Sunday, November 13, 2016

பணமாற்றம் 1!1

ஏற்கனவே 110 பதிவுகள். 111க்கான சரியான தீனி கிடைக்காமல் இருந்தேன். இதோ மோடி சொல்லி விட்டாரே. ஆரம்பிச்சுட வேண்டியதுதானே. முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் இந்தக் கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது.

நான் நினைக்கும் நன்மைகள் என்னவென்றால்,

கண்டிப்பாக கறுப்புப் பணம் வெளியில் வந்து விடும். எல்லாருடைய பணமும் அல்ல. யார் யாரெல்லாம், கணக்காளர்கள், தணிக்கையாளர்களை (ஆடிட்டருக்கு தமிழில் என்ன?) நம்பாமல், கட்டு கட்டாக சேர்த்து வைத்தவர்கள் மட்டும்.

உண்மையில் கறுப்புப் பணம் பற்றி பேச நமக்கு அருகதையே இல்லை. கட்ட வேண்டிய 10 சதவிகித வரிக்கே, தந்தைக்கு வாடகை கொடுக்கிறேன் என கணக்கு கொடுப்பது, சொந்த வீட்டில் இருந்து கொண்டு வாடகை வீடு என கணக்கு காண்பிப்பது, ஏமாற்றி வாங்கும் மருந்து பொருட்களின் ரசீதுகள் என்று எவ்வளவோ.

தெரிந்தோ, தெரியாமலோ கள்ள நோட்டை வைத்திருப்பவர்கள்.

பெரும்பான்மையான மக்களின் பணம் வங்கிகளுக்கு வந்து சேரும். நிறைய பரிமாற்றங்கள், பணம் மூலமாக அல்லாமல், மின்னனு முறையில் நடைபெறும்.

வேறு வழி இன்றியோ தினசரி கூலி வேலை செய்பவர்கள் கூட அரசின் கண்காணிப்பிற்கு உள் வந்து விடுவார். இதனால், தவறான வேலைகள் செய்து சம்பாதிப்பவர்கள் மாட்டுவர். 

வருமான வரி கட்டுபவர்கள் எண்ணிக்கை கூடும்.

ஆனால்.

என்னடா இழுவை என்றால், கீழ்க்காணும் காரணங்கள்தான்.

வெறும் 4 மணி நேரத்திற்கு முன், மக்களிடையே அறிவித்தது.

சரியான திட்டமிடல் இல்லை.

நாட்டில் சிறு வணிகர்கள்தான் அதிகம் என்று தெரிந்தும், அவர்கள் தினசரி காலையில் பணம் எடுத்து, பொருள் வாங்கி, வியாபாரம் செய்து, வாங்கிய பணத்தை மாலையில் திருப்பிக் கொடுத்து, லாபத்துடன் வீடுகளுக்கு செல்பவர்கள். அதிகளவில் பாதிக்கப்படப் போவது சாதாரண பொது மக்கள் என்று தெரிந்தும், இதை அவசர அவசரமாக செய்தது.

நான் ஒன்றும் பெரிய பொருளாதார நிபுணன் இல்லை. இருந்தாலும், எப்படி செய்திருக்கலாம் என்று யோசித்தவை.

முதலில், புது 500 ரூபாய் நோட்டை எப்போதும் போல உள்ளே விட்டிருக்கலாம். பொதுவாக (சரி சினிமாவில்), யாரும் கறுப்புப் பணமாக அல்லது பரிவர்த்தனையில் புது நோட்டை வாங்குவதில்லை. பழைய நோட்டுக்களையே வாங்குகிறார்கள். எனவே, இன்னும் கொஞ்ச நாள் கழித்து பழைய 500 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று சொல்லி இருக்கலாம். இது சற்றே மொக்கைதான்.

முதலில் புது 500 ருபாய் நோட்டுக்களையே மாற்றி இருக்க வேண்டும். ஒரு 2000 ருபாய் நோட்டை வைத்து ஒரு சாதாரண அத்தியாவசிய தேவைக்கு என்ன செய்ய முடியும். 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கி, 2000 ருபாய் நோட்டு கொடுத்தால், கடைக்காரர் சொல்வார், "உங்களுக்கே சில்லறை கொடுத்துட்டா, மத்தவங்களுக்கு நான் எங்க போறது" என்று. அதையேதான் வாடிக்கையாளரும் சொல்வார்.

இன்றோடு 5ஆவது நாள். இன்றும் சகஜ நிலை திரும்பவில்லை. நான் சென்னையில் மட்டும் சொல்கிறேன். இன்றும் கூட வங்கிகளில் வெறும் 2000 ருபாய் நோட்டையே தருகிறார்கள். 100 மற்றும் அதற்கு குறைவான நோட்டுக்கள் ஒரு சிலருக்கே கிடைக்கின்றன.

முதலில் ஒவ்வொரு வங்கியிலும் எத்தனை வாடிக்கையாளர்கள், நாளொன்றுக்கு எவ்வளவு வரவு என்று பார்த்து, அதற்கேற்றாற்போல பணம் அனுப்பி இருக்க வேண்டும். அல்லது, வங்கிகள் வந்த பணத்தை, அதற்கேற்றாற்போல, ஒவ்வொருவருக்கும் இவ்வளவு என்றாவது திட்டமிட்டிருக்க வேண்டும்.

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ஒரு பெரிய வங்கிக்கு, நாளொன்றுக்கு 10 லட்ச ரூபாய்க்கு புது நோட்டு வருகிறது. அவர்கள் வங்கிக் கணக்கு உள்ளவர்களுக்கு மட்டும், 10000 கொடுக்கின்றனர். எனவே 100 பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. அதிலும் முதலில் செல்வோர், கெஞ்சியோ மிரட்டியோ 50, 100 ரூபாய் கட்டுக்களை வாங்கி விடுகின்றனர். கடைசியில் செல்வோருக்கு 2000 ருபாய் நோட்டுக்கள் மட்டுமே கிடைக்கிறது.

ஊடகங்களின் அனாவசிய பயமுறுத்தல்.

மோடி அறிவித்த உடனே, ஊடகங்களில் வந்த செய்தி, இனி 500, 1000 செல்லாது. "இவனுங்க நல்லா சொன்னாலே, நரித்தனமா இருக்கும். நரித்தனமாவே சொன்னா?" உடனே எல்லோருக்கும் பயம். சில பேர் அப்போதே கையில் இருந்த பணம் முழுவதையும் செலவு செய்த கதையும் நடந்தது. தெளிவாக "பயப்பட தேவையில்லை" என்ற விவரம் தெளிவாக சொல்லப்படவே இல்லை. மிக விவரமாக இருந்த வணிகர்கள், இதை சாதகமாக்கி நல்ல வியாபாரமும் செய்தார்கள்.

ஏற்கனவே செய்திகளில் கேள்விப்பட்டவரை, இரு குழந்தைகள் இந்தப் பண விஷயத்தில் உயிரிழந்துள்ளனர். பணமில்லாமல் இறப்பதே மிக கொடுமையான விஷயம். இதில் கையில் பணம் இருந்தும், இவ்வாறு நடப்பது என்ன சொல்ல.

80:20 என்ற கருத்து உண்டு. அதாவது நாட்டில் 80 சதவிகித செல்வம், 20 சதவிகித ஆட்களிடம்தான் உள்ளது. இன்னொரு 20 சதவிகித ஆட்கள் அன்றாடம் காய்ச்சிகள். இதில் நடுவே உள்ள 60 சதவிகித மக்கள், நடுத்தர மக்கள் (பிச்சை எடுக்கவோ, பிச்சை போடவோ வழியில்லாமல் [உபயம் மதி-தினமணி], முகப்புத்தகம், கீச்சுகளில் புரட்சி செய்பவர்கள், பிரபல பதிவர்கள்) மோடிடா, வல்லரசுடா, விஜயகாந்த்டா என்றெல்லாம் கூவுகிறோம்.

நாம் அனைவருமே ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாலும், அதில் கையில் பணமாக எடுத்து செலவு செய்வது மாதத்திற்கு 2000 கூட இருக்காது. எனவே நம்மால் கருப்பு பணக்காரர்களின் கஷ்டமும் தெரியாது, சாமானியர்களின் வலியும் புரியாது.

இதைப்பற்றி விகடனில் வந்த கட்டுரை. விகடன் கட்டுரையில் வந்தது போல இந்தப் பணக்காரனும் வந்து வரிசையில் நிற்கவில்லை. ஒன்றும் தெரியாதவர்கள், நடுத்தர வர்க்கம், இவர்கள்தான். ராகுல் காந்தி நின்றார். உடனே விளம்பரம் என்று சொல்லி விட்டனர்.

சில பேர் "இலவசம் கொடுக்கும்போது நிக்கலயா, ஜியோ சிம் வாங்க நிக்கலையா, இப்போ நிக்க வலிக்குதா. நாட்டுக்காக ரெண்டு நாள் பட்னி கெடந்தா ஒன்னும் ஆவாது" என்றெல்லாம் கேட்கிறார்கள். என்னத்த சொல்ல.

நமது அரசியலமைப்பு சட்டம் சொல்வது "1000 குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது". ஆனால், மோடியின் கொள்கையோ "1000 ஏழைகள் பாதிக்கப்பட்டால் கூட பரவாயில்லை. ஒரு கறுப்புப் பணக்காரனாவது மாட்ட வேண்டும்" என்பதுதான். "காரில் போகும்போது நாய் குறுக்கே வந்தால் அடிபடும்" என்றவர்தானே.

இது குறுகிய நேரம். இதற்குள் நாம் எதையும் எதிர் பார்க்க முடியாது. காத்திருப்போம். ஆனால், நாம் நினைக்கும் நன்மைகள் அனைத்தும் நடக்கும்போது, இந்தியாவில் ஏழ்மையே இருக்காது. ஏனென்றால் ஏழைகளே இருக்க மாட்டார்கள்.