Monday, August 6, 2018

யார்ரா நீ!!

ஆடி மாத வணக்கம். சில திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள். இவையாவும் வந்து மாமாங்கம் ஆயிருக்கலாம். ஆனால், நான் இப்போதுதானே பார்த்தேன். 

காலா:

முதலில் ரஜினியை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். தன வயதிற்கு ஏற்ற பாத்திரம். டூயட் இல்லை. பறந்து பறந்து அடிக்கும் சண்டை இல்லை. ஆனால், ரஜினி ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட மகிழ்ச்சி அளிக்காத மொக்கைப் படம். "அதெல்லாம் ஒண்ணுமில்ல, நான் நாலு வாட்டி பாத்தேன். அதுவும் தியேட்டர்ல" என்று சொன்னால், இருக்கலாம். படம் பிடித்ததா என்றால், "பிடிக்காமையா நாலு வாட்டி பாத்தேன்" என்பார்கள். படம் "நல்லாருக்கா, புடிச்சிருக்கா இல்லையா" என்றால், நெளிந்து கொண்டே "கொஞ்சம் மொக்கைதான்" என்பார்கள்.எனக்கென்னவோ, படத்தில் வந்த இளமைப்பருவ கதையை மட்டும் தனிப்படமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. 

கபாலியில் திருமணம் முடிந்தபிறகு தகராறு நடக்கும், கணவன் மனைவி பிரிந்து விட்டு பல வருடம் கழித்து இணைவார்கள். இதில் திருமணத்திற்கு முன்பே நடக்கிறது. எது நடந்தாலும் திடீரென நான்கு பேர் வந்து "காலா, துவைக்க வேணும் ஆலா, கால் டாக்ஸினா ஓலா" என்று பாடுகிறார்கள். நல்ல வேளை, ஆட்களை மாற்றினார், இல்லையென்றால் "காலாவா, இல்ல கபாலியா" என்று குழம்பி இருப்போம். 

நிஜ வாழ்க்கையில் உள்ள ரஜினிக்கு எதிரான ரஜினியை காட்டியதுதான் தோல்வி என்று சிலர் சொன்னார்கள். மொத்தத்தில் ரஞ்சித் எதை செய்ய வேண்டுமோ அதை நாரதராக, மன்னிக்கவும் நன்றாக செய்து விட்டார். ரஜினியை வைத்து சொல்ல வேண்டிய கருத்துக்களைத்தான் கபாலியில் சொல்லியாயிற்றே, இதைக் கொஞ்சம் மசாலா படமாக எடுத்திருக்கலாம். பார்ப்போம். 

அசுரவதம்:

என் மகள் இந்தப்படம் பார்த்து விட்டு "யார்ரா நீ, யார்ரா நீ" என்று 2 நாட்களாக கத்திக்கொண்டே இருந்தால் (அந்த சில முக்கிய காட்சிகளை நாங்கள் ஓட்டி விட்டோம், என்ன நடக்கிறது என்று எங்களுக்கு புரிந்ததால்). பழி வாங்கும் கதை, தேவையே இல்லாத படம். ஒரு வேளை, சசிகுமார் வேடத்தில் வில்லனும், அந்த பாத்திரத்தில் சசியும் நடித்திருந்தால் நமக்கு ஒரு ஆர்வம் வந்திருக்கும். 

சசி கொல்ல போகிறார் என்று கதை ஆரம்பித்ததும், எல்லோருக்கும் "அவன் நல்லவனாத்தான் இருப்பான்" என்று தோன்றியது. அதே போல வில்லன் பெண் பித்தன் என்பதும், பெண்களை அடைய எந்த அளவிற்கும் போவான் என்பது சொல்லப்பட்டு விட்டது. பிறகு அப்படி ஒரு முன்கதை தேவையா? அதுவே பெரிய சறுக்கல். 

'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் வந்தது போல யாராக வேண்டுமானாலும் இருக்கலாமே என்றோ, அல்லது முடிந்தவுடன், ஓரிரு காட்சிகளில் காண்பித்திருந்தாலே போதும். அய்யய்யோ, என் மகள் ஆரம்பித்து விட்டாள் "யார்ரா நீ, உன்ன கொல்லாம விட மாட்டேண்டா". 

டிக் டிக் டிக்:

மாற்றான் படம் வருவதற்கு முன்பு 'துருவன்' என்றொரு படம் வந்தது. அதில் 'தமிழின் முதல் ஓட்டிப் பிறந்த இரட்டையர் படம்' என்று விளம்பரம் செய்தார்கள். அதே போலத்தான் இந்த இயக்குனரும். மொக்கைப்படங்களாக எடுத்து விட்டு, தமிழின் முதல் ஜோம்பி திரைப்படம், தமிழின் முதல் விண்வெளி திரைப்படம் என்று விளம்பரம் செய்தால் ஓடி விடும் என்று நினைக்கிறார் போல. முதலில் நீங்கள் சொந்தமாக ஒரு கதையை யோசித்து படம் எடுங்கள். 

இனி எப்படி படம் எடுப்பது என நான் பாடம் எடுக்கப் போவதில்லை. ஒரே ஒரு வேண்டுகோள்தான் ஜெயம் ரவி அவர்களே. தயவு செய்து இனி பழைய படங்களின் தலைப்பில் படம் எடுக்காதீர்கள் (சகலகலா வல்லவன், டிக் டிக் டிக்), எடுத்தாலும் நடிக்காதீர்கள். என்னாது ஜெயம் ரவி நடிக்கிறாரா என்று கேட்காதீர்கள். 

தமிழ்ப்படம் 2:

2010ல் 'தமிழ்ப்படம்' வந்தபோது அது புதிதாக தெரிந்தது. என்னதான் லொள்ளு சபா இருந்தாலும், முழு நேர 'கலாய்' படமாக இருந்ததால் வெற்றி பெற்றது. அதிலும் 2ம் பாதி மொக்கைதான். இப்போது இரண்டாம் பாகமும் அதே போல கொஞ்சம் மொக்கைதான். நிறைய சிறு சிறு விஷயங்களில் (HBO, Star Movies, NGC செய்திகள், போகிற போக்கில் வரும் சில வசனங்கள்) நன்றாக இருந்தாலும், மொத்தமாக சற்று குறைதான். ஒரு முழுமையான கதை, திரைக்கதையில் காட்சிகளை நக்கல் செய்வது போல வைத்திருந்தால் பரவாயில்லை. வெறும் காட்சிகள் மட்டுமே என்பதால் இழுவையாகி விட்டது. 

Mr. சந்திரமௌலி: 

பார்த்ததிலேயே கொஞ்சம் நன்றாக இருந்த தமிழ் படம். ஒரு வேளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் இருக்கும். நிறைய சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தி இருந்தனர் (வில்லன் குத்து சண்டை போடுவது, உண்மையில் நடந்த பரிட்சையில் காப்பி அடிப்பதை பயன்படுத்திய விதம், முதலில் வரும் சம்பந்தமில்லாத காட்சிகள், பிற்பாதியில் இணைக்கப்படுவது). இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். அதே போல இனி மக்கள் கால் டாக்சி எடுக்கவே யோசிக்கும் அளவிற்கு 'செய்து' விட்டார்கள். கண்டிப்பாக நம்பி பார்க்கலாம். 

102 Not Out: 

என்னுடைய முந்தைய ஒரு பதிவில் சொன்ன ஒரு விஷயம்தான் இந்தப் படத்தின் கரு. இரு நண்பர்கள். இருவரின் பரம்பரையிலும் சர்க்கரை வியாதி உண்டு. முதலாமவன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாம் சாப்பிடுவான். கேட்டால் "எப்படியும் எனக்கு சுகர் வரத்தான் போவுது, அது வரைக்கும் அனுபவிக்கிறனே". இரண்டாமவன் பயங்கர பத்தியம். "எப்படியும் எனக்கு சுகர் வரத்தான் போவுது, இப்பவே கண்ட்ரோல் பண்ணிக்கிட்டா பின்னாடி பிரச்சினை இருக்காது". இதுதான் கரு. 

102 வயது கொள்ளுத்தாத்தாவுக்கும் (மனதின் வயது 16) எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், வயதே ஆகாது என்ற எண்ணத்தில் உள்ள அமிதாப், 75 வயது தாத்தாவுக்கும் (மனதின் வயது 75), நமக்கு வயசாயிடுச்சி, அதுக்கேத்த மாதிரி நடந்துக்கனும் எனும் சசி கபூர் இடையே நடக்கும் போராட்டம். இவர்களுக்கு நடுவே ஒரு அப்பாவி இளைஞன். அட்டகாசமான படம். 

உண்மையில் ரஜினி இது போன்ற படங்களை முயற்சிக்கலாம். தில்லு முல்லு போல நல்ல நகைச்சுவை படமாக கண்டிப்பாக வெற்றி அடையும். 

Secret Superstar:

PK படம் வெற்றி பெற்ற உடனே, பல இந்து அமைப்புகள் அமீர்கான் முஸ்லிம்தானே, முடிந்தால் அவரது மதத்தை கிண்டல் செய்யட்டும் என்றனர். அவர்களுக்காகவே எடுத்திருப்பார் போல. மிகவும் கட்டுக்கோப்பான முஸ்லீம் குடும்பத்தின் பெண் வாரிசு, பாடகியாக வேண்டும் என்று ஆசை. பெண் என்பதால், கருவிலேயே கொல்ல முயன்ற குடும்பம் அது. எப்படி சாதிக்கிறார் என்பதுதான் கதை. 

ஹீரோயிஸம் எதுவுமின்றி, அழகான ஒரு துணைக்கு கதாபாத்திரத்தில் அமீர்கான். அவரும் பெரிய நல்லவர் என்றெல்லாம் கூட காண்பிக்க மாட்டார்கள். தம்பி, தோழன் என்று சிறு சிறு பாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளனர். உண்மையில் எப்படியெல்லாம் மற்ற மொழிகளில் நாயகர்கள் (முதலில் மலையாளம், பின் ஹிந்தி) இப்படி நடிக்கிறார்களோ தெரியவில்லை. தமிழில் விஜய் சேதுபதி இது போல முயற்சிக்கிறார். தெலுங்கில் எல்லாம் வாய்ப்பே இல்லை. தவற விடாதீர்கள். 

சில எண்ணங்கள்: 

இதில் காலா, 102 Not அவுட் இவை இரண்டு படங்களும் அமேசான் பிரைமில் உள்ளது. தமிழ்ப்படம் 2 திரையரங்கில். மற்றவை வழக்கம் போலத்தான். நம் தயாரிப்பாளர்கள் எதற்கு யோசிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு சில ஆட்டோ ஓட்டுனர்கள் "வந்தா கொறஞ்சது 200 ரூபா கொடுக்கணும்" என்பார்கள். "நான் சொன்ன எடம் கொஞ்ச தூரம்தாங்க" என்றால் "முடியாது போ" என்பார்கள். அதே போல திரையரங்குகளில்தான் விடுவேன், அதன் பின் என் படத்தை எங்கும் பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது என்று நினைக்கிறார்கள் போல. 

ஹிந்திப்படங்கள் எல்லாம் 15 நாட்கள் ஓடிய பின் அமேசானில் வந்து விடுகிறது. காலா 50 நாட்களுக்கு பிறகு வந்து விட்டது. தமிழின் பல பழைய படங்கள் இன்னும் எதிலும் வரவில்லை. "ஏன் அப்படி பாக்கணும், கம்முனு உக்காரு" என்றும் சொல்வார்கள் போல. 

என்னவோ போடா மாதவா. தமிழ் ராக்கர்ஸ் என்னவோ முழு நேர பணியாக, ஒரு 11 பேர் கொண்ட குழுவாக பனி புரிகிறார்கள் போல. பழைய ஆங்கில படங்களை அவர்களே தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் மாற்றி, அவர்களே பேசி வெளியிடுகிறார்கள். 

மக்கள் யாருக்கும், படம் வெளிவந்த உடனே, திருட்டுத்தனமாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. குடும்பத்துடன் திரையரங்கம் செல்ல முடியாது, கையைக்கடிக்கும் செலவு என்பதுதான். அதில் பாதி பேருக்கு மேல் இணையத்தில் பணம் கட்டிப் பார்க்க தயாராக இருந்தாலும், வாய்ப்பை பயன்படுத்த திரையுலகினர் மறுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

எனக்குத் தெரிந்து இதை நான்கைந்து முறை சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். சங்கை ஊதிக்கொண்டே இருப்போம்.