Saturday, May 28, 2011

ரயில் பயணம் - தேசாந்திரி

பொதுவாகவே எனக்கு ரயில் பயணம் அவ்வளவாக பிடிக்காது. (எங்களூருக்கு ரயில் இன்னும் வராதது கூட காரணமாக இருக்கலாம்). இந்த சமீபத்திய பயணத்திற்குப் பின் சுத்தமாக பிடிக்காமல் போய் விட்டது.
பகல் பயணம் என்பதால், ரயிலிலேயே போக முடிவு செய்து, முன் பதிவும் செய்தாகி விட்டது. AC Chair Car. கிளம்பிப் போய், வழக்கம் போல அட்டவணையில் எனது பேரை முதலில் பார்த்து விட்டு, மற்ற பயணிகளின் பெயர் தவிர மற்ற விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது இருக்கை எண் 35. 34ல் பார்த்தால், பெயர் போட்டு F 25 என்று இருந்தது. "அட, நமக்கு இப்படி எல்லாம் நடக்காதே, சரி சீட்டெல்லாம் எப்படி இருக்கும்? ஒரு வேளை 3X3, இல்ல 2X3, எதுவா இருந்தாலும் இருந்தாலும் கண்டிப்பா பக்கத்துக்கு சீட்டுதான். ஒரு வேளை 2X2ஆ இருந்தா? பரவால்ல, நடுவுல கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேப்பு, அவ்வளவுதான!" இவை அனைத்தும் கணப் பொழுதில் மனதில் வந்து போய் விட்டன.
உள்ளே வேகமாய்ப் போய்ப் பார்த்தவன் அப்படியே நொந்து போய் விட்டேன். முதல் வரிசை மட்டும் 2X2 இருக்கைகள். அதன் பின் அனைத்தும் 3X2 இருக்கைகள். எனவே, 34 எனக்கு முந்திய வரிசை. இருக்கையில் அமர்ந்தவனை, கொஞ்ச நேரத்தில் அனைவரும் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டனர். பின்ன, சும்மா சிரிச்சிக்கிட்டே இருந்தா என்ன நெனப்பாங்க? அதுவுமில்லாம, அந்த பொண்ணு ரொம்ப சுமாருதான். (சீ சீ!)

எனக்கும் என்ன செய்ய என்று தெரியாமல், கொண்டு வந்திருந்த எஸ். ராமகிருஷ்ணனின் 'தேசாந்திரி'யை படிக்க நேர்ந்தது. ஏற்கனவே தொடராக வந்தபோது படித்திருந்தாலும், ஏனோ இந்த பயணத்தின் போது படிக்க வேண்டுமென்று தோன்றியது(?). அட நெசமாத்தாங்க. படிக்கும்போது நிறைய தோன்றியது. ஆனால், என்னால் உடனே செய்ய முடிந்தது 'பதிவு' மட்டும்தான். அதனால் ஆரம்பித்து விட்டேன். முடித்து விடுங்கள்.
எங்கு பயணம் சென்றாலும், புகைப்படமோ, குறிப்போ எடுப்பதில்லை, பொருட்களும் வாங்குவதில்லை என்ற முதல் வரியே நமக்கு எதிராக இருந்தது. ஒரு சுற்றுலாத் தலமன்றி, வித்தியாசமான இடங்களுக்கும், நாம் மதிப்பெண் பெறுவதற்காக படித்த இடங்களுக்கும் சென்று வந்த அனுபவங்கள் பயணத்தின் போது படிக்க மிகவும் நன்றாக இருந்தன. அதே போலவே பயணம் போக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், எனது வீட்டிலிருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பயணத்தில் உள்ள நாமக்கல் மலைக்கோட்டை மீது நான் ஏறியதில்லை. வீட்டிலிருந்து வெளியே வந்தால் தெரியும் கொல்லிமலையிலும் ஒரு முறைக்கு மேல் ஏறியதில்லை. அலுவலக வேலையாக பல முறை மதுரைக்கு போயிருந்தாலும், இன்னும் திருமலை நாயக்கர் மகாலைப் பார்க்காதவன். சென்னை வந்து பாத்து வருடமாகியும், இது வரை கூட முதல் முறை சரியாக ஒரு இடத்திற்கு சென்றதில்லை. அப்படிப்பட்ட முடவன், கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?

ஆனாலும், கொஞ்சம் வித்தியாசமான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும் இல்லாமல் இல்லை. எங்கேயாவது வித்தியாசமான இடங்களுக்கு போக வேண்டும் என்று நினைத்தாலும், நானே என் எண்ணங்களுக்கு ஏதாவது தடை போட்டு விடுவேன். அது மட்டுமன்றி தனியே பயணம் செய்ய நான் விரும்ப மாட்டேன். ஏனெனில், எனக்கு அவ்வப்போது தோன்றுவதை உடனே யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவே, செல்லுமிடத்தில் எல்லாம் கும்பலாக சுற்றி விட்டு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டு வந்து விடுவோம்.

பல நினைவுகளை கிளறிவிட்டது இந்த நூல். ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பதும், விடுமுறையில் சொந்தங்களின் வீட்டிற்கு போய் வருவதும் நினைவுக்கு வந்தன. குறிப்பாக, இந்த கவிதைகள் என்னவோ செய்தது. (சாராம்சம் மட்டும் கொடுத்துள்ளேன்).

தரையைத் துடைக்க,
மை படிந்த கையைத் துடைக்க,
பாத்திரங்களை சுத்தப்படுத்த,
வடகம் உலர்த்த எனப் பல வகைகளில்
உதவுகிறது இறந்து போன பாட்டியின் புடவை.

அவர் குறிப்பிட்ட பல இடங்களில், சில இடங்களுக்கு நான் சென்று வந்துள்ளேன். அநேக பொது மக்கள் சென்று வந்திருப்போம். கண்டிப்பாக இது ஒரு முன்னுரை மட்டுமே. நிச்சயம் மக்கள் ரசிக்கும் வண்ணம் ஒரு பயணக்கட்டுரையை விரைவில் எழுதுகிறேன். "எவன் படிப்பான்?" என்கிறீர்களா? அதுவும் சரிதான்.