Thursday, November 27, 2008

மகிழ்ச்சியாய் இருந்தது (இருப்பது) எப்போது??

தனிமையில் இருக்கும்போது அடிக்கடி தோன்றுவது இதுதான்.. நான் எப்போது சந்தோஷமாய் இருந்துள்ளேன்? அறியா வயதிலா, பருவ வயதிலா, கல்லுரியிலா அல்லது வேலைக்கு போன பிறகா?

கொஞ்சம் ஆழமாய் யோசிக்கும்போது, ஒரு காலகட்டத்தை கடந்த பின், அதைப்பற்றி நினைக்கும்போது, அந்த கால கட்டத்தில்தான் மிக மகிழ்ச்சியாய் இருந்ததாய் தோன்றுகிறது.

ஆனால் அந்தந்த காலகட்டங்களிலோ, அதற்கு அடுத்த கட்டத்தில்தான் மகிழ்ச்சியாக இருப்போம் என்று எண்ணியதுண்டு.. இதனாலேயே, முழுவதுமாக அந்த மகிழ்ச்சியை அனுபவித்ததில்லையோ என தோன்றியதுண்டு. இதைப்பற்றி தனிப்பதிவு இடுகிறேன்.

ஆனால், தினசரி வாழ்க்கையில் வரும் அற்ப சந்தோஷங்கள்தான் நாம் உண்மையாக அனுபவிப்பவை. என்னுடைய அற்பத்தனத்தை பதிவிட்டுள்ளேன். உங்களுடையவை பின்னூட்டத்தில்...

தினசரி பேருந்திலும், ரயிலிலும் கும்பலில் நசுங்கி, பிதுங்கி பயணிக்கும்போது, எவனாவது செல்பேசியில் சத்தமாக பாட்டு போட்டால் எரிச்சலாக வரும். அப்போது நமக்கு மிகவும் பிடித்த, ரொம்ப நாள் கேட்காத பாடல் வரும்போது, அந்த நான்கைந்து நிமிடங்கள்...

அதே பயணத்தில் ஏதாவது அழகான பெண், அதுவும் நாம் பார்க்கும் கோணத்தில் இருந்தால், அது ஒரு சுகானுபவம். அந்த பெண்ணும் நம்மை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டால், இறங்கவே மனம் வராது.

ஏதாவது நெடுந்தூர பயணத்தில், நாம் அரைத்தூக்கத்திலும், பேருந்து பயண நெரிசலில் அதிக நேரம் நிற்கும்போது, ஓட்டுனர் வண்டியை இரண்டடி நகர்த்தும்போது, ஏதோ சொந்த ஊரையே அடைந்து விட்டது போல சந்தோஷம்.

கடற்கரையில் சுண்டல் வாங்கி சாப்பிட்டபின், அந்த சுண்டல் மடித்த தாளில் நல்ல கவிதை/கட்டுரை/கதை இருக்கும்போது.

என்றாவது வீட்டில் பழைய பொருட்களை நோண்டிக்கொண்டிருக்கும்போது, எப்போதோ தேடிய பொருள் கிடைக்கும்போது வரும் நினைவுகள்..

'றேடியோஸ்பதி' புதிருக்கு விடை தெரியும்போது..

'ஒரு பதிவிட்டபின், அதுவும் தமிழ்மணத்தில் வந்த பின், வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதும், அவர்கள் பின்னூட்டமிடும்போதும்.. இப்போதைக்கு மகிழ்ச்சியான விஷயம் அதுதான்..

என்னதான் இதே போல பல சந்தோஷங்கள் இருந்தாலும், முல்லாவோ/தெனாலிராமனோ/பீர்பாலோ அவருடைய மன்னருக்கு சொல்லி புரியவைத்த 'அந்த' செயல்தான் உண்மையிலே சந்தோஷமான விஷயம். புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளவும். புரியாதவர்கள் எங்கேயாவது படித்து, சிரித்துக்கொள்ளவும்.

2 comments:

  1. //கடற்கரையில் சுண்டல் வாங்கி சாப்பிட்டபின், அந்த சுண்டல் மடித்த தாளில் நல்ல கவிதை/கட்டுரை/கதை இருக்கும்போது.//
    //'ஒரு பதிவிட்டபின், அதுவும் தமிழ்மணத்தில் வந்த பின், வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதும், அவர்கள் பின்னூட்டமிடும்போதும்.. இப்போதைக்கு மகிழ்ச்சியான விஷயம் அதுதான்..//

    இது இரண்டும் எனக்கும் மிக மகிழ்ச்சியைத் தரும்.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி..
    அன்புடன் அரவிந்த்..

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..