Tuesday, January 27, 2015

சொந்த பந்தம்

நரகத்தில் (மன்னிக்கவும்) நகரத்தில் பிறந்து, வாழ்ந்த எனது நண்பர்களுக்கு உறவுகளின் அர்த்தம் புரிந்ததில்லை. அவர்கள் பொதுவாக விடுமுறைகளில் மட்டும் ஊருக்கு போய் விட்டு வருகிறார்கள். பத்தாவது வந்தவுடன் அதுவும் நின்று விடுகிறது. அதன் பின் சுத்தம். "ஊர்லயெல்லாம் போனா ரெண்டு நாள் நல்லாருக்கும். அப்புறம் செம போர்" என்பார்கள். அது மட்டுமில்லாமல் அத்தை, சித்தி, பெரியம்மா, சின்னம்மா எல்லோரும் ஆண்ட்டி, ஆண்கள் எல்லாம் 'அங்கிள்', அம்மாயிக்கும் பாட்டிக்கும் வித்தியாசம் தெரியாது. வாரிசுகள் எல்லாம் மொத்தமாக 'கசின்ஸ்'. இது அத்தை பொண்ணா, இல்ல மாமா பொண்ணா என்றால் "ரெண்டு பேருக்கும்தான் பொண்ணு" என்று நம் மூக்கை உடைப்பார்கள்.

கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு போகவே மாட்டார்கள். கேட்டால், "எங்க வேல பாக்கிற, எவ்ளோ சம்பளம், ஒரு பொண்ணு இருக்கு, ஊருக்கே வர மாட்டேங்கிற, என்ன தெரியுதா யாருன்னு" என்றெல்லாம் கேள்வி கேட்டு படுத்துவார்கள். என்பார்கள். அதே போல, நிறைய படங்கள் பார்த்து விட்டு "நீ ஊர்ல இருக்க உன் மாமன் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணுவியா?" என்பார்கள். உண்மையை சொன்னால், ஊரில் உள்ள என் மாமாவிடம் யாராவது இதைக் கேட்டால், "சின்னப் பசங்க கிட்ட இப்படியா பேசுவ?" என்று துரத்தி அடிப்பார். அதே போல " நீ ஊருக்குப் போனா பொங்கல் வச்சி குலவை போட்டு, மேள தாளத்தோட, கூட்டிட்டு போவாங்களா, உங்க ஊர்ல பண்ணையாரு, ஜமீன்தாரு எல்லாம் இருக்காங்களா" என்றெல்லாம் படுத்துவார்கள்.

என் மகளுக்கும் இதுதான் நடக்கப் போகிறது. எப்படி தவிர்ப்பது என்ற யோசனையில் உள்ளேன். ஏன், ஊரை விட்டு சென்னை வந்து பத்து வருடங்களில் எனக்கே இப்போது அப்படி ஆகி விட்டது. இப்போதாவது அவ்வப்போது ஊருக்குப் போகிறேன். இன்னும் அடுத்த வருடம் குழந்தையை பள்ளியில் சேர்த்து விட்டால் அவ்வளவுதான். இதை நண்பனிடம் சொல்லும்போது அவன் சொன்னான். "இதுக்கு சென்னைல இருந்தா என்ன, இல்ல அமெரிக்காவுல இருந்தா என்ன" என்று பழைய பதிவுக்கு இப்போது பதிலடி கொடுத்தான். சென்னையில் அதிக பட்சம் மூன்று நான்கு வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே பழக்கமான நிலையில், ஒரு 500 பேர் வசிக்கும் எனது ஊரில் ஓரளவு எல்லோரையும் தெரியும், அப்படி எனக்குத் தெரியாவிட்டாலும், என்னை ஊரில் எல்லோருக்கும் தெரியும் என்றால் "அது எப்படி, எங்கே, அந்த 500 பேர் பெரும் வேண்டாம், ஒரு 200 பேர்த்தோட பேர் சொல்லு பார்க்கலாம்" என்பார்கள். அவர்களுக்கு அந்த கிராமத்தின் உறவுகளை சொல்லி புரிய வைக்க முடியவில்லை.

ஒரு முறை நண்பர்கள் அனைவரும், ஒவ்வொருவரின் ஊருக்கு சென்றோம். அப்போது, ஊரில் அனைவரும் பார்க்கும்போதெல்லாம் "கூட படிக்கிற பசங்களா? ஊர சுத்திப் பாக்க வந்திங்களா? கொல்லிமலை போனீங்களா? தோட்டத்துக்கு கூட்டிப் போனியா" என்றெல்லாம் விசாரிக்க, அப்போதுதான் கொஞ்சம் நம்பினார்கள். அப்போதும் "நீ ஆள் எதுவும் செட் பண்ணினியா" என்று கூட கேட்டார்கள்.

பொதுவாக ஊருக்குள், இரு வகையாக சொந்தங்கள் இருக்கும். சொந்த இடம், வந்த இடம். அதாவது என் தாத்தாவுக்கு இரு மகன்கள். அதில் ஒருவர் வெளியூரில் இருந்தாலும், இதுதான் அவருக்கு சொந்த ஊர். என் அம்மா, இதே ஊரிலேயே இருந்தாலும், என் தந்தையின் சொந்த ஊர் வேறு என்பதால், நாங்கள் வெளியூர் வாசிகள்தான். அதை வைத்தே விளையாட்டாக ஓட்டுவார்கள். 25 வருடங்களுக்கு முன் என்னிடம் கேட்ட அதே கேள்வி இந்து என் மகளிடமும் கேட்கப்படுகிறது "ஏய், நீ எந்த ஊரு". நாங்கள் "சிவியாம் பாளையம்" என்றால், "இது உங்க ஊர் இல்ல, உங்க ஊருக்குப் போங்க" என்பார்கள். எங்களுக்கு ஆதரவாக எங்களது பங்காளிக் கூட்டத்தில் இருந்து ஆதரவு வரும். "இது எங்க வீடு, எங்க ஊரு, அப்படித்தான் வருவோம்னு சொல்லு. என்ன பண்ணுவீங்கன்னு கேளு" என்பார்கள்.

அதே போல, ஊரிலேயே வளர்ந்து வரும் வாரிசுகளுக்கு, விடுமுறையில் வெளியூரில் இருந்து சொந்த பந்தங்கள் வருகின்றன என்றாலே, சந்தோசத்தோடு பயமும் வரும். ஏனென்றால், அவர்கள் வந்தால், நம்மை விட்டு விட்டு விட்டு அவர்களை கொஞ்ச ஆரம்பிப்பார்கள். எனவேதான், யாரும் என் வீட்டிற்கு வருவதை விட, நான் அவர்கள் வீட்டுக்குப் போவதை விரும்புவேன். ஏனென்றால், விருந்தாளிகள் தவறு செய்தாலும், பழியும், அடியும் அவர்கள் மீது விழாது. "அவன்தான் ஊர்ல இருந்து வந்திருக்கான். அவனுக்கு கொடுக்க வேண்டியதுதான, நீதான் ஏதாவது பண்ணியிருப்ப" என்று தன் பிள்ளைகளையே தாக்குவார்கள்.

"சரி, திடீர்னு என்ன சொந்த பந்தங்கள் மேல இவ்ளோ பாசம்" என்கிறீர்களா? ஒன்றுமில்லை. நம்முடைய வாழ்க்கையில் பல பெண்கள் வந்திருப்பார்கள். அம்மா, மனைவி, மகள் என வேறு வேறு வடிவங்கள். இந்த மூவரும் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை. உடன் பிரிவா சகோதரிகள் நிறைய உண்டு. சொந்தத்திலும், நட்பிலும் நிறைய பெண்கள் உண்டு. அனைவருமே, நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள்தான். அனைவருக்கும் என் வாழ்க்கையில் குறிப்பிட்ட இடம் உண்டு. ஆனால், என்னைப் பற்றி மிக சரியாக புரிந்து கொண்டு, எனக்கு என்ன வரும் என்று எனக்கே உணர வைத்த, இன்று என்னுடன் இல்லாத என் தந்தையின் தங்கை, என் அத்தை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆரம்பித்து, அப்படியே உள்ளது. அதற்கான முன்னுரைதான் இது.

தொடரும்.