Saturday, May 31, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

என்ன போடுவதென்று தெரியவில்லை. எனவே, ஏதாவதொரு பிட்டை போடுவோம்.

சமர்ப்பணம்:

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துள்ளன. அந்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், எனது பதிவுகளையும் சமர்ப்பிக்கிறேன்.

ஒரு பத்து வருடத்து கதை. எனது நண்பன், 0.1 மதிப்பெண்ணில் தனது மருத்துவர் கனவு காலாவதி ஆனதால், எந்திரவியல் பொறியியலில் சேர்ந்து, நான்கு வருடம் மாங்கு மாங்கென்று படித்து, முதல் வகுப்பில் தேறி, ஒரு மென் பொறியியல் நிறுவனத்தில் வேலை வாங்கி, வெளிநாட்டில் ஆணி பிடுங்கிக் கொண்டுள்ளான்.

'3 இடியட்ஸ்' படம் பார்த்து விட்டு அவனை "ஏண்டா, நீ நடந்த, ரயில்ல ஏறனும்னு நெனச்ச, ஆனா பஸ்தான் கெடச்சிது, லோக்கல் பஸ்ல டிக்கெட் காசு கொடுத்து வாங்கிட்டு, வேற பஸ்ல கூப்டாங்கன்னு ஏறப் போற, எங்கதாண்டா போகணும்?" என்றெல்லாம் கலாய்க்கும் போது அவன் சொன்னான் 'தெரியாது. ஆனால், நான் இன்னும் என்னுள் தேடிக் கொண்டிருக்கிறேன் எனது திறமை என்னவென்று, அது கண்டிப்பாக படிப்பது மட்டுமல்ல' என்றான். 

நீ என்ன ஒழுங்கா, என்று கேட்பவர்களுக்கு, எனக்கு உயிரியல் பிடிக்காது, கணக்கு நன்றாக் வரும், இயற்பியலில் எந்திரவியல் பிடிக்கும் ஆனால் மின்னணுவியல் பிடிக்காது. கூட்டிக் கழிச்சிப் பாத்தா கணக்கு சரியா வரும். இப்போது ஆணி பிடுங்குவது கூட, எந்திரவியல் சார்ந்த துறைதான். இருந்தாலும் அதையும் தாண்டி ஏதோ உள்ளது. (உபயம், 7G ரெயின்போ காலனி) அவனாவது தேடிக் கொண்டிருக்கிறான். நான் இன்னும் தேடவே ஆரம்பிக்கவில்லை. 

சில கீச்சுக்கள்:

இன்னும் டிவிட்டரில் முழுதாக போடவில்லை என்றாலும், என்னுடைய எண்ணங்களை, சிறு சிறு கீச்சுகளாக இங்கே பதிவு செய்கிறேன். இதை இன்னும் மீண்டும் கொஞ்சம் மாற்றி டிவிட்டரில் போடலாம்.

500, 1000 என்று மொத மதிப்பெண்கள் வைப்பதால் ஒரே மதிப்பெண்ணை பலர் வாங்குகின்றனர். அதற்கு பதிலாக, 10000 அல்லது 20000 என்று மாற்றிவிட்டால், முதல் மதிப்பெண்ணை யாராவது ஓரிருவரே வாங்குவர்.

IPL Series என்பது நெடுந்தொடர் போல. மக்களின் விருப்பத்திற்கேற்ப தினமும் முடிவு மாற்றப்படுகிறது. #ipl2014 

IPL மேட்ச் முதல் நாள் முதல் காட்சி போல. பார்க்கும் நாம்தான் முடிவைப் பற்றி தெரிய பறப்போம். ஆனால், ஆடுபவர்களுக்கும், ஆட்டுவிப்பவர்களுக்கும் முடிவு முன்னமே தெரியும். #ipl2014


சிறுவர்களின் உற்சாக பான விளம்பரங்களுக்கும், iplல்அணிகளுக்கு ஊர்ப் பெயரை வைத்ததற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. #பீலிங்க்ஸ்

உலகம், தவறு செய்பவனை 'அவன் செய்யறானே' என்று உதாரணமாக காட்டும். நல்லது செய்பவனை ஏமாளி என்று தூற்றும்.


தேர்தல் முடிவுகள், ஒருவனின் வெற்றி என்பதை விட, அடுத்தவனின் தோல்வி என்பதுதான் முக்கியம். இதைப் புரிந்து கொண்டால் சரிதான். #Elections2014


கொதிக்கும் எண்ணையில் இருந்து தப்பி விழுந்தது எரியும் அடுப்பிலா, வெளியிலா. பார்ப்போம். #Elections2014


விமர்சனங்கள்:

இரண்டு மாதங்களாக மனைவி மகளுடன் சந்தோசமாக (?) கழித்ததால், படத்திற்கும் போகவில்லை. மகளுக்கு படம் காட்டவே மடிக்கணினி பத்தாததால், தரவிறக்கமும் பண்ணவில்லை. ஒரு சின்ன (முதல்) முயற்சியாக, ரியோ 2 படம் சென்றோம். படம் நன்றாக இருந்தாலும், கண்ணாடி போட்டு பார்க்க என் மகள் அடம் பிடித்ததாள். அது மட்டுமல்லாது, திடீரென சத்தம் வரும்போதெல்லாம் பயந்தாள். எனவே, அடுத்து ஏதாவது மென்மையான தமிழ் படம் ஏதாவது பார்க்க எண்ணியுள்ளோம். பார்ப்போம்.

இப்போதுதான் ஒரு இரண்டு வாரம் விடுமுறை கிடைத்துள்ளது. 'யாமிருக்க பயமே', 'கோச்சடையான்' இரண்டும் பார்க்கும் எண்ணம் உள்ளது.

கொசுறு:

இந்த பீனிக்ஸ் மால் பக்கத்தில்தான் உள்ளது, இதுவரை போகவேயில்லையே என்று மனைவி, மகளுடன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பி வந்தால் மணிக்கு 50 ரூபாய் வண்டி நிறுத்தவதற்கு. மனைவியோ கொமட்டில் குத்தி "ஆட்டோவுல வந்தா கூட அம்புட்டு ஆகாது" என்றாள். திரும்பிக் கூட போக முடியவில்லை. படம் பார்க்க வந்ததற்காக 4 மணி நேரத்திற்கு 100 ரூபாய் என்று குறைத்துக் (?) கொண்டார்கள். 15 நிமிடத்திற்கு இலவசமாம். வெளியே அட்டை வாங்கிக் கொண்டு, எங்குமே நிறுத்தாமல் பணம் செலுத்துமிடம் வரவே 20 நிமிடம் ஆகும். நன்றாக அளந்து வைத்துள்ளனர்.

அனைவரும் கோடை விடுமுறையை கோச்சடையானோடு கொண்டாடியிருப்பீர்கள் (கவித). நானும் பதிவு எதுவும் போடவில்லை அல்லவா. ஆகட்டும், டும்.