Wednesday, April 24, 2013

உதிரிப்பூக்கள் - கதைக்குத் தேவையான கவர்ச்சி

நீங்க கவர்ச்சியா நடிப்பீங்களா?

கதைக்குத் தேவையான கவர்ச்சினா, கவர்ச்சி காட்றதுல தப்பில்ல.

எந்த நடிகையை எடுத்துக் கொண்டாலும், இந்த கேள்வி உண்டு. இதே பதிலும் நிறைய பேரிடம் வந்ததும் உண்டு. இந்த கேள்வி எனக்கு எப்படி தோன்றும் என்றால், இதற்கு எனக்கு ஒரு கேள்வி கேட்க வேண்டும் போல உள்ளது. அட, அதில்லீங்க, "படத்துல, நீங்க நகைச்சுவை நடிகரோட கை கோத்துக்கிட்டு போற மாதிரி ஒரு காட்சி" என்று சொன்னால், அதில் நீங்கள் நடிப்பீர்களா? கண்டிப்பாக மாட்டீர்கள். நாயகனுடன் மட்டும்தான் ஜோடியாக நடிப்பேன் என்பீர்கள்.

கதைக்கு அது தேவைதான், ஆனால், நடிக்க மாட்டீர்கள். சமீபத்தில் 'பத்ம' விருதை ஒதுக்கிய ஜானகி அம்மாளை ரசித்தேன். ஆனாலும், அவரது கருத்தில் ஒன்றே ஒன்றுதான் இடித்தது. அதாவது, ஒரு படத்தில், இவர் பாட வேண்டிய பாடல் நகைச்சுவை நடிகைக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அதனால் அதை தான் பாடவில்லை என்றும் சொல்லியிருந்தார். கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஜானகி அவர்கள், குரலை நன்றாக மாற்றிப் பாடக்கூடியவர். அவரால், அந்த நகைச்சுவை உணர்வைக் கொடுக்க முடியும் என்பதால்தான் அவர் அழைக்கப்பட்டிருப்பார்.என்னவோ போங்கள்.


உதிரிப்பூக்கள் என்ற (சீரியல் அல்ல) ஒரு பழைய படம் உள்ளது. நிறைய பேர், தமிழில் உள்ள உலகத் திரைப்படம் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால், படம் பார்த்தால் "அப்படி எதுவும் தெரியவில்லையே, படம் ஒரு சாதாரண கதைதான், இதில் என்ன உள்ளது என்று ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள்" என்றுதான் எல்லோருக்கும் தோன்றும். இதே கேள்வியை நான் ஒரு பதிவிலும் பார்த்திருக்கிறேன்.

நம்மவர்களுக்கு, உலகப்படம் என்றாலே ஒரு முறை பார்த்தால் புரியக்கூடாது, திரைக்கதை ஒரே நேர்க்கோட்டில் போவது போல இருக்கக்கூடாது என்று நிறைய நியதிகளை நாமே வகுத்து விட்டோம். அதனால்தான் இந்த படத்தில் அப்படி என்ன உள்ளது என்ற கேள்வி வருகிறது. இந்தப் படத்தை சிறு வயதிலேயே DDயில் பார்த்திருக்கிறேன். அப்போது இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை (கவனிக்க. புரியவில்லை என்று சொல்லவில்லை). ஏனென்றால் சண்டை இல்லை, கவுண்டமணி செந்தில் இல்லை.

இந்தப் படத்தில் ஏதோ உள்ளது என்று எப்போது தெரிந்தது என்றால், என் மாமா பொதுவாக படமே பார்க்க மாட்டார். அவரது மகன்களுக்காக ரஜினி படங்கள் மட்டுமே கூட்டிப் போவார். அவர் பார்த்து கண் கலங்கிய படம் 'உதிரிப்பூக்கள்'. இதை என் அத்தை என்னிடம் சொல்லியபோதுதான் முதன் முதலில் "இந்தப் படத்தில் என்னமோ உள்ளது போலவே?" என்று நினைத்தேன்.

இந்தப் படத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அலசி விட்டார்கள் நானும் என் பங்குக்கு, என்னுடைய புரிதல்களை பகிர்கிறேன்.



படத்தின் பாத்திரங்கள். படத்தில் கெட்டவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். விஜயனின் ஒரு சில குணங்களே, அவரைக் கெட்டவராக மாற்றும். தேவையில்லாமல் ஓவராக பேசும் குழந்தைகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் படத்தில் நாயகன் நாயகி என்று கூட சொல்ல முடியாது.

அதே போல படத்தின் வசனங்கள். விஜயனின் இரண்டாவது மனைவி, அவரின் குணம் தெரிந்து கிளம்பும்போது, விஜயன் தடுப்பார். அப்போது சொல்லுவார் "என்னை நாங்க இப்போதைக்கு தடுக்கலாம் ஆனா, நாளைக்கே நான் உங்களது சொத்துல விஷம் வைக்க முடியும்" என்பார். தேவையில்லாத அழுகையே இருக்காது. குறிப்பால் உணர்த்தும் காட்சிகள். கணவன் பூ, இனிப்பு எல்லாம் வாங்கி அனுப்பிவிட்டு, இரவு சினிமாவுக்கு போகலாம், சமைக்க வேணாம். வெளியே சாப்பிடப் போகிறோம் என்று சொல்லி அனுப்பியவுடன், அஷ்வினி மேலே பார்ப்பார் ("மழை வருதா என்ன" என்பது போல). ஒரு சாதாரண காட்சிதான். ஆனால், அது ஒரு அசாதாரண நிகழ்வு என்பதையும் உணர்த்தியிருப்பார். 

இந்தப் படத்தில், நாயகி குளிக்கப் போவது போல வரும். ஆனால், குளியல் காட்சி இல்லை. வறுமையால் நாயகி உடை கிழிந்திருக்கும் அனால் 'கிளிவேஜ்' இருக்காது. உடைகள் கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவாள். ஆனால், விரசம் இருக்காது.

படத்தில் பல முக்கியமான, கதைக்குத் தேவையான காட்சிகள் படத்தில் வராது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், இறுதிக் காட்சியில் விஜயன் தண்ணீரில் மூழ்கி இறக்கும் காட்சி, விஜயன் சரத்பாபுவை அடிப்பது போன்றவை.

படத்தின் இசை பற்றி தனியாக சொல்ல வேண்டுமா? இளையராஜா. 'அழகிய கண்ணே' பாடல் ஒன்று போதுமே. ஆனால், இங்கே உள்ளது படத்தின் ஆரம்பத்தில், இளையராஜாவின் குரலில் வரும் பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.


உதிரிப்பூக்கள் - பார்க்கப்பட மட்டுமல்ல போற்றப்படவும் வேண்டியது.

டிஸ்கி: கூகிள் போய் 'உதிரிப்பூக்கள்' என்று தேடினால் சன் டிவியில் வரும் சீரியல்தான் வருகிறது. திரைப்படங்களின் பெயர்களை இது போன்று சீரியல்களுக்கு பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும்..

2 comments:

  1. Thanks for reminding a classical movie. One of my favorite movie.

    ReplyDelete
  2. claimax dailogue vitutengalay...

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..