Monday, July 18, 2011

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!!

திரைப்படம்:

போன பிட்டில் கூறியதற்குப் பின், நல்ல படம் என்று எதையுமே பார்க்கவில்லை. 'கோ' ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். அழகர்சாமியின் குதிரை இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும், அந்த சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த கதை. (மீண்டும் படித்தபின்தான் தெரிந்தது). அதன் பின் ஆர்வமாக பார்க்க வேண்டும் என்று நினைத்த படங்கள் இந்த மாதம்தான் வந்தன. ஒன்று ஏண்டா பார்த்தோம் என்றானது. மற்றொன்று. முன்னதையும் சேர்த்து ஜீரணித்து விட்டது.

அவன் இவன் - என்னதான் பாலா நினைத்தாலும், அவரால் அவரை மாற்றிக்கொள்ள முடியாது போல. படத்தில் எல்லாவற்றையும் அந்தரத்தில் விட்டு விட்டு 'சுபம்' மட்டும் போட்டால் பிடிக்கும் என்று நினைத்து விட்டாரோ என்று தெரியவில்லை. மற்ற படங்களில் காட்சிகளில் இருந்த அழுத்தம், இதில் இல்லை. பிதாமகன் படத்தில் விக்ரம் பேசமாட்டார் என்று நாம் நினைப்போம். ஆனால், அவர் உரையாடுவது போல காட்சிகளை பாலா வைக்கவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக, இடைவேளைக்கு முன், கொல்லப்பட்ட போலீஸின் உடலை எரித்துவிட்டு வீட்டிற்கு வந்த பின், சூர்யா உரையாடும் காட்சி. "நீ என்ன பண்ணிட்டு வந்திருக்க தெரியுமா?" என்று கேட்பார். ஆனால், என்ன, எனக்கு பொழுதே போகாத தருணத்தில் பார்த்த படம் என்பதால், பொழுது போனது. அதன் பின் 180. சில பாடல்களுக்கும், ஒளிப்பதிவிற்கும் நன்றாக இருந்தது.

ஆரண்ய காண்டம். நம்முடன் படிக்கும் ஒரு மாணவன், கணக்கு பாடத்தில், வழிமுறைகளை வித்தியாசமாகக் கையாண்டு, விடையை கண்டறிந்தால், "வேற எங்கயாவது டியுஷன் போறானோ?" என்று சந்தேகப் படுவோம். அதே போலவே இந்தப் படமும். "எந்த ஊர்ப் படமோ தெரியலியே".

என்னதான் இருந்தாலும், இந்த முயற்சி ஒரு துணிச்சல் என்றே சொல்லலாம். அதுவும், நாம் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. டிரைலரில் காண்பித்த காட்சிகளுக்கு நேர் மாறான காட்சிகள் படத்தில் வந்தன. கடைசி வரை மக்கள் சிரித்த சீரியஸ் படங்கள் நிறைய இருந்தாலும், இது சற்றே வித்தியாசமானது. கூரான, காயப்படுத்தும் வசனங்கள் இருந்தாலும், நினைத்து நினைத்து சிரிக்கும் வசனங்களும் உண்டு. சிறு சிறு காட்சிகளிலும் உள்ள வித்தியாசம். குறிப்பாக சப்ப சுப்புவை விபத்திலிருந்து காப்பாற்றும் இடம். அங்கே போகும் ஆட்டோக்கள் இரண்டும் 'ஓரம் போ' படத்தில் வருபவை. கட்டை விரல் காட்சி. இறுதியில் "சொதப்பிட்டியா சுப்பு?" என்று கேட்கையில் அவள் "இல்லையே" என்று சொல்லும் இடம்.

பின்னணி இசை. கொஞ்சம் வித்தியாசமாக இருப்பவை, நமக்கு பிடித்தவர்கள் செய்திருந்தால், "சான்சே இல்ல... எப்படி வித்தியாசமா பண்ணியிருக்கான்" என்போம். பிடிக்காத ஆள் என்றால், "கேவலமா இருக்கு, கொஞ்சம் கூட ஒட்டவே இல்ல" என்போம். யுவனை எனக்குப் பிடிக்கும். தேவையில்லாத இடங்களில் இசையின்றியும், பழைய பாடல்கள் போட்டும், நன்றாகவே இருந்தது. மொத்த பின்னணி இசை பதினைந்து நிமிடங்களை தாண்டாது போல. தொகுத்துள்ளனர். எனக்கு மிகவும் பிடித்தது சம்பத் போலிசிடமிருந்து தப்பிக்கும்போது வரும் இசை ( 2.46 முதல் 4.50 வரை) மற்றும் லாட்ஜுக்கு கஜேந்திரனின் ஆட்கள் வரும்போது வரும் இசை (6.25 முதல் 7.15 வரை).



பழைய பாடல்கள் வரும் இடங்களில், அவை காட்சிகளுக்கு பொருந்தும் வகையில் அமைத்திருப்பதாக இயக்குனர் கூறியிருந்தார். எனக்கு ஒரு சில இடங்கள் பிடிபட்டன. பெயர் போடும்போது "பாடல்கள் - வாலி, கங்கை அமரன்" என்று வந்தது. ஏனென்று தெரியவில்லை. ஏனெனில் எனக்கு தெரிந்து வைரமுத்து எழுதிய பாடல் கூட வரும்.

எனக்கு இணை நடிகர்களில் மிகவும் பிடித்தவர்கள் பசுபதி, கிஷோர், சம்பத். (பிரகாஷ் ராஜ் கணக்கில் வரமாட்டார்.. அவர் தனி) ஒரு சில படங்களை இவர்களில் யாரவது ஒருவர் இருந்தால் கூட நான் பார்ப்பேன். இதுவரை ஒருவர் கூட ஏமாற்றியதில்லை. மொத்தத்தில் 'ஆரண்ய காண்டம்' அருமையான, நல்ல படம். ரசிப்பவர்களுக்கு மட்டும்.

வேணுவனம்: ஆனந்த விகடனில் 'மூங்கில் மூச்சு' எழுதும் சுகாவின் வலைத்தளம். அருமையான எழுத்து நடை. எனக்கு மிகவும் பிடித்த தொடர். இந்த பதிவிலும் அதே போலவே. முடிவில் அவர் வைக்கும் நகைச்சுவை 'பஞ்ச்' மிக நன்றாக இருக்கும். வாசித்துப் பார்க்கவும்.

நான் மீண்டும் வருவேன்.