Wednesday, February 19, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

போன பதிவோட தொடர்ச்சியாத்தான் ஒரு பதிவு எழுதனும்னு இருந்தேன். ஆனா, ரொம்ப சீரியஸா இருக்கும் அப்டின்னு (இதான் செம காமெடியே என்கிறீர்களா) ஒரு சின்ன பிட்டு போட்டு விட்ரலாமுன்னு. 

சிவிகை விருதுகளின் தொடர்ச்சியாக இன்னும் மூன்று விருதுகளை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

'உண்மையிலேயே ரொம்ப தைரியந்தான்' சரவணன்:



இந்த விருதை எங்கேயும் எப்போதும் சரவணனுக்கும் சேர்த்தே அளிக்கிறேன். சட்டக்கல்லூரி கலவரத்தைக் கையில் எடுத்து 'இவன் வேற மாதிரி' என்று காட்டியதற்காக.

'சிறந்த மேலாளர்' மணி ரத்னம்:



எந்த ஒரு நிறுவனத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு வேலை செய்யும் யாராக இருந்தாலும் சொல்லுவது "என் மேனேஜருக்கு ஒன்னும் தெரியாது, நாங்க செய்யற வேலைய வச்சே பொழப்ப ஒட்டிக்கிட்டிருக்கார்' என்று சொல்லுவார்கள். 

மேலாளர் பணியைப் பொருத்தவரை வேலை செய்யத் தெரிய வேண்டியதில்லை, என்ன வேலை, எப்படி வேலை வாங்க வேண்டும் என்று மட்டும் தெரிந்தால் போதும். மணி அந்த கால MBA அல்லவா. அவரது படங்களில், அதில் வேலை செய்தவர்களின் அதிகபட்ச திறமை அந்தப் படத்தில் இருக்கும். இசை, ஒளிப்பதிவு, நடிப்பு, என்று அனைவரின் திறமையையும் உறிஞ்சி எடுத்திருப்பார். ஆனால், தனது வேலையில் சொதப்பியிருப்பார். எனவே, அவர் சிறந்த மேலாளர்.

'பழைய சோறு' ஜில்லா, வீரம்:



ஊரில், சோறு நிறைய மீதி ஆகி விட்டது என்றால் என்ன செய்வார்கள் என்றால், கொஞ்சம் புளியிலும், எழுமிச்சை, தயிர், தக்காளி என்று கிளறி விடுவார்கள். அது இன்னும் இரண்டு வேளைக்கு நன்றாகவே இருக்கும். முன்பெல்லாம், எங்கேயாவது வெளியூர் சென்றால் 'கட்டிசோறு கட்டிக்கொண்டு' போவார்கள். 

இதே போல ஒரு பழைய கதையை வைத்து, வேறு வேறு சுவைகளில் கிண்டித் தந்துள்ளனர். பக்கத்து கேரளாவில் த்ரிஷ்யம், மெமரீஸ், மும்பை போலிஸ் என்று பிரியாணியாக போட, இவர்களோ மொக்கை போடுகிறார்கள்.

இரு படங்களிலும், நாயகனை விபத்துக்கு உள்ளாக்குகின்றனர், கொலை செய்ய வரும் அல்லக்கையை உடைத்து யார் கொல்ல அனுப்பியது அல்லது யாரைக் கொல்ல அனுப்பியது என்று கண்டு பிடிகிறார்கள். தனக்கு நெருக்கமானவர்கள் காரில் தூங்குவதால், தூக்கம் கலையாமல் சண்டை போடுகிறார்கள். இரண்டிலும் ஒரு உருப்படியான காட்சி கூட இல்லை. எல்லாம் நம் தலை எழுத்து.

இளையராஜா vs ரஹ்மான்:

மக்களே யாரும் கோபப்பட வேண்டாம். பொறுமை, பொறுமை. அமைதி ஆகி விட்டீர்களா. சரி, இந்த மூன்றாம் கோணம் பதிவில், ஒரு குறிப்பிட்ட நிலைமையை (சிச்சுவேசன், ஸ் அப்பா) எடுத்து, அதில் ராஜா எவ்வாறு இசை அமைத்துள்ளார், ரஹ்மான் எவ்வாறு அமைத்துள்ளார் என்று சொல்லியிருப்பார். திட்டோ, பாராட்டோ, அந்தப் பதிவில் போய் இடவும்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், தமிழில் 'தாண்டியா' பாட்டு என்றால் முதலில் நினைவுக்கு வருவது 'காதலர் தினம்' படத்தில் வரும் 'தாண்டியா ஆட்டமும் ஆட', ஏனெனில் பாடலிலேயே அந்த வரி வருகிறது,



அது இல்லாமல் நினைவுக்கு வரும் இன்னொரு பாடல் 'கலைஞன்' படத்தில் வரும் 'தில் பர் ஜானே' என்ற பாடல்.



இவை இரண்டில் எது சிறந்தது என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அது உங்கள் விருப்பம். ஆனால், இவை தவிர வேறு ஏதாவது உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லலாம்.

மலையாள த்ரில்லர்கள்:

கடந்த வருடம் சிறந்த த்ரில்லர் படங்கள் வந்தது, எனக்கு தெரிந்து மலையாளத்தில்தான். ஒவ்வொன்றும் அட்டகாசம்.

மும்பை போலிஸ்: படத்தின் இறுதிக்கு முன்னே, ஒரு காட்சியில் கொலையாளியை யூகித்து விட்டாலும் (பிரித்விராஜ் கேமரா மூலம் கொலை நடந்த இடத்தில் கொலையாளி ஓடி வரும் வழியைப் பார்ப்பது), கொலைக்கான காரணம் எதிர்பாராதது. 

மெமரீஸ்: கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், இதுவும் அட்டகாசமான படம்தான். இதில் கொலையாளியின் பெயர், ஏன் கொலை செய்கிறான் என்றெல்லாம் தெரியும், ஆனால் ஆள் யார் என்பதுதான் ஆட்டமே.

இன்னும் 'த்ரிஷ்யம்' பார்க்கவில்லை. இது மலையாளத்தில் இரண்டாவது சிறந்த த்ரில்லர் என்றும், முதலில் 'யவனிகா' என்ற படமும் உள்ளது என்று படித்தேன். அதையும் தரவிறக்கம் செய்துள்ளேன். பார்த்து விட்டு சொல்கிறேன்.

பொதுவாக இதுவரை எனக்கு வாய்த்த திரில்லர் படங்கள் மூன்று வகை. எல்லோருக்கும் இதுதான் என நினைக்கிறேன்.

படம் முழுக்க ஒரு வித பரபரப்பை உண்டாக்கி, அதைப் பூர்த்தி செய்யும் விதத்தில் முடிவு இருக்கும் (தமிழில் பிட்சா தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. மற்ற மொழிகளில் என்றால் கஹானி, மும்பை போலிஸ், லுசியா).

படம் முழுக்க ஒரு வித பரபரப்பை உண்டாக்கி, பொசுக்கென்று சப்பையாக முடிப்பது (நிறைய படங்கள், ராம், கலைஞன்)

படம் இழு இழுவென இழுத்து விட்டு, கடைசியில் படாரென ஒரு முடிச்சு அவிழ்ப்பது (பொம்மலாட்டம் அந்த கடைசி காட்சிக்காகவே அவ்வளவு மொக்கையைத் தாங்கிக் கொண்டேன், சமீபத்தில் தகராறு).

இது தவிர, சில படங்கள் சம்பந்தமே இல்லாமல் கடைசியில் டிவிஸ்ட் என்று சொதப்பலுக்கு மேல் சொதப்புவது (சுட்ட கதை, மங்காத்தா, வாமனன்)

அவ்வளவுதான் பிட்டு.. அடுத்து ஒரு சீரியஸ் பதிவு, அட சிரிக்காதீங்க..