Thursday, April 14, 2016

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

என்னுடைய அருமை பெருமைகளைப் பற்றிப் படிக்காதவர்கள் இப்போது போய்ப் படித்து விடுங்கள். அப்புறம் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது.

விமர்சனம்:

கடைசியாக பசங்க - 2 படத்திற்கு குடும்பத்தோடு திரையரங்கம் சென்றேன். மகள் படம் பார்ப்பாள் என நினைத்தால் பாதியில் தூங்கி விட்டாள். ஆயினும் எங்களை ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. அதன் பின் எந்த படமும் திரையரங்கம் சென்று பார்க்க முடியவில்லை. இது ஒரு சாக்குதான். 10 நிமிடம் நடந்தால் வெற்றி திரையரங்கம். வண்டியில் சென்றால் இரண்டே நிமிடம். ஆனாலும் ஏதோ ஓர் சோம்பேறித்தனம்.

ரஜினி முருகன் படம் பார்க்கலாம் என நினைத்தால் அந்த நேரத்தில் மகள் திரையரங்கம் செல்லக் கூடாது, வேண்டுமானால் மடிக்கணினியில் எப்போதும் போல(?) பார்க்கலாம் என்று சொல்லி விட்டாள். திரையரங்கம் தான் செல்ல வேண்டும் என்றால், அப்போது ஏன் மற்ற படங்களை மடிக்கணினியில் பார்த்தீர்கள் என்று கேட்டாள். வாயடைத்துப் போய் விட்டது. அப்போதுதான் உறைத்தது, நாம் ஏனோதானோ என செய்யும் காரியங்கள் எப்படி குழந்தைகள் மனதில் தவறாக பதிகின்றன என்று. அப்போதே முடிவு செய்தேன், இனி அடிக்கடி திரையரங்கம் செல்ல வேண்டும் என்று. ஆனால், பல படங்கள் குழந்தைகளை கூட்டிக் கொண்டு போக முடியாதபடி உள்ளன.

இதுவரை பார்த்த வரையில் மனத்தைக் கவர்ந்தவை என்றால், இறுதி சுற்று, விசாரணை, சேதுபதி மற்றும் பிச்சைக்காரன்தான். என் மகளுக்கு தெரிந்தது விஜய், சிவகார்த்திகேயன்தான். எனவே, தெறி, தூத்தேறி என்று சொல்லும் வகையில் இருந்தாலும், அதை குடும்பத்துடன் திரையரங்கம் சென்று பார்க்கலாம் என்றுதான் உள்ளேன். இவர்கள் இருவரும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல், வித்தியாசம் காட்டாமல் நடிப்பதால், குழந்தைகள் அவர்களை சுலபமாக எந்தப் படமாக இருந்தாலும் அடையாளம் கண்டு கொள்கிறார்கள் போல. ஊரில் 'ஜங்கிள் புக்' படத்திற்கு கூட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள். பாதிப்படத்தில், அதிலும் பாம்பு வரும் காட்சியில் கதறியழ ஆரம்பிக்க, உடனே கிளம்பி வந்து விட்டார்கள். ஆனாலும் இன்று புலி படத்தை பயப்படாமல் பார்த்தாள். என்னவோ போடா மாதவா.

ஹலோ நான் பேய் பேசறேன்: மனைவியும் மகளும் ஊருக்குப் போய் விட்டதால், மீண்டும் தனிமை வாழ்க்கை. எனவே, செய்த பாவங்களுக்கு பலனாக திரையரங்கம் சென்று படம் பார்ப்போம் என இந்தப் படத்திற்கு போனேன். கிட்டத்தட்ட 'யாமிருக்க பயமே', 'டார்லிங்' படங்களின் அடுத்த பாகம் போலத்தான் இது. படத்தின் முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும் சம்பந்தமே இல்லை. படத்தின் ஆரம்பத்திலேயே கருணாகரன், ஓவியா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியாவது இருந்திருக்கலாம். ஆனாலும், அந்த அந்த கதைப் பாடல், அட்டகாசம்.

புதிய நியமம்: எதேச்சையாகவே இந்தப் படம் பார்க்க நேர்ந்தது. மோகன்லால் 'த்ரிஷ்யம்' படம் மூலம் வெற்றி அடைந்தது போல, அதே வெற்றியை அடைய வேண்டும் என அதே போன்ற கதையை எடுத்து மம்முட்டி நடித்திருப்பார் போல. இவ்விரு படங்களின் ஒற்றுமை பற்றி ஒரு கட்டுரை தினமலரில் வந்துள்ளது. இந்தப் படத்தில் வரும் வில்லன் ஒருவர், தமிழன், துணி தேய்ப்பவர். அதே போல, மம்முட்டி ஒரு தள்ளு வண்டி கடைக்காரரிடம் (கருப்பாக இருப்பார்) அண்ணாச்சி என தமிழில் கேட்க, அவரோ, "தோலின் நிறம் பார்த்து ஆளை தவறாக எண்ணாதே" என்பார். மலையாளப் படங்களில் இது சகஜம்தான், என்றாலும் இன்னும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் முழுக்க முழுக்க தமிழர்கள் வில்லனாக மட்டுமே காட்டப்படுவார்கள். இப்போது போனால் போகிறது என அவ்வப்போது நல்லவர்களாக காட்டபடுகிறார்கள். இதிலும் நயன்தாரா தமிழ்தான் (பாதி?).

கருத்து கந்தசாமிகள்:

முன்பெல்லாம் பொதுவாக பெட்டிக்கடையில் பேப்பர் படித்து விட்டு, அங்கேயே நான்கு பேர் சேர்ந்து வெட்டி நியாயம் பேசி விட்டு, சண்டை போட்டு விட்டு சென்று விடுவார்கள். ஆனால், இப்போதெல்லாம் ஆன்-லைனில் படித்து விட்டு கருத்து போட முடிவதால், நிறைய கருத்து கந்தசாமிகள் வந்து விட்டனர். நிறைய கருத்துகள் வருவது தினமலர், விகடன், தமிழ் ஹிந்து போன்றவைதான்.

இதில் தமிழ் ஹிந்துவில் ஓரளவு நியாயமாக இருக்கும், அல்லது அவர்கள் தேவையில்லாத சர்ச்சை ஏற்படுத்தும் கருத்துக்களை அனுமதிப்பதில்லை என நினைக்கிறேன். தட்ஸ்தமிழில் கேட்கவே வேண்டாம், நா, காது, கை என உடம்பின் அனைத்து பாகங்களும் கூசும் அளவிற்கு வார்த்தைகள் இருக்கும். முன்பு ஒரு முறை அவர்கள் இது பற்றி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்கள். அது என்னவாயிற்று என்றே தெரியவில்லை. விகடனில் ஒரு சிலர் உள்ளனர். செய்தி எதைப்பற்றி இருந்தாலும், மக்கள் பொதுவாக என்ன கருத்து இடுவார்களோ அதற்கு எதிர் வினையாக கருத்திடுவது. இன்னும் சில பேருக்கு அதில் எதிர்மறை ஓட்டு போடுவதே வேலையாக வைத்திருப்பார்கள்.

தினமலர் பற்றி சொல்லவே வேண்டாம். பத்திரிக்கையே பொதுவாக குறிப்பிட்டவர்களுக்கு ஆதரவாக இருக்கும். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல இருக்கும். குற்றம் சார்ந்த செய்திகளில், குற்றவாளி முஸ்லீமாக இருந்தால், குற்றவாளி பற்றி ஒருமையில் இருக்கும் (செய்தான், வந்தான், போனான் என). அது கொலை, கொள்ளை. வழிப்பறி, தீவிரவாதம் எதுவானாலும் சரி. ஆனால், மற்றவர்கள் என்றார், மரியாதையாக இருக்கும் (செய்தார், வந்தார், போனார் என). இது போக தீவிரவாதம் என எந்த செய்தி வந்தாலும், வாசகர் கருத்து எல்லாமே "இவனுங்கள நம்ம நாட்ட விட்டு தொரத்தனும், இந்தியா இந்துக்களுக்குத்தான்" என்றெல்லாம் கருத்துகள் வரும்.

இங்கு அரசியல் (தவிர வேறெதுவும்) பேசாதீர்:

ஏற்கனவே சில அன்பர்கள் 'நமக்கெதுப்பா அந்த கண்றாவி எல்லாம். நீ பாட்டுக்கு ஜாலியா நாலு பதிவு எழுது. இந்தா, இளையராஜா தேசிய விருது வாங்கி இருக்காரு. அதப்பத்தி எழுது. நமக்கெதுக்கு அரசியல்' என்றெல்லாம் சொல்லி இருந்தார்கள். ஆனாலும், நானும் ரவுடிதான், எனக்கும் எல்லாம் தெரியும் என நிரூபிக்க வேண்டி இருப்பதால் இந்தப் பகுதி.

இப்போதெல்லாம் அரசியல் என்பது தெளிவான வியாபாரம் ஆகி விட்டது. பொதுவாக 'ஆத்துல போற தண்ணில, நாம கொஞ்சம் அள்ளிக்கிட்டா என்ன' என்ற மனநிலையில் இருந்தவர்கள் இப்போது 'ஆத்துல தண்ணி மாதிரி ஏதாவது போனா போதும், அதனால வேணா நாம தண்ணிய குடிச்சிட்டு மூ___ தை விடுவோம்' என்று ஆகி விட்டார்கள். கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் கிடையாது. (இதெல்லாம் ஆரம்பத்துல இருந்தே கெடையாதேப்பா). சரி விடுங்க. ஒரு சில கருத்துக்களை சொல்லி விடுகிறேன்.

ஞாபகம்/மறதி: இவை இரண்டுமே நம் மக்களுக்கு இருப்பதால்தான் அரசியல்வாதிகளுக்கு லாபம். எதையெல்லாம் மறக்க வேண்டுமோ, அதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்வது, எதையெல்லாம் நினைவில் வைக்க வேண்டுமோ, அதையெல்லாம் மறந்து விடுவது. இதுதான் பெரும் பிரச்சினை. இவற்றில் ஊடகங்களின் பங்கும் உள்ளது. அது தனி.

ஐந்து வருடங்களுக்கு முன் கூட தேவையில்லை, இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த மக்களவை தேர்தலின் போது, ஒவ்வொரு கட்சியும் என்ன வாக்குறுதி கொடுத்தார்கள், வென்றிருந்தாலும், தோற்றிருந்தாலும், அந்த பிரச்சினைகளுக்கு என்ன நடவடிக்கை அவர்கள் சார்பில் எடுத்திருந்தார்கள் என்பதை நினைவு கூர்ந்தாலே போதுமே. இன்னும் வேண்டுமானால், எல்லா நாளிதழ்கள், வார இதழ்களும் இப்போது 2006ம் ஆண்டு முதலான மின்னணு இதழ்களை வைத்துள்ளன. அதை படித்துப்பாருங்களேன். இப்போது இருக்கும் ஒரு கட்சி மீதும் உங்களுக்கு நல்ல எண்ணமே வராது. அப்படியே எல்லாம் நினைவூட்டினாலும், தேர்தலின்போது வாக்குப்பெட்டி முன் நிற்கும்போது, நினைவுக்கு வருவது, இரட்டை இல்லை, உதய சூரியன், கை, போன்றவைதான்.

ஒவ்வொரு தேர்தலுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் சின்னங்கள் மாற்றப்பட வேண்டும் என்று மட்டும் சொல்லிப்பாருங்கள். மக்கள் பிரச்சினைக்கு ஒன்று கூடாத இந்தக் கட்சிகள் கதறிக்கொண்டு ஓரணியில் திரண்டு போராட்டம் நடத்தும்.

சகாயம்: 'அவருதான் அரசியலுக்கு வரலேன்னு சொல்லிட்டாரே?' என்கிறீர்களா. வேறு ஒன்றுமில்லை. நிறைய பேர் சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்கிறார்கள் அல்லவா. உண்மையில் மக்கள் பிரதிநிதிகள், மந்திரிகள் அனைவருமே உயிருள்ள ரப்பர் ஸ்டாம்புகள் தான். ஒரு திட்டத்திற்கு இறுதி ஒப்பம் மட்டும்தான் அவர்கள் கொடுப்பார்கள். ஆனால், உண்மையில் எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது அதிகாரிகள்தான். அரசியலுக்கு வருவது சம்பாதிக்கத்தான். ஆனால், எப்படி சம்பாதிப்பது என்ற வழி, அதிகாரிகளுக்குத்தான் தெரியும். மந்திரி ஆவது அதிகார சுகத்திற்காகத்தான். மந்திரியாக இருக்கும்போது பெரிய அதிகாரிகள் கை கட்டி முன்னால் நிற்பார்கள். ஆனால், பதவி இல்லையென்றால் நாய் கூட மதிக்காது. ஆனால், அதிகாரிகள் அங்கேயே இருப்பார்கள்.

சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் வாசிக்கும் அறிக்கைகள் எல்லாம் அம்மா என்ன வீட்டில் இருந்தா எழுதுகிறார்? எல்லாமே அதிகாரிகள் கொடுப்பது தான். ஓரளவு நல்ல அதிகாரியாக இருந்தால் நெல்லுக்கு (அரசியல்வாதி/அதிகாரி) பாயும்போது சற்று புல்லுக்கும் (நாமதான்) பாயட்டுமே என ஒரு சில நல்ல திட்டங்களை சொல்லலாம். பல திட்டங்கள் பணம் அடிக்க மட்டும். சில அறிவிப்பிற்காக மட்டும். உண்மையில் அதிகாரிகளுக்குத்தான் ஆயுள் அதிகம். அரசியல்வாதிகளுக்கு 5 வருடங்கள்தான். அதுவும் அம்மா ஆட்சி என்றால், எப்போதென்றே தெரியாது. எனவேதான், சகாயம் சொன்னதையே நானும் சொல்கிறேன். அரசியல் வேண்டாம். அதிகாரி ஆகுங்கள்.

"இதுல அரசியலே இல்லையேப்பா? பொதுவாத்தான சொல்லி இருக்க" என்கிறீர்களா? சரிதான். ஒவ்வொரு கூட்டணியைப் பற்றிய என்னுடைய கருத்துகளை தனிப் பதிவாக இடலாம் என உள்ளேன். போடலாமா, வேண்டாமா? என்ற குழப்பம் உள்ளது. இன்னும் ஒரு மாதம் உள்ளதே, பார்ப்போம்.

1 comment:

  1. சிறந்த பதிவு

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..