Thursday, July 11, 2013

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

இந்த வருடத்தில் எப்படியாவது மாதத்திற்கு இரண்டு பதிவாவது போட்டு விடவேண்டும் என்று நினைத்து, நான்கு மாதங்கள் அடித்துப் பிடித்து போட்டுவிட்டேன். பின்பு சமாளிக்க முடியவில்லை. எனவே, இனி மாதம் ஒரு பதிவாவது போட்டு விட வேண்டும் என்று முடிவை மாற்றி விட்டேன். இதை நடப்பு மாதத்தோடு நிறைவேற்றியும் விட்டேன்.

விமர்சனங்கள்:

நேரம்: ஒரு படத்திற்கு தலைப்பு எவ்வளவு முக்கியம் என்று இந்தப்படத்தில்தான் எனக்குப் புரிந்தது. ஒருவேளை அதிர்ஷ்டம் என்றுவைத்திருந்தால், படம் நட்டுக் கொண்டு போயிருக்குமோ என்னவோ. மந்தைவெளியை சுற்றி, நான்கு தெருக்களில், பத்து பேர் சுற்றி சுற்றி வந்தே படத்தை முடித்து விட்டனர். ஆனாலும், நல்ல நேரம்தான். பார்க்கலாம்.



தீயா வேலை செய்யணும் குமாரு: படத்துக்கு போனோமா, சும்மா ஜாலியா இருந்தோமா, எங்கிருந்து சுட்டிருந்தா நமக்கென்ன, என்று நினைக்கும் மக்கள் இருக்கும் வரை, சுந்தருக்கு கவலை இல்லை. சந்தானத்துக்கும் கவலை இல்லை. சுட்ட பழமோ சுடாத பழமோ, இனித்தால் மட்டும் போதும்.


தில்லு முல்லு: பல நேரங்களில் பழையது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தெரிய இது போன்ற புதியவைகள் நமக்கு தேவைப்படுகிறது.


குட்டிப் புலி: படத்தில் எனக்குப் பிடித்தது 'பொன்னோவியம்' பாடல் மட்டும்தான்.



நாட்டு நடப்பு:

சமீப காலங்களில் தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது, மீண்டும் மக்களிடையே ஒளிந்திருந்த 'சாதி' மீண்டும் வெளியே வந்து விட்டது என்றே தோன்றுகிறது. இதனால், ஒரு தற்கொலை, அப்பாவி மக்களுக்கு பாதிப்பு, இன்னொரு தற்கொலை(?). இன்னும் இது எங்கே போய் நிற்குமோ தெரியவில்லை.

என்னைப் பொறுத்த வரை இது ஒரு 'இனக் கவர்ச்சியால்' வந்த காதல்தான்.இதை ஏதோ தெய்வீக காதல் அளவிற்கு ஏன் புகழ்கிறார்கள் என்றே தெரியவில்லை. [இது என்னுடைய கருத்து. நான் சாதி வெறியன் அல்ல, எனக்கு தோன்றியதால் கூறியுள்ளேன்] சாதியை மறந்து விடுங்கள். நம் 20 வயது தம்பி ஒருவன் காதலிக்கிறான் என்றால், நாம் என்ன அறிவுரை கூறுவோம்? 'இன்னும் வயசிருக்குடா' என்றுதானே?

என்னுடைய சந்தேகங்கள்: ஒருவேளை, திவ்யா தனது சாதியில், ஆனால் பொருளாதாரத்தில் தாழ்ந்த ஒருவனைக் காதலித்து, அதனால் அவளது தந்தை இறந்திருந்தால் அது உள்ளூர் நாளேட்டின் நான்காம் பக்க செய்தியோடு முடிந்திருக்கும். யாரும் திவ்யா பற்றி கவலைப் பட்டிருக்க மாட்டார்கள். 

இதே போல நடந்திருக்கும் யாருக்காவது ஏன் இந்த சாதிசங்க வழக்காளர்கள் சென்று வாதாடவில்லை? அதை விட, ஏன் இவர்கள்' சாதிக்காக' வாதாடவில்லை என்றால், தர்மபுரி கலவரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, இணைந்து வாதாடலாமே?

இளவரசன் தற்கொலை செய்து கொண்டிருந்தால், அதை ஏன் 'வீர மரணம்'அளவிற்கு புகழ வேண்டும்? தனது காதலால் இன மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளர்களே, சரி தனது காதல் தோற்று விட்டதே, நாம் இனி அந்த மக்களுக்காக, குறைந்தது பெற்றோருக்காவது வாழ வேண்டுமென்று தோன்றவில்லையே. இது சுயநலமில்லையா? 

சாதியுமில்லை மதமுமில்லை என்று சொல்லும் அனைவரிடமும் சாதியும் மதமும் ஒளிந்துள்ளன. இதை என் நண்பன் எனக்கு நிரூபித்தான். அவன் வேறு மதம். நான் அவனிடம் மதச் சார்பற்றவன் என்றேன், இல்லை என்று மேலே சொன்ன கருத்தை சொன்னான். அது அப்படியே போய் விட்டது.

இன்னொரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது, "உங்க மதத்துல அப்படி இருக்குமே, இப்படி பண்ணுவீங்களே" என்றெல்லாம் சொன்னவுடன், எனக்கு கோபம் வந்து "உங்க இதுல மட்டும் எப்படியாம்" என்றவுடன் அவன்சொன்னான், "நாந்தான் ஏற்கனவே சொன்னேன்ல". இது ஒரு வகையான எதிர்வினைதான். ஆனாலும், என்னுள்ளே என்னுடைய மதமும், சாதியும் ஒளிந்துள்ளன என்பதை அன்றுதான் கண்டு கொண்டேன்.

இந்த உலகில் யாருமே இன்னொரு மனிதனை 'மனிதனாக' பார்ப்பதில்லை.அவனை ஏதாவதொரு வகையில் நம்மோடு இணைத்துக் கொள்கிறோம் (சாதி,மதம், இனம், மொழி, நாடு) அல்லது அதையே காரணம் காட்டி பிரித்துவைக்கிறோம். ஏன் இப்படி?

இதைப் பற்றி நிறைய கலந்துரையாட வேண்டும். நானும் இதைப் பற்றி இன்னும்சில பதிவுகளை எழுத வேண்டும். யாரும் படித்து பின்னூட்டமிடுவதற்காக அல்ல. என் எண்ணங்களை பகிர வேண்டும் என்பதற்காக.

தயவு செய்து தங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களோ, தவறான கருத்துகளோ இருப்பின் கூறுங்கள், எடுத்து விடுகிறேன். நன்றி.