Tuesday, December 31, 2013

சிவிகை சினிமா விருதுகள்

அடடே, இன்னிக்கு தேதி 31 ஆயிடுச்சி, இன்னும் நாம பதிவ போடலியே, என்ன செய்யலாம். சரி எதையாவது எழுதி வைப்போம். அட, விருது கொடுக்கிறேன்னு வேற சொல்லிட்டமே. சரி பாப்போம்.

'கெட்ட பையன்' கார்த்தி:கார்த்தி ஆரம்பத்தில் இருந்து நடித்த அனைத்துப் படங்களையும் பார்த்தால், அந்த பாத்திரங்கள் நிஜத்தில் நம்முன்னே இருந்தால், கண்டிப்பாக நாம் விரும்பவே மாட்டோம். காதலி வாங்கிக் கொடுக்கும் சட்டை, மாமனார் வாங்கும் சரக்கு எதுவாக இருந்தாலும் இருப்பதிலேயே அதிக விலையாக எடுக்க வேண்டியது, நண்பர்கள் வேலை வாங்கித் தர முயற்சி எடுத்தால் பெண் பின்னால் ஓடுவது என்று இப்போது பிரியாணி வரை 'கெட்ட பையனாகவே' இருக்கிறார். மற்ற நடிகர்களும் அதே போலத்தான் நடிக்கிறார்கள் என்றாலும், கார்த்தி, என்னைப் பொறுத்தவரை ரொம்ப மோசமான பையன்.

'உண்மையிலேயே ரொம்ப தைரியந்தான்' சுசீந்திரன், விஷ்ணுவர்தன்:பாண்டிய நாடு, ஆரம்பம் இவை இரண்டில் எது நல்ல படம் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், இரண்டு படங்களின் மையக்கரு நாட்டில் நடந்த, பரவலாக அனைவருக்கும் தெரிந்த கதை. தைரியமாக சம்பந்தப்பட்ட நபர்களை மையப்படுத்தியே எடுத்த இருவருக்குமே, ரொம்ப தைரியந்தான்.

'செல்லக்குட்டி' இமான்:என்னதான் ராஜா, ரஹ்மான் என்று சொன்னாலும், இந்த வருடத்தின் செல்லக்குட்டி இமான்தான். 'கும்கி' மூலம் மனதில் நுழைந்தவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டிய நாடு என்று 'செல்லக்குட்டி' ஆகி விட்டார். அதிலும் என் ஒன்றே கால் வயது மகளுக்கு பிடித்த பாடல்கள் அனைத்துக்கும் இசை இமான்தான். அவரின் பணி தொடர்க.

'இளைத்த சிங்கம்' இளையராஜா:யாரும் கோபிக்க வேண்டாம். அவருக்கு உடல் நிலை சரியில்லை, பாடல்கள் கூட அவ்வளவாக இல்லை. ஆனாலும், தான் சிங்கம்தான் என்பதை 'தலைமுறைகள்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' மூலமும் நிரூபித்து விட்டார். அவர் மீண்டும் இசைக்கு தான் ராஜா என்று நிரூபிப்பார். 

அவரின் பின்னணி இசையின் தொடர் வெற்றிக்குக் காரணம், ஒரு காட்சியில் முதலில் பார்வையாளனை எது அடைய வேண்டும் ஒலியா, ஒளியா என்பதை மிகத் தெளிவாக உணர்ந்தவர். ஒரு சோகமான காட்சிக்கு, அந்த சோகத்தை நாம் உணர்வதற்குள் மற்ற இசையமைப்பாளர்கள் வயலினை இழுத்து எரிச்சலூட்டுவார்கள். ஆனால், அவரோ, அந்தக் காட்சி பார்வையாளனை பாதித்த பின், இசை வரும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம், 'அபூர்வ சகோதரர்கள்' படக் காட்சி. அதிலும் குறிப்பாக, ஸ்ரீவித்யா பேசும்போது வரும் இசை.'சிறந்த நடு நிலை நாளிதழ்' தினமலர்:இதற்கு நான் ஏன், எதற்கு என்று விளக்கம் அளிக்க தேவையில்லை. அரசியலை விடுங்கள். இளையராஜா பற்றி ஒரு 10 செய்திகள் வந்தால், அதில் கண்டிப்பாக 8 செய்திகளில் அவரைப் பற்றி 'குத்தலான' செய்தி இருக்கும். உதாரணம், அவர் 'மேடை நிகழ்ச்சி' பற்றிய செய்தியில் 'ஒரு காலத்தில் மேடையில் பாடுவதை இளக்காரமாக பேசியவர்' என்று சம்பந்தமில்லாமல் ஒரு வரி இருக்கும். அதை இங்கே படிக்கலாம். இதே போலத்தான் அவர் மக்கள் முன்னிலையில் மெட்டமைக்கும் நிகழ்ச்சிக்கும் இருந்தது.

இன்னும் குறிப்பாக இரு செய்திகளை சொல்லலாம்.
உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால்
எந்த படத்துக்கும் 3 நாட்களுக்குமேல் இசை அமைத்ததில்லை: இளையராஜா சவால்

இரண்டு செய்திகளிலும் ராஜா சொன்ன முக்கிய கருத்து "நான் எந்தப் படத்திற்கும் மூன்று நாட்களுக்கு மேல் இசை அமைத்தது இல்லை" அந்த இரண்டிலும் ராஜா சொன்னதை படித்துப் பாருங்கள். அதில் எங்கேயும் 'சவால்' என்றே சொல்லவில்லை. ஆனால், இரண்டிலும் உள்ள முக்கிய தலைப்பு 'இளையராஜா சவால்'.

தின மலரின் மீது எனக்கு மிகவும் மதிப்பு இருந்தது. அதற்கு முக்கிய காரணம், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையின் போது இரு மாநில முதல்வர்களும் தங்களது மாநிலத்தின் விளக்கங்களை பத்தரிகையில் விளம்பரமாக அளித்தனர். நம் மாநிலத்தின் விளக்கம், எந்த மலையாள பத்திரிக்கையிலும் வரவில்லை. ஆனால், அவர்களின் விளக்கம் அனைத்து தமிழ் பத்திரிக்கையிலும் வந்தது, தினமலர் தவிர. பத்திரிக்கை தர்மம் அது இது என்று ஆயிரம் காரணம் சொன்னாலும், எனக்கு அப்போது தினமலரைப் பிடித்தது. அது மட்டுமன்றி ஒரு சில விழிப்புணர்வு விளம்பரங்களையும் வெளியிட்டது.

ஆனாலும், அரசியல் மற்றும் மற்ற அனைத்து விஷயங்களிலும் அவர்களின் நடு நிலைமையைப் பார்த்து, இந்த விருதை அவர்களுக்கு அளிக்கிறேன்.

சிறந்த பதிவர்: 

நாந்தான். வேற யாரு. என்னப் பத்தியும் ஒருத்தங்க பெருமையா (சரி சரி, அடிச்சுட்டேன்) எழுதியிருக்காங்க. அதனால், நானே சிறந்த பதிவர் என்று நானே தீர்ப்பு கூறி, நானே பரிசை வழங்கி, நானே பெற்றுக் கொள்கிறேன்.

அனைவருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எப்படியோ மாதம் ஒரு பதிவைப் போட்டு விட்டேன். அடுத்த வருடம் பார்ப்போம் எப்படி என்று.

Saturday, November 30, 2013

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

மாசக் கடைசி ஆயிடுச்சி. பத்து பைசா கையில் இல்லை. இந்த மாசம் கட்ட வேண்டிய பாக்கி கூட கட்டி முடிக்க முடியல. அட அது கூட பரவால்ல, இன்னும் இந்த மாசத்துக்குன்னு ஒரு பதிவைப் போட முடியல. அதனால, எப்படியாவது ஒரு பதிவ போட்டே ஆகணும்னு ஒக்காந்துட்டேன். இனி உங்க தலை எழுத்து. படிங்க.

விமர்சனம் ஒன்னும் பெருசா இல்லீங்க. எல்லாரும் எல்லாத்தையும் ஏற்கனேவே கிழிச்சுட்டாங்க. நான் தனியா என்னத்த சொல்ல. நான் சொல்லி, நீங்க அதப் படிக்கிறதுக்குள்ள, அந்த படம் எல்லாத்தையும் டிவியில ரெண்டு வாட்டி போட்டுடறாங்க. அப்புறம் என்ன.

பாத்ததுல புடிச்சதுன்னா, அது 'பாண்டிய நாடு, மூடர் கூடம், 6'. 'விடியும் முன்' நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க. பாக்கணும். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' பரவால்ல. நானும் கடைசி வரைக்கும் ஏதாவது நெஞ்சப் பிழியற கத வரும்னு பாத்தேன். ஆனா, எதுவும் வல்ல. ராஜாவோட பின்னணி, கடைசி அரை மணி நேரம், சான்சே இல்ல.

தமிழ் ஹிந்துல, ஒரு கட்டுரை வந்திருக்கு. படிச்சுப் பாருங்க. தமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா? அதுல, அவற்றில் பாடல்கள் இல்லாமல், சுமார் 35 நேரடிப் படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன அப்படின்னு சொல்றாங்க. கணக்கு சரியா அப்டின்னு தெரியல. இருந்தாலும் உருவம் படம், அதுல ஒரே ஒரு நிமிஷம் மட்டும் ஒரு பாட்டு வரும், அது கணக்குல வருமான்னு தெரியல.

பாட்டு இல்லாம வந்த முக்காவாசி படம் பேய்ப் படம், ஆக்சன், இல்லேன்னா த்ரில்லர் தான். ஒரு சாதாரண காமெடி இல்லேன்னா குடும்பப் படம் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் கணக்குல வருமா? என்னது ஆரம்பத்துல பாட்டு வந்ததால அவுட்டா?) வந்ததே இல்ல. சரி, எனக்கு தெரியல.

கூகுள் பண்ணியும், என் அறிவுக்கு எட்டிய வரையும் வந்த படங்கள். (1. அந்த நாள், 2. பேசும் படம், 3. குருதிப்புனல், 4. மறுபக்கம், 5. வீடு, 6. பசி, 7. கடமை கண்ணியம் கட்டுப்பாடு, 8. சந்தியா ராகம், 9. ஆரண்ய காண்டம், 10. நடுநிசி நாய்கள், 11. யுத்தம் செய், 11. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்) மற்றபடி அது, உருவம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்று அரைப்பாட்டு, ஒரு பாட்டு போன்றவற்றையும் வைத்தாலும் 20 தேறும். மற்றவற்றை தெரிந்தால் சொல்லுங்களேன்.

வேற என்னங்க ஸ்பெசல், ஊருல எல்லோரும் மெகா சீரியல் பாக்காம, ஒருத்தர ஒருத்தர் மூஞ்சிய பாக்காம இருட்டுல இருக்காங்க. சென்னையிலும் இனி தெனமும் 2 மணி நேரம்தான் கரண்டு இருக்குமாம். சேச்சே. தப்பா சொல்லிட்டேன். போகுமாம்.

முன்னாடியெல்லாம், டீக்கடைல பேப்பர் படிக்கும்போது அரசியல் பேசி சண்டை வந்து மூஞ்சி மொகரை எல்லாம் உடைஞ்சி ரத்தம் வரும். இப்ப எல்லாரும் இணையத்திலே சண்டை போட்டு அந்த சுவாரஸ்யமே இல்லாமே போகுது. தின மலர்ல தான் இது ரொம்ப முக்கியமா நடக்குது. அந்த வகையில, தினத்தந்தி இன்னும் கருத்து போட அனுமதிக்கல. டீக்கடையில மட்டுந்தான் சண்டை போட அனுமதிக்குது.

இந்த பத்திரிக்கை தர்மம், நடு நிலைமை அப்படின்னா, கிலோ என்ன விலைன்னு எல்லோரும் கேக்கிறாங்க. குறிப்பா தின, தின, தின அடக் கருமம் எல்லாந்தாங்க.

இந்த ஏற்காடு இடைத் தேர்தல்ல 'யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை' (NOTA) அப்படின்னு ஒரு 5% வோட்டு விழும் அப்படின்னு நான் நெனைக்கிறேன். பாக்கலாம்.

அடுத்த மாசமும் இதே மாதிரி கடைசி நேரத்துல தான் போடுவேன்னு  நெனைக்கிறேன். அது மட்டும் இல்லீங்க. நானும் விருது தரலாமுன்னு இருக்கேன். விளம்பரதாரர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.

மத்தபடி பாத்தீங்கன்னா, நாடு எப்பவும் போல நாசமா போயிட்டிருக்கு. எனக்கு அதப்பத்தி கவலைப்பட நேரம் இல்ல. ஏன்னா, என்னோட இளவரசி என்ன ஒக்கார விடாம ஓட விடுறாங்க. தொப்பையும் கொறையுது. என்ன  ஒரு மெயில் பாக்க முடியல. ஒரு பதிவ படிக்க/அடிக்க முடியல. இருந்தாலும் சந்தோஷம்.

இதனால எல்லோருக்கும் சொல்றது என்னன்னா, அண்ணன் இந்த மாசத்துக்கு ஒரு பதிவு போட்டுட்டாரு!!!

Tuesday, October 29, 2013

நான் சர்வாதிகாரி ஆனால் - 1

இது பள்ளிகளில் பிள்ளைகளை 'நான் மன்னன் ஆனால்' என்ற தலைப்பில் கட்டுரை எழுது என்று சொல்வது போல் உள்ளது என்று நீங்கள் நினைத்தாலும் சரி. இது என்னுடைய முந்தைய ஆதங்கத்தின் தொடர்ச்சியே.

இதில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் முட்டாள்தனமாகவும், நடைமுறைக்கு சாத்தியமில்லாமலும், சில பல திரைப்படங்களின் பாதிப்புகளாகவும் தெரியலாம். இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நான் எண்ணியவை. இவற்றை ஒரு முதலமைச்சரோ, பிரதமரோ செய்ய முடியாமல் போகலாம். எனவேதான் 'சர்வாதிகாரி'.

கல்வி:

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அனைவரும் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களது வேலை பறிக்கப்படும்.

அரசுக் கல்லூரிகளிலும், வேலை வாய்ப்பிலும் அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கு முன்னுரிமை.

எட்டாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை, அனைத்து 5 ஆண்டுகளுக்கும் பொதுவான இறுதி தேர்வு வைக்கப்படும். (இது பாடங்களை முன் கூட்டியே நடத்துவதை தவிர்க்க).

மதிப்பெண்கள், பாடங்களை மட்டும் பொறுத்து இல்லாமல், மாணாக்கர்களின் தனித்திறமைக்கும் சேர்த்து நிர்ணயிக்கபடும். இது சரி வராத பட்சத்தில், மாணாக்கர்களின் தனித்திறமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு மாணவ மாணவியரும், படிப்பைத் தவிர வேறு ஏதாவது ஒன்றில் சான்றிதழ் கண்டிப்பாக பெற வேண்டும்.

2000ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்த அனைத்து குழந்தைகளும், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்.

அனைவருக்கும், கட்டாயமாக அவரவர் தாய் மொழியை எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும். 

பாலியல் கல்வி, அவசிய சட்டங்கள் பற்றிய அறிவு போதிக்கப்படும்.

அரசுப்பள்ளிகளுக்கு ஒரு சீருடை, தனியார் பள்ளிகளுக்கு ஒரு சீருடை. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு விதமான சீருடை கிடையாது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியாக டியுஷன் எடுப்பது, வேறு பள்ளிகளில் பகுதி நேரமாக பணி புரிவது தெரிந்தால், பணி நீக்கம் செய்யப்படுவர்.

அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச தகுதிகள் இல்லாத அனைத்துப் பள்ளிகளும்/ கல்லூரிகளும் மூடப்படும் (கழிவறை, விளையாட்டுத் திடல், அவசர வழி).

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் விரும்பத் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், குற்றங்களைப் பொறுத்து மன்னிப்பு, சான்றிதழ் வழங்கப்படாது, கடவுச்சீட்டு (சரி விடுங்க பாஸ்போர்ட்) வழங்கப்படாது. அதிகபட்சம் சிறை தண்டனையும் வழங்கப்படும்.

இட ஒதுக்கீடு:

அனைத்து சாதிகளும், மதங்களும் (முதல்வன் படத்தின் தாக்கம்) நான்கே நான்கு பிரிவுகளின் கீழ் கொண்டு வரப்படும். (பொது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்). சாதி மற்றும் மதம் அனைத்து இடங்களில் இருந்தும் நீக்கப்பட்டு, ஒதுக்கீடு என்பது மட்டும் இருக்கும்.

எந்த பிரிவின் கீழ் யார் இருந்தாலும், அவர்களின் கல்வி முடிந்து, முதல் பணியில் சேரும் வரை மட்டுமே அவர்கள் இட ஒதுக்கீடுக்கு உட்படுவர். அதன் பின் வரும் அனைத்து பதவி உயர்விற்கும், சம்பள உயர்விற்கும், அவர்களும் பொதுப் பிரிவின் கீழ்தான் போட்டியிட வேண்டும்.

ஒருவர் தனது வேலையை இட ஒதுக்கீட்டின் மூலம் பெற்று விட்டால் அல்லது உயர் கல்வி முடித்து விட்டாலோ, அவர்களது வாரிசுகள் அனைவரும் பொதுப் பிரிவின் கீழ் வந்து விடுவர். ஏனென்றால் ஒதுக்கீடு சேர வேண்டியவர்களுக்கு மட்டுமே சேர வேண்டும். (நான் பார்த்தவரை, தாழ்த்தப்பட்டோர் பிரிவில் என்னுடன் படித்த அனைவரின் பெற்றோரும் அரசுப் பணிகளில் உள்ளோர்)

இந்த விதி மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருந்தும். அதிலும் மாற்றுத் திறனாளிகள் என்பதற்கான விதி சரியாக வரையறுக்கப்படும். (என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு மாற்றுத் திறனாளி - வலது கை கட்டை விரல், இடது கை கட்டை விரலை விட சற்றே, மிக சற்றே சிறியது)

சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து:

எந்த குற்றமாக இருந்தாலும், அபராதம் கிடையாது, சிறை தண்டனைதான். மக்களில் பாதி பேர், "என்ன 100 ரூவா லஞ்சம் கேப்பான், இல்லையா, 500 ரூபா அபராதம், அவ்வளவுதானே, தூக்கி வீசிட்டு போக வேண்டியத்தானே' என்பார்கள். எனவேதான் இது. குற்றங்களைப் பொறுத்து அரை நாள் முதல் ஆயுள் முழுதும் சிறையில் இருக்கும்படி தண்டனை வழங்கப்படும்.

சாலை விதிகளை மதிக்கவில்லை என்றாலும் சிறைதான். அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் கண்காணிப்பு கருவி பொருத்தப்படும். தினமும் அதைப் பார்த்து, விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகன ஓட்டுனர் குற்றத்தின் அளவைப் பொறுத்து சிறை தண்டனை. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சந்திப்புகளில், அவ்வப்போது கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு சோதிக்கப்படும். இதை ஒரு பத்து நாள் செய்தாலே, மக்கள் தானாக சாலை விதிகளை மதித்து நடப்பர்.

எந்த வண்டியாக இருந்தாலும் (மீன் பாடி வண்டி உட்பட) கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். அனைத்து வண்டிகளும், நீக்க முடியாத முறையில் வாகன எண்களை, நான்கு புறமும் பதிந்திருக்கும்படி செய்ய வேண்டும்.

பாலியல் குற்றங்கள், திட்டமிட்ட கொலை, வன்முறை, குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள், இவை அனைத்திற்கும் ஆயுள் முழுதும் தனிமைச் சிறை. அவர்கள் தினமும் வேலை செய்ய வேண்டும். அந்த சம்பளத்திற்கு சாப்பாடு. வேலை செய்ய மறுத்தால், சோறு, தண்ணீர் இல்லை. அது அவரவர் இஷ்டம். இது கொடூரமாக தெரியலாம். ஆனால், வேறு வழியில்லை.

அப்படி இல்லையெனில், அவர்களது புகைப் படங்கள் அவர்கள் வெளி வந்தவுடனே, நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் காட்டப்படும்.

சாலை மறியல், பந்த் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை.

எந்த பிரச்சினை என்றாலும், சம்பந்தப் பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அனைவரும் சேர்ந்து மனு கொடுத்தால், அந்த அதிகாரி நீக்கப்படுவார். (சுதேசி படத்தில் வந்தது).

நீதிபதிகளும் மனிதர்கள்தான். எனவே, ஒரு மன்றத்தில் தீர்ப்பு வழங்குவதற்கு முன், அது குறிப்பிட்ட குழுவின் முன் வைத்து விவாதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். அதுவே இறுதி தீர்ப்பாகும். அதன் பின் மேல் கோர்ட், கீழ் கோர்ட் என்று எதுவும் இல்லை. இது நேரம் எடுக்கும் செயல் என்றாலும், ஒரே தீர்ப்பாக இருக்கும்.

ஒரு குற்றத்தில், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் விரும்பும் வழக்கறிஞரை வைத்து வாதாடிக் கொள்ளலாம். அரசு வழக்கறிஞரே வேண்டும் என்ற தேவையில்லை. அதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.

குற்றப் பின்னணி கொண்ட யாரும் அரசுப் பதவியில் இருக்கக் கூடாது. அதே நேரம், யாராவது வேண்டுமென்றே வழக்கு போட்டிருந்தால், வழக்கு போட்டவர்களுக்கு சிறை.

இது சற்றே அவசரத்திலும், ஆதங்கத்திலும் எழுதிய பதிவு. மக்கள் தங்களுக்கு தோன்றியவற்றையும் சொல்லலாம். மற்ற துறைகள் பற்றியும் சொல்லலாம். சொல்லுவேன்.

தொடரும்! 

Sunday, September 15, 2013

சில பல விமர்சனங்கள்

சிங்கம் 2:

பொதுவாக பல படங்களின் இரண்டாம் பாகம் என்றாலே, அதே கதையைத்தான் சற்று வித்தியாசமாக எடுப்பார்கள். சில படங்கள் வெற்றி பெறும் (முனி-2 காஞ்சனா), பல மட்ட ரகமாய் தோல்வி அடையும் (நான் அவன் இல்லை). ஆனால், இந்தப் படம் அது போல இல்லை. முடிவில் இருந்து தொடர்ச்சியாய் எடுத்து, அதிலும் புது ஆட்களைப் புகுத்தி, ஹரி வெற்றி கண்டுள்ளார்.

இந்தப் படத்திற்கு ஏன் எதிர்ப்பு கிளம்பவில்லை? இதில் அனைத்து மதத்தினரையும் புண் படுத்தியுள்ளனர். எங்கே, ஏன், எப்படி என்று யாரும் கிளம்ப வேண்டாம். சும்மா. முக்கிய வில்லன் தங்கராசு, நாயகன் துரைசிங்கம். இதற்கும், அதற்கும் சரியாகப் போய் விட்டது. இரண்டாம் வில்லன் முஸ்லிம், அடுத்த ஆள் கிறித்துவன். நாயகனுக்கு உதவி புரிபவர்களில் ஒருவர் முஸ்லிம், ஒருவர் கிறித்துவன் என்று சரியான மசாலை கலக்கி விட்டார்.

எனக்கென்னவோ, மூன்றாம் பாகமும் எடுத்து விட்டார் என்றே தோன்றுகிறது. எனவேதான், விஸ்வரூபம் போல, படத்தை அந்தரத்தில் விட்டு விட்டார். வில்லனை கொண்டு வந்து சிறையில் அடித்தவுடன் 'பாஞ்சாலி கூந்தலை முடிந்துவிட்டாள்' என்று பாஞ்சாலி சபதம் முடிந்ததைப் போல இருந்தது. அடுத்த பாகத்தில் மத்திய உள்துறை அமைச்சரையும் உள்ளே தள்ளினால்தான் படம் முடியும்.

ஹரியும் இதுவரை 12 படங்கள் எடுத்து விட்டார், ஆனாலும் அவர் படத்தில் காமெடியும் பாடல்களும் மனதில் நிற்கவே மாட்டேன் என்கிறது. ஹரி பாடல்களும், நகைச்சுவை காட்சிகள் இல்லாமலும் படம் எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

ஆதலால் காதல் செய்வீர்:

குமுதம் விமர்சனத்தில் வந்த வரி இது. அப்பாக்கள் நெகிழ்கிறார்கள். பையன்கள் சிரிக்கிறார்கள். உண்மைதான். படம் பார்த்து விட்டு வந்த நண்பன் சொன்னது "ஒரு மாத்திரை வாங்கி சாப்பிடிருந்தா வேலை முடிஞ்சிருக்கும், அத விட்டிட்டு" என்றான். படம் சொல்ல வந்ததை யாரும் புரிந்து கொள்ளவில்லை. எப்போது பெற்றவர்களின் வேதனை நாம் பிள்ளைகளை வளர்க்கும்போதுதான் தெரியும். அதே போலத்தான் இந்தப் படமும். 

அந்த கால படங்களில் எல்லாம், அநாதரவான பெண்கள் தங்களை இழந்து, குழந்தையைப் பெற்று விட்டு இறந்து விடுவார்கள் அல்லது அவர்களை கஷ்டப்பட்டு வளர்த்து பின் இறப்பார்கள். இப்போதெல்லாம், அனைவருக்கும் வேறு வேலை இருப்பதால், பிள்ளைகள் நேரடியாக அனாதைகள் ஆகிறார்கள்.

சுசீந்திரன் அவர்களே, வாழ்த்துக்கள். இதே போல தங்களின் படைப்புகளை தொடர வேண்டுகிறேன்.

தலைவா மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ்:


இந்த இரண்டு படங்களையும் பார்க்கும்போது, எனக்கு நிறைய மற்ற படங்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு படங்களிலும் கேவலமான பாத்திரத்தில் சத்தியராஜ். மட்டமான வில்லன்கள். ஷாரூக், தன்னை படத்தில் தாழ்த்திக்கொண்டு, நிஜத்தில் வெற்றி பெற்று விட்டார். விஜயோ, சரி விடுங்கள். அதை சொல்ல விரும்பவில்லை.


தலைவா படத்தில், இறுதிக் காட்சியைத்தான் மிக சிறந்த நகைச்சுவைக் காட்சி என்று என்று எல்லோரும் சொன்னார்கள். மொத்தப் படமுமே காமெடிதான். சரி விடுங்கள். இருந்தாலும், என்னால் சிரிப்பை அடக்க முடியாத காட்சி என்றால், அது ரவுடிகளைப் பார்த்து, சந்தானம் வந்திருக்கும் போது 'கெட் அவுட்' என்பாரே. தேவனின் 'மைதிலி' என்ற நாவலில் ஒரு வர்ணனை வரும். 'ராஜ பார்வை என்று நினைத்து, ஒன்றரைக் கண்ணில் கேனப் பார்வை பார்த்தான்' என்று. அதுதான் நினைவுக்கு வந்தது.

இன்னும் சொன்னா புரியாது, பட்டத்து யானை, புல்லுக்கட்டு முத்தம்மா போன்ற படங்கள் பற்றி சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தேசிங்கு ராஜா, தங்க மீன்கள் இன்னும் பார்க்கவில்லை. அவ்வளவுதான்.

Monday, August 19, 2013

இந்தியாவின் சாலை விதிகள்

இந்தியாவில் வண்டி ஓட்ட நீங்கள் எந்த புத்தகத்தைப் படித்தாலும், அது 'நீச்சல் கற்பது எப்படி' புத்தகம் படித்து நீச்சலடிப்பது போலத்தான். வண்டி ஓட்டினால் ஒழிய உங்களால் கற்றுக் கொள்ள முடியாது. ஆனாலும், சில விஷயங்களைத் தெரிந்து கொண்டால் நல்லதுதானே.

நீங்கள் நடந்து செல்பவராக இருந்தாலும் சரி, ஒரு சக்கரத்திலிருந்து பல சக்கரம் வரை எந்த வண்டியாக இருந்தாலும் சரி, நீங்கள் கிளம்பும்போது உங்கள் மனதில் இருக்க வேண்டிய எண்ணம் "ராஜா நகர்வலம் கெளம்பிட்டேன்.. இது எல்லோருக்கும் தெரியும். நான் எப்படி போகிறேனோ, அதுக்கேத்தமாறி மத்தவங்க போகணும்"

உங்களால் கீழே விழாமல், யாரை இடித்தாலும் நீங்கள் விழாமல், பிடிக்க முடியாமல் தப்பித்துப் போகும் அளவிற்குப் போகலாம். சிக்னலில் பின்ன்ன்ன்னால் நிற்கிறீர்களா? 'பச்சை' மாறியவுடன் ஹாரணை அடிக்க ஆரம்பித்து விட வேண்டும். நிறுத்தவே கூடாது, அடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நீங்கள் கிட்டே வந்த நேரத்தில் சிகப்பு மாறி விட்டதா. கவலை வேண்டாம். காவலர் யாரும் உள்ளனரா என்று பார்க்கவும். இருந்தாலும் கவலை வேண்டாம். நீங்கள் செல்லும் பாதையில் கொஞ்சம் இடம் உள்ளது என்றால், சட்டென கிளம்பிப் போய் விடவும். கவலையோ பயமோ வேண்டாம்.

நீங்கள் வேறொரு வண்டி மீது இடித்து விபத்து நேர்ந்து விட்டதா? முதலில் அந்த வண்டி உங்கள் வண்டியை விட உயர்ந்ததா என்று பாருங்கள். (உங்களுடையது இரு சக்கர வாகனம் என்றால், அது நான்கு சக்கரம் மற்றும் அதிகம். அதுவும் இரு சக்கர வாகனமே என்றால், உங்களுடைய வண்டியை விட அதிக விலையாக இருக்க வேண்டும்). அப்படியென்றால் பிரச்சினை இல்லை.

அப்படி இல்லை என்றால், நீங்கள் கீழே படுத்து உருள வேண்டும். வெட்கமாக இருக்கும், முடியாது என்கிறீர்களா? பரவாயில்லை. அசிங்க அசிங்கமாக திட்டிக் கொண்டே சட்டென அந்த வண்டியின் சாவியைப் பிடுங்கி விடுங்க. அவ்வளவுதான்.

நீங்கள் யார் மீது போய் இடித்தாலும், அவர்களையே பழி சொல்ல வேண்டுமா? மனைவியை (அல்லது ஆள், புடவை கட்டியிருத்தல் நலம்) பின்னால் அமர வைத்து சென்று இடிக்கவும். குழந்தை உள்ளதா? மிக மிக நல்லது. எந்த விதிகளுக்கு கீழும் நீங்கள் அடங்க மாட்டீர்கள் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வண்டி ஓட்டி, யாரை வேண்டுமானாலும் இடிக்கலாம் உங்கள் மீதுதான் பரிதாபம் வரும்.

நீங்கள் நடந்து செல்பவரா? உங்கள் மனதில் 'இது எங்கப்பன் ரோடு' என்ற கெத்து இருக்க வேண்டும். சாலையைக் கடக்க வேண்டும் எனும்போது, சட்டென வண்டிகளுக்கு நடுவே புகுந்து விட வேண்டும். யாரேனும் இடித்தால் முந்தைய விதியின் கீழ் வந்து விடுவீர்கள். (உயர்ந்த வண்டி) அதே போல, உங்கள் இஷ்டத்திற்கு நீங்கள் ஆட்டோவைக் கூப்பிட்டு, நடு ரோட்டில் நிறுத்தி, பேரம் பேசி ஏறலாம். யாராவது திட்டினால், ஆட்டோ ஓட்டுனர் பார்த்துக் கொள்வார்.

எங்கேயாவது அவசரமாக போக வேண்டும், ஆனால், சாலையில் நெரிசல் அதிகமாக உள்ளதா? ஏதாவது ஆம்புலன்ஸ் போகிறதா என்று பாருங்கள். அதன் பின்னால் எப்படியாவது ஒட்டிக் கொள்ளுங்கள். எவனும் அதற்கு வழி விட மாட்டான். ஆனாலும், எவனாவது ஒரு சில மாக்கான்கள் வழி விடுவார்கள். அப்போது ஆம்புலன்சொடு ஒட்டிக்கொண்டு போய் விடலாம்.

மிக முக்கியமானது, இதையே நிறைய பேர் செய்யும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் வண்டியில் செல்லும்போது, கால் டாக்ஸி, மாநகரப் பேருந்துகள் விதிகளை மதிக்காமல் வந்தால், நீங்கள் அவர்களது பரம்பரையையே திட்டலாம். ஆனால், நீங்கள் கால் டாக்ஸியிலோ, பேருந்திலோ செல்லும்போது அவர்கள் விதிகளை மீறினால், நீங்கள் கண்டுகொள்ள தேவையில்லை. தேவைப்பட்டால், பாதிக்கப்பட்ட மூன்றாம் நபரைத் திட்டலாம். ஆட்டோ பற்றி, என்ன சொல்ல 'நாம் சம்பாதிப்பதே, அவர்களுக்கு கொடுக்கத்தானே'. 

ஐயோ, எனக்கு இதெல்லாம் வேண்டாம்பா, நான் கண்டிப்பாக சாலை விதிகளைக் கடை பிடிப்பேன்' என்பவரா நீங்கள். உங்களுக்கு மிக முக்கியம் நிறைய பஞ்சு. காதில் கொஞ்சம் வைத்துக் கொள்ள வேண்டும். (ஏனென்றால் அசிங்க அசிங்கமாக வசவு வாங்குவீர்கள்). மீதி கீழே விழுந்தால் ரத்தத்தைத் துடைக்க தேவைப்படும்.

அதே போல, ஆளில்லாத சிக்னலில் 'சிகப்பு' போட்டுள்ளதால் நிற்கிறீர்களா, வலதோ இடதோ எவ்வளவு ஓரமாக நிற்க முடியுமோ அவ்வளவு ஓரமாக நிற்கவும். இல்லையென்றால் பரம்பரை மானமே போய் விடும் வாய்ப்பு உள்ளது.

உங்களுக்கு முன்னால் செல்பவர்கள், முன்னறிப்பிவின்றி இடதோ, வலதோ திரும்பினால், நீங்கள் கோபப்பட முடியாது. அதைப்பற்றி உங்களுக்கு தெரியாதது உங்களின் அறியாமை. அல்லது அவர் போன மாதமே தபால் மூலம் தெரிவித்திருப்பார், நீங்கள் தவற விட்டிருப்பீர்கள்.

மாநகர பேருந்து, குப்பை லாரி, தண்ணீர் லாரி, கால் டாக்ஸி, டெம்போ டிராவெல்லர் வண்டிகளுடன் எந்த வித சகவாசமும் வைத்துக் கொள்ள வேணாம்.அவர்கள் தவறான முறையில் வந்தாலும், மரியாதை கொடுத்து ஒதுக்கிப் போய் விடவும்.

மிக மிக முக்கியம், வெட்கம் மானம் சூடு சுரணை இவை அனைத்தையும் வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விடவும். உயிர் போனாலும், அவையாவது மிஞ்சும். முடிந்தால், வீட்டை விட்டு வெளியே வராமலேயே இருக்கவும்.

கடவுளிடம் வடிவேலு ஸ்டைலில் ஒரு கேள்வி கேட்க வேண்டும் "என்னங்க, போன வருஷமே உலகத்தை அழிக்கிறேன்னு சொன்னீங்க, அழிக்கல?"

சில கீச்சுக்கள்:

'இவரு செமையான டிரைவர். சூப்பரா ஓட்டுவாரு' என்று யாரையாவது குறிப்பிட்டால், அவர் கண்டிப்பாக சாலை விதிகளை மதிக்க மாட்டார் என்ற அர்த்தம் #அனுபவம்.

சாலை விதிகளை மீறுபவர்களை விட, மதிப்பவர்கள்தான் அதிகம் அடிபடுகிறார்கள். #அனுபவம்.

சிக்னலில் 5 நொடிகள் இருக்கும்போது முன்னே சீறிப் பாய்பவர்களிடம் கேட்க விரும்புவது "சார், அப்படி என்ன சாதிக்கப் போறீங்க"

வெளி நாட்டினருக்கும், நமக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. அவனுக்கு "இது என் நாடு, நான் ஒழுங்காக வைத்திருப்பேன்", நம்மவர்களுக்கோ "இது என் நாடு, நான் வேணும்னாலும் பண்ணுவேன்".

Thursday, July 11, 2013

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

இந்த வருடத்தில் எப்படியாவது மாதத்திற்கு இரண்டு பதிவாவது போட்டு விடவேண்டும் என்று நினைத்து, நான்கு மாதங்கள் அடித்துப் பிடித்து போட்டுவிட்டேன். பின்பு சமாளிக்க முடியவில்லை. எனவே, இனி மாதம் ஒரு பதிவாவது போட்டு விட வேண்டும் என்று முடிவை மாற்றி விட்டேன். இதை நடப்பு மாதத்தோடு நிறைவேற்றியும் விட்டேன்.

விமர்சனங்கள்:

நேரம்: ஒரு படத்திற்கு தலைப்பு எவ்வளவு முக்கியம் என்று இந்தப்படத்தில்தான் எனக்குப் புரிந்தது. ஒருவேளை அதிர்ஷ்டம் என்றுவைத்திருந்தால், படம் நட்டுக் கொண்டு போயிருக்குமோ என்னவோ. மந்தைவெளியை சுற்றி, நான்கு தெருக்களில், பத்து பேர் சுற்றி சுற்றி வந்தே படத்தை முடித்து விட்டனர். ஆனாலும், நல்ல நேரம்தான். பார்க்கலாம்.தீயா வேலை செய்யணும் குமாரு: படத்துக்கு போனோமா, சும்மா ஜாலியா இருந்தோமா, எங்கிருந்து சுட்டிருந்தா நமக்கென்ன, என்று நினைக்கும் மக்கள் இருக்கும் வரை, சுந்தருக்கு கவலை இல்லை. சந்தானத்துக்கும் கவலை இல்லை. சுட்ட பழமோ சுடாத பழமோ, இனித்தால் மட்டும் போதும்.


தில்லு முல்லு: பல நேரங்களில் பழையது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தெரிய இது போன்ற புதியவைகள் நமக்கு தேவைப்படுகிறது.


குட்டிப் புலி: படத்தில் எனக்குப் பிடித்தது 'பொன்னோவியம்' பாடல் மட்டும்தான்.நாட்டு நடப்பு:

சமீப காலங்களில் தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது, மீண்டும் மக்களிடையே ஒளிந்திருந்த 'சாதி' மீண்டும் வெளியே வந்து விட்டது என்றே தோன்றுகிறது. இதனால், ஒரு தற்கொலை, அப்பாவி மக்களுக்கு பாதிப்பு, இன்னொரு தற்கொலை(?). இன்னும் இது எங்கே போய் நிற்குமோ தெரியவில்லை.

என்னைப் பொறுத்த வரை இது ஒரு 'இனக் கவர்ச்சியால்' வந்த காதல்தான்.இதை ஏதோ தெய்வீக காதல் அளவிற்கு ஏன் புகழ்கிறார்கள் என்றே தெரியவில்லை. [இது என்னுடைய கருத்து. நான் சாதி வெறியன் அல்ல, எனக்கு தோன்றியதால் கூறியுள்ளேன்] சாதியை மறந்து விடுங்கள். நம் 20 வயது தம்பி ஒருவன் காதலிக்கிறான் என்றால், நாம் என்ன அறிவுரை கூறுவோம்? 'இன்னும் வயசிருக்குடா' என்றுதானே?

என்னுடைய சந்தேகங்கள்: ஒருவேளை, திவ்யா தனது சாதியில், ஆனால் பொருளாதாரத்தில் தாழ்ந்த ஒருவனைக் காதலித்து, அதனால் அவளது தந்தை இறந்திருந்தால் அது உள்ளூர் நாளேட்டின் நான்காம் பக்க செய்தியோடு முடிந்திருக்கும். யாரும் திவ்யா பற்றி கவலைப் பட்டிருக்க மாட்டார்கள். 

இதே போல நடந்திருக்கும் யாருக்காவது ஏன் இந்த சாதிசங்க வழக்காளர்கள் சென்று வாதாடவில்லை? அதை விட, ஏன் இவர்கள்' சாதிக்காக' வாதாடவில்லை என்றால், தர்மபுரி கலவரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, இணைந்து வாதாடலாமே?

இளவரசன் தற்கொலை செய்து கொண்டிருந்தால், அதை ஏன் 'வீர மரணம்'அளவிற்கு புகழ வேண்டும்? தனது காதலால் இன மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளர்களே, சரி தனது காதல் தோற்று விட்டதே, நாம் இனி அந்த மக்களுக்காக, குறைந்தது பெற்றோருக்காவது வாழ வேண்டுமென்று தோன்றவில்லையே. இது சுயநலமில்லையா? 

சாதியுமில்லை மதமுமில்லை என்று சொல்லும் அனைவரிடமும் சாதியும் மதமும் ஒளிந்துள்ளன. இதை என் நண்பன் எனக்கு நிரூபித்தான். அவன் வேறு மதம். நான் அவனிடம் மதச் சார்பற்றவன் என்றேன், இல்லை என்று மேலே சொன்ன கருத்தை சொன்னான். அது அப்படியே போய் விட்டது.

இன்னொரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது, "உங்க மதத்துல அப்படி இருக்குமே, இப்படி பண்ணுவீங்களே" என்றெல்லாம் சொன்னவுடன், எனக்கு கோபம் வந்து "உங்க இதுல மட்டும் எப்படியாம்" என்றவுடன் அவன்சொன்னான், "நாந்தான் ஏற்கனவே சொன்னேன்ல". இது ஒரு வகையான எதிர்வினைதான். ஆனாலும், என்னுள்ளே என்னுடைய மதமும், சாதியும் ஒளிந்துள்ளன என்பதை அன்றுதான் கண்டு கொண்டேன்.

இந்த உலகில் யாருமே இன்னொரு மனிதனை 'மனிதனாக' பார்ப்பதில்லை.அவனை ஏதாவதொரு வகையில் நம்மோடு இணைத்துக் கொள்கிறோம் (சாதி,மதம், இனம், மொழி, நாடு) அல்லது அதையே காரணம் காட்டி பிரித்துவைக்கிறோம். ஏன் இப்படி?

இதைப் பற்றி நிறைய கலந்துரையாட வேண்டும். நானும் இதைப் பற்றி இன்னும்சில பதிவுகளை எழுத வேண்டும். யாரும் படித்து பின்னூட்டமிடுவதற்காக அல்ல. என் எண்ணங்களை பகிர வேண்டும் என்பதற்காக.

தயவு செய்து தங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களோ, தவறான கருத்துகளோ இருப்பின் கூறுங்கள், எடுத்து விடுகிறேன். நன்றி.

Monday, June 10, 2013

எனது கலைத்திறமை

ஏற்கனவே எனது கலைத்திறமையை பார்க்காதவர்களுக்காக..


வேற ஒன்னுமில்லீங்க ஒரு பதிவு போட்டு கணக்கு காமிக்கணும் அதான்...

Monday, May 20, 2013

ஆச்சரியப்படுத்தும் புதுமுகங்கள்!!

ஒரு வழியாக, ஆரம்பித்து ஆறு வருடங்கள் கழித்து, நாலு பேரைக் கெஞ்சிக் கூத்தாடி எப்படியோ, 10000 பேரின் வருகைகளை சம்பாதித்து விட்டேன். நன்றி நண்பர்களே..

சமீப காலமாக வந்த படங்களில், பெரிய இயக்குனர்களின் படங்களை விட, புது இயக்குனர்களின் படங்கள்தான் நன்றாக உள்ளன. சில படங்கள் வெற்றியடையவில்லை என்றாலும், மிக நன்றாகவே இருந்தன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம். இவற்றில் பல இயக்குனர்களின் இரண்டாவது படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன். சில படங்களை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன், ஆனாலும், மீண்டும் குறிப்பிடுகிறேன். சில படங்களை மறந்திருந்தால், பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

எந்தவொரு இயக்குனரும் தனது இரண்டாவது படத்தில்தான் தனது திறமையை நிரூபித்து உள்ளனர். உதாரணமாக பாரதி ராஜா, ஷங்கர், லிங்குசாமி போன்றோர் (வெற்றிக்கு), சசிகுமார் மற்றும் பலர் (தோல்விக்கு). அனைவருமே, தங்களின் இரண்டாவது படம் பார்க்கும்போது, முதல் படம் நினைவுக்கு வராமல், முற்றிலும் வித்தியாசமான கதைக்களனைக் கையாண்டுள்ளனர். ஆனால், அவர்களின் முதல் படம் நம் நினைவுக்கு வராமல், இரண்டாவது படத்திலேயே ஒன்ற வைத்ததில் தான் வெற்றி அடங்கியுள்ளது. கீழ்க்கண்ட அனைவரும் எந்த வரிசையில் வருகிறார்கள் என்று பார்ப்போம்.

எங்கேயும் எப்போதும் - சரவணன்:

என்னைப் பொறுத்த வரை, 2012ம் ஆண்டில் வந்த மிகச்சிறந்த படம். இயக்குனர் நாமக்கல்காரர் என்பதால் மட்டுமல்ல. படமும் நல்ல படம் என்பதால்தான். அடுத்து விக்ரம் பிரபுவை வைத்து இயக்குவதாக செய்தி. பார்ப்போம்.

படம் பார்க்காதவர்களுக்காக:

 

ஈரம் - அறிவழகன்:

பேயே இல்லாமல் வந்த பேய்ப்படம். இப்போது வல்லினம் படத்தை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். படம் கூடைப்பந்து விளையாட்டை மையப்படுத்தி அமைந்துள்ளது போல. பார்ப்போம்.


ஆச்சரியங்கள் - ஹர்ஷவர்தன்:

படம் 'One Night at a Call Center' படத்தை நினைவூட்டினாலும், உண்மையிலேயே அப்படியொன்றும் குறை கூறும் அளவிற்கு இல்லை. தேவையில்லாத, லாஜிக் மீறல் இல்லாத காட்சிகள் எதுவும் இல்லை. இந்தப் படம் அவ்வளவாக வெற்றி அடையா விட்டாலும் கண்டிப்பாக அடுத்த படத்தில் சாதிப்பார் என்று நம்புகிறேன். இப்போது வந்துள்ள 'நேரம்' படமும் இதைப் போலவேதான் என்றும் நினைக்கிறேன்.

படம் பார்க்காதவர்களுக்காக:

 

புதுமுகங்கள் தேவை - மனீஷ் பாபு:

படம் எடுப்பதைப் பற்றி நிறைய படங்கள் நிறைய வந்துள்ளன. சில படங்கள் குழப்பத்தையே உண்டாக்கின (பொம்மலாட்டம் போன்றவை). ஆனால் இந்தப் படம், மிகத் தெளிவான குழப்பத்தை உண்டாக்கியிருப்பர். கடைசி காட்சி வரை 'எங்கடா, continuity இல்லையே' என்ற குழப்பம்தான் இருந்தது. இன்னும் எனக்கு பெயர்க் குழப்பம் தீரவேயில்லை. கீழே வரும் இந்த காணொளியை பாருங்கள், அதன் பின் இந்தப் படத்தைப் பாருங்கள். நீங்களும் நிறைய கண்டு பிடிக்கலாம்.

ஆரண்ய காண்டம் - தியாகராஜன் குமாரராஜா:

இந்தப் படத்திற்கு எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தங்கமணி இந்தப் படத்தைப் பார்த்து விட்டு என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு போய் விட்டார்கள். ஆனாலும் எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்தது. எங்கே போயிட்டீங்க தியாகராஜன்?? படத்தின் பின்னணி இசைதான் என்னை மிகவும் கவர்ந்தது. அதன் தொகுப்பு இங்கே.

 

மௌன குரு, சாந்தகுமார்:

சாதாரணமாகவே மிக நல்ல படம். ராஜபாட்டை போல மொக்கை படத்துடன் வந்ததால் இன்னும் ரொம்ப நன்றாகவே இருந்தது. நீங்களும் எங்கே இருக்கீங்க சாந்தகுமார்?.

தடையற தாக்க - மகிழ் திருமேனி:

அடடே, திருட்டுத்தனமாகப் பார்க்கிறோமே என்று நினைக்க வைத்த படம். அருமையான திரில்லர் படம். நன்கு கவனிக்கப்பட்ட அளவிற்கு வசூல் இல்லை என்று நினைக்கிறேன். Youtubeல் அதிகமாக பார்க்கப் பட்ட தமிழ்ப் படங்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.


நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - பாலாஜி தரணீதரன்:

இப்படி எல்லாம் கூட படம் எடுக்க முடியுமா என்று வாயைப் பிளந்து பார்த்த படம். அடடே, நண்பர்களுடன் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைக்க வைத்த படம்.

இன்னும் குள்ளநரிக்கூட்டம் - ஸ்ரீபாலாஜி, நான் - ஜீவா சங்கர், சாட்டை - அன்பழகன் என்று பலரும், வழக்கமான பாணியை விட்டு விட்டு வித்தியாசமான கதைக்களங்களை உருவாக்கியுள்ளனர்.

இவர்களைத் தவிர, பிட்சா - கார்த்திக் சுப்பாராஜ், காதலில் சொதப்புவது எப்படி - பாலாஜி மோகன், சூது கவ்வும் - நளன் குமாரசாமி போன்றோரும் உள்ளனர், ஆனாலும் அவர்கள் அனைவரும் என்னைப் பொறுத்தவரை குறும்படங்களிலேயே தமது திறமையை நிரூபித்து விட்டனர். என்றாலும் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இப்போது யாருடைய அடுத்த படம் வந்தாலும், அவர்களின் முதல் படம் நம் நினைவுக்கு வராமல், முழுதும் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

Wednesday, April 24, 2013

உதிரிப்பூக்கள் - கதைக்குத் தேவையான கவர்ச்சி

நீங்க கவர்ச்சியா நடிப்பீங்களா?

கதைக்குத் தேவையான கவர்ச்சினா, கவர்ச்சி காட்றதுல தப்பில்ல.

எந்த நடிகையை எடுத்துக் கொண்டாலும், இந்த கேள்வி உண்டு. இதே பதிலும் நிறைய பேரிடம் வந்ததும் உண்டு. இந்த கேள்வி எனக்கு எப்படி தோன்றும் என்றால், இதற்கு எனக்கு ஒரு கேள்வி கேட்க வேண்டும் போல உள்ளது. அட, அதில்லீங்க, "படத்துல, நீங்க நகைச்சுவை நடிகரோட கை கோத்துக்கிட்டு போற மாதிரி ஒரு காட்சி" என்று சொன்னால், அதில் நீங்கள் நடிப்பீர்களா? கண்டிப்பாக மாட்டீர்கள். நாயகனுடன் மட்டும்தான் ஜோடியாக நடிப்பேன் என்பீர்கள்.

கதைக்கு அது தேவைதான், ஆனால், நடிக்க மாட்டீர்கள். சமீபத்தில் 'பத்ம' விருதை ஒதுக்கிய ஜானகி அம்மாளை ரசித்தேன். ஆனாலும், அவரது கருத்தில் ஒன்றே ஒன்றுதான் இடித்தது. அதாவது, ஒரு படத்தில், இவர் பாட வேண்டிய பாடல் நகைச்சுவை நடிகைக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அதனால் அதை தான் பாடவில்லை என்றும் சொல்லியிருந்தார். கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஜானகி அவர்கள், குரலை நன்றாக மாற்றிப் பாடக்கூடியவர். அவரால், அந்த நகைச்சுவை உணர்வைக் கொடுக்க முடியும் என்பதால்தான் அவர் அழைக்கப்பட்டிருப்பார்.என்னவோ போங்கள்.


உதிரிப்பூக்கள் என்ற (சீரியல் அல்ல) ஒரு பழைய படம் உள்ளது. நிறைய பேர், தமிழில் உள்ள உலகத் திரைப்படம் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால், படம் பார்த்தால் "அப்படி எதுவும் தெரியவில்லையே, படம் ஒரு சாதாரண கதைதான், இதில் என்ன உள்ளது என்று ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள்" என்றுதான் எல்லோருக்கும் தோன்றும். இதே கேள்வியை நான் ஒரு பதிவிலும் பார்த்திருக்கிறேன்.

நம்மவர்களுக்கு, உலகப்படம் என்றாலே ஒரு முறை பார்த்தால் புரியக்கூடாது, திரைக்கதை ஒரே நேர்க்கோட்டில் போவது போல இருக்கக்கூடாது என்று நிறைய நியதிகளை நாமே வகுத்து விட்டோம். அதனால்தான் இந்த படத்தில் அப்படி என்ன உள்ளது என்ற கேள்வி வருகிறது. இந்தப் படத்தை சிறு வயதிலேயே DDயில் பார்த்திருக்கிறேன். அப்போது இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை (கவனிக்க. புரியவில்லை என்று சொல்லவில்லை). ஏனென்றால் சண்டை இல்லை, கவுண்டமணி செந்தில் இல்லை.

இந்தப் படத்தில் ஏதோ உள்ளது என்று எப்போது தெரிந்தது என்றால், என் மாமா பொதுவாக படமே பார்க்க மாட்டார். அவரது மகன்களுக்காக ரஜினி படங்கள் மட்டுமே கூட்டிப் போவார். அவர் பார்த்து கண் கலங்கிய படம் 'உதிரிப்பூக்கள்'. இதை என் அத்தை என்னிடம் சொல்லியபோதுதான் முதன் முதலில் "இந்தப் படத்தில் என்னமோ உள்ளது போலவே?" என்று நினைத்தேன்.

இந்தப் படத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அலசி விட்டார்கள் நானும் என் பங்குக்கு, என்னுடைய புரிதல்களை பகிர்கிறேன்.படத்தின் பாத்திரங்கள். படத்தில் கெட்டவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். விஜயனின் ஒரு சில குணங்களே, அவரைக் கெட்டவராக மாற்றும். தேவையில்லாமல் ஓவராக பேசும் குழந்தைகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் படத்தில் நாயகன் நாயகி என்று கூட சொல்ல முடியாது.

அதே போல படத்தின் வசனங்கள். விஜயனின் இரண்டாவது மனைவி, அவரின் குணம் தெரிந்து கிளம்பும்போது, விஜயன் தடுப்பார். அப்போது சொல்லுவார் "என்னை நாங்க இப்போதைக்கு தடுக்கலாம் ஆனா, நாளைக்கே நான் உங்களது சொத்துல விஷம் வைக்க முடியும்" என்பார். தேவையில்லாத அழுகையே இருக்காது. குறிப்பால் உணர்த்தும் காட்சிகள். கணவன் பூ, இனிப்பு எல்லாம் வாங்கி அனுப்பிவிட்டு, இரவு சினிமாவுக்கு போகலாம், சமைக்க வேணாம். வெளியே சாப்பிடப் போகிறோம் என்று சொல்லி அனுப்பியவுடன், அஷ்வினி மேலே பார்ப்பார் ("மழை வருதா என்ன" என்பது போல). ஒரு சாதாரண காட்சிதான். ஆனால், அது ஒரு அசாதாரண நிகழ்வு என்பதையும் உணர்த்தியிருப்பார். 

இந்தப் படத்தில், நாயகி குளிக்கப் போவது போல வரும். ஆனால், குளியல் காட்சி இல்லை. வறுமையால் நாயகி உடை கிழிந்திருக்கும் அனால் 'கிளிவேஜ்' இருக்காது. உடைகள் கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவாள். ஆனால், விரசம் இருக்காது.

படத்தில் பல முக்கியமான, கதைக்குத் தேவையான காட்சிகள் படத்தில் வராது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், இறுதிக் காட்சியில் விஜயன் தண்ணீரில் மூழ்கி இறக்கும் காட்சி, விஜயன் சரத்பாபுவை அடிப்பது போன்றவை.

படத்தின் இசை பற்றி தனியாக சொல்ல வேண்டுமா? இளையராஜா. 'அழகிய கண்ணே' பாடல் ஒன்று போதுமே. ஆனால், இங்கே உள்ளது படத்தின் ஆரம்பத்தில், இளையராஜாவின் குரலில் வரும் பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.


உதிரிப்பூக்கள் - பார்க்கப்பட மட்டுமல்ல போற்றப்படவும் வேண்டியது.

டிஸ்கி: கூகிள் போய் 'உதிரிப்பூக்கள்' என்று தேடினால் சன் டிவியில் வரும் சீரியல்தான் வருகிறது. திரைப்படங்களின் பெயர்களை இது போன்று சீரியல்களுக்கு பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும்..

Monday, April 8, 2013

பல குறும்படங்களும், சில விளம்பரங்களும்!!!

இங்கே நான் பகிர்ந்துள்ள நிறைய குறும்படங்களை அறிமுகப்படுத்திய அண்ணன் சுரேஷ் குமார் அவர்களுக்கு நன்றி.. நன்றி.. நன்றி..

சும்மா, நான் மிகவும் ரசித்த, ரசித்துக் கொண்டிருக்கின்ற குறும்படங்கள் பற்றிய பார்வை, விளம்பர இடைவேளைகளோடு உள்ளது. நிகழ்ச்சிக்குப் போவோமா?

ஜக்கு பாய்ஸ்:

நான்கு வருடங்கள் இருக்கும். அப்போதுதான் குறும்படங்கள் வந்த புதிது. ஆன் சைட்டில் இருந்து நண்பன் ஒரு இணைப்பை அனுப்பி, "கண்டிப்பாக பார்" என்று சொல்லியிருந்தான். சரி பாக்காலாம், என்று நாங்களும் விட்டு விட்டோம்.

ஒரு பொழுது போகாத நாளில், நான் மட்டும், அதை பார்க்க ஆரம்பித்தேன். இரண்டு நிமிடங்களில் "என்ன எழவுடா இது" என்று தோன்றியது. அதன் பின், சும்மா பர பரவென் பட்டாசு கிளப்பியது. இத்தனைக்கும், அப்போது நான் ஆணி பிடுங்கும் வேலையில் இல்லை. தானியங்கித் துறையில் இருந்தேன். இருந்தாலும், எனக்கும், அந்த குறும்படத்தில் வரும் சம்பவங்கள் பொருந்தியது என்பது உண்மை. இந்தப் படத்தைப் பின் தரவிறக்கம் செய்து, கிட்டத்தட்ட விளம்பரமே செய்தோம். ஆணி பிடுங்கும் துறை உள்ளவரை, இந்தப் படமும் நிலைத்திருக்கும்.ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் சந்திப்போம்.

ஒரு காலத்தில், எல்லா வங்கி மற்றும் காப்பீடு நிறுவன விளம்பரங்கள் அனைத்தும், குழந்தைகளை மையப்படுத்தி, மிகவும் ரசிக்கும் வகையில் வந்தன. அதில், எனக்கு மிகவும் பிடித்தது இந்த விளம்பரம்தான். அதுவும், அந்த குழந்தையின் பாவனைகள், அப்பப்பா...சரி, மீண்டும் குறும்படங்களுக்குப் போகலாம். 

குறும்படங்கள் எல்லாம் நல்ல இருக்கும் போலவே என்று என்று தினமும் வீட்டிற்கு வந்து குறும்படங்கள் பார்க்க ஆரம்பித்தோம். நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டோம். அப்பா, ஆள விடுங்கடா சாமி என்றாகி விட்டது. அதன் பின், எப்போதாவது நாளைய இயக்குனர் மட்டும் பார்க்க ஆரம்பித்தோம்.

துரு: 

அப்போதுதான் ஒரு நாள் இந்தக் குறும்படத்தைப் பார்த்தோம். பார்த்தவுடனே, அதை மீண்டும் பார்க்க வேண்டுமே என்று தோன்றியது. ஏனென்றால், நீங்களும் பாருங்கள், உங்களுக்கும் தெரியும். அதன் பின், இதையும் வலையுலாவி, கண்டு பிடித்தோம்.
இந்த குறும்படத்தின் இயக்குனர் 'கார்த்திக் சுப்பராஜ்' இப்போது பிட்சா என்ற வெற்றிப் படத்தின் இயக்குனர். வாழ்த்துக்கள். அவரின் அடுத்த படிப்பிற்காக காத்திருக்கிறோம். 

ராமசாமி: 

திடீரென, யாரோ பகிர்ந்த ஒரு படம். மொக்கையாகத்தான் இருந்தது. ஆனாலும், கடைசியில் வரும் 'ராமசாமி' பாத்திரம், அதற்காகவே ரசித்து சிரிக்கலாம். அதுவரை சற்றே பொறுமையாக பார்க்க வேண்டுகிறேன்.மீண்டும் ஒரு விளம்பர இடைவேளை.

சமீபத்தில் வந்த காப்பீட்டு விளம்பரம். ஹிந்தியில்தால் பாடல் எனக்கு ரசிக்கும்படி உள்ளது. ஆண்கள் பற்றிய, ஒரு மிக நல்ல விளம்பரம். மீண்டும் நிகழ்ச்சிக்கு போவோமா?

Pastense:

இந்தப் படத்தைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. சிறு குறிப்பு மட்டும்தான். இதை ஒரு அழுகாட்சிக் காவியமாகாக் கூட எடுத்திருக்கலாம், ஆனால், கடைசி வரை நகைச்சுவை இழையோடும். கவனியுங்கள்."இப்படியே போனா பந்து கடைதான் வைக்கணும்", "என்னது, தேங்கா பேசுது?", "டேய் ஊறுகா சப்பி" இவை முதலிரண்டு நிமிடங்களில் வரும் வசனங்கள்.. கவனித்தீர்களா?

இவை இரண்டும் குறும் படங்கள் அல்ல. ஆனால், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு முதன் முதலில் வந்த விளம்பரங்கள். அட்டகாசம். இப்போது பார்க்கும்போதுதான் ஏன் அந்த இரண்டாவது விளம்பரம் என்று தெரிகிறது. முதல் காணொளியில், கடைசியாக வரும் சிறுவனின் பாவனைகள்.. ப்பா!!ஆனால் ஒரு சந்தேகம். இதில் வரும் யாருமே படத்தில் வரவில்லையே, ஏன்? என்னாச்சு?!!!

இதே போல இன்னும் நிறைய (ஓரளவு தேர்ந்தெடுக்கப்பட்ட) திரைப்படங்களை சுரேஷ் குமாரின் இந்த அடையாளத்திலும், இந்தப் பதிவிலும் காணலாம். சும்மா.. மக்களுக்கு நாலு நல்லப் படத்தைப் பத்தி சொல்லலாமுன்னு வந்தேன்.. அம்புட்டுதேன்.. (பதிவு கணக்குல ஒன்னு சேத்துக்கப்பு)