Tuesday, December 30, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

எப்படியோ இன்னொரு வருடமும் ஓடிப்போய் விட்டது. போன வருடத்தை விட இந்த வருடம் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இருந்தாலும், மாதம் ஒன்று என்ற கணக்கு வந்து விட்டது.

பதிவு ஆரம்பித்து 7 வருடங்கள் ஆகி விட்டது. 50 பதிவுகள் போட 5 வருடங்கள் ஆனது. அடுத்த இரண்டு வருடங்களில் ஓரளவு எண்ணிக்கையை கூட்டி விட்டேன். அடுத்த வருடத்தில் 100ஐ தொட லட்சியம். 90 நிச்சயம்.

வாழ்க்கையில் பெரிதாக மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. சொந்த வீட்டிற்கு மாறினேன். அவ்வளவுதான். "எவ்ளோ சந்தோசமான விஷயம், இவ்ளோ சோகமா சொல்றியே" என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

இந்த வருடம் என்னென்ன செய்ய வேண்டும். குழந்தைக்கு இரண்டரை வயது ஆகப்போகிறது. பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விசாரிக்க ஆரம்பித்தால், கண்ணைக் கட்டுகிறது. அபியும் நானும், குங்குமப் போட்டு கவுண்டர் படங்களில் வருவதெல்லாம் வெறும் துளிகள்தான். உண்மையில் அது ஒரு கடல். நான் பதினாறு வருடங்கள் படித்த படிப்புக்கான செலவு, என் மகளின் ஒரு வருடத்திற்கு பத்தாது.

முன்பெல்லாம் குழந்தை என்பது ஒரு வரம். இப்போதெல்லாம் குழந்தை என்பது ஒரு பொருள். மற்றவர்கள் முன்பு "பாத்தியா என்னொடத, எவ்ளோ சூப்பரா இருக்கு. சூப்பர் சிங்கர், ஸ்கூல் டாப்பர், மெடிக்கல் சீட்டு புக் பண்ணியிருக்கேன்" என்று அளவில் உள்ளது. குழந்தையை நாம் குழந்தையாக பார்த்தாலும், நம்மை சுற்றியுள்ளவர்கள் அதை மாற்றி விடுகிறார்கள்.

சரி விடுங்கள். அனைவருக்கும் 2014 மங்களகரமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். வரும் ஆண்டு இன்னும் வளமாகவும், செழிப்பாகவும் இருக்கும் என வாழ்த்துகிறேன். போன ஆணைப் பற்றி என்ன கூறலாம்? போன வருடம் போட்டது போலவே விருதுகள் தரலாமா? இல்ல இப்படியே இழுத்து மூடலாமா? பதிவு சின்னதா இருக்கே? ஏதாவது மொக்கைய போடுவோம்.

பிடித்த படங்கள்:

ஆரம்பத்தில் ஜில்லா, வீரம் என்று மொக்கையாக ஆரம்பித்தாலும், வழக்கம் போல நாம் எதிர் பார்க்காத படங்களே நம் மனதைக் கவரும். அந்த வகையில் என்னைக் கவர்ந்த அந்த படங்கள்,

தெகிடி
யாமிருக்க பயமே
பூவரசம் பீப்பி
சதுரங்க வேட்டை
சலீம்
திருடன் போலிஸ்
வேலையில்லா பட்டதாரி (சிறப்பு இடம்)
செவன்த் டே (மலையாளம்)

இவைகளில் பாதிக்கு மேல், நான் திருட்டுத்தனமாக பார்த்தவைதான். சொல்ல வெட்கமாகத்தான் உள்ளது. உண்மையில் கத்தி, அஞ்சான், லிங்கா படங்களைப் போய் பார்த்ததற்கு பதில், இவைகளில் அனைத்தையும் பார்த்திருக்கலாம். ஆனால், நன்றாக உள்ளது என தெரிவதற்குள் படம் ஒரு காட்சியாக மாற்றப்படுகிறது. எப்படியாவது போக வேண்டும் என்று நினைப்பததற்குள் தூக்கப்படுகிறது. இது ஒரு நொண்டி சாக்குதான் என்றாலும், இதுதான் உண்மை. இனிமேல், இந்த தவறுகளை குறைத்துக்கொள்ள எண்ணியுள்ளேன். இந்த மாத கடைசியில் வந்த சில படங்கள் பார்க்கவில்லை.

இன்னொரு சொல்ல வெட்கப்பட வேண்டிய விஷயம், ஒரு உருப்படியான புத்தகத்தையும் படிக்கவில்லை. இதற்கு முன்பு மட்டும் ஒன்றும் கிழிக்கவில்லை என்றாலும், ஏதாவது ஒரு கதைப்புத்தமாவது படிப்பேன். இந்த வருடம் சுத்தம். அவ்வப்போது பயணங்களில் ஆனந்த விகடன் படித்ததோடு சரி. இந்த சேத்தன் பகத்தின் அனைத்து கதைகளையும் படித்துள்ளேன். இந்த சமீபத்திய கதை 'Half Girl Friend' இன்னும் படிக்கவில்லை.

அது கூட பரவாயில்லை. ஒரு முழுமையான தமிழ் புத்தகம் கூட படிக்கவில்லை. இத்தனைக்கும், ஊரில், என் வீட்டின் அருகேயே நூலகம் உள்ளது. ஒரு காலத்தில், அதே நூலகத்தில், எந்த புத்தம் எங்கே இருக்கும் என எனக்கு மட்டும்தான் தெரியும். நான்தான் அங்கே தொகுப்பு வாரியாகவும், ஆசிரியர் வாரியாகவும் அடுக்கியே வைப்பேன். எந்த புத்தகமாக இருந்தாலும், முதலில் நான்தான் படிப்பேன், குறைந்தது இரண்டு பக்கங்களாவது, அதை என்ன தொகுப்பில் வைப்பது என்று. சிறுகதைகளோ, நாவல்களோ முழுதும் படித்த பின்தான் அது நூலகமே போய்ச் சேரும். அது ஒரு காலம்.

ஒரு விளம்பரம்: நான் தமிழ் படிக்கும் வேகம் மிக அதிகம். எப்படி என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை. நண்பர்களே "நீ படிக்கிறியா இல்ல சும்மா பாக்குறியா" என்றுதான் கேட்பார்கள். இன்னொரு காரணமும் உண்டு, ஒரு புத்தகம் ஒரே மூச்சில் படித்து விட்டு திரும்ப யாரிடமாவது கொடுத்தால் "என்னாச்சு, புடிக்கலையா, அதுக்குள்ள கொடுத்திட்ட" என்று (அனைவருமே) கேட்பார்கள்.

"சரி, இப்ப என்ன அடுத்த வருஷம் படிச்சு கிழிக்க போறியா" என்று கேட்டால், இல்லை. ஆனால் மகளுக்கு எப்படியாவது மடிக்கணினி, கைப்பேசியை விட மதிப்பு வாய்ந்தது புத்தகங்கள்தான் என உணர வைக்க வேண்டும். இரண்டு வயது குழந்தைதான். கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைப்பேன். கண்டிப்பாக அவளிடம் இருந்து, நான் மீண்டும் படிக்க கற்றுகொள்வேன் என நம்புகிறேன். நம்பிக்கைதான வாழ்க்கை.

அனைவருக்கும் அனைத்தும் சிறக்க வாழ்த்துக்கள்!

4 comments:

 1. அருமையான பதிவு...புத்தகங்கள் படிப்பதில் உங்களின் அன்றும் - இன்றும் என் வாழ்க்கையை பிரதிபலித்தது. கண்மணிக்கு புத்தகத்தின் அருமையான ரகசியங்களை சொல்லி கொடுங்கள். மற்றும்... இரண்டு பெண்களின்தகப்பன் என்ற உரிமையில் சொல்கிறேன்.. Outdoor Sports எதாவது ஒன்றில் பிள்ளையை ஈடுபடுத்துங்கள்.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தங்களின் கருத்துக்கு நன்றி விசு அவர்களே. கண்டிப்பாக விளையாட்டிலும் ஈடுபடுத்துவேன். நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. படிக்கும் ஆர்வம் மேலும் தொடரட்டும்...

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. Thank you திண்டுக்கல் தனபாலன் sir!

  ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..