Monday, June 18, 2012

ஆன்-சைட் அமெரிக்கா 1


என் புருஷனும் கச்சேரிக்குப் போனான் என்பது போல், என் தங்கமணி கூட 'எங்க ரங்கமணி ஆன்-சைட் போயிருக்காரு' என்று சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது. காலம் போன காலத்தில் நம்மை அனுப்பி படாத பாடு படுத்துகிறார்கள். எப்படியோ நானும் 'அமெரிக்கா' வந்து விட்டேன்.

அதற்காக முதலில் விசா நேர்காணலுக்கு அனுப்பும்போதே பயங்கரமாக தயார் செய்தனர். 'கண்ணைப் பார்த்து பேசு, மசால் கோட்டை தாண்டாமல் நில், பயப்படாமல் பேசு, ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் நன்றி சொல்' எனப் பலப் பல விஷயங்கள். அங்கு என்னடாவென்றால் கல்யாணம் ஆகி விட்டதா என்று சம்பந்தமே இல்லாமல் கேட்டு விசா கொடுத்து விட்டனர்.

சரி, அலுவலகத்தில், இதோ அதோ என்று இழுத்தடித்து, கடைசியில் கிளம்ப வேண்டும் என்று நிச்சயமாக தெரிந்த பின், மூன்று மாதத்திற்கு தேவியான அரிசி, தொக்கு, ரெடி மிக்ஸ் என்று பலப் பல விஷயங்களை தயார் செய்ய வேண்டும். அதற்கு அங்கிருந்து திரும்ப வந்த நண்பர்களின் உதவி மிக முக்கியம். அவர்களின் உதவியோடு எல்லாம் வாங்கி, ஆயத்தப்பட வேண்டும்.

விமானத்தில், நினைத்தது போலவே, உலக வரலாற்றில் முதல் முறையாக எனக்கு அருகில் ஒரு அழகிய வெளிநாட்டு இளம் பெண். ஆனால், அதற்கு அந்தப் பக்கம், நம்மாளு. "அவருக்கு இதாம் மொத தடவையாம். சீட் பெல்ட் போட தெரியாதாம்." அட பக்கி. அதுக்கப்புறம் அவன் போட்ட கடலைல அந்த பொண்ணே கடுப்பாகி சீட் மாறி போயிடுச்சி.

இறங்கிய பின், ஓரிரு நாட்கள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலவே இருந்தது. பேசுவதும் புரியாமல், என்ன செய்வதென்றும் தெரியாமல். அதன் பின்புதான் ஓரளவு தெளிவானது. என்னதான் நிறைய படித்திருந்தாலும், நண்பர்கள் மூலம் கேள்விப் பட்டிருந்தாலும், நேரில் காணும்போது உண்மை கொஞ்சம் உறைக்கத்தான் செய்கிறது.

விதிகளை மதிக்கும் பண்பு. அதில் பயத்தை விட நிறைய மரியாதையே உள்ளது போல படுகிறது. ஏற்கனவே நம்மூரில் சாலை நடைமுறையைப் பற்றி குமுறி இருக்கிறேன். வேலையை சரியாக செய்தவுடன் மனமுவந்து பாராட்டுகிறார்கள். நம்மூரில் தலை கீழாக நின்றாலும் அது நடக்காது.யாராக இருந்தாலும் மதிக்கும் குணம். குழந்தைகளுக்கும் ஏன் விலங்குகளுக்குக் கூட நிறைய மரியாதை. இருந்தாலும் திருஷ்டி இல்லாமலா? ஒரு சில பேர் நம்மைப் பார்த்தாலே, ஏதோ வாந்தி வருவது போல முகம் மாறுவது. நம்மைப் பார்த்து புன்னகை செய்தாலும், ஏதாவது உதவி கேட்டால் ஒதுங்கி விடுவது (என்னுடைய அனுபவம்). அதிலும் இங்கு ரொம்ப நாளாக இருக்கும் நம்மாட்களோ, அவர்களே பரவாயில்லை எனும்படி ஆக்கி விட்டார்கள். தமிழில் பேசுகிறார்களே என்று "எப்படி இருக்கீங்க" என்றால் "Doing Good" என்று சொல்லி விட்டு ஓடி விடுகிறார்கள்.


இன்னொரு மிக முக்கியமான விஷயம். கலாச்சாரம் என்று ஏதோ உண்டாமே. நமக்கே அது கிட்டத்தட்ட காணாமல் போய் விட்டது. இங்கே என்னுடைய வெள்ளைக்கார அதிகாரி தன்னுடைய குடும்ப புகைப்படத்தைக் காட்டி (நம்மூரில் அது எப்போது நடக்காது) அது என்னுடைய பெண், பக்கத்தில் இருப்பது அவளுடைய 'Boy Friend' என்றார். நமக்குத்தான் எவ்வளவோ கேள்விப்பட்டிருந்தாலும், படித்திருந்தாலும் சற்றே 'சுரீர்' என்றது.


இன்னொரு முக்கியமான தகுதி, கார் ஓட்டுவது. இல்லையெனில் யாரையாவது நம்பிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். வீடியோ கேமில் ஓட்டுவது போல சுலபம்தான் என்றாலும், விதிகள்தான் மிகவும் முக்கியம். எனக்கு மூன்று மாதம்தான் என்பதால் பிரச்சினை இல்லை.

எல்லாம் எங்களுக்குத் தெரியும், நாங்களும் அமெரிக்கா போயிருக்கோம் என்பவர்களுக்காக, "நானும் போயிருக்கேன். இத வச்சி ஒரு பதிவு போடலாமுன்னுதான்.. வேற ஒன்னுமில்லீங்கோ"



4 comments:

  1. Enjoy the vacation sorry onsite trip.

    ReplyDelete
  2. good writing...nalla comedy-a eluthiringa....keep it up...

    ReplyDelete
  3. Most of them are true points.

    ReplyDelete
  4. நன்றி நண்பர்களே..

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..