Thursday, April 27, 2017

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

எப்படியாவது மாதம் ஒரு பதிவு போட்டு விட வேண்டும் என்ற குறிக்கோளை வைத்திருப்பதால், எதையாவது எழுத வேண்டி உள்ளது. "அப்படி என்னடா பெரிய சிவகாமியின் சபதம், இல்ல சரசுவதி சபதமா எடுத்திருக்க, எங்கள போட்டு வதைக்க" என்று எண்ணினாலும் பரவாயில்லை.

எஸ்.பி.பி - இளையாராஜா உரிமை பிரச்சினை: 


என்னப்பா இதப்பத்தி நீ எதுவுமே சொல்லவேயில்லையே என்று யாரும் கேட்கவில்லை. என்ன எழுவதென்று தெரியாததால் இதைப் பற்றி எழுதுகிறேன். முதலில் மேடையில் பாடுவது பிடிக்காது. அதாவது அடிக்கடி ஒரு பாடலை எப்படிக் கேட்டு பழகினோமோ, அதையே கேட்பதுதான் என் பழக்கம். எனவே "நீங்கள் மேடையில் பாடுங்க, பாடாம போங்க. எனக்கு பிரச்சினையே இல்ல" என்பதுதான் என் கருத்து.

ஆனால், பாலு எனக்கு இந்த காப்பிரைட் பற்றியெல்லாம் தெரியாது என்று சொன்னதுதான் எனக்கே (?) கோபம் வந்தது.சில ஆண்டுகளுக்கு முன், இவர் தலைமையில் பாடகர்கள் அனைவரும் "எங்களுக்கும் ராயல்டியில் பங்குண்டு" என்று பேட்டி எல்லாம் கொடுத்தார். அது மட்டும்தான் உறுத்தல். மற்றபடி இளையராஜா கொஞ்சம் பேசியிருக்கலாம்.

கவண்:

விமர்சனங்கள் இருக்கவே, சரி என திரையரங்கம் சென்று பார்த்தேன். கொஞ்சம் அங்கங்கே இழுவையாக இருந்தாலும், ஒரு முறை பார்க்கலாம். படம் முடிந்த பின்புதான் "எப்படிடா இப்படி எல்லாம் பண்ண முடியும்" என்று தோன்றியது.

பாகுபலி 2:

பயப்படாதீங்க. சத்தியமா இன்னும் பாக்கல. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாருன்னு எனக்கு தோன்றத சொல்றேன். எனக்கு தெரிஞ்சு ஏதோ ஒரு உள்குத்து செஞ்சு ராணா ராஜா ஆகுறாரு. அதுக்கு அப்புறமா, பிரபாஸ் வெளிய போய் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குறாரு.

ஒரு கட்டத்துல ராணாவோட கொடும தாங்காம மக்கள் பிரபாஸ்கிட்ட சொல்றாங்க. போர் நடக்குது. பிரபாஸ் ஜெயிக்கிற மாதிரி இருக்காரு. ராணாவாக கொல்லப் பாக்குறாரு. ராணாதான் மன்னர், அவர காப்பாத்தணும்னுதான் கட்டப்பா அவரக் கொல்றாரு. அதே நேரம் அனுஷ்காவுக்கு கொழந்த பொறக்குது. மீதிக்கதை உங்களுக்கே தெரியும். 

அடிக்கடிக்கடி (தப்பால்லாம் அடிக்கல) படம் பாக்குற யாரா இருந்தாலும், இதேதான் தோணும். பாப்போம்.

இப்போதெல்லாம் பெரியதாக எழுதுவது என்பது குறைந்து விட்டது. பல பதிவர்கள் எல்லாம் எழுதுவதை விட்டு விட்டு, காணொளி மூலம் வருகிறார்கள். இல்லையெனில், கீச்சுக்களிலும், முகப்புத்தங்களிலும்தான் எழுதுகிறார்கள். ஒரு கட்டத்தில் புத்தகம் படிப்பது என்பது எப்படி குறைந்ததோ, அதே போல பதிவுகளும், பதிவர்களும், குறிப்பாக அதைப் படிப்பவர்களும் குறைந்து வருகிறார்கள்.

இது முழுக்க முழுக்க என் கருத்துதான். ஏனென்றால், எனக்கே கொஞ்சம் பதிவிடுவதற்கான ஆர்வம், நேரம் எல்லாமே குறைந்து வருகிறது. கிட்டத்தட்ட 8 வருடங்கள் நாட்குறிப்பு எழுதி வந்தேன். இதே போன்ற சூழ்நிலையில்தான் அதை நிறுத்தினேன். அது போலவே ஆகி விடுமோ என்ற பயம் உள்ளது. எனவேதான் எப்பாடு பட்டாவது (அல்லது படுத்தியாவது) மாதம் ஒரு பதிவிடுகிறேன்.