Saturday, May 25, 2019

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

கொஞ்சம் வெயிலின் கொடுமையோடு, எனது கொடுமையையும் சேர்த்து அனுபவிக்கவும். 

அரசியல்:

எப்படியோ தேர்தல் முடிந்து விட்டது. நான் கொஞ்சம் கர்நாடகா சட்டமன்றம் போல ஆகும் என நினைத்தேன். சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், மம்தா எல்லோரும் அதே போலத்தான் நினைத்திருப்பார்கள் போல. 

சரி நம் விதி வலியது. தமிழ்நாடு வழக்கம் போல தனது வேலையைக் காட்டி விட்டது. இன்னமும் பிஜேபி புரிந்து கொள்ளாத ஒரே விஷயம் என்னவென்றால், ஏன் தமிழகத்தில் வெல்ல முடியவில்லை என்றால், மீண்டும் மீண்டும் அவர்கள் செய்யும் தவறு என்னவென்றால், நம்மூரில் மத வெறியைக் கிளப்ப முயற்சி செய்வதுதான். 

எனக்கு இன்னமும் புரியாத விஷயம், முகப்புத்தகத்தில், கீச்சுகளிலும் பிஜேபியை ஆதரிக்கும் ஆட்கள் வாக்களித்தாலே ஒரு 4 சதவிகிதம் வர வேண்டும். நம்மூர் ஆட்கள் பல பேர் கொஞ்சம் நக்கல் பிடித்தவர்கள். யாராவது ஏதாவது சொன்னால், அதை எதிர்க்க வேண்டும். அது அவர்கள் ஆதரிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி, உடனே அதை எதிர்ப்பார்கள். அது போலத்தான், யாராவது பிஜேபியை எதிர்த்தால், அங்கே போய் பதிவிட்டவர்களை எதிர்க்க வேண்டியது, கடைசியில் வாக்களிக்கும்போது வழக்கம் போல எதிர்த்து வாக்களிக்க வேண்டியது. 

இன்னொரு விஷயம், திமுக பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாய் பெற்ற தெங்கம்பழம் போல. கண்டிப்பாக எதுவும் உருப்படியாக செய்ய முடியாது. செய்தாலும் அதை பங்கு போட அதிமுக வந்து விடும். இனி வழக்கம் போல வெளிநடப்புகளும், புலம்பல்களும்தான் இருக்கும். நம்மாட்கள், வழக்கம் போல நம் வேலையை பார்ப்பார்கள். 

யோசித்துப் பாருங்களேன், ஒருவேளை மொத்தமாக தமிழத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், ஊழல் கொடூரமாக நடக்க ஆரம்பிக்கும். அதே போல, சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக திமுக வெற்றி பெற்றிருந்தாலும் அதேதான். 

நாங்க எவ்ளோ புத்திசாலி பாத்தீங்களா. 

சரிடா, ஆனா உனக்கு எதுவுமே நல்லதே செய்ய மாட்டார்களே. 

ஆமாமா, அப்படியே செஞ்சுட்டாலும். கடைசி வரைக்கும், மாத்தி மாத்தி எல்லாரையும் கதற வச்சிக்கிட்டே இருப்போமுல்ல. 

விமர்சனம்:

முன்பெல்லாம், நிறைய உலகப்பட விமர்சகர்கள் இருந்தார்கள். மற்ற மொழிப்படங்கள் பற்றி நிறைய எழுதுவார்கள். குறிப்பாக நிறைய கொரியன் படங்கள் பற்றியும் படித்து, அதில் சில படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்போம். ஆனால், இப்போது அப்படி யாரும் எழுதுவது போல தெரியவில்லை. இன்னும் பல பேர் காணொளி இடுகிறார்கள், அனால், அது என்னவோ படிப்பது போல இல்லை. சரி விடுங்கள். 

ரொம்ப நாள் கழித்து ஒரு கொரியன் படம். அதுவும் யாருடைய பதிவிலும் படிக்கவில்லை. அது தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது என்று படித்ததால் பார்த்தேன். 

மிஸ் கிரானி (Ms. Granny - 2014): சிறு வயதில் கணவனை இழந்து, தனது ஒரே மகனை கஷ்டப்பட்டு வளர்த்து, அதனால் பேரன் பேத்தி பெரியவர்கள் ஆனாலும், மகனை தங்குவதால், மருமகளுக்கு கஷ்டம். பேத்திக்கு பாட்டியின் போக்கு பிடிக்கவில்லை, பேரன் மட்டும் ஆதரவு.


மாமியாரின் தினசரி அழுத்தம் காரணமாக, மருமகளுக்கு மாரடைப்பு ஏற்பட, மகனோ தனது தாயை ஆசிரமத்தில் சேர்த்த முடிவு செய்கிறார். இதனால் வருத்தமாடியும் தாய், ஏதோ நினைப்பில் வெளியே போகிறார். கடைசி ஆசை போல, ஒரு கடையில் புகைப்படம் எடுக்கிறார். எடுத்தவுடன், 20 அவரது இளைஞியாக மாறி விடுகிறார். 

இனி தனது விருப்பம் போல வாழ ஆசைப்படுகிறார். பாட வேண்டும் என்ற சிறு வயது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார் அவரது பேரன் அவர் மீது காதல் வயப்படுகிறார். அவருக்கு, ஒரு தொலைகாட்சி நிறுவனர் மீது காதல், கடைசியில் தமிழ் படம் போல, படம் முடிகிறது. 

படமும் ஏற்கனவே நிறைய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது போல. எல்லாமே, இந்த காணொளியில் உள்ளது. 


கண்டிப்பாக பார்க்கலாம். தெலுங்கில் பார்க்க கொஞ்சம் பயமாக இருக்கிறது. பார்ப்போம். 

இளையராஜா: 


எப்படியோ எல்லா கல்லூரிகளுக்கும் சென்று வந்து விட்டார் போல. இளையராஜாவிடம் உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால், அவருக்கு எல்லாமே தெரியும்தான். ஆனால், இயக்குனர் என்ன, எப்படி கேட்கிறாரோ அதை அவர் கொடுத்தாலே போதும். ஆனால், இது போதும் என்று நினைப்பதாலேயே அவருடைய சிறந்த படைப்பை அவரால் கொடுக்க முடியவில்லை. 

அவதாரம் படத்தின் 'தென்றல் வந்து' பாடல், நாசர் கேட்காமலே கொடுக்கப்பட்டது. அதே போல, ஒவ்வொரு இயக்குனருக்கும் இருக்காதல்லவா. இயக்குனர்களும், அவரிடம் கேட்க பயப்படுகிறார்கள் போல. 

எல்லா இயக்குனர்களும், ஒரு கடமைக்கு, ஆசைக்கு அவருடன் பணி புரிந்து விட்டு, பிறகு அவரவர்க்கு இஷ்டப்பட்ட இசையமைப்பாளர்களுடன் சென்று விடுகின்றனர். கவனித்துப் பாருங்களேன். கடந்த 10 வருடங்களில், எந்த இயக்குனரும் தொடர்ச்சியாக இளையராஜாவுடன் பயணிக்கவில்லை. ஓரிரு படங்கள்தான். இளையராஜா இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என்று சொன்ன பால்கி கூட மாறி விட்டார். 

இசைக்கு வயதில்லை. மக்களின் இசையாக மீண்டு(ம்) வர வாழ்த்துக்கள்.