்.

"ஏம்பா, நான் வயசானவன்னுதானே எழுந்துட்டே, ஒருவேள ஒரு பதினெட்டு வயசுப் பொண்ணு இப்படி தூங்கி விழுந்திருந்தா நீ எந்திரிச்சிருப்பியா?"

இத்துடன் கதை முடிந்திருந்தது. என் கருத்து அடுத்த வரி.

"ஏன் பெரியவரே. ஒருவேள ஒரு பதினெட்டு வயசுப் பொண்ணு உங்க பக்கத்துல உக்காந்திருக்கும்போது, நீங்க இப்படி அவங்க மேல தூங்கி விழுவீங்களா?"

திரைப்படங்கள்:

களவாணி, வம்சம், பாஸ் (எ) பாஸ்கரன் போன்ற சில நல்ல சில டைம் பாஸ் படங்களையும், விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணா (தமிழ் மற்றும் ஹிந்தி) போன்ற இன்னும் சில நல்ல (?) படங்களையும் பார்த்தேன். பாஸ் படம்தான் ரசித்து, சிரித்துப் பார்த்த படம். அதுவும் பயங்கரமாக கமெண்ட் எல்லாம் அடித்துக் கொண்டு, கூட வந்த நண்பர்களையும் கலாய்த்துக்கொண்டு அனுபவித்து சிரித்தோம்.

நண்பனின் தம்பியும் உடன் வந்திருந்தான். ஆர்யாவின் அண்ணன், ஆர்யா வெளியேறும்போது குடை கொடுக்கும் காட்சியில் நாங்கள் அவனிடம் "உங்கண்ணன் ரொம்ப நல்லவன்டா. குடை மட்டுமில்ல, ரெயின் கோட்டும் கொடுப்பான்டா. அண்ணேன்டா !!!" . அதே போல படம் பார்க்க நாங்கள் போனது Express Avenue Mall. எனவே, வெட்டி சீனாக, கண்ணாடி எல்லாம் போட்டுக்கொண்டு போனோம். சந்தானம் ஆர்யாவைப் பார்த்து கடுப்பாகி "அந்தக் கண்ணாடியைக் கழட்டித் தொலைடா" என்று கத்தும்போதெல்லாம், ஒரே ரவுசுதான் போங்க.

கொசுறு:

இன்னும் ஏதோ ஒன்று குறைகிறதே? Aதாவது ஜோக் சொல்ல வேண்டுமல்லவா? ம்ம்ம்ம்... ஒரு பழைய மொக்கை ஒன்று..

நண்பன் 1: எம் பொண்டாட்டி ஏதோ ஒரு வித்தியாசமான லிப்ஸ்டிக் வச்சிருக்கா. ரொம்ப வித்தியாசமான சுவை.
நண்பன் 2: ஆமாமா.. ஒரு மாதிரி ஆரஞ்ச் டேஸ்டும் இல்லாம மாதுளை மாதிரியும் இல்லாம.. கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கும்.

புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளவும். புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்.

தலைப்பைப் பார்த்து ஏமாந்து வந்தவர்கள் அப்படி ஒரு ஓரமாக துப்பிவிட்டு செல்லவும். மற்றவர்கள் வழக்கம் போலவே.

Sunday, August 15, 2010

பட்டுக்கோட்டை பிரபாகர்-பாலகுமாரன்-இந்திரா சௌந்திரராஜன்

இதற்கு முன் இட்ட ராஜேஷ் குமார், சுபா பற்றிய பதிவுகள்.

பட்டுக்கோட்டை பிரபாகர்:

இவரின் பரத் சுசீலா பாத்திரங்களுக்கும், சுசீலாவின் டி சர்ட் வாசகங்களுக்கும் நான் ரசிகன் என்றால், அது அறை குறையாக அவரின் கதைகளைப் படித்தவன் என்று அர்த்தம். அவரின் துப்பறியும் நாவல்கள் மட்டுமல்ல, சமூக நாவல்களும் எனக்குப் பிடிக்கும். அவரது திரைப்பட வசனங்களும் வசன நடையும் நன்றாகவே இருக்கும். குறிப்பாக 'சாமுராய்' படத்தின் வசனங்கள். "எரிமலை வெடிக்கும்போது, அடியில் சில பூக்களும் கருகத்தான் செய்யும்", "காரும் காரும் மோதுனா அது incident. FIR போட்டாதான் அது accident". மற்றபடி கதைகளின் பெயர்கள்தான் நினைவில் இல்லை.'

திரு திரு துரு துரு' படத்தில், மருத்துவமனைக்கு நாயகன் நாயகி விசாரிக்க வரும்போது, நாயகி 'நாங்கதான் பரத் சுசீலா, மாறு வேஷத்துல வந்துருக்கோம்' என்றபோது அங்கங்கே கேட்ட சிரிப்புக் குரல்களே பாத்திரங்களின் வெற்றிக்கு சாட்சி. என்ன, எனக்குத் தெரிந்து இதுவரை இந்த பாத்திரங்களை வைத்து எந்தப் படமும் வரவில்லை.

பாலகுமாரன்:

எனக்கு சிறு வயதில் பாலகுமாரனின் கதைகள் அவ்வளவாக பிடிக்காது. ஏனென்றே தெரியவில்லை. சமீப காலங்களில் படித்த பின்தான் அவரது அருமையே தெரிகிறது. அதுவும் 'இரும்பு குதிரை' (க்கன்னா வராதாமே. எட்டெழுத்து என்பதாலா??) படித்த பின் அவர் மேலிருந்த மதிப்பு அதிகமாகிவிட்டது. இவரின் திரை வசனங்களும் எனக்குப் பிடிக்கும். பாட்ஷா', 'ஜென்டில்மேன்' பற்றி தனியாக சொல்ல வேண்டுமா?? இவருடைய கதைகளும் எனக்கு தெரிந்து திரையில் வந்ததில்லை.

இந்திரா சௌந்திரராஜன்:

இது வரை இவரைப் பற்றி என்னால் சரியாக கணிக்கவே முடியவில்லை. அதுவும் 'விடாது கருப்பு'க்குப் பின் அந்தக் குழப்பம் அதிகமாகி விட்டது. அவரின் மற்ற கதைகள் சரியான விகிதத்தில் விஞ்ஞானத்தையும் புராணத்தையும் கலந்து கட்டி அடித்திருப்பார். அதே போல சமூக நாவல்களும் நன்றாகவே இருக்கும்.
சேலம் நெசவாளர்களை மையமாக வைத்து எழுதிய கதை ஒன்று. தலைப்பு வழக்கம் போல நினைவில் இல்லை. அருமையாக இருக்கும்.

'விடாது கருப்பு' தொடராக வந்த காலத்தில் எங்களூரில் கேபிளும் இல்லை, எங்கள் வீட்டில் டிவியும் இல்லை. இப்போதுதான் யுடியுபில் பார்த்தேன். நிஜமாகவே பயமாக இருந்தது. பொதுவாக புதினங்கள் படமாக்கப்படும்போது, என்னைப் பொறுத்தவரை சரியாகவே இருந்ததில்லை. ஆனால், படித்ததை விட பல மடங்கு நன்றாக இருந்தது அந்த தொடர். அந்த நம்பிக்கையில்தான் 'ஆனந்தபுரத்து வீடு' படம் பார்க்கப் போனோம். சரி அத விடுங்க.. இவரின் மற்ற நாவல்கள் ஒரு முறை படித்ததுண்டு. இவரின் 'ஐந்து வழி மூன்று வாசல்' படித்தால் 'மஹதீரா' நினைவுக்கு வரலாம். ஆனால் கதை வந்து பல வருடங்களாகி விட்டன.

இப்போதைக்கு அவ்வளவுதான்.எப்பா பாத்துக்கோங்க.. நானும் பதிவர்தான், பதிவர்தான், பதிவர்தான். ஒரு பதிவு போட்ருக்கேன்..

Saturday, May 29, 2010

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் - படத்தினால் அறியப்படும் நீதி யாதெனில்

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் வெளியாகி பல நாட்கள் ஆகின்றன. அதற்குப் பின் வெறும் சிங்கமும் வெளியாகி விட்டது. ஆனாலும் இன்றுதான் முரட்டு சிங்கத்தைப் பார்க்க முடிந்தது. ஏனோ தெரியவில்லை, இந்தப் படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. எனவேதான் இந்தப் பதிவு.

அது ஏனோ தெரியவில்லை, சிம்புதேவன் படங்களுக்கு போகும்போது மட்டும் பல காட்சிகள் வெட்டப்படுகின்றன. அறை எண் 305ல் கடவுள் படத்தில் 'ஆணி பிடுங்குவோர்க்கு' கையை மொன்னையாக்கும் காட்சிகள், சிங்கம் படத்தில் 'அணு ஆயுத ஒப்பந்தக் காட்சிகள்' வெட்டப்பட்டுவிட்டன. சத்யமிலேயே இந்த நிலைமை.

கிட்டத்தட்ட படம் முழுதும், இறுதிக்காட்சிக்கு முன்பு வரை பார்த்துப் பார்த்து ரசித்து, சிரித்துக் கொண்டிருந்தோம். புதையலை எடுக்கும்போது வரும் கேள்விகளைக் கேட்டபோது, எனக்கு பொளேரென்று அறைந்தது போல இருந்தது. முதலில் தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்ற கேள்விக்கு வந்த பதில்களைக் கேட்டபோதே, இப்போதைய தலைமுறைதான் ஞாபகம் வந்தது.

தமிழ் பற்றி வந்த அந்த கேள்வி பற்றி யோசிக்கும்போது, ஊடகங்களின் பங்கும் நினைவுக்கு வந்தது. சில நிகழ்ச்சிகளின் தலைப்புக்கள் 'ஹலோ தமிழா', 'குட் மார்னிங் தமிழா', 'அருக்காணி டு அழகு ராணி (இந்த தலைப்பைக் கேட்டவுடனும் சரி, தெரியாமல் பார்த்து விட்டாலும் சரி, பயங்கரமாக எரிச்சல் வரும். ஏன்? அருக்காணி என்ற பெயர் இருந்தால் அசிங்கமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?).

அடுத்த கேள்வியாக, பொங்கு தமிழர்களுக்கு இன்னல் விளைவித்து, அல்லையில் மிதிக்கும்போதும், அகதிகளாக அலையவிடும்போது நாம் என்ன செய்வோம் என்று. எனக்கு அவர்கள் சொன்ன நான்கு பதில்களுக்கு மேல் எனக்கு ஐந்தாவதாக ஒன்று தோன்றியது. "பாராட்டு விழா எடுத்துக் கொண்டிருப்போம்" என்று. என்னால் அதற்கு மேல் சிரிக்க முடியவில்லை. மக்கள் அதை ரசித்து, சிரித்தனர். ('அங்காடித் தெரு' படம் முடிந்த பின், வெளியே வரும்போது கேட்டது. "ஏம்பா, அவங்க மாதவரத்துல தங்கச்சிய பாக்கற சீன்ல வர்ற நாய் என்ன ஜாதி?)

சிம்புதேவன் ஆனந்த விகடனில் இருக்கும்போதே, அவரின் கார்ட்டூன்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்குள் உள்ள இன்னொரு 'சிகப்புத் தமிழனை' இந்தப் படத்தில் நான் பார்த்தேன். இது கொஞ்சம் அதிகம் என்று நினைப்பவர்களுக்கு, மன்னிச்சூ!! ஏனென்றால், உண்மையான சிங்கம் இறக்கும்போது வரும் வசனங்கள் யாருக்காக என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். அதே போல இறுதிக்காட்சியில் இரட்டைக் கோபுரத்தை தகர்ப்பது, விடுவிக்கும் கைதிகள் யார் யார் என்பதை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சற்றே மிகைப்படுத்தியிருந்தாலும், ரசித்தேன். சிரிக்கவில்லை. சிரிக்க முடியவில்லை.

எண் 305ல் கடவுள் படம் எனக்கு மிகவும் பிடித்தது. ஒரே முக்கிய காரணம், தமிழில், 'உருவங்கள் மாறலாம்', 'கடவுள்' படத்திற்குப் பிறகு மிகவும் வித்தியாசமான கோணத்தில் கடவுளைக் காட்டியதற்காக. ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ள என் நண்பர்களுக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை, இந்தப் படம் புரியவில்லை.

"சரிடா, இவ்ளோ எழுதறியே? நீ என்ன செய்யலாமுன்னு இருக்கே, இல்ல என்னதான் பண்ணியிருக்க? சிம்புதேவன் சொல்லித்தான் உனக்கு இதெல்லாம் தெரியணுமா?" என்று கேட்பவர்களுக்கு, அசிங்கதுடனும், வெட்கத்துடனும் சொல்லிக்கொள்வது "தெரியவில்லை, ஒன்றுமில்லை". இந்தப் படத்திற்கு சும்மா, ஜாலியாக போய் விட்டு வரலாம் என்றுதான் நான் போனேன். ஏதோ உறுத்தியதால், இந்தப் பதிவு. மீண்டும் சொல்வது, தவறாக இருந்தால் சொல்லவும், திருத்திக் கொள்கிறேன். பி ஹாப்பி..

Tuesday, April 27, 2010

இப்போது பிடித்த பத்து பாடல்கள்!!!

நான் சமீப காலங்களில் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் புதுப் பாடல்கள் பற்றிய சிறு பதிவு... இதில் தர வரிசை எதுவும் கிடையாது. திடீரென எங்கேயோ கேட்டதில் நச்சென்று மனதில் உட்கார்ந்து விட்டது. சில புதுப் பாடல்கள் படம் பார்த்த பின். பாடல்களைக் கேட்டு விட்டு, மக்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவற்றையும் பின்னூட்டமிடலாம்.

பாடல் : ஜில்லென்று ஒரு கலவரம்
படம் : லீலை
இசை : சதீஷ் சக்ரவர்த்தி

படமும் இன்னும் வரவில்லை, இசையமைப்பாளரும் புதியவர், நாயகன் நாயகியும் தெரியாது. எப்போதோ பண்பலையில் கேட்டது. மனதில் தங்கி விட்டது. தினமும் குறைந்தது ஏழெட்டு முறையாவது கேட்டு விடுவேன். இந்த பாடலின் திரையாக்கத்தைக் காண ஆவலுடன் இருக்கிறேன். நீங்களும் கேட்டு சொல்லுங்களேன்?

பாடல் : மழை பெய்யும்போது
படம் : ரேணிகுண்டா
இசை : கணேஷ் ராகவேந்தரா

இந்த படத்தை முதலில் நண்பர்கள் பார்த்து விட்டு வந்து இந்தப் பாடல் நன்றாக இருந்தது என்றனர். நான் கேட்டு விட்டு அப்படி ஒன்றுமே இல்லையே என்றேன். ஆனால், படம் பார்த்த பின் உண்மையிலேயே எனக்கு மிக மிக பிடித்தது. ஹரீஷ் ராகவேந்த்ராவின் குரலும், நடுவில் அவ்வப்போது வரும் ஹம்மிங்கும் அப்படியே எங்கோ போவது போலவே உள்ளது.

பாடல் : லேசா பறக்குது
படம் : வெண்ணிலா கபடிக் குழு
இசை : செல்வ கணேஷ்

இந்தப் பாடலும் படம் பார்த்த பின் மனதில் நச்சென்று நின்று விட்டது. காட்சியமைப்பும் அருமை. எங்களூர் திருவிழாவை ஞாபகப்படுத்தியது. ஆரம்பத்தில வரும் புல்லாங்குழலும், அதன் பின் வரும் குழுப் பாடலுமே அட்டகாசமாய் இருக்கும்.

பாடல் : அவள் அப்படி ஒன்றும்
படம் : அங்காடி தெரு
இசை : விஜய் ஆண்டனி

இந்தப் பாடலை ஏன் பிடிக்கும் என்று சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால் நமக்கு மிகவும் பிடித்த பெண்ணிடம் இந்தப் பாடலைப் பாட முடியாது. ஆனாலும் ஏதோ ஒன்று மிகவும் கவர்ந்தது. 'நாக்க முக்க' இசையைப்பாளர் அவ்வப்போது மட்டும் இது போன்ற நல்ல பாடல்களைத் தருகிறார். அவருக்கு இன்னும் நல்ல படங்கள் அமைய வேண்டும்.

பாடல் : The King Arrives
படம் : ஆயிரத்தில் ஒருவன்
இசை : G. V. பிரகாஷ்

முதலில் இந்த இசையைக் கேட்டபோது 'என்ன கொடும ஜி வீ இது?' என்று கேட்க தோன்றியது. படம் பார்க்கும்போதுதான், அதுவும், திரையரங்கில் அதன் அம்சம் புரிந்தது. இசைக்கேற்ற நடனமும் அருமையாக இருந்தது. இந்த இசையை எப்போதுமே ஹெட் போனில் கேட்டால் மட்டுமே நன்றாக உள்ளது.

பாடல் : உன் பேரை சொல்லும்போதே
படம் : அங்காடி தெரு
இசை : G. V. பிரகாஷ்

ஆடத் தெரியாத, ஆடப் பிடிக்காத என் போன்றோருக்கு, கஷ்டப் படாமல் ஆடுவதற்கேற்ற பாடல். படத்திலும் மிகவும் சிரமப்படாமல் ஆடியிருப்பார்கள். 'பீலிங்க்ஸ்' இருப்பவர்களுக்கு இன்னும் பிடிக்கும் என்று சொன்னார்கள். உண்மையா என்று 'பீல்' பண்ணுவோர் சொல்லலாம்.

பாடல் : இது வரை
படம் : கோவா
இசை : யுவன்

இந்தப் பாடலையும் முதலில் கேட்டபோது, என்னடா ஆரம்பமே அபசகுனமாக உள்ளதே என்று தோன்றியது. ஆனால், அஜீஷின் குரல் ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையுமே பின்னுக்குத் தள்ளி விட்டது. அநேகருக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

பாடல் : ஜூபி டூபி (zoobi doobi)
படம் : 3 இடியட்ஸ்
இசை : சாந்தனு மொய்த்ரா

வழக்கம் போல பார்த்தது, பிடித்தது சாதியில்லை. படம் பார்த்தபோது சற்றே 'தமிழ்ப்படம்' சாயல் இந்தப் பாடலில் தெரிந்தது. அத்துடன் மறந்தும் விட்டேன். அலுவலகத்தில் இந்தப் பாடலை ஒருவர் 'டோனாக' வைத்திருந்தார். எங்கேயோ கேட்டது போலவே உள்ளதே என்று போசித்து, யோசித்து கடைசியில் கேட்க ஆரம்பித்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

பாடல் : ஈரம் (Theme of Eeram)
படம் : ஈரம்
இசை : தமன்

'இந்தப் பையனுக்குள்ள ஏதோ இருந்திருக்கு பாரேன்' என்று நினைக்க வைத்த படம். இந்த 'தீமை' விட படத்தில் மற்ற இடங்களில் (குறிப்பாக கொலை நடக்கும்போது வரும் இசை) எனக்கு மிகவும் பிடிக்கும். படத்தின் மற்ற பாடல்களுமே அருமை.

பாடல் : நான் போகிறேன்
படம் : நாணயம்
இசை : ஜேம்ஸ் வசந்தன்

அது என்னவோ தெரியவில்லை. இவரின் இசையமைப்பில் வரும் படங்கள் அனைத்திலும் ஒரு பாடல், குறிப்பாக ஒரு மென்மையான காதல் பாடல் வந்து விடுகிறது. அதுவும் நன்றாகவும் இருக்கிறது. சுப்ரமணியபுரம், பசங்க, நாணயம், காவலர் குடியிருப்பு என எல்லாவற்றிலுமே. மிக அருமையான, மென்மையான பாடல்.

அவ்வளோதாங்க.. என்னடா சம்பந்தமே இல்லாம இவனும் பாட்டப் பத்தி எழுதறானேன்னு யோசிக்கிறீங்களா? பதிவு போட்டோ ரொம்ப நாளாச்சா?? ஒரு வருகைப் பதிவுதான்... அம்புட்டுதேன்.. நீங்களும் வருகைய பதிவு செஞ்சிடுங்கோ!!!

Saturday, February 6, 2010

நான் படமாக்க விரும்பும் கதைகள் - 2

நான் முதலில் படமாக விரும்பிய கதையை படித்திருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த பதிவைப் படிக்கலாம். முதல் கதையைப் போல இதுவும் த்ரில்லர், ஆக்ஷன் கதைதான். இதை படமாக எடுத்தால், கண்டிப்பாக பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டும். நிறைய எதிர்ப்பு வரவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, படத்திற்கு விளம்பரம் கிடைக்கும். மற்றபடி படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.

காசனோவா '99:

எண்டமூரி வீரேந்த்ரநாத் என்ற தெலுங்கு கதையாசிரியரின் கதை. (தமிழ் மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன்). இவர் படமெல்லாம் கூட இயக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களுக்கு முன் வந்த கதை. ஒரு சதவிகிதம் வரலாற்றையும், மிச்சம் கற்பனையும் கலந்த நாவல். படிக்கும்போது கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படித்த கதை. எனக்கு சரியாக, கோர்வையாக கதை சொல்ல வராது. எனவே, சற்றே பொறுத்துக் கொள்ளவும்.

1971 டிசம்பர் 16, பாகிஸ்தானின் படைகளைத் தோற்கடித்து விட்டு, பங்களாதேஷை, சுதந்திர நாடாக்குகிறது இந்தியா. அவமானத்தால் கொதிக்கும் பாகிஸ்தானோ, சதி வேலைகளில் ஈடுபட்டு, பங்களாதேஷின் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானைக் கொன்று விடுகிறது. மேலும், இந்தியாவையும் காஷ்மீரையும் பிரித்து தன்னுடன் இணைக்க விரும்புகிறது. (இத்துடன் வரலாறு முடிகிறது). அதற்காக ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறது. அவனுடைய திட்டமும் அபாரமாக இருக்கிறது. அதன் மூலம் எப்படியும் அடுத்த நாற்பது வருடங்களில் எப்படியும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிடலாம் என்று நம்புகிறது. (அதாவது புட்டோ மட்டும்) அவன் ஒருவனை மட்டும் நம்பி, கிட்டத்தட்ட, நூறு கோடியை கொடுத்து, அவனை 1975ல் இந்தியாவுக்கு அனுப்புகிறார் புட்டோ. அவன் பெயர் ஃபாக்ஸ் (Farrook Om Xeviour - FOX).

இப்போது டைட்டில்ஸ்.

அதன் பின் பாகிஸ்தான், இந்தியா இரண்டிலும் நிறைய அரசியல் மாற்றங்கள். காலமும் யாருக்கும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. புட்டோ தூக்கிலடப்படுகிறார், ஜெனரல் ஜியோ விமான விபத்தில் இறக்கிறார், பெனாசிர், நவாஷ் என பாகிஷ்தானிலும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மற்றும் பலர் என்று மாறி, தற்போது ஸ்ரீ வாத்சவா பிரதமராகி உள்ளார். பாக்ஸ் பற்றிய விஷயங்களும் பாக்கின் அதிகார வர்க்கத்தில் மறக்கப்படுகின்றன. இதெல்லாம், பின்னணியில் காண்பிக்கலாம்.

டைட்டில்ஸ் முடிந்தவுடன், டாக்டர் மதுஷாலினி, B.D.S போர்டு முன் காமரா நிற்கிறது. சென்னையில், திருவல்லிக்கேணியில், ஒரு சந்தில் உள்ள, அழகான பல டாக்டர். தானுண்டு, தன் வேலையுண்டு, உலகத்தில் அனைவரும் நல்லவர்களே என்று நம்புகிற அப்பாவி. தற்போது ராஜேஷ் என்ற பணக்கார இளைஞன் மட்டும் பின்னால் துரத்துகிறான். மற்றபடி பிரச்சினை எதுவுமில்லை.

அடுத்து, மாந்தாதா (Mandhatha). பிரதமரின் முதன்மை பாதுகாவலன். கடமைக்காவே வாழ்பவன். அதனாலேயே, அம்மாவின் முதுத்தண்டு உடைபட்டது, மனைவி பிரிந்து விட்டாள், உடன் பிறந்த தம்பி எங்கோ ஓடி விட்டான். ஆனாலும், கடமைக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவன்.

ஸ்வப்னமித்ரா. கடமைக்காக அம்மாவின் உயிரையும் பலியிட துணிந்த அண்ணனை விட்டு, தப்பி ஓடி வந்து, எப்படி எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு விமானப் பயிற்சி முடித்து விட்டவன். இவன்தான் காசனோவா (Casanova). எந்த பெண்ணும் திரும்பிப் பார்க்கும்வரை பின்னால் அலைவது, பார்த்தவுடன் கழட்டி விட்டு, வேறொரு பெண்ணை தேட வேண்டியதுதான். அவனது அடுத்த குறி, மது ஷாலினி.

இந்த மூவரையும் முக்கியமாக வைத்து, எப்படி பாக்ஸ் யார் என கண்டு பிடித்து நாட்டை காப்பாற்றுகிறார்கள் என்பதை, சூடாகவும், சுவையாகவும் சொல்லியிருப்பார். இவர்கள் தவிர, நிறைய கதாபாத்திரங்களை கதையில் நுழைத்திருப்பார். அவை, அங்கங்கே கதையின் திருப்பத்திற்கு உதவும். ஆனால், நாவலில் அவர்களில் முழு பின்னணியை விவரித்திருப்பார். அவற்றை தவிர்த்து விடலாம். உண்மையாகவே, கதையை முழுதாக படித்தீர்கள் என்றால், என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று உங்களுக்குப் புரியும்.

பல சம்பவங்கள் (இறுதிக்காட்சி உட்பட), பாகிஸ்தானில் நடக்கும். அது மட்டுமன்றி சீனா வேறு அங்கங்கே வந்து வில்லத்தனம் பண்ணும். அது மட்டுமன்றி, உலகளாவிய வகையில் உள்ள உளவுத்துறையினர் (பிளாண்டர்ஸ் - அடுத்த நாட்டில் நிரந்தரமாக குடியேறி, ரகசியங்களை வாங்கி சுந்த நாட்டிற்கு கொடுப்பவர்கள்) பற்றியும், கடைசியில் அவர்களுக்கு நிகழும் கதியும், அப்பப்பா.

கதையிலும், நிறைய லாஜிக் பொத்தல்கள் இருக்கின்றன. கோனூசி வைத்து தைத்து விடலாம். கதையின் நீதி, ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும், தசாவதாரம் வில்லன் கமல் சொல்வது போல, இந்தியாவில் பணமிருந்தால் யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை அழகாக சொல்லியிருப்பார்.

நாவல் பற்றிய விவரங்கள்:
தலைப்பு : காசனோவா 99
ஆசிரியர் : எண்டமூரி வீரேந்த்ரநாத்
வெளியிடுவோர் : அல்லயன்ஸ் நிறுவனம்.
விலை : ரூ.75-

பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன