Sunday, January 20, 2013

மிச்ச சொச்ச விமர்சனங்கள் 2012


ஏற்கனவே பழைய சில பல பிட்டுகளில் போன வருடம் வந்த படங்களில் என்னைக் கவர்ந்தவற்றைப் பற்றி சொல்லி விட்டேன். இவை மிச்ச சொச்சங்கள்.

தடையறத் தாக்க: மௌன குரு படத்திற்கு பின் வந்த இன்னொரு நல்ல படம். வெளிநாட்டில் இருந்ததால் திருட்டுத்தனமாக பார்க்கிறோமே என்று நினைக்க வைத்த படம். குறைகள் இருந்தாலும் அருமையான படம்.

சகுனி: எனக்கென்னவோ இயக்குனருக்கு இந்த பெயர் நன்றாகப் பொருந்தும் என்று தோன்றுகிறது.

நான் ஈ: இப்படியும் கூட படம் எடுக்க முடியுமா என்று யோசிக்க வைத்த படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.

பில்லா 2, தாண்டவம், முகமூடி: வேணாம். அழுதுடுவேன்.

அட்டகத்தி: அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்று இல்லை. ஆனாலும், நல்ல படம். ஒரு முறை ரசிக்கலாம். எனக்கு மிகவும் பிடித்தது முடி வெட்டும் காட்சிதான்.

நான்: இந்த வருடம் மிக நல்ல திரில்லர் படங்கள் வந்த வருடமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதிலும் குறைகள் உண்டு. ஆனாலும், விஜய் ஆண்டனி தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்ததால் தப்பித்தார், நாமும் தப்பித்தோம்.

சாட்டை: அடுத்து என்ன நடக்கும் என்று சுலபமாக கணிக்கக் கூடிய ஒரு திரைக்கதை. ஆனாலும், எடுத்த களத்தினால் இந்த படம் எனக்குப் பிடித்தது. இறுதியில், அவர் ஒரு அரசுப் பணியாளரே இல்லை, சும்மா திருத்துவதற்காக வந்தார் என்று சொவார்களோ என்று நினைத்தேன். நல்ல வேலை, இல்லை.

ஆங்கிலம் வாங்கிலம்: இப்படி ஒரு தலைப்பை யார் வைத்தார்கள் என்று தெரியவில்லை. இந்தப் படத்தை, மெத்தப் படித்த அல்லது அப்படி நினைக்கின்ற யாருமே, "பரவால்ல, பாக்கலாம்" என்பார்கள் என் அம்மா, சும்மா பொழுது போக்கிற்காக டிவி பார்ப்பவர், ரசித்துப் பார்த்த திரைப்படம். அவர் இரு முறை, சிங்கப்பூருக்கு தனியாக விமானத்தில் சென்று வந்த அனுபவம் கூட காரணமாக இருக்கலாம்.

மாற்றான்: ஏன் தோற்றான் என்று ஊருக்கே தெரியும்.

துப்பாக்கி: கொஞ்சம் காமெடியாக இருந்தாலும், மற்ற மொக்கைகளுக்கு எவ்வளவோ பரவாயில்லை. பல காட்சிகள் கேனத்தனமாக (உண்மைதான்) இருந்தாலும், மன்னிக்கலாம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்: அடடா, பசங்க கூட போய் பாத்திருந்தா எவ்வளவு ஜாலியா இருந்திருக்கும் என்று எண்ணி எண்ணி சிரிக்க வாய்த்த படம். படத்தின் பலமே பாத்திரத் தேர்வுகள். அனைவருமே நாம் தினந்தோறும் பார்க்கும் முகங்களாக இருந்ததுதான்.

பீட்சா: என்னைப் பொறுத்தவரை கடந்த வருடத்தின் மிகச் சிறந்த திரைப்படம். பொதுவாகவே, பேய்ப் படங்களில் தேவையின்றி பயமுறுத்தும் காட்சிகள் வந்தால் எரிச்சலாக இருக்கும். ஆனால், இந்தப் படம்தான் ஏன் அப்படி காட்சிகள் தேவை என்று உணர வைத்த படம். 'என்ன படம்டா இது' என்று இடைவேளை வரை குழப்பி விட்டு, 'என்ன படம்டா இது' என்று இறுதியில் பெருமைப்பட வைத்தது.


1 comment:

  1. Perumpalana padangal parkavillai. Enave no comments. Viswaroopam book panni vitteerkagala?

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..