Tuesday, October 14, 2008

சினிமா சினிமா

சமீப காலமாக வலைப்பூவில் தொற்று வியாதி பரவியுள்ளது. தசாவதாரத்தை தொடர்ந்து அப்படி வந்துள்ளது 'சினிமா சினிமா' பதிவுகள்.
இது ஒருவகை MLM (Multi-Level Marketing - தமிழில் என்ன??) வகையில் வருகிறது. ஒவ்வொருவரும் தனது நண்பர்களை பதிவிட அழைக்கின்றனர். இது 'இட்லி வடையார்' சொன்னது போல நமக்கு நாமே திட்டமல்ல. ஏனென்றால் அவர் அழைத்த 94 பேரில் நானும் ஒருவன்.. (ஆனால் நான் ஆயிரத்தில் ஒருவன்.. அதுவும் அவ்வப்போது பதிவிடும் பத்தாயிரத்தில் ஒருவன்..).சரி.. சரி.. தொழில்ல இறங்குவோம்..


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


எல்லோரும் சொல்வது போல எனக்கும் சுத்தமாக நினைவில்லை. பக்கத்தூரிலுள்ள டூரிங் டாக்கீஸில் ஒரு படம். பிரபு, பிரேம், செந்தில்,ரூபிணி நடித்தது. பெயர் சுத்தமாக நினைவில்லை. அடுத்து ஓரளவு நினைவில் உள்ளது 'அபூர்வ சகோதரர்கள்'. அதுவும் புலி வரும் காட்சியை வைத்து அனுமானித்து சொல்கிறேன். நன்றாக நினைவிலுள்ள படம் 'சின்ன பசங்க நாங்க'. முரளி, ரேவதி நடித்தது.
உணர்ந்தது எதுவுமில்லை.


2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?


'பொய் சொல்ல போறோம்'. மிகவும் ரசித்து, சிரித்து பார்த்தேன். அதற்கு முன் 'ச-ரோ-ஜா'. அது பயங்கரமாக ரசித்தேன். நண்பர்களுடன் சென்றதால் அருமையாக இருந்தது.


3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


தொலைக்காட்சியிலும், டிவிடியிலும் பொதுவாக எதையும் முழுதாக பார்ப்பதே இல்லை. திடீரென சில நாட்களுக்கு முன் 'பஞ்ச தந்திரம்' டிவிடி கையில் சிக்கியது. ஏற்கனேவே எண்ணிலடங்கா முறை பார்த்திருப்பேன். ஆனாலும் மீண்டும் ஒரு முறை ரசித்தேன். அடுத்த முறையும் பார்ப்பேன் என நினைக்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ஏதாவது ஒரு காட்சியில், பின்னணியில் நடிப்பவர்களின் அசைவுகளை கவனிப்பேன். ஏதாவது புதியதாக தெரியும். அனுபவிப்பேன். ஆனால் ஆராய்ந்து சொல்ல தெரியவில்லை.


4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா.


'மகாநதி'. சிறு வயதில் படம் பார்க்கும்போது எந்த சோக காட்சி வந்தாலும் அழுவேன். ஓரளவு நினைவு தெரிந்த பின், அதே காட்சிகளை பார்த்தபோது சிரித்தேன். ஆனால், நிறைய முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் கண்கள் கலங்குவது இந்த படத்திற்கு மட்டும்தான். இது என்னை மிகவும் பாதித்த படம்.

என்னை தாக்கிய படம் என்றால், அது பமீலா ஆண்டேர்சனின் ஒன்று விட்ட பிரதர் சாம் ஆண்டெர்சன் கடித்த, ச்சீ நடித்த 'யாருக்கு யாரோ'. நானும், என் நண்பனும் மிகவும் கஷ்டப்பட்டு, வலையுலாவி, பதிவிறக்கம் செய்தோம். பாதியில், அவன் என்னை தாக்கியதில் எனக்கு ரத்தக்காயம். நான் படத்தை தொடர்ந்து பார்த்ததில், பீதியில், 'அது' ஆகி, பொட்டுக்கடலையும், வெறும் பரோட்டாவும் சாப்பிட வேண்டியதாகி விட்டது.


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தமிழகத்தின் தற்போதைய பெருந்தலைவர்கள் (கலைஞர், ஜெ, விஜயகாந்த், ராமதாஸ், திருமா) என அனைவரும் திரைப்பட உலகத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால், வித்தியாசமே தெரியவில்லை. என்ன, வெளியாகாத படத்தில் நடித்து விட்டு, 'நாளைய தமிழகமே' என்பதை பார்க்கும்போதுதான், நம் தலைவிதியை நினைத்து சிரிப்பு வரும்.

5-po. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தசாவதாரத்தில், கல்லை மட்டும் கண்டால் பாட்டில் வரும் கிராபிக்ஸ். படகு போவதை எடுக்க கமலுக்கு ஒரு ஆறு கூடவா கிடைக்கவில்லை என்று தோன்றியது. மற்றபடி படத்தில் எனக்கு குறையில்லை.

சிறு வயதில், வெளிநாடு சென்று வந்திருந்த ஒருவர், வாக் மேனோடு வீட்டுக்கு வந்திருந்தார். அதில், இளமைக்காலங்களில் வரும் 'ஈரமான ரோஜாவே' பாட்டைக் கேட்க வைத்தார். அதில், ஆரம்பத்தில் வரும் இசை இந்த காதிலிருந்து அந்த காதுக்கு போனது. எனக்கு லேசாக தலை சுற்றி விட்டது. அந்த பாட்டை கேட்கும் போதெல்லாம், சிறு புன்னகை தோன்றும்.

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இல்லை. நம்ப மாட்டீர்களே. சிறு வயதில், செய்தித்தாளை படிக்கும்போது, வண்ணமயமாக கண்ணை கவர்வது சினிமாதான். இப்போதும் கூட, கண்கள் முதலில் சினிமா செய்தியைத்தான் தேடும். இருக்கவே இருக்கிறது இணையம்.

7.தமிழ்ச்சினிமா இசை?

இசையராஜா. பாடல்கள் மட்டும்தான் இசை என்று நினைத்தபொழுது, பின்னணி இசையை உணர வைத்தவர். ஒரு முறை தொலைக்காட்சியில் 'அபூர்வ சகோதரர்கள்' படம் ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்க்க முடியாத சூழல். ஆனால் கேட்க முடிந்தது. அப்போதுதான் பின்னணி இசையின் அருமையை உணர்ந்தேன். Yahoo Groupsல் பின்னணி இசை பதிவிறக்கத்தை நிறுத்திய பின், நானே டிவிடி வாங்கி தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நமக்கு தமிழே 'டண்டணக்கா'. ஆங்கில படங்களையே தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட பின்தான் பார்ப்பேன். அதையும் மீறி, sub-title இன்றி பார்த்தபோது என்னை கலங்கடித்த படம் 'தாரே ஜமின் பார்'. தெலுகு, மலையாள படங்கள் பார்ப்பதுண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஓரிரு படப்பிடிப்புகளை பார்த்ததுண்டு. மற்றபடி எதுவுமில்லை. நேரடி சம்பந்தம் இல்லாததே தமிழ் சினிமா வளர உதவும் என்று நம்புகிறேன். இதை பற்றி பின்னர் விரிவாக சொல்கிறேன்.

10.தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக வந்த படங்கள் பெரும்பாலானவை தமிழ் சினிமா மரபுகளை உடைத்து வந்துள்ளன. எனவே, எதிர்காலம் மிகவும் நன்றாகவே இருக்கும்.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

முக்கால்வாசி பேருக்கு மேல் பைத்தியம் பிடித்து விடும் (என்னையும் சேர்த்துதான்). மீதி பேருக்கு தெளிந்து விடும்.

ஒருவேளை அப்படி நடந்து விட்டால், எனக்கு அந்த 366ஆவது நாளையும், அதற்கடுத்து வரும் நாட்களையும் நினைத்து பயமாக உள்ளது.

நான் யாரையும் அழைக்கவில்லை. இந்த பதிவை முதலில் படிக்கும் 5 பேரை (நம்பிக்கைதான் வாழ்க்கை) அழைக்கிறேன். ஒருவேளை அவர்கள் முன்னமே பதிவிட்டிருந்தால்,

'சமர்த்து.. சொல்றதுக்கு முன்னாடியே செஞ்சுட்டியே.. very Good'.

(தப்பிச்சண்டா சாமீ)


4 comments:

  1. நானும் ஒரு சமர்த்து:):):) பதிவு நல்லா இருந்தது.

    ReplyDelete
  2. good write ups...and nice photographs...

    ReplyDelete
  3. நல்ல சுவையான பதில்கள்

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..