Saturday, July 12, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

போன முறை போட்ட பதிவு பலருக்கு மண்டைக் குடைச்சல் கொடுத்ததால், இந்த முறை பொத்தாம் பொதுவாக ஒரு பதிவு.

விமர்சனம்:

சைவம்: வெற்றிகரமாக குழந்தையுடன் இரண்டாவது முறையாக திரையரங்கம் சென்று பார்த்தோம். இதில் எப்படியும் ஆடு, மாடு வரும் என்று போனோம். இன்னும் கொஞ்ச நேரம் கத்தரித்து ஒன்றரை மணி நேரப் படமாக்கி இருக்கலாம். நமக்குத்தான் பொறுமை போய் விட்டது.

"ஆமாமா, அப்படியே போட்டுட்டாலும். இவன் விமர்சனம் போடும்போது அந்தப் படத்த டிவியிலே நாலு வாட்டி போட்டிருப்பாங்க" என்றுதானே நினைக்கிறீர்கள். சரிதான். என்ன செய்வது. நானும் சுட சுட ஒரு படத்தின் விமர்சனம் போட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். இப்போதிருக்கும் நிலையில் உடனே நான் விமர்சனம் போட வேண்டும் என்றால், ஏதேனும் நெடுந்தொடருக்குத்தான் போட வேண்டும்.

எல்லா தொல்லைக்காட்சிகளிலும் வரும் நெடுந்தொடர்கள் அனைத்துமே, ஒரு நல்ல திரைப்படத்தின் தலைப்பைக் கொண்டுள்ளன. அந்தப் படத்தைப் பற்றி ஏதாவது இணையத்தில் தேடினால், இவை வந்து விழுந்து எரிச்சல் ஊட்டுகின்றன. இதைப் பற்றி ஏற்கனவே 'உதிரிப்பூக்களில்' எழுதியிருந்தேன்.

எல்லா நெடுந்தொடர்களிலும் இன்னும் முத்தக் காட்சிகளும் படுக்கையறைக் காட்சிகளும்தான் வரவில்லை. ஆனால், அவற்றுக்கு இணையாக (அல்லது அவையே பரவாயில்லை) எனும் அளவிற்கு வசனங்களும் காட்சிகளும் உள்ளன. இதை எழுத ஆரம்பித்தால், அதுவே ஒரு நெடுந்தொடராக போகும் அபாயம் உள்ளதால், இத்துடன் நிறுத்தி விடுகிறேன்.

அரசியல்:

இதைப் பற்றி எழுதக் கூடாது என்றுதான் இருந்தேன். ஆனாலும், வேறு என்ன எழுதி பதிவை நீளமாக்குவது என்று தெரியாததால், வேறு வழியின்றி எழுதுகிறேன்.

விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க இயலாத செயல். எனவே இந்த கசப்பு மருந்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், முந்தைய அரசு கொண்டு வந்த பொது ஏன் நீங்கள் நீலிக்கண்ணீர் வடித்தீர்கள்? வருமான வரி விலக்கு 5 லட்சம் வரை என்று ஏன் சொன்னீர்கள்? படிப்படியாக உயர்த்தப்படும் என்றாவது சொல்லியிருக்க வேண்டும். ஒரு வேளை அப்போது நிதி நிலைமை பற்றி தெரியாது என்றால் நீங்கள் அரசை நிர்வகிக்கவே தகுதி இல்லை.

இந்த லட்சணத்தில் ரயில் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டமாம். "டேய், முன்னாடி ஏத்துனதே நீங்கதான்டா. எங்களைப் பாத்தா உங்களுக்கு எப்படித்தான் தோணுதோ".

புது அரசு மட்டும் வரட்டும், பாலாறும் தேனாறும் ஓடும்னு சொன்னவங்க, இப்ப என்ன சொல்றங்க? "அதுக்குள்ள என்ன அவசரம், இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்" என்பார்கள். எத்தனை வருஷம் ஆனாலும் இப்படித்தான். ஏனென்றால், மக்களிடம் (மக்களுமே) யாரும் உண்மையாக இருக்க விரும்புவதில்லை. மற்றவர்களை சங்கடப்பட வைக்ககூடாது என்று, பிற்காலத்தில் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

ஒரு மருத்துவரிடம் சென்று, நோய் குணமாகவில்லை என்று இன்னொரு மருத்துவரிடம் போனால், அவர் முன்னவர் கொடுத்த மருந்தை மாற்றி வேறொன்று கொடுப்பார். பெயர்தான் வேறே தவிர, உள்ளிருக்கும் மருந்து ஒன்றே. அதே போலத்தான் அரசாங்க மாற்றமும்.

"இதுக்குத்தான் படிச்சவங்க அரசியலுக்கு வரணும்கிறது" என்பர்களுக்கு, இந்த படிப்பு அரசியலை விட்டு ஒதுங்கவே கற்றுத் தந்துள்ளது. பல வருடங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் "படித்தவர்கள் கட்சி (பரீத்ரக்ஷன என்று நினைக்கிறேன்)" என்று புதிதாக தோன்றி போட்டியிட்டது. சென்னையில், திமுக, அதிமுகவை அடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்தது. அடுத்த நாளே மாதங்களில் கட்சி சுக்கு நூறாக உடைந்தது. இப்போதுள்ள சாமானிய மக்கள் கட்சிக்கும் அதேதான் நடக்கிறது. இதைத்தான் நம்மூரில் "படிச்சவன் பாட்டக் கெடுத்தான்" என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

உடனே யாராவது, "இவ்ளோ சொல்றியே, நீ?" என்று சண்டைக்கு வர வேண்டாம். ஏனென்றால் பதில் உங்களுக்கே தெரியும். சரித்திரத்தை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், உண்மையாகவே இந்த சமுதாயத்திற்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்டவர்களும், அவர்களை சார்ந்தவர்க்களும் நல்ல நிலையில் இருந்ததே இல்லை. இன்னமும் அவர்களின் சந்ததியினர் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். நம் மக்கள் அதைப் பார்த்துதான் "நமக்கெதுக்கப்பா வம்பு, நாம உண்டு நம்ம வேல உண்டுன்னு போனோமா வந்தோமான்னு இருக்கணும்" என்று வளர்க்கின்றனர். ஏதோ ஒரு திரைப்படத்தில் வருவது போல "இந்த சமுதாயத்துல உங்க எல்லோருக்காக கஷ்டப்பட ஒருத்தன் வேணும், ஆனா, அவன் அவன் உங்க வீட்டுல இருந்து வரக்கூடாது".

சொந்தக்கதை அது சோகக்கதை:

சென்னையில் நடந்த கட்டிட விபத்து நேரடியாக அங்கு நூறு பேரை பாதித்தது என்றால், மறைமுகமாக பல்லாயிரம் பேரை பாதித்துள்ளது. நான் அங்கு வீடு வாங்கவில்லை. ஆனால், வீடு வாங்கிய கட்டிடத்திற்கு அனுமதி பெறுவதில் சிக்கலாம். "நீ ஒழுங்காதான கட்டியிருக்க" என்று கேட்டால், "அதெல்லாம் சரிதான் சார், ஆனா, அது நொள்ள, இது நொட்டன்னு சொல்லி இப்ப காசு நெறைய கேப்பாங்க சார்" என்கிறார்கள். பளார் பளார் என்று அறைய வேண்டும் என்றுதான் தோன்றுகிறது, ஆனால் பதிவுதான் போட முடிகிறது.

குற்றம் செய்தவர்களை விட, குற்றம் செய்யத் தூண்டியவர்களுக்கு தண்டனை அதிகமாம். அதே போல, குற்றத்தைப் பற்றி தெரிந்தும் வெளியே சொல்லாமல் இருப்பதும் பெருங்குற்றமாம். அப்படிப் பார்த்தால் நாட்டில் எல்லார் பெயரிலும் குறைந்தது நான்கு வழக்காவது இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..