Thursday, October 4, 2012

ஆளையே மயக்கும் ஆனந்த விகடன்

வீட்டிற்கு ஒரு புதிய தேவதை வந்து விட்டாள். அந்த மகிழ்ச்சியில் கொஞ்ச நாட்கள் சென்னைப் பக்கமே வரவில்லை அதுதான்

ஆனந்த விகடனில் இருந்த மதன் வெளியேறியதில் இருந்து சற்றே அரை மனதுடன் தான் படித்து வந்தேன். பேயோன் பக்கம், வட்டியும் முதலும் மற்றும் அவ்வப்போது சில நல்ல கட்டுரைகளும் வந்த வண்ணம் உள்ளன. இப்போது பல நல்ல புதிய பகுதிகளும் வருகின்றன

கடந்த வாரம் வந்ததில் பல கட்டுரைகள், அவை மனதைக் கவர்ந்தன என்று சொல்ல முடியாது, ஆனால் அனைத்தும் மனதை உறைய, பதற மற்றும் கலங்க வைக்கும் கட்டுரைகள். ஒவ்வொன்றாக பார்ப்போம்.

இடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது'

கூடங்குளத்திற்கு நான் ஆதரவா, எதிர்ப்பா என்று கேட்டால், சொல்லத் தெரியாத சராசரி குடி மகன் நான். நான் நன்றாக இருக்க வேண்டும். அதற்காக அடுத்தவன் குடி அழிவதில் எனக்கு விருப்பமில்லை. உண்மையில் அந்த கட்டுரையும் அணு உலை வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி இல்லை. அங்கு நடந்த அராஜகம், அத்து மீறல் பற்றித்தான்.

'மதராசி வக்கீல்'

நாமக்கல்லில், ஆதிக்க சாதியில் பிறந்து, சாதிப் பிரிவினையை எதிர்த்துப் போராடும் ரத்தினம் பற்றிய கட்டுரை. சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் கட்சிகள் பற்றி அவர் சொன்னவை சரியான சாட்டையடி. அதைப் பற்றி பாலா போட்ட கார்ட்டூன்.'இதுவும் கடந்து போகும்'

இதற்கு முந்தைய வாரம் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் பற்றி வந்தது. இந்த வாரம் அரசு மருத்துவமனைகளின் அவலம்.

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன், என் தாத்தா ஒருவரை பாம்பு கடித்து விட்டது என்று அரசு மருத்துவமனைக்கு போனோம். அனைவரையும் கவனிக்க வேண்டிய முறையில் கவனித்ததால் எல்லாம் நல்ல படியாக முடிந்தது. ஆனால், இன்னொரு தாத்தா, அதிகாலையில், தனியாக வண்டியில் செல்லும்போது விபத்திற்கு உள்ளாகி, ரத்தம் முழுதும் வெளியேறும் நிலையில் அரசு மருத்துவமனையில் போடப்பட்டார். யாரும் இல்லை. முதலுதவி கூட செய்யப்படவில்லை. அப்போது யாரோ ஒரு தெரிந்த புண்ணியவான் அவரைப் பார்த்து உடனே 'கவனிக்க' வேண்டியவர்களைக் கவனித்ததால், உயிர் மட்டும் பிழைத்தது. அப்போது அனைவரும் ஊரில் பேசிக் கொண்டது 'நல்ல வேளைப்பா.. கடைசி நேரத்துலயாவது பாத்த.. இல்லேன்னா..".. யாரும் பணியாளர்களைக் கேள்வி கேட்கவில்லை.

'மன்மோகன் சிங்கின் கொலை வெறித் திட்டம்'

நம் அனைவருக்குமே தெரிந்த உண்மை, ஒரே பொருள், ஒரே பகுதி, ஆனால் வேறு வேறு விலை. ஏன்? நாம் யோசிக்கவில்லை. தேவையும் இல்லை. ஏனெனில் நம்மிடம் பணம் உள்ளது. நமக்கு பணம் மரத்தில் காய்க்கவில்லை, ஆனாலும் ஒன்றும் கவலை இல்லை. மற்றவர்கள் எப்படிப் போனால் என்ன. அதுதான் நீங்களே சொல்கிறீர்களே, ஒரே பொருள், மூன்று விலை. காசில்லாதவர்கள் குறைந்த விலை பொருளை வாங்கட்டும்.

இது பொதுவாக அலுவலகத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது ரொம்ப நாள் முன்பு வந்த கருத்து. தவளையை தண்ணீரில் போட்டு சுட வைத்தால், எப்படி இருக்குமோ அது போலத்தான் இது. அமெரிக்காவில் நம்மூர் கடைகள் பலவற்றை பார்த்தபோது "பரவால்லையே, நம்மூரு கூட ரொம்ப முன்னேறிடிச்சே" என்று தோன்றியது. ஆனால் அது தப்பென்று உரைத்தது.எனது வெள்ளைக்கார அதிகாரி சொன்னது. "நான் வால் மார்ட்டில் எந்த பொருளும் வாங்க மாட்டேன். அது அமெரிக்காவில் பலரின் வாழ்க்கையை அழித்துள்ளது" என்றார். அவரின் நண்பர் வைத்திருந்த கடை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டது என்று கூறினார். நம்மூரு போல, ஆட்டோவும், அடியாட்களும்தான் வரவில்லை.

என்னடா, எல்லாமே சோகமாகவே உள்ளதே என்கிறீர்களா? கிரிஷா நாகராஜே கௌடா பற்றிய கட்டுரை, ஆறாம் திணை, புதிய கல்வி முறை என்று மகிழ்ச்சியான விஷயங்களும் உள்ளன. பதிவிறக்கம் செய்து படிக்க.

2 comments:

  1. மக்களே!

    உண்மையில் என்னுடைய கருத்துக்கள் அனைத்தும் நான் இன்னும் சொல்லவே இல்லை. இதைப் பற்றி பகிர வேண்டுமென்ற ஆர்வத்தில சற்றே அரை குறையானாளும் பரவாயில்லை என்று பதிவிட்டேன். கண்டிப்பாக இதைப் பற்றி இன்னும் விரிவாக, விரைவாக எழுதுவேன். யாரும் படிக்கவில்லை, மதிக்கவில்லை என்றாலும்.

    அரவிந்த்

    ReplyDelete
  2. இதை பற்றி? எதை பற்றி? விகடன் அல்லது? யுனீகோட் - ஆக மாட்ற என்ன பண்றீங்க? http://kandupidi.com/editor/ இது நல்லா இருக்கு- வேற ஆப்லைன் மாற்றி இருக்கா?

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..