Monday, October 12, 2015

மாயா, புலி, தூங்காவனம், தோழா - விமர்சனம்

புலி:

முதல் நாள் முதல் காட்சி பார்த்தால், அந்தப் படம் பப்படம் ஆகும், அது என்னுடைய ராசி. கடைசியாக அஞ்சான். இந்த ராசி நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல், புலி படம் பார்க்க கூட்டிப் போனார்கள். அதுவும் நம்மூரிலேயே நம்ம ராசி அப்படி. அமெரிக்காவில் சும்மாவா? பொட்டியே வரவில்லை.

அந்த வெள்ளியன்று இங்குள்ள நான்கு நண்பர்கள் சந்திக்கலாம் என்று திட்டம். அது சற்றே சொதப்பி விட, நான் கிளம்பிய நேரத்தில் அலுவலக நண்பர்களும், நான் போவதற்குள், மற்ற நண்பர்களும் புலி படம் பார்த்து விட்டனர். நான் மட்டும் தப்பித்து விட்டேன். "அவ்ளோ ஒன்னும் மோசமில்லடா, ஒரு வாட்டி பாக்கலாம், கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருந்தது." என்றெல்லாம் சமாதானம் சொன்னார்கள். எனக்கோ, சிம்புதேவன் மீதிருந்த நம்பிக்கையும் குறைந்து கொண்டே இருந்தது. விஜய் மீது நம்பிக்கையே இல்லை. எனவே விட்டு விட்டேன். இருந்தாலும் விதி வலியது, கடைசியாக பார்த்துத் தொலைத்து விட்டேன்.

ஒரு பாண்டஸி என்கிற மாயாஜாலப் படம் வருகிறது என்றால், அதில் லாஜிக் பார்க்கக்கூடாது. அதாவது, படம் பார்க்கும் போது நம்மை யோசிக்க வைக்கக் கூடாது. அப்படிதான் இருக்க வேண்டும். ஆனால், புலி அப்படியா இருக்கிறது? இப்போதெல்லாம் குழந்தைகளே நம்மை விட பயங்கரமாக யோசிக்கிறார்கள். ஏன், எப்படி எதற்கு என நாம் கேட்கிறோமோ இல்லையோ, அவர்கள் நன்கு கேட்கிறார்கள். அப்படி இருக்கையில் இது குழந்தைகளுக்கான படம் என வேறு சொல்கிறார்கள், எப்படி என்றுதான் தெரியவில்லை.

அதைவிட ஒரு கொடுமை என்னவென்றால் இசை. தசாவதாரம் படத்தில் வில்லன் பிளட்சர் பாத்திரத்திற்கு அருமையான பின்னணி இசையை தேவிஸ்ரீ பிரசாத் கொடுத்திருந்தார். அருமையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகவே, இந்த படத்திலும் போட்டு விட்டார் போலும்.

ஒன்று இது விஜய் படமாக இருக்க வேண்டும், அல்லது சிம்புதேவன் படமாக இருக்க வேண்டும், இரண்டுமில்லாமல் நடுவில் இரண்டுக்கெட்டானாகி, மொக்கையாகி விட்டது. கருஞ்சிறுத்தை, ஒற்றைக்கண் மனிதன், குள்ள மனிதர்கள், பேசும் ஆமை, மாந்தரீக ராணி, எல்லாம் சரிதான். ஆனால் எதுவுமே சரியில்லை (புரிகிறதா?).

சிம்புதேவனின் கிமுவில் சோமு படியுங்கள். படித்த பிறகுதான் தெரியும் எவ்வளவு மொக்கை என்று. ஆனால், படிக்கும்போது தெரியாது. பரபரப்பாக இருக்கும். அதைக்கூட எடுத்திருக்கலாம். அடப் போங்க சார். இதுக்கு மேல எழுதினா ராஜேந்தர் வந்து பிராண்டி வச்சிருவாரு. வர வர சிம்பு தேவன், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு ஆகியோரின் மேலிருந்த நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சீக்கிரம் திரும்பி வாங்க. காத்திருக்கோம்.

மாயா:

புலி முதல் நாளன்று, படம் வர தாமதம் ஆகும் என்று மாயா படம் திரையிட்டார்கள். ஏற்கனவே படம் பற்றி நல்ல விமர்சனங்கள், இணையத்தில் தரமான காணொளி இல்லை (பாக்கறது திருட்டு, இதுல நொள்ள பிரிண்டுதான் வேணுமோ) என்பதால் அதைப் பார்த்தோம். அட்டகாசமான படம். படம் பார்த்த அனைவருமே சற்றே அரண்ட முகத்துடன்தான் வெளியேறினர்.

டிமாண்டி காலனி படத்திற்கு பின், ஒரு தரமான, உண்மையான பேய்ப்படம். படத்திற்கும் படம், அதிலும் குழப்பமில்லாமல் திரைக்கதை என எளிமையாகவே இருந்தது. இதற்கு முன், 'புது முகங்கள் தேவை' என்றொரு படமுண்டு. அதிலும் படத்திற்கும் படம் என சற்றே குழப்பி, கடைசியில் தெளிய வைப்பார்கள். இதில் அந்த அளவு குழப்பம் இல்லை.

குற்றம் கடிதல்:

இதுவும் ஒரு தரமான படம். படம் சற்றே நீளம் போல தோன்றினாலும், படத்திற்கு இது தேவைதான். என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் இது. ஏனென்றால் என் சொந்தக்காரர்கள் நிறைய பேர் ஆசிரியர்கள். என் தங்கமணியோ ஒரு தனியார பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை செய்தவர், அங்கு நடக்கும் அரசியல், நிகழ்வுகள் பற்றி நிறைய சொல்லுவார். எனக்குப் பிடித்த விஷயம், இந்தப் படத்தில் அனைவருமே நல்லவர்கள், அல்லது நல்ல பக்கங்களை மட்டுமே காட்டியது.

தனி ஒருவன், கிருமி போன்ற படங்களும் நன்றாக இருந்தன. ஒரு நகை முரண் என்னவென்றால் காக்கா முட்டை, குற்றம் கடிதல் படங்கள் ஊடகங்களை கற்பழித்தாலும், அதே ஊடகங்கள் அவற்றை கொண்டாடுகின்றன. இது தவிர்க்க இயலாததா இல்லை நிஜமாகவே பாராட்டுகின்றனவா என்றுதான் தெரியவில்லை. 

எப்போதுமே, கடந்து போன படங்கள் பற்றிய விமர்சனமே பார்க்கிறோமோ, ஒரு வித்தியாசத்திற்கு வரப்போகிற படங்களின் விமர்சங்கள் இங்கே.

தோழா (The Intouchables 2011 French):

கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் வெளி வர இருக்கும் படம். ஒரு விபத்தில் சிக்கி கழுத்துக்குக் கீழ் எதுவும் இயங்காமல் இருக்கும் பணக்காரன், எதையும் பற்றி கவலைப்படாமல் ஊர் சுற்றும் ஒருவன் இருவருக்கிடையேயான நட்பே படம். திரைக்கதையில் வரும் நிறைய காட்சிகள் ஏற்கனவே நிறைய படங்களில் வந்து விட்டது. ஒரே மாதிரி வாழும் பணக்காரனின் வீட்டில் வரும் நாயகன், தனது Don't Care சேட்டைகள் மூலம் அவர்களது வாழ்க்கையை மாற்றுவதுதான் படம். பிரெஞ்ச் நாட்டவரால் கொண்டாடப்படும் படமாம் இது. நம்மூரில் என்னவோ எனக்கு நம்பிக்கை இல்லை.

இது ஒரு உண்மைக் கதை. நம்மூரில் தாரை தாரையாய் கண்ணீர் விட வைக்கும் அளவிற்கு காட்சிகள் வைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இது நகைச்சுவை திரைப்படம். நாடகம் பார்ப்பது, இசை நிகழ்ச்சியில் அட்டூழியம் செய்வது, காரியதரிசியிடம் வழிவது, இறுதியில் சவரம் செய்யும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம். கார்த்தி சரியாக பொருந்துவார். தெலுங்கில் ஆனால் நாகார்ஜுனாவை எப்படி ஒப்புக்கொள்வார்களோ தெரியவில்லை. கண்டிப்பாக அவருக்கு பிளாஷ்பேக் காட்சிகள் இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த படத்தைப் பற்றி ஒரு தெளிவான விமர்சனம் இங்கே.

தூங்காவனம் (Sleepless Night 2011 French):

ஒரு போதைப்பொருள் கடத்தும் கூட்டத்திடம் இருந்து இரண்டு பேர் போதைப்பொருளை திருடுகிறார்கள். அதன் பின், காவல்துறை அதிகாரி கமலின் மகன் கடத்தப்பட்டு, கமலிடம் இருந்து அந்த பொருள் திருப்பிக் கேட்கப்படுகிறது. ஒரு இரவில், கமல் என்ன செய்து தனது மகனை மீட்டார்? கமல் நல்லவரா இல்லை கெட்டவரா? என்பதுதான் கதை.



டிரைலர் பார்க்கும்போது, அப்படியே நகலெத்திருப்பது தெளிவாக தெரிகிறது. த்ரிஷாவின் உடை, பாவனைகள், பிரகாஷ்ராஜின் பாவனைகள், கிஷோர் மற்றும் சம்பத்தின் நடிப்பு, லூசுத்தனமான யூகி சேது என அந்தப் படம் பார்த்தவர்கள் அனைவருக்குமே, யார் யார் எந்த பாத்திரங்களில் வருவார்கள் என சுலபமாக கணிக்கும் அளவிற்கு டிரைலர் உள்ளது. கமலுக்கு படத்தில் முத்தக் காட்சிகள், அழும் காட்சிகள் என எல்லாம் உண்டு.

அது என்ன 2011ல் வந்த பிரெஞ்ச் படங்கள் மீது நம்மவர்களுக்கு என்ன ஆர்வம் என்று தெரியவில்லை. பார்ப்போம்.