Sunday, August 2, 2020

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

குளிக்கும்போது நெறைய எழுதணும்னு தோணுது, ஆனா எழுதணும்னு ஒக்காந்தா, அந்த எழுத்துதான், வார்த்தை வர மாட்டேங்குது. "குளித்து முடிக்கையில் பதிவு கொட்டுது, அதை அடிக்க நினைக்கையில் மனைவி திட்டுது" (அதே இசையில் பாடிக் கொள்ளவும்). ஒரு வேளை, அவர்கள் ஊரிலும், நான் இங்கேயும் மாட்டி இருந்தால், நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும். பதிவுகளாக போட்டு தள்ளி இருப்பேன். 

இங்கேயே இருப்பதால், "எப்ப பாரு, வீட்டுல இருந்து வேலை பாக்கறேன்னு லேப் டாப், அப்புறம் எதுக்கு பிளாக் எழுதறேன்னு தனியா, கண்ணு வலிக்காது" என்று பிடுங்கி வைத்து விடுகின்றனர். பார்க்க வேண்டிய படங்கள், தொடர்கள் நீண்டு கொண்டே போகின்றன, குட்டி இளவரசி வேறு இருப்பதால், அவளும் பார்ப்பது போன்ற படங்களை தேர்வு செய்ய வேண்டி உள்ளது. அப்படி எதுவுமே இப்போது வருவதில்லை என்பது வேறு விஷயம். 

மகள் வேறு இப்போது பேய்ப் படங்களுக்கு பயப்படுவதால், அவற்றை பார்ப்பதையும் நிறுத்தி விட்டோம். அவள் வேறு அவளுக்கு பிடித்த கார்ட்டூன் படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டதால், நமக்கான நேரம் குறைந்து விட்டது. அதே போல நல்ல படங்கள் என்பதையெல்லாம் பார்த்தாகவே உள்ளது. OTTயில் வந்த பெண்குயின், பொன்மகள் வந்தாள், டேனி, காக்டைல் எல்லாமே மொக்கை. அவ்வளவுதான். 

கொரோனா:

அங்கே சுற்றி, இங்கே சுற்றி கடைசியாக எனக்கே வந்து விட்டது. எங்கே போனாலும், முகமூடி அணிந்துதான் சென்றேன். எங்கே போனாலும், கையை கழுவி விட்டு சென்றும் வந்து விட்டது. காய்ச்சல் வந்தது. மாத்திரை போட்டால் சரியானது, ஆனால், மீண்டும் மீண்டும் வந்தது. 4 நாட்கள் பார்த்து விட்டு, எதற்கு வம்பு என்று போய் சோதித்துப் பார்த்ததில் கொரோனா என்று உறுதி ஆகி விட்டது.

எங்களது அடுக்கு மாடி குடியிருப்பில் நான் மூன்றாவது ஆள். அதன் பிறகு சடசடவென ஏறி 10 பேருக்கு மேல் வந்து விட்டது. இப்போது யாருக்கும் இல்லை. மருத்துவமனை சென்ற எல்லோருமே மீண்டு வந்து விட்டனர். உள்ளேயும் நிறைய நடவடிக்கைகள் எடுத்து (முகமூடி கட்டாயம். மக்களோ, குழந்தைகளோ விளையாட தடை. உள்ளேயே உள்ள மாளிகைக்கு கடையில் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு மேல் இருக்கக் கூடாது. கடையிலும் முடிந்த அளவு வீட்டுக்கு பொருட்களை அனுப்ப சொல்லி விட்டனர்) பரவுவதை தடுத்து விட்டனர். அதே போல எந்தெந்த வீடுகளில் வைத்ததோ அந்த தளங்களை தினமும் இரு முறை சுத்தம் செய்தனர்.  

முதலில் எல்லோரும் சொல்கிறார்களே என்று பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சேர்ந்து விட்டேன். அப்போதுதான் சொன்னார்கள், ஒரு நாளைக்கு குறைந்தது ஐம்பதாயிரம் என்று. இருந்தாலும் பரவாயில்லை என்று வீட்டில் சொன்னதால், 4 நாட்கள் இருந்தேன். ஒன்றும் தேறவில்லை. 

பிறகு தெரிந்த மருத்துவர் "தயவு செய்து அரசு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்" என்றார். அவரே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பேசி ஏற்பாடுகள் செய்து, 4 நாட்களுக்கு பிறகு அங்கே சென்று சேர்ந்தேன். உண்மையில் ஒரு சில குறைகள் இருந்தாலும் (சாப்பாடு சரியில்லை, கீழ்நிலை பணியாளர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்கிறார்கள், அதே போல உடன் ஒருவர் இருந்தால் மட்டுமே நம்மால் ஓய்வு எடுக்க முடிகிறது) உண்மையில் நல்ல கவனிப்பு. ஒரு சில தாமதங்கள் இருந்தாலும், இறுதியாக 'இல்லை' என்று முடிவு வந்த பிறகே அனுப்பினார்கள். 

இரண்டு வாரங்கள் ஆகிறது வீட்டிற்கு வந்து. நுரையீரலில் பாதிப்பு உள்ளதால், கண்டிப்பாக ஒரு மாதமாவது ஓய்வு எடுத்தாக வேண்டும் என்று சொல்லி விட்டனர். வேலையும் வீட்டில் இருந்தே என்பதால், வெளியே போக வேண்டிய பிரச்சினை இல்லை. வீட்டில் மனைவிக்கும், மக்களுக்கும் சோதித்ததில் அவர்களுக்கு இல்லை என்று உறுதி ஆகி விட்டது. அவர்களும் நான் இல்லாத நேரத்தில் எல்லா பொருட்களும் வீட்டிற்கே வருமாறு செய்தாகி விட்டது. இப்போதும் அதே தொடர்கிறது. என்ன வீட்டில் எந்த சிறு வேலையும் செய்ய விட மாட்டேன் என்கிறார்கள். சும்மாவே இருப்பது மிகவும் கடினம் என்று வடிவேலு சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. 

மக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அரசு மருத்துவமனையில் நன்றாக வந்த ஆட்கள் மரணத்தை தழுவியதை நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். வேறு பல உடல் பிரச்சினைகள் இருப்பவர்கள் என்றால், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனக்கே நடுவில் பயம் வந்து விட்டது. 30 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகமாக வருகிறது என்று அங்கிருந்த மருத்துவர்கள் சொன்னார்கள். நானும் அதில் ஒருவன். நல்லதோ கெட்டதோ அனைவரும் மிக கவனமாக இருக்கவும். 

இனியாவது மாதம் ஒரு பதிவு போடுவேன் என்று 391645ஆவது முறையாக சபதம் எடுத்துக் கொண்டு, மீண்டும் சந்திப்போம்.  

6 comments:

  1. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய் விட்டது ...உடல் நலம் தேறினாலும் அவதானமாக இருக்கவும் .கடவுள் காப்பாரியது
    கரிகாலன்
    www.karikaalan.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி கரிகாலன். கவனமுடனே இருக்கிறேன்.

      Delete
  2. உடல் நலம் பெற்று மீண்டு வந்தது கண்டு சந்தோஷம்.....

    ReplyDelete
  3. முதலில் அதிர்ச்சி... பிறகு மகிழ்ச்சி...

    எதற்கும் எப்போதும் கவனமாக இருங்கள்...

    எழுத்து நடையே உங்களின் மன தைரியத்தை தெளிவாக சொல்கிறது... 391646 தடவையாக சொல்கிறேன் - தொடர்ந்து எழுதுங்கள்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் அவர்களே. உங்களை போன்றோரின் ஊக்கம்தான் காரணம். கண்டிப்பாக எழுதுவேன்.

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..