Saturday, January 1, 2011

2oi!

ஒரு வழியாக 2010 முடிந்து விட்டது. கடைசியாக இந்த வருடமும் 'வழக்கம் போலவே' முடிந்து விட்டது. வருட ஆரம்பத்தில், இனி மாதம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இரண்டு மாதத்திற்கு ஒன்றுதான் இட முடிந்தது. சரி பாதி சபதம்தான் நிறைவேறியுள்ளது. பரவாயில்லை. மக்கள் நன்றாக இருந்தால் சரிதான். எந்த சபதமும் எடுக்கக்கூடாது என்பதுதான் இந்த வருட சபதம்.

கடந்த பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்க்கிறேன். "ஓரமா நின்னு பார்ரா" என்று சொல்வது புரிகிறது. பரவாயில்லை. பல விதமான இன்ப துன்பங்கள் "தம்பி, இது வெறும் டிரையிலர் தான்" என்ற வகையில் வந்து போய் விட்டன. வாழ்க்கை இன்னும் இருக்கிறது என்பதை உணர வைக்கும் சம்பவங்களும் பல. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிஜமாகவே ஒரு மிருகம் இருக்கும் என்பதும் அதில் ஒன்று. மற்றொன்று நானும் பெரிய மனுஷனாகி விட்டேன்.

கொஞ்சம் ஓவராக போய் விட்டோனோ? சரி விடுங்கள். வழக்கம் போல ஆரம்பிப்போம். வருட ஆரம்பம் கொஞ்சம் கொடூரமாகத்தான் ஆரம்பித்தது. 'ஆயிரத்தில் ஒருவன்' என ஆரம்பித்து, 'கனிமொழி'யில் முடிந்து விட்டது. பரவாயில்லை. எல்லாம் நன்மைக்கே.

இசை எனும்போது, வழக்கம் போல எனக்கு, ரஹ்மானும், யுவனும் இந்த வருடத்தின் நல்ல இசையைக் கொடுத்தனர் என்றுதான் நினைத்திருந்தேன். இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசைக்கு விருது என்ற போதும், அப்படி என்ன அந்த படத்தில் என்று கண்டு கொள்ளவில்லை. ஆனால், பழசி ராஜா படம் பார்த்த பின், நான் ராஜா ரசிகன் என்று மீண்டும் பெருமையோடு கூறிக்கொள்கிறேன். "ஏன், நந்தலாலாவிற்கு என்ன குறை" என்பவர்களுக்கு, என்னுடைய கருத்து என்னவென்றால், தனி மனிதனின் உணர்சிகளை இசை வடிவமாக்குவது என்பது ராஜாவிற்கு சாதாரணம். ஆனால், சரி சொல்ல தெரியவில்லை. ஒரே ஒரு காட்சி, எனக்கு மிக மிக பிடித்த காட்சி. ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்ய வரும்போது, "தனியாகத்தானே வந்துள்ளான். கைது செய்யலாமே" எனும்போது அவரது படையைக் காட்டுவார்கள். அப்போது வரும் இசை. ராஜா ராஜாதான்.

மற்றபடி நம் பதிவுகளை எடுத்துக் கொண்டால், சொன்னதைப்போல் செய்யாமல் பாதி மட்டுமே செய்ததால், மக்கள் தப்பித்தனர். இந்த வருடம் அது போல அல்லாமல் இருக்க அனைவரும் ஆண்டவனைப் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சொல்ல மறந்து விட்டேனே. அனைவுக்கும் இனிய புத்தாண்டு, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, ஆயுத பூஜை, தீபாவளி, கிருஸ்துமஸ், ரமலான், பிறந்த நாள் மற்றும் 2012ன் புத்தாண்டு வாழ்த்துக்கள்:-)