Sunday, April 2, 2023

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அனைவருக்கும் வணக்கம். 2023 சிறப்பாக போய்க்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். வழக்கம் போல ஊறுகாய் போல எல்லா விஷயங்களையும் தொட்டு செல்கிறேன். 

ஆஸ்கார் மரகதமணி: எப்போதுமே ராஜா, ரஹ்மான் என்றுதான் பதிவுகளும், சண்டைகளும் நடக்கும். எப்போதாவது ஹாரிஸ், யுவன். திடீரென எங்கிருந்து வந்தார் என்றே தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு, 2020ல் தான் இசை அமைப்பதில் இருந்து ஓய்வு பெறப்போவதாக படித்தேன். இதையேதான் ரஹ்மானும் அவருடைய வாழ்த்தில் சொல்லி இருந்தார்.


பணம் கொடுத்து வாங்கினார்கள், இதை விட நல்ல பாடல்களை மரகதமணி கொடுத்துள்ளார் என்று என்னதான் சொன்னாலும் இது ஒரு புதுவித தொடக்கம். கண்டிப்பாக என்னுடைய முந்தைய பதிவில் சொன்னபடி இனி வரும் காலங்களில் கண்டிப்பாக இந்தியாவிற்கும் தமிழுக்கும் நிறைய ஆஸ்கார்கள் கண்டிப்பாக கிடைக்கும். 

எப்போதுமே, ஒரு சில இயக்குனர் - இசையமைப்பாளர் இணை ஒரு போதும் சோடை போகும் பாடல்களை கொடுத்ததே இல்லை. மணிரத்னம் இளையராஜா, மணிரத்னம் ரஹ்மான், சங்கர் ரஹ்மான், பாசில் இளையராஜா, சரண் பரத்வாஜ் என்று நிறைய. அதில் ராஜமௌலி மரகதமணியும் ஒன்று. அவர்களின் ஆரம்பகால பாடல்கள் முற்றிலும் தெலுங்கு வாடை அடித்தாலும், நான் ஈ படத்தில் இருந்து மரகதமணி இசை உலகத்தரம். 

ஆரம்பகால கட்டங்களில் ஜாதி மல்லி, நீ பாதி நான் பாதி, வானமே எல்லை, அழகன் என்று பாலச்சந்தர் மற்றும் அவர்களது சீடர்களுக்கும் நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். இன்னும் அடுத்தடுத்த படங்களில் நிறைய விருதுகளை வெல்லவும், வெளிநாட்டுப் படங்களுக்கு இசை அமைக்கவும் வாழ்த்துக்கள். 

எனக்கு புரியாத ஒரு விஷயம் என்னவென்றால், இதை வைத்து ரஹ்மான் ரசிகர்களும், மரகதமணி ரசிகர்களும்தானே சண்டை போட வேண்டும். ராஜா ரசிகர்கள் ஏன் குறுக்கே மறுக்கே விழுந்து சண்டை போடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை திடீரென ஜேம்ஸ் வசந்தன் வேறு ராஜா 2 வருடங்களுக்கு முன்னால் உளறியதை மீண்டும் தூண்டி விட்டுள்ளார். ஐயோ ஐயோ.

விமர்சனம்: உண்மையில், தமிழில் டாடா படம் தவிர வேறு எதுவும் பார்க்கிற மாதிரியே இல்லை. வாரிசு, துணிவு, வாத்தி எல்லாம் உண்மையில் மரண மொக்கை. தெலுங்கு இயக்குனர்கள் தமிழில் படம் எடுக்கும் பொது மாற்றுகின்ற ஒரே விஷயம், அங்கு எப்போதுமே இரண்டு நாயகிகள். தமிழில் ஒரே ஒரு நாயகி. அதைத் தவிர மற்ற எல்லாமே அப்படியே தெலுங்கு வாடைதான். அதிலும் தெலுங்கில் வீரசிம்ஹா, வால்டர் வீரய்யா படங்களை பார்த்து நொந்து விட்டேன். 


முன்பெல்லாம் ஆங்கிலப் படங்களின் கதைக்களம் தெரிந்தாலும் தொழில் நுட்பத்தோடு (நெசமாத்தான்) பார்ப்போம். இப்போதெல்லாம், பார்க்கவே தோன்றுவதில்லை. Horror வகையறாவில் உள்ள முக்கால்வாசி படங்கள் ஒரே மாதிரியான களம், காட்சிகள். இன்னும் கொஞ்ச வருடங்களில் படம் பார்ப்பதையே விட்டு விடுவேன் என்று நினைக்கிறேன்.

இணையத் தொடர்கள் இன்னும் மோசம். ராணா நாயுடுவை தெரியாமல் பார்த்து தொலைத்து விட்டேன். 20 வருடங்களுக்கு முன்பே மறந்து போயிருந்த கெட்ட வார்த்தைகளை மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டார்கள். இந்த தொடர்களில் பிரச்சினை என்னவென்றால், நிறைய நாமே அனுமானித்துக் கொள்ள வேண்டும். அடுத்த பாகத்துக்கு என்று பாதி விஷயங்களை தொங்கலில் விடுவது என்று ஒரு திருப்தியே இருக்காது. என்னவோ போங்க. 

அரசியல்: திமுகவினர் ஆட்டம் அதிகமாகி விட்டது. இவர்களே பாஜக வர வழி வகுத்து விடுவார்கள் போல. ஒரு சில சங்கி நண்பர்கள் கூட "ஏன், பாஜக வந்தா என்ன. ஏற்கனவே தமிழ்நாடு முன்னேறி இருக்கு. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தா, இதே வழியிலதான் நாங்களும் போவோம். அப்புறம் என்ன" என்று கேட்டனர். 

என்னுடைய பதில் இதுதான். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை என்பதில் சமத்துவம், சமூக நீதி போன்றவை உள்ளன. அவை அதனை செயல்படுத்துகிறதா என்பது வேறு. ஆனால், உங்களுடைய கொள்கையில் இது எதுவும் இல்லை. அதனால்தான் எனக்கு நீங்கள் வேண்டாம் என்றேன். அதற்கு வழவழ கொழகொழ என்று பதில் வந்தது. நாங்கள் இந்த வரலாற்றை மாற்றுவோம். உண்மையான கலாச்சாரம் பற்றி மக்களுக்கு சொல்லுவோம் என்று. இதிலும் நன்மைகள் உள்ளன என்றெல்லாம் சொன்னார்கள். 

உலகத்தில் எந்த செயலுமே தீமை கிடையாது. ஆனால், அது எத்தனை பேருக்கும் நன்மை என்பதில்தான் விஷயமே உள்ளது. சரி திமுக விஷயத்திற்கு வருவோம். நம்மை விட்டால் வேறு நாதி இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விட்டது. இதுவே அழிவிற்கு முதல் காரணமாக அமையக்கூடும். திருந்துங்கள், இல்லையேல் உங்களுடன் சேர்ந்து மக்களும் பிற்காலத்தில் வருத்தப்படும்படி ஆகி விடும். 

அவ்வளவுதான். மீண்டும் சந்திப்போம். 

2 comments:

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..