Monday, March 28, 2011

அழகிய மொழியில் அபியும் நானும் பயணம்கல்லூரி இறுதி ஆண்டில் ஒரு நாள், தாம்பரம் வித்யா தியேட்டரில், ஸ்பைடர் மேன் 2 படம் பார்க்கலாம் என்று நண்பர்களுடன் போனோம். அங்கோ, அந்த படத்தைத் தூக்கி விட்டு, 'அழகிய தீயே' என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. என்னடா, இங்கு கூட பிட்டு படம் ஓட்ட ஆரம்பித்து விட்டார்களா என்று யோசித்தோம். பாவம் இந்த பிரசன்னா. இப்படியா ஆக வேண்டும் என்று நினைத்த பொது, திடீரென நண்பன் சொன்னான் "டேய், பிரகாஷ் ராஜ் படம்டா". சரி, வந்தது வந்து விட்டோம் என்று உள்ளே போய் உட்கார்ந்தோம். மொத்தமாகவே, இருபது முப்பது பேர்தான். அதில் நாங்களே ஏழெட்டு பேர்.

சரி, கொஞ்சம் கலாசி விட்டுப் போகலாம் என்றுதான் போனோம். ஆனால், எங்களை விட, படத்தில் அவர்கள் கலாசியதுதான் அதிகம். ஒரு வழக்கமான, நட்பு - காதல் கதை என்றாலும், அதைக் கொண்டு போன விதம்தான் முக்கியம். அருமையான வசனங்கள். பிரசன்னாவை முதன் முதலில் ரசிக்க முடிந்தது. பிரகாஷ் ராஜ் அருமையாக நடித்தார் என்பது, அட போங்க சார்.

அதன் பின் கொஞ்ச நாள் கழித்து 'பொன்னியின் செல்வன்' படம் வெளியானது. ஆனால் படம் பார்க்கவில்லை. இதுவரையிலும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்க வேண்டும். படத்தின் நாயகனை நினைத்துதான் கொஞ்சம் பயம். ஆனாலும் நாயகிக்காகவாவது பார்க்க வேண்டும்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து, பொழுதே போகாத 2007 பிப்ரவரி மாதம், ஒரு வெள்ளிக் கிழமையன்று இரண்டு படங்கள் வெளிவந்தன. இரண்டுமே, எங்களது எதிர்பார்ப்பில் இல்லாததால், அதைக் கண்டு கொள்ளவில்லை. "ஏதோ பருத்தி வீரன்னு படம். சூர்யாவோட தம்பியாம். ஆனா ஊனா, வீட்டு வீட்டுக்கு நடிக்க கெளம்பி வந்தருவான்கப்பா. அப்புறம் மொழி. காது கேட்காத, வாய் பேச முடியாத பொண்ணாம். போட்டு அழுக வச்சிருவாங்க. வேண்டவே வேண்டாம்பா" என்று விட்டு விட்டோம். எங்களது எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டன இந்த இரண்டு படங்களும். மிகவும் குறிப்பாக மொழி. Thi Hinduவில் அதன் வகை நகைச்சுவை (Genre : Comedy) என்று இருந்தது. இரண்டு படங்களையும் இரு முறை தியேட்டரிலும், அதன் பின் 'மொழி' படம் மொசெர்பியரில் வந்தபோது, கிட்டத்தட்ட அதை பரிசாக வாங்கியே கொடுக்க ஆரம்பித்தோம். என் அம்மா பார்க்க வேண்டும் என்று நான் நினைத்த/நினைக்க வைத்த ஒரே படம் இதுதான்.

'பயணம்'. சமீபத்தில் வந்த மற்றுமொரு அருமையான, ராதா மோகனின் படைப்பு. படத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், அவை ராதா மோகனின் பொதுவான கிளிஷேக்கள் என்பதால், எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. சில பல முக்கிய காட்சிகள் காமெடி ஆனாலும், அவர்களே அதை கலாசியதால் மன்னிப்போம். "ஓ.. நீங்க தமிழா? அப்பா நாம தமிழிலேயே பேசலாம்" என்று கடத்தல்காரன் சொல்லும்போது எல்லோரும் சிரித்து விட்டோம். பிறிதொரு காட்சியில், "யூசுப் கான் எப்படி தமிழ்ல பேச முடியும்?", "இப்படியெல்லாம் பாத்தா படம் எடுக்க முடியாது சார்" என்று வரும்.

அபியும் நானும். இந்தப் படம் எனக்கு மிக மிக மிகப் பிடித்த படம். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான காதல், காமமற்ற அன்பு, பாசம், நேசம் (நட்பும் கூட) பற்றிய படம். படம் தந்தை மகள் பற்றி இருந்தாலும், சாராம்சம் தாய் மகன், சகோதரன் சகோதரி (சற்று வயது வித்தியாசம் அதிகமான), ஏன் இரண்டு வயது அக்கா மகளுக்கும், தாய் மாமாவுக்கும் கூட வரலாம். தனது அன்பினை பங்கு போட இன்னொருவர் வருவதால் ஏற்படும் ஈகோ பற்றி அற்புதமாக காண்பித்த படம். இதில் சற்று காமம் கலந்து 'செல்லமே' படமும், மிகுதியாக கலந்து 'நடுநிசி நாய்கள்' படமும் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன். (முன்னே/பின்னே எல்லாம் விட்டு விடுங்கள். சும்மா, ஒரு ஒப்பீடு).

"நம்ம குழந்தைங்க வளந்துருவாங்க. ஆனா, நாம வளராம அப்படியே இருப்போம்" வசனம். நிதர்சனமான உண்மை. நாம் முதன் முதலில் அவர்களை எப்போது பார்த்தோமோ, அவர்கள் அப்படியே இருப்பார்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம். எனக்கு உடன் பிறந்தோர் யாரும் இல்லை. ஆனால், தூரத்து சொந்தங்கள் என்ற முறையில் சில பல தங்கைகள் உண்டு. கல்லூரி முடித்து, வேலைக்குப் போகும்போது, அவர்கள் படித்துக் கொண்டிருந்ததால், என்னிடம் 'என்ன செய்யலாம்' என்று (பெற்றோரின் தொந்தரவு தாளாமல்தான்) கேட்பார்கள். அப்போதிருந்து, இன்று வரை, அவர்களிடம், 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற பாணியில்தான் பேசி வருகிறேன். இத்தனைக்கும், அவர்கள் என்னை விட நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குப் போய் விட்டனர். இருந்தாலும், என்னை சற்றும் ஒதுக்காமல், இன்னும் என் கருத்தைக் கேட்பார்கள்.

சிறு வயதில், அவ்வப்போது, ஒழுங்காக படிக்கவில்லை எண்டு வீட்டில் அம்மாவிடமிருந்து அடி விழும்போது, என் அம்மாவின் அம்மாதான் என்னைக் காப்பாற்றுவார்கள். அவருக்கு, என் தாய் மாமாவின் மகன் மேல் (மகன் வழி மூத்த பேரன்) சற்று பாசம் அதிகம். அவன் என்னை விட ஐந்து வயது சிறியவன். அப்போதெல்லாம், இதற்காகவே, அவனை அடித்தும் கூட இருக்கிறேன். இப்போது நினைத்தாலும் வெட்கமாக உள்ளது. இவையனைத்துமே, நன்றாக, உணர்வுப்பூர்வமாக படத்தில் காட்டப்பட்டிருந்தன.

பொதுவாக நாம் அடிக்கடி பார்க்கும்/பழகும் பாத்திரங்களும், வசனங்கள்தான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நமது வீட்டிலோ அல்லது பக்கத்துக்கு வீட்டிலோ அடிக்கடி இது போல கேட்டிருப்போம்.

"இப்படியெல்லாம் கொடூரமான ஆளுங்கெல்லாம் கூட இருப்பாங்களா?? ஏன், உன் வீட்டு ஆளுங்க இல்ல."
"யாரிந்த பிச்சக்காரன். உன் சொந்தக்காரனா?"

அதே போல காதல் வரும் தருணங்களை ஒவ்வொரு படத்திலும், அழகாக சொல்லியிருப்பதும் நன்றாக இருக்கும். "பூம்", "மணியோசை, பல்ப் எரிவது", "மேஜிக்கல் மொமென்ட்ஸ்", "Stockholm Syndrome" என்று ஹைக்கூ போல.

முன்பெல்லாம் யாராவது "Its a feel good movie" என்று சொன்னால் எனக்கு சத்தியமாக புரியவே புரியாது. இப்போதெல்லாம், தெளிவான ஒரு கருத்து. "ஓ. ராதா மோகன் படமா?" என்று. ஒவ்வொரு இயக்குனருக்கும், 'இவர் இப்படிதான்' என்ற முத்திரை விழுந்து விடக்கூடாது என்று இருப்பார்கள். ஆனால், ராதா மோகன் அவர்களே, நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. அவருடன் எனக்கு அவ்வளவு இடைவெளி இருப்பதாக நான் எண்ணவில்லை. எனவே, ஒரு நண்பனின் கருத்தாக இதை நான் கூறுகிறேன்.

No comments:

Post a Comment

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..