Thursday, July 26, 2018

பணம் கேட்கும் பள்ளிகள்!

பொதுவாகவே ஊடகங்களிலும், இணையத்திலும் வெளிவரும் செய்திகளை வைத்து நான் பதிவு இடுவது இல்லை. ஏனெனில் அவை அனைத்துமே பொய் என்று அர்த்தமல்ல. ஆனால், இன்னும் பல உண்மைகள் இருக்கும், அவர்கள் கூறவில்லை அல்லது கூற விரும்பவில்லை. அதே போல உண்மை என்ன என்றும் தெரியாமல் அதைப்பற்றி கன்னாபின்னா என்று கருத்துக்களும் வரும். திடீரென அது இல்லை, இதுதான் உண்மை என செய்தி வரும், உடனே "நாந்தான் அப்பவே சொன்னேன்ல" என்றும் கருத்திடுவார்கள். இப்போது அதை கண்கூடாக கண்டதால், அதனைப்பற்றி ஒரு பதிவு. 

கடந்த ஒரு வாரமாக குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூரில் ஒரு பிரபல பள்ளி, அதுதான் போட்டு கிழிச்சுட்டாங்களே, ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு பள்ளி (சுருக்கமாக SSM School) பள்ளியில் நடந்த கட்டணக்கொள்ளை, பெற்றோர்களை பணம் கேட்டு மிரட்டிய அந்த தாளாளர் சந்தானம் பற்றிய ஒரு பதிவு. 

"இப்போ மட்டும் என்ன ___க்கு பதிவு" என்பவர்களுக்கு, அந்த பாதிக்கப்பட்ட பெற்றோர்களில் நானும் ஒருவன். எனது மகளும் அங்கேதான் ஆரம்பம் முதல் படிக்கிறாள். இந்தப் பள்ளியின் STD எல்லாம் நீங்கள் இணையத்தில் படித்து தெரிந்து கொள்ளவும். முதலில் செய்திகளில் வந்துள்ள உண்மைகளைப் பற்றி பார்ப்போம். 

1. 2 லட்சம் கட்டவில்லை என்றால் பள்ளியை விட்டு வெளியேறவும். 
2. பெற்றோர்களைப் பற்றி திட்டி பள்ளியில் திட்டியது. 
3. முதலில் 2 லட்சம் கேட்டவுடன், அதைப்பற்றி கேட்க சென்ற பெற்றோர்களிடம் "ஆமா, அப்படிதான் கேப்பேன்" என்றது. 
4. பள்ளிகளை உடனே மூடி விடுவேன், வேறு யாருக்காவது விற்று விடுவேன் என்றது, 
5. பள்ளிகளின் வசதிகளை குறைத்து விடுவேன் என்றது 

எல்லாமே உண்மைதான். அதற்கு இரு வாரங்களுக்கு முன்புதான் எல்லா மாணவர்களின் பெற்றோர்களுடன் உரையாடினார். அப்போது கூட எதுவும் சொல்லவில்லை. அந்தப் பள்ளியில் உள்ள பிரச்சினையே அதுதான். எந்த விஷயமும் பெற்றோர்களுடன் நேருக்கு நேர் விவாதிப்பதே இல்லை. எந்த சந்திப்பாக இருந்தாலும், அவர் பேசுவார், மற்றவர்கள் கேட்க வேண்டும். 

திடீரென பள்ளியில் இருந்து குழந்தைகள் மூலமாக அறிவிப்பு வரும். அடுத்த ஓரிரு தினங்களில் அதை ஆதரிக்கிறேன் அல்லது இல்லை என்று திருப்பி கொடுத்தனுப்பி விட வேண்டும். கேட்கலாம் என்று இதுவரை நான் போனதில்லை. போனாலும் ஒன்றும் நடக்காது என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். அப்படிதான் இருக்கும். 

30 வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் எப்படி இருந்தார்களோ, அப்படியே இப்போதும் இருப்பார்கள் என்று நினைத்து விட்டார் போல. அப்போதெல்லாம் பெற்றோர் பள்ளிக்கு வந்து "நீங்க எங்க வேணும்னாலும் அடிச்சிக்கோங்க, மூஞ்சுல மட்டும் வேணாம்", "நல்லா வெளுத்து விடுங்க சார்" என்றெல்லாம் சொல்லி விட்டு போவார்கள். இப்போதெல்லாம் அப்படியா, ஆசிரியர் கையை ஓங்கினாலே, மாணவன் கண்ணை மூடிக்கொள்கிறான், உடனே "ஆசிரியர் அராஜகம், மாணவன் மயக்கம்" என்று செய்தி வந்து விடுகிறது. 

அடுத்து இன்னொரு முக்கியமான செய்தி, தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க, பெற்றோரிடம் இப்படி பணம் கேட்கிறார். இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. அவர் ஏற்கனவே நிறைய பெற்றோரிடம் கடன் வாங்கி, அதையும் முறையாக வட்டியுடன் திருப்பியும் கொடுத்துள்ளார். 

முதன் முதலில் பிரச்சினை ஆன சுற்றறிக்கையில் சொல்லப்பட்டது என்னவென்றால், "திருப்பி தரப்படக்கூடிய காப்புத் தொகை அனைத்து மாணவர்களுக்கும் 2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது பள்ளியின் முன்னேற்றத்திற்காக. அதை அடுத்த கல்வி ஆண்டு ஆரம்பத்தில் செலுத்த வேண்டும். இதற்கு சம்மதமா இல்லையா என்பதை இந்த மாத இறுதிக்குள் சொல்லி விட வேண்டும். இப்போது சரி என்று சொல்லி விட்டு, பின்னர் இல்லை என்றால், ஏற்கனவே உள்ள காப்புத்தொகை திருப்பி தரப்பட மாட்டாது" என்பதுதான். 

எனக்கும் கோபம் வந்தது. இன்னும் 9 மாதம் கழித்து நிலைமை எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. அதே போல இன்னும் எதை முன்னேற்றப் போகிறாராம், சும்மா காசு காசு என்று அலைகிறார் என்று தோன்றியது. கிட்டத்தட்ட 80 சதவிகித பெற்றோர்களுக்கு இதுதான் தோன்றியது. "இன்னும் 3 வருஷம் கழிச்சு மறுபடியும் 2 லட்சம் கொடுங்கன்னு கேட்டா என்ன செய்யுறது" என்றுதான் எல்லோருக்கும் தோன்றியது. அதைக் கேட்க சென்ற போதுதான் "நான் சொல்ல வேண்டியதை எல்லாம் அந்த சர்க்குலர்ல சொல்லிட்டேன். போலீஸ் நீங்கதான் இங்க என்ன நடந்தாலும் பொறுப்பு" என்று சொல்லிவிட்டு போனவுடன் நிறைய பேருக்கு இன்னும் கோவம். 

அன்றைய தினம் அவருக்கு ஆதரவு என்று யாருமே இல்லை. அப்போதே கையெழுத்து போட்டுக் கொடுத்த பெற்றோர்கள் கூட அவருக்கு ஆதரவாக பேசவில்லை. "இத்தன வருஷம் இங்கேயே படிச்சாச்சு. அதுக்கப்புறம் எல்லாம் போய் ஸ்கூல தேட முடியாது. திருப்பிதான் கொடுத்திடுவார்ல, அதான். அந்த நேரத்துல காலேஜுக்கு கூட தேவைப்படும்" என்று அவர்களை அவர்களே சமாதானம் செய்து கொண்டார்கள். 

அதன் பின் பள்ளி இணைய தளத்தில் கொடுக்கும் பணத்தை வைத்து என்னென்ன செய்ய போகிறோம் என்று சொல்லி இருந்தார்கள். "இத அப்பவே சொல்லி கேட்ருக்கலாமே" என்றுதான் பாதி பேருக்கு தோன்றியது. சரி அதுதான் 31 வரை அவகாசம் உள்ளதே, பொறுமையாக கொடுக்கலாம் என்றுதான் காத்திருந்தார்கள். ஆனால், அவரோ அவசரப்பட்டு மாணவர்கள் மத்தியில் தேவையின்றி வார்த்தைகளை விட, பிரச்சினை வேறு விதமாக மாறிப்போய் விட்டது. 

பெரிய பிரச்சினையே அவர் சொன்னால் எல்லோரும் கேட்க வேண்டும் என்று அவர் எண்ணுவதுதான். இப்போதைய சுற்றறிக்கையின்படி, அரசு 3% மட்டுமே கல்விக்கு ஒதுக்குவதால் , மாதம் ஒரு லட்சம் வாங்கும் பெற்றோர்கள் வருடத்திற்கு 36,000 மட்டுமே கல்விக்கு செலவிடலாம். எனவே இனி, அதற்கேற்றார் போல வசதிகள் குறைக்கப்படும், ஒரு சாதாரண பள்ளி எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கும், SSM பள்ளி என்ற தனித்துவம் இருக்காது என்று வந்துள்ளது. "முடியலடா சாமி, கொஞ்சம் எங்களை கூப்பிட்டுதான் பேசுங்களேன்" என்றுதான் தோன்றியது. 

சரி, இதுவரை நடந்தது எல்லாமே வீட்டில் பெரியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே நடக்கும் சண்டைதான். "நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு பண்ணிக்கிட்டிருக்கீங்க" என்று சண்டை போட தோன்றியதே தவிர, "புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்" அளவுக்கு எல்லாம் இல்லை. ஏனென்றால், 

SSM பள்ளியில், கட்டண விவரங்கள் அனைத்தும் பள்ளியின் இணையத்தில் இருக்கும். கட்டணம் 
இதுவரை ஒரு முறை கூட நான் பணமாக செலுத்தியதில்லை. எல்லாமே மின்னணு பரிவத்தனை அல்லது வரைவோலைதான். எனவே எப்படி இருந்தாலும், என் பணம் கறுப்புப் பணமாக இல்லை என்பது நிச்சயம். 
அதே போல, நாம் கொடுக்கும் கட்டண அளவிற்கு ஏற்றாற்போல போல பள்ளியில் வசதிகள் உண்டு. குரோம்பேட்டையில் இல்லை என்றால், மாணவர்களை பேருந்தில் ஏற்றி பெருங்களத்தூர் கூட்டிக் கொண்டு போவார்கள். 
மாணவர்கள்: பணியாளர்கள் விகிதம் இந்தப் பள்ளியிலும் பார்க்க முடியாது. காலையில் பள்ளியில் இறக்கி விடும் இடத்தில இருந்து, பள்ளிக்கு உள்ளே செல்லும் வரை, பத்தடிக்கு ஒரு பணியாளரோ, ஆசிரியையோ இருப்பார்கள். 
பெற்றோரை மதிக்கிறாரோ இல்லையோ, குழந்தைகளை இதுவரை எந்தக் குறையும் இல்லாமல் கவனித்துக் கொண்டனர். 
பேருந்தில், ஓட்டுநர் இல்லாமல் குறைந்தது 3 பேராவது குழந்தைகளை பார்த்துக்கொள்ள இருப்பார்கள். 
"சார், தினம் என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்லுங்க" என்று கேட்டால், "உங்கள விட உங்க குழந்தைங்க எங்களுக்கு முக்கியம், 30 வருஷமா பாத்துக்கிட்டு இருக்கோம். நாங்க இருக்கோம்" என்றுதான் சொல்வார். 
10 வயது சிறார்கள் வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு செல்லும் போது கூட ஒரு பணியாளர் உடன் பாதுகாப்பிற்கு வருவார். 
நேற்று தெரிந்து கொண்டது, ஒரு மாற்று திறனாளிக்காக தனி கழிவறை கட்டி, அந்த ஒரு மாணவருக்காக தனி பணியாளரையும் நியமித்திருக்கிறார். 
அதே போல நன்கொடை, அரசியல்வாதிகளின் பரிந்துரை எதுவுமே செல்லாது. 
அரசு கூறிய விதிகளின்படி, வசதிகளுக்கேற்ப கட்டணம் உள்ளது. மறைமுக கட்டணம் இதுவரை வாங்கியதே இல்லை. 
ஆறாம் வகுப்பிற்கு மேல், சுற்றுலா உண்டு. அதுவும் இதே கட்டணத்தில் அடங்கும், அதிலும் 12ம் வகுப்பில் சிங்கப்பூருக்கு கூட்டி செல்வார்கள். 

நிறைய முறை அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்டும் "நான் சரியா இருக்கேன், எவனாலயும் என்னை ஒன்னும் செய்ய முடியல" என்றே தைரியமாக சொல்வார். எங்கேயாவது தவறும் என்று காத்திருந்தார்கள். மாட்டி விட்டார். 

கடந்த இரண்டு வருடங்களாக உள்ள வதந்தி, இந்த பள்ளிகளை வாங்க நிறைய அரசியல்வாதிகள் முயற்சி செய்கிறார்கள் என்று. கூட்டிக், கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வருகிறது. தினகரனில், இந்த பள்ளி பற்றி உடனே உடனே செய்தி வருகிறது. சந்தானம் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் பற்றி செய்தி வரவில்லை. " தப்பி ஓடினார், துரத்திப் பிடித்தது காவல்துறை" என்றெல்லாம் செய்தி வருகிறது. அதைப் பற்றி 7 நிமிட செய்தி, அதில் 100 பொய்கள். 4 லட்சம் நன்கொடை என்பதெல்லாம் கட்டுக்கதை. 

வெளியூரில் உள்ளவர்கள் "இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் தூக்குல போடணும், இந்த பள்ளியை விட்டால் வேறு பள்ளியே இல்லையா, நீங்க ஏன் அரசு பள்ளியில சேக்க மாட்டேன்கிறீங்க, அதான் இப்படி" என்றெல்லாம் கருத்து சொல்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் இன்னும் இரண்டொரு நாட்களில் வேறொரு பிரச்சினை வரும். எல்லா கருத்து கந்தசாமிகளும் இதை விட்டு விட்டு அங்கு ஓடி விடுவார்கள். தலைவலியும் திருகுவலியும் தனக்கும் வருமல்லவா.

பள்ளிப் பேருந்தில் இருந்து மாணவி தவறி விழுந்து இறந்து 6 வருடம் ஆகிறது, இதுவரை அந்த பெற்றோர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. பேருந்து எங்களுடையதே இல்லை என்று பள்ளி சொல்கிறது. தினமும் தாம்பரம் MEPZ சந்திப்பில், அந்தப் அந்த மக்களால் எரிக்கப்பட்ட, சாலையோரம் கிடைக்கும் அந்த பேருந்தை பார்க்கும்போதெல்லாம் மனது ஏதோ செய்யும். இன்று தாம்பரம் அருகே பள்ளியில், பள்ளி பேருந்தில் ஒரு பணியாளர் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அதைப்பற்றி ஒரு செய்தியும் இல்லை. கும்பகோணம் தீ விபத்து நடந்து 14 வருடங்கள் ஆகிறது. இன்னும் பெற்றோர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை. தண்டனை பெற்றவர்கள் வெளியே வந்து விட்டார்கள். 

எல்லா தொலைக்காட்சிகளும் 'மிக கவனமாக' செய்திகளை திரித்து சொல்கின்றன. மிகக்குறிப்பாக சன், பாலிமர். மற்ற நாளிதழ்கள், செய்திகளில், மிகச்சிலர்(?) அவருக்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளதாம். சன் நியூஸ் விவாத மேடையில் பணம் பார்க்கும் பள்ளிகள் என்று விவாதம். அதில் மீண்டும் மீண்டும் அவரை கைது செய்வதையும், இந்தப் பள்ளியையும் மீண்டும் மீண்டும் காண்பிக்கின்றனர்.

எதிராக போராடுபவர்கள் மிரட்டப்படுகிறார்கள். உண்மையில் குரோம்பேட்டை பள்ளியில், ஆதரவாக போராடிய பெற்றோர்களிடம், காவல்துறை முதலில் மிரட்டியது, பிறகு "எல்லாம் கை மீறிப் போயிடுச்சுங்க, சொன்னா புரிஞ்சுக்குங்க, மேலிடத்திலிருந்து உத்தரவு, தயவு செஞ்சு கூட்டம் போடாதீங்க" என்று சொன்னது. பள்ளியை சுற்றி கிட்டத்தட்ட 144 போல உள்ளது. 3 பேர் நின்று பேசிக்கொண்டிருந்தாலே, "இங்கெல்லாம் நிக்காதீங்க, கிளம்புங்க" என்று சொல்கிறார்கள். 

ஒரு வேளை பள்ளி கை மாறுகிறது அல்லது முன்பு போல இல்லை என்ற நிலை வந்தால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏனென்றால், வீட்டிற்கு மிக அருகில் உள்ளது. என்ன நடக்கும் என்று தெரியவில்லை. பார்ப்போம்.  

பின் குறிப்பு: அவர் 2 லட்சம் கேட்டதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அரசு விதிகளின்படி, அவர் சொன்ன வசதிகளை கொடுத்து விட்டு, கட்டணத்தை ஒரு லட்சம் கூட ஆக்கலாம். சட்டம் அதனை எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால், வருடம் 1 லட்சம் வாங்கும் பள்ளிகளின் தரம், எல்லோருக்கும் தெரியும். 

இனி ஏதாவது செய்திகளில் கருத்து சொல்ல வேண்டும் என்று நினைத்தால், தயவு செய்து தீர விசாரித்து விட்டு கருத்து சொல்லவும்.

7 comments:

  1. அடப்பாவிகளா...

    இரண்டு வருடம் நாமக்கல் "பண்ணை பள்ளியில்" இதைவிட பல அக்கிரமங்கள்... பணம் மட்டுமே அவர்களின் இலக்கு... என் குழந்தையை சேர்க்கவில்லை... உறவினர் குழந்தையை அந்த பள்ளியில் இருந்து மீட்டு வருவதற்குள், அப்பாடா...! நினைத்த பணத்தை கறந்து விட்டு தான் வெளியே அனுப்பினார்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாமக்கல்காரனாக, வெட்கி தலை குனிகிறேன். ஆனால், இந்தப் பள்ளியில் பிரச்சினையே வேறு. நாமக்கல்லில், நீங்கள் பணமாக மட்டுமே கட்டியிருப்பீர்கள். துண்டு சீட்டில் ரசீது கொடுத்திருப்பார்கள். இங்கு அப்படியல்ல. அது மட்டுமன்றி அரசியல் தலையீட்டால், ஊடகங்கள் பள்ளியைப் பற்றி தவறான செய்திகளை பரப்புகின்றன.

      Delete
  2. உன்னைப்போன்ற முட்டாள்கள் இருக்கும் வரை, இது போன்ற ஆட்களுக்கு கொண்டாட்டம்தான். கொண்டு போய் பணத்தைக் கொட்டுங்கள்.

    ReplyDelete
  3. உங்கள் இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பணம் கேட்டதால் பாதிக்கப்பட்டது நான். எதிராகத்தானே எழுத வேண்டும்? ஏன் ஆதரிக்கிறேன். அதனால்தான் இந்தப் பதிவே. மீண்டும் சொல்கிறேன். தலைவலியும், திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும். இனி ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்று நினைத்தால், தயவு செய்து தீர விசாரித்து விட்டு கருத்து சொல்லவும்.

    ReplyDelete
  4. பணம் பறிப்பதே
    பள்ளிகளின் வேலையாகிப் போச்சு!
    பிள்ளைகளின் படிப்பில
    ஆசிரியர்கள் அக்கறை காட்டுவதாக
    எவரும் சொல்லவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. அப்படிப்பட்ட பள்ளிகளில் படிப்பவர்கள் 'நமக்கெதற்கு வம்பு' என்று ஒதுங்கி விடுகிறார்கள். காரணம் அவை அரசியல் வியாதிகளால் நடத்தப்படுவதால்தான்

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..