Tuesday, September 21, 2010

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

இப்போதெல்லாம் பெரிய பதிவர் ஆக வேண்டும் என்றால் இது போல மசாலா மிக்ஸ் பதிவுகள் இடவேண்டும் என்று மரத்தடி ஜோசியக்காரர் சொன்னார். அதை விட முக்கியம் என்ன பதிவிடலாம் என்று பொழுதை ஓட்டுவதை விட, இது போல நாலு வெட்டி விஷயங்களைப் பற்றி எழுதி ஒப்பேற்றி விடலாம் என்றுள்ளேன். இனி உங்கள் தலைவிதி.

கமல் காப்பி:

கமல் காப்பி குடிப்பாரா இல்லை டீ குடிப்பாரா என்று நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். வாதி, பிரதிவாதிகள் நிறைய பேர் உள்ளனர். ஒவ்வொருவரும் தாங்கள் நினைத்ததை எழுதவே பதிவுலகிற்கு வருகின்றனர். அனைவருக்கும் கமலை விட ரஜினியை விட மோசமான பிரச்சினைகள் (அ) மகிழ்ச்சியான நிகழ்வுகள் வீட்டிலோ, அலுவலகத்திலோ நடக்கும். ஆனால், அதைப் பற்றி எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள் என்பதால் இவர்கள் சிக்குகிறார்கள். அந்த மீடியாக்காரங்கதான் அப்படின்னா நீங்களுமா??

பொதுவாக ஒருவர் செய்வது சரியா தவறா என்பது, அவர் நமக்கு பிடித்தவரா, இல்லையா என்பதைப் பொறுத்த விஷயம். நமக்கு மிகவும் பிடித்த ஒருவர் தவறு செய்தால், நமக்கு தெரிந்தாலும் மூன்றாம் நபரிடம் "இல்லை, இல்லை. அது சரிதான்" என்றே வாதிடுவோம். அதேதான் நடக்கிறது.

இப்போதுதான் Technology has very much improved இல்லையா. ஏன் ராபின் வில்லியம்ஸ்க்கு ஒரு மெயில் அனுப்பக் கூடாது? "பாருங்க சார். உங்க படத்த அப்படியே தமிழ்ல டப் பண்ணி இருக்காங்க" என்று. அதை விட்டு விட்டு சும்மா பதிவிட்டால்? மக்கள் அதைப் படித்து விட்டு உடனே "நீங்க காப்பி அடிக்கிறீங்க, உங்க படத்த நாங்க பாக்க மாட்டோம்" என்று புரட்சி செய்வார்களா என்ன?

நான் கமல் மற்றும் இளையராஜாவின் ரசிகன். இதுவரை படித்ததில் புரிந்திருக்கும். அதற்காக ரஜினி, ரஹ்மானை நான் வெறுத்ததில்லை. ஆனால், பொதுவாக விவாதம் நடக்கும்போது (கல்லூரிக் காலங்களில், இப்போதல்ல. சற்றே தெளிந்து விட்டேன்) இவர்களை ஆதரிக்க அவர்களைப் பற்றி தவறான தகவல்களையே தர முயற்சிப்பேன். இப்போது நினைத்தாலும் வெட்கமாக உள்ளது. ராஜாவின் பாடல்களை விட, ரஹ்மானுடையதே அதிகம் கேட்பேன். ஏதாவது, எங்கேயாவது கேட்டது போல இருக்காதா? rahman copy என்று அடிக்கடி google செய்வேன்.

கமல், ரஜினி பற்றி எப்படி எழுதினாலும் நமக்கு எந்த வித ஆதாயமும் கிடையாது. சிவாஜி அதிகம் வசூலித்ததா இல்லை தசாவதாரம் அதிகம் வசூலித்ததா என்று பட்டிமன்றம் நடக்கையில், இதைப் பற்றி கவலைப்பட வேண்டியது AVMமும், ரவிச்சந்திரனும்தானே, நாம் ஏன்? என்று நினைத்தேன். AVMன் பேர் சொல்லும் பிள்ளை கமல் என்று அவர்களே படம் எடுத்தார்களே? (உடனே AVMன் எஜமான் ரஜினிதானே என்று சொல்ல வேண்டாம்).

இதனால் நான் சொல்வது என்னவென்றால், ரசிப்போம். சிரிப்போம். தவறென்றால் என்ன செய்யலாம்? செய்தவர் பிடித்திருந்தால் மன்னிப்போம். இல்லையென்றால் பதிவிட்டுக் கிழிப்போம்.

சிறுகதை:

பல வருடங்களுக்கு முன், குமுதத்தில் படித்த சிறுகதை. முடிவிற்குப் பின் இன்னொரு முடிவைக் கொடுத்துள்ளேன்.

ஒரு பேருந்துப் பயணம். ஒருவருக்கொருவர் அறிமுகமற்ற ஒரு முதியவரும், ஒரு இளைஞனும் அருகருகே அமர்ந்து பயணிக்கின்றனர். முதியவர் களைப்பாக இருப்பதால், தூங்கி தூங்கி இளைஞன் மேல் விழுகிறார். சொல்லி சொல்லிப் பார்க்கும் இளைஞன், ஒரு கட்டத்தில் கடுப்பாகி, அவர் விழும்போது எழுந்து விட, பெரியவர் பொறுமையாக சொல்கிறார்.

"ஏம்பா, நான் வயசானவன்னுதானே எழுந்துட்டே, ஒருவேள ஒரு பதினெட்டு வயசுப் பொண்ணு இப்படி தூங்கி விழுந்திருந்தா நீ எந்திரிச்சிருப்பியா?"

இத்துடன் கதை முடிந்திருந்தது. என் கருத்து அடுத்த வரி.

"ஏன் பெரியவரே. ஒருவேள ஒரு பதினெட்டு வயசுப் பொண்ணு உங்க பக்கத்துல உக்காந்திருக்கும்போது, நீங்க இப்படி அவங்க மேல தூங்கி விழுவீங்களா?"

திரைப்படங்கள்:

களவாணி, வம்சம், பாஸ் (எ) பாஸ்கரன் போன்ற சில நல்ல சில டைம் பாஸ் படங்களையும், விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணா (தமிழ் மற்றும் ஹிந்தி) போன்ற இன்னும் சில நல்ல (?) படங்களையும் பார்த்தேன். பாஸ் படம்தான் ரசித்து, சிரித்துப் பார்த்த படம். அதுவும் பயங்கரமாக கமெண்ட் எல்லாம் அடித்துக் கொண்டு, கூட வந்த நண்பர்களையும் கலாய்த்துக்கொண்டு அனுபவித்து சிரித்தோம்.

நண்பனின் தம்பியும் உடன் வந்திருந்தான். ஆர்யாவின் அண்ணன், ஆர்யா வெளியேறும்போது குடை கொடுக்கும் காட்சியில் நாங்கள் அவனிடம் "உங்கண்ணன் ரொம்ப நல்லவன்டா. குடை மட்டுமில்ல, ரெயின் கோட்டும் கொடுப்பான்டா. அண்ணேன்டா !!!" . அதே போல படம் பார்க்க நாங்கள் போனது Express Avenue Mall. எனவே, வெட்டி சீனாக, கண்ணாடி எல்லாம் போட்டுக்கொண்டு போனோம். சந்தானம் ஆர்யாவைப் பார்த்து கடுப்பாகி "அந்தக் கண்ணாடியைக் கழட்டித் தொலைடா" என்று கத்தும்போதெல்லாம், ஒரே ரவுசுதான் போங்க.

கொசுறு:

இன்னும் ஏதோ ஒன்று குறைகிறதே? Aதாவது ஜோக் சொல்ல வேண்டுமல்லவா? ம்ம்ம்ம்... ஒரு பழைய மொக்கை ஒன்று..

நண்பன் 1: எம் பொண்டாட்டி ஏதோ ஒரு வித்தியாசமான லிப்ஸ்டிக் வச்சிருக்கா. ரொம்ப வித்தியாசமான சுவை.
நண்பன் 2: ஆமாமா.. ஒரு மாதிரி ஆரஞ்ச் டேஸ்டும் இல்லாம மாதுளை மாதிரியும் இல்லாம.. கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கும்.

புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளவும். புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்.

தலைப்பைப் பார்த்து ஏமாந்து வந்தவர்கள் அப்படி ஒரு ஓரமாக துப்பிவிட்டு செல்லவும். மற்றவர்கள் வழக்கம் போலவே.