Sunday, January 12, 2014

நாமக்கல் கல்விப் பண்ணைகள்

இதே தலைப்பில் ஏற்கனவே தமிழ் ஹிந்துவிலும், முரளிக்கண்ணன் வலைப்பதிவிலும் வந்து விட்டது. இருந்தாலும், நானும் அந்த ஊரைச் சேர்ந்தவன் என்ற முறையில் என் கருத்தையும் கூறுகிறேன். இதில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் என்னுடைய சொந்த அனுபவக் கருத்துக்களே. ஆதாரங்கள் எதுவுமில்லை.

நாமக்கல்லில், தில்லைபுரம் என்ற பகுதி உள்ளது. அரசு பள்ளிகளுக்கு மிக அருகே உள்ள அந்த பகுதி கிட்டத்தட்ட 2001 வரை 'டியுஷன்புரம்' என்றே அழைக்கப்பட்டதாகும். அதுவரை ராசிபுரம் மற்றும் திருச்செங்கோட்டில் இரண்டு கல்விப் பண்ணைகள் இருந்தன. அங்கே 10ம் வகுப்பு முடித்த உங்களது குட்டிக் கோழிகளை ('அதை' அடிச்சா 'A' சான்றிதழ்தான்) அங்கே விட்டால், இரண்டு ஆண்டுகள் முடிவில், நுழைவுத்தேர்வும் முடித்து கண்டிப்பாக ஓரளவு நல்ல கொழுத்த பிராய்லர் கோழியாக மாற்றித் தருவார்கள்.

அதுவரை நாமக்கல் நகரில் தலை சிறந்த பள்ளிகளாக விளங்கியவை, நம்புங்கள் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் தான். யாரும் மாநில அளவில சாதிக்கவில்லை என்றாலும், நல்ல தேர்ச்சி விகிதம், சராசரியாக நல்ல மதிப்பெண்கள் என்ற அளவில் இருந்தன.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அப்போது முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் மாவட்ட அளவில் சிறந்த 5 பள்ளிகள் என்று வந்த கருத்துக்கணிப்பில், நாமக்கல்லில் முதலிடம் பெற்ற பள்ளி 'அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் (தெற்கு)'. அதற்கடுத்த வருடங்களில் முதலிடம் 'மாற்றப்பட்டது'.

இதற்கு மிக முக்கிய காரணம், தில்லைபுரம். நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து தலை சிறந்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அங்கேதான் தனி வகுப்பு எடுப்பார்கள். 5 மணிக்கு மேல் அந்த பகுதியே சும்மா களை கட்டும். நாமக்கல் நகரை சுற்றி உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ மாணவியர் ஒரே இடத்தில் கூடினால் சும்மாவா?.

அப்போது அந்த ஆசிரியர்கள் யாரும் யாரையும் 'பிராய்லர்' கோழியாக மாற்றவில்லை. ஏன், எதற்கு, எப்படி என்று சொல்லுவார்கள். அதைக் கற்றுக்கொண்டோருக்கு அறிவு வளர்ந்தது. பெண்களை மட்டும் பார்க்க வந்தோருக்கு, சரி விடுங்க.

மார்ச் மாத இறுதியில், தனித்தனியாக உள்ள ஆசிரியர்கள்  (எனக்குத் தெரிந்த வரை) 3 குழுவாக இணைந்து நுழைவுத் தேர்வுக்கு வகுப்பு எடுப்பார்கள். ஒரு பாடத்திற்கு இரண்டு முதல் மூன்று ஆசிரியர்கள், இரண்டு ஆண்டுகளாக படித்த பாடங்களை 40 நாட்களில் அட்டகாசமாக நினைவூட்டுவர். ராசிபுரத்தில் உள்ள பள்ளி அப்போது இதற்கு பயங்கர புகழ். ஏனென்றால் அங்கே 'ராத்தங்கல்' கட்டாயம். பணமும் அதிகம். எனவே, நல்ல பள்ளி.

2001 மார்ச்சில், அந்த 3 குழு சற்றே உடைந்து, ஒரு புதுக்குழு சேர்ந்து, காவெட்டிப்பட்டியில், தற்போது பரபரப்பாக பேசப்படும் 'குறிஞ்சி' நுழைவுத் தேர்வு பயிற்சி மையம் ஆரம்பித்தனர். அதே ஆண்டு இறுதியில், அங்கே மேல்நிலைப்பள்ளியும் தொடங்கப்பட்டது. உடனே, அரசுப் பள்ளிகளில் படித்த பலர், அங்கிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு, இங்கே கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர்.

அந்த ஆண்டில், ஓரளவு நல்ல மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் தேறினர். அடுத்த ஆண்டிலிருந்து அரசுப் பள்ளிகளின் சேர்க்கை குறைய ஆரம்பித்தது. எல்லா பெற்றோர்களும், அரசுப் பள்ளியில் சேர்ந்தால் எப்படியும் டியுஷன் போக வேண்டும், ஆனால், அந்தப் பள்ளியில் அதே ஆசிரியர்கள் முழு நேரமும் எடுக்கிறார்களே என்று காரணம் சொன்னனர். 

குறிஞ்சி பள்ளி சம்பாதிப்பதைப் பார்த்ததும், இங்கே டியுஷன் எடுத்த மற்ற ஆசிரியர்களுக்கும் கை அரிக்க ஆரம்பித்தது. அவ்வளவுதான். அதன் பின் ஆரம்பித்தது மாணவர்களின் அழிவு காலம். ரெட்டிப்பட்டி, அணியாபுரம், நல்லி பாளையம் என்று பல இடங்களில் பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. எந்த பள்ளிகள் அதிகம் பணம் பிடுங்கி, அதிக விதிமுறைகளை விதிக்கிறார்களோ, அவைகளே நல்ல பள்ளிகள் என்று அடையாளம் காணப்பட்டன.

இன்னொரு முக்கியமான விஷயம், இந்த அனைத்து தனியார் பள்ளிகளிலும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும், அரசு ஆசிரியர்கள், ஒரு காலத்தில் அவர்களிடம் டியுஷன் போவதை பெருமையாக கருதப்பட்டவர்கள். எனவே, அந்த தனியார் பள்ளிகள், அவர்கள் வேலை பார்க்கும் அரசுப் பள்ளிகளை விட சிறந்தவையாக மாறின. மாற்றப்பட்டன.

ஆரம்பத்தில் எல்லாப் பள்ளிகளும் ஓரளவு நன்றாகத்தான் இருந்தன. ஆனால், இந்த நுழைவுத் தேர்வுகள் எப்போது நீக்கப்பட்டனவோ, அப்போது பிடித்தது சனியன். ஏனென்றால், நுழைவுத் தேர்வுக்கு மனப்பாடம் செய்வதை விட, சற்றே புரிந்து படிக்க வேண்டும். ஆனால், நுழைவுத் தேர்வு இல்லை எனும்போது, அரசுப் பொதுத் தேர்வில் மட்டும் முழு மதிப்பெண் எடுத்தால் போதும். அப்போதுதான், பள்ளிகள் பண்ணைகளாக மாறின.

மாணவர்கள் பொதுவாக தவறு செய்வது ஒரு மதிப்பெண் வினாக்களில் தான். மற்றபடி, மனப்பாடம் செய்தால் மற்ற பதில்களை எழுதி விடலாம். எனவே, மாணவர்கள் முதலில் நன்றாக 'தட்ட' வைக்கிறார்கள்.(கட்டுரையில் குறிப்பிடப்பட்டது போல, மெமரி கார்டாக மாற்றப்படுகிறார்கள்). மற்றபடி, தேர்வின் போது, எந்த மாணவர்களும் அந்த ஒரு மதிப்பெண் வினாக்கள் 'எப்படியாவது' சரியாக எழுதி விடுவார்கள். (ஆனால், நீங்கள் எந்த மாணவனைக் கேட்டாலும், அடித்துக் கேட்டாலும் கூட, அந்த உண்மையை அவர்கள் சொல்ல மாட்டார்கள்)

மாநில அளவில் இடங்கள் வாங்கியவுடன், மீண்டும் அதை தக்க வைத்துக் கொள்வதற்காக, 'எந்த அளவிற்கும்' இறங்க தயாராக உள்ளனர். அதில் முதலாவதுதான், மாணவர்களை 'கோழிகளாக' மாற்றுவது.

ஆசிரியல் தொழில் புனிதமானது என்றெல்லாம் வசனம் பேச வேண்டாம். ஆனால், அந்தத் தொழிலை, உலகின் மற்ற தொழிலை விட கீழ்த்தரமாக ஆக்கி விட்டார்கள். இது போன்ற பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கிறதே தவிர 'கல்வி' கிடைக்கிறதா என்றும் யாரும் பார்ப்பதில்லை.

"எங்க மேல மட்டும்தான் தப்பா, இந்த ஸ்கூலே இப்படித்தான்னு எல்லோருக்கும் தெரியும், தெரிஞ்சுதானே சேத்துறாங்க" என்று எந்த ஆசிரியரும் போங்க வேண்டாம். இந்தப் பதிவு இன்னும் தொடரும்.


இதில் தவறு எங்கே என்றால், மாறி மாறி குற்றம் சொல்லுவார்கள். இப்போதுதானே பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி சொன்னேன். இன்னும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பற்றியும் ஒரு பதிவு உண்டு.இதில் என்னுடைய முக்கியமான கருத்து. நுழைவுத் தேர்வு தேவை. நுழைவுத் தேர்வு வைப்பதால் பாதிக்கப்பட்டது கிராமப்புற மாணவர்கள் கிடையாது, பணமிருந்தும், படிப்பு வராத மாணவர்களே.

இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், அந்தப் பள்ளிகளில் பணி புரியும்(?) தலை சிறந்த (அரசு) ஆசிரியர்களின் வாரிசுகள் யாருமே, எனக்குத் தெரிந்த வரை, உருப்படி இல்லை. அவர்கள் பாணியிலே சொல்வதென்றால், "பன்னெண்டாவதுல இவ்ளோதான் வாங்கினியா, அந்த ஸ்கூல்ல படிச்சேவா?"