Saturday, May 29, 2010

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் - படத்தினால் அறியப்படும் நீதி யாதெனில்

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் வெளியாகி பல நாட்கள் ஆகின்றன. அதற்குப் பின் வெறும் சிங்கமும் வெளியாகி விட்டது. ஆனாலும் இன்றுதான் முரட்டு சிங்கத்தைப் பார்க்க முடிந்தது. ஏனோ தெரியவில்லை, இந்தப் படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. எனவேதான் இந்தப் பதிவு.

அது ஏனோ தெரியவில்லை, சிம்புதேவன் படங்களுக்கு போகும்போது மட்டும் பல காட்சிகள் வெட்டப்படுகின்றன. அறை எண் 305ல் கடவுள் படத்தில் 'ஆணி பிடுங்குவோர்க்கு' கையை மொன்னையாக்கும் காட்சிகள், சிங்கம் படத்தில் 'அணு ஆயுத ஒப்பந்தக் காட்சிகள்' வெட்டப்பட்டுவிட்டன. சத்யமிலேயே இந்த நிலைமை.

கிட்டத்தட்ட படம் முழுதும், இறுதிக்காட்சிக்கு முன்பு வரை பார்த்துப் பார்த்து ரசித்து, சிரித்துக் கொண்டிருந்தோம். புதையலை எடுக்கும்போது வரும் கேள்விகளைக் கேட்டபோது, எனக்கு பொளேரென்று அறைந்தது போல இருந்தது. முதலில் தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்ற கேள்விக்கு வந்த பதில்களைக் கேட்டபோதே, இப்போதைய தலைமுறைதான் ஞாபகம் வந்தது.

தமிழ் பற்றி வந்த அந்த கேள்வி பற்றி யோசிக்கும்போது, ஊடகங்களின் பங்கும் நினைவுக்கு வந்தது. சில நிகழ்ச்சிகளின் தலைப்புக்கள் 'ஹலோ தமிழா', 'குட் மார்னிங் தமிழா', 'அருக்காணி டு அழகு ராணி (இந்த தலைப்பைக் கேட்டவுடனும் சரி, தெரியாமல் பார்த்து விட்டாலும் சரி, பயங்கரமாக எரிச்சல் வரும். ஏன்? அருக்காணி என்ற பெயர் இருந்தால் அசிங்கமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?).

அடுத்த கேள்வியாக, பொங்கு தமிழர்களுக்கு இன்னல் விளைவித்து, அல்லையில் மிதிக்கும்போதும், அகதிகளாக அலையவிடும்போது நாம் என்ன செய்வோம் என்று. எனக்கு அவர்கள் சொன்ன நான்கு பதில்களுக்கு மேல் எனக்கு ஐந்தாவதாக ஒன்று தோன்றியது. "பாராட்டு விழா எடுத்துக் கொண்டிருப்போம்" என்று. என்னால் அதற்கு மேல் சிரிக்க முடியவில்லை. மக்கள் அதை ரசித்து, சிரித்தனர். ('அங்காடித் தெரு' படம் முடிந்த பின், வெளியே வரும்போது கேட்டது. "ஏம்பா, அவங்க மாதவரத்துல தங்கச்சிய பாக்கற சீன்ல வர்ற நாய் என்ன ஜாதி?)

சிம்புதேவன் ஆனந்த விகடனில் இருக்கும்போதே, அவரின் கார்ட்டூன்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்குள் உள்ள இன்னொரு 'சிகப்புத் தமிழனை' இந்தப் படத்தில் நான் பார்த்தேன். இது கொஞ்சம் அதிகம் என்று நினைப்பவர்களுக்கு, மன்னிச்சூ!! ஏனென்றால், உண்மையான சிங்கம் இறக்கும்போது வரும் வசனங்கள் யாருக்காக என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். அதே போல இறுதிக்காட்சியில் இரட்டைக் கோபுரத்தை தகர்ப்பது, விடுவிக்கும் கைதிகள் யார் யார் என்பதை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சற்றே மிகைப்படுத்தியிருந்தாலும், ரசித்தேன். சிரிக்கவில்லை. சிரிக்க முடியவில்லை.

எண் 305ல் கடவுள் படம் எனக்கு மிகவும் பிடித்தது. ஒரே முக்கிய காரணம், தமிழில், 'உருவங்கள் மாறலாம்', 'கடவுள்' படத்திற்குப் பிறகு மிகவும் வித்தியாசமான கோணத்தில் கடவுளைக் காட்டியதற்காக. ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ள என் நண்பர்களுக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை, இந்தப் படம் புரியவில்லை.

"சரிடா, இவ்ளோ எழுதறியே? நீ என்ன செய்யலாமுன்னு இருக்கே, இல்ல என்னதான் பண்ணியிருக்க? சிம்புதேவன் சொல்லித்தான் உனக்கு இதெல்லாம் தெரியணுமா?" என்று கேட்பவர்களுக்கு, அசிங்கதுடனும், வெட்கத்துடனும் சொல்லிக்கொள்வது "தெரியவில்லை, ஒன்றுமில்லை". இந்தப் படத்திற்கு சும்மா, ஜாலியாக போய் விட்டு வரலாம் என்றுதான் நான் போனேன். ஏதோ உறுத்தியதால், இந்தப் பதிவு. மீண்டும் சொல்வது, தவறாக இருந்தால் சொல்லவும், திருத்திக் கொள்கிறேன். பி ஹாப்பி..