Sunday, October 7, 2012

மனிதன், இந்தியன், தமிழன்

மனிதன், இந்தியன், தமிழன்

இந்த மூன்று வார்த்தைகளையும் நம்மூரில் யாரிடமாவது சொன்னால், உடனே அனைவரும் 'ரஜினி படம், கமல் படம், விஜய் படம்' என்றுதான் சொல்வார்கள். என்ன செய்ய. நம் புத்தி அப்படி. 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் மோகன் லால், அனுஜாவிடம் 'நீ யார்' என்றவுடன் அவர் 'பெண், இந்தியன், பத்திரிக்கையாளர்' என்பார். மோகன் லாலும் 'நல்லது, அந்த வரிசை எனக்குப் பிடித்தது' என்பார். அதே போலதான் நானும் இருக்க வேண்டும் என்று ஆசை. இந்தப் படத்தை பார்த்துதான் என்றில்லை. அதற்கு முன்பே அப்படிதான். எல்லோரும் அதே போல இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

ஆனா; நம்மால் எந்த நிலையிலும் இந்த மூன்றில் ஒன்றாகக் கூட இருக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். இந்தியாவிலேயே நம் தமிழர்களுக்கு மட்டும்தான் 'இந்தியன்' என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. அதனால்தான் இருப்பதிலேயே தமிழகம்தான் பாதுகாப்பான இடம் என்கிறார்கள். அது மட்டுமின்றி நமக்கு ஹிந்தி தெரியாததால், நாம் மற்றவர்களிடமிருந்து வித்தியாசம் தெரியக்கூடாது என்று இந்தியன் என்று சொல்லிக் கொள்வோம்.

ஆனால், வேறு எங்கும் நம்மை இந்தியாவில் உள்ளவன் என்றே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். "ஹிந்தி தெரியாதவனை எல்லாம் நாங்க இந்தியனா நினைக்கிறதில்ல" என்று என் நண்பனின் வட நாட்டை சேர்ந்த மேலாளர் சொல்கிறார். உண்மையில் வட நாட்டவர் ஆந்திர, கர்நாடக, கேரள மக்களையும் 'மதராசி' என்று ஒதுக்கினாலும், அவர்கள் ஹிந்தியில் பேசி ஒட்டிக் கொள்வார்கள். நாம் மட்டும் 'பே' என்று முழிப்போம்.

மனிதனாக இருக்கிறோமா என்றால் என்ன சொல்ல. பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்கிறேன், கண் தெரியாதவர்கள் சாலையைக் கடக்க உதவுகிறேன் என்பதா. நமக்கு தெரியாத ஆட்கள் பாதிக்கப்படும்போது நாம் என்ன செய்கிறோம். 'அதுக்குதான் அரசாங்கம்' இருக்கே என்கிறோம்.

பாரதி தாசனின் இந்தக் கவிதையை நிறைய பேர் படித்திருப்போம் என்று நினைக்கிறேன். இதில் வருவது போல, 'கடுகு உள்ளம்' கொண்டவர்கள் அனைவரும் 'மிக நல்லவர்கள், எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்கள்'. நானும் கடுகு உள்ளம் கொண்டவன்தான். என்ன செய்ய. கல்வி முறை, வளர்க்கப்பட்ட முறை அப்படி.

பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் 
இவையுண்டு தானுண்டு என்போன் 
சின்னதொரு கடுகு போல உள்ளம் கொண்டோன் 
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!

கன்னலடா என் சிற்றூர் என்போன் உள்ளம்
கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்

தொன்னையுள்ளம் ஒன்றுண்டு
தனது நாட்டுச் சுதந்திரத்தால் பிறர் நாட்டைத் துன்புறுத்தல்

ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார், அவரவர்தம் வீடு நகர் காக்க வாயடியும் கையடியும்
வளரச் செய்வார் மாம்பிஞ்சி உள்ளத்தின் பயனும் கண்டோம்

உள்ளம் அன்பு உள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே
என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே!

இந்தியனாகத்தான் நாம் நிறைய நேரம் இருக்கிறோம், அதுவும் தமிழனாக இருக்க வேண்டிய நேரங்களிலும். அணையை உடைத்தால் என்ன, அதுதான் புதிதாக கட்டி தண்ணீரை தருகிறேன் என்கிறார்களே, அங்கேயே பஞ்சம் என்கிறார்களே. அப்புறம் ஏன் தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்று வெட்டி நியாயம் பேசுகிறோம்.

அலுவலகத்தில், புதிதாக ஒரு ஆந்திர மேலாளர் வந்தார். அவர் வந்த பின், புதிதாக சேர்ந்த அனைவரும் ஆந்திர நாட்டவரே. அமெரிக்காவில் என்னுடன் வந்தவர் ஆந்திரா. அங்கே வெளியே செல்லும்போது யாராவது தெலுங்கு பேசினால், இவரே தானாக சென்று கொஞ்ச நேரம் பேசி விட்டுதான் வருவார். சரி, நாமும் முயன்று பார்க்கலாம் என்ற அனுபவத்தை ஏற்கனவே சொன்னேன்.

எனக்கு தெரிந்து, மற்ற மாநிலங்களை விட நாம் முன்னேறி இருப்பது, பெயரில் இருந்து சாதிப் பெயரை எடுத்ததுதான். இரு தலைமுறைகளுக்கு முன்னமே அது நடந்து விட்டது. ஆனால், அது பெயரில் இருந்து மட்டும்தான் நீங்கி உள்ளது. ஒவ்வொருவரும் தன் இடத்தை விட்டு வெளியே இருக்கும்போது தன் இடத்தவரைப் பார்க்கும்போது ஏற்படும் இன்பமும் பேச்சும் தமிழனிடம் குறைவுதான். இது சொந்த அனுபவம்.

எந்தவொரு விஷயத்திற்காக தமிழகத்தில் கடையடைப்பு நடந்தாலும் அது முழு ஆதரவுடன் இருக்காது. எல்லா துறையினரின் ஆதரவும் கிடைக்காது. கர்நாடகத்தில் பாருங்கள், தொலைக்காட்சியில் கூட ஒளிபரப்பு கிடையாது. சாலையில் சென்ற இரு சக்கர வாகனங்களின் சக்கரங்கள் கழற்றப்பட்டுள்ளன. நம்மவர்களைக் கேட்டால் 'அது அராஜகம்' என்பார்கள். நம்மாட்களுடைய போராட்டம் எல்லாம் முகப்புத்தகத்திலும், பதிவுலகிலுமே முடிந்து விடுகிறது.

அமெரிக்காவில் இந்தியர்கள் (சில தமிழர்கள், ஆந்திரா, வட நாட்டவர் எனக் கலவை) ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு அங்கு வந்த ஒரு அமெரிக்கர் "நீங்கள் அனைவரும் ஒரே நாடு, ஆனால் வேறு வேறு மொழியில் பேசுகிறீர்களே?" என்றார். அப்போது ஒரு வட நாட்டவர் "எங்கள் அனைவருக்கும் வேறு வேறு தாய் மொழி. எங்கள் அனைவருக்கும் ஒரு தேசிய மொழி உண்டு, அதுவும் சில பேருக்கு தெரியாது" என்று நக்கலாக சொல்ல அனைவருமே சிரித்தனர். பிறகு தனியே ஒரு சந்தர்ப்பத்தில், தேசிய மொழி எதுவும் இல்லை என்று ஆதாரத்துடன் சொன்னேன். உடனே அவர் "சரி நீங்கள் அதற்காக வேற்று நாட்டு மொழி கற்க வேண்டுமா?" என்றார்."சரி, நீங்கள் ஏன் கற்றீர்கள்? நான் எனது தாய் மொழியையும் ஒரு பொது மொழியையும் கற்றேன்" என்றேன். பதில் இல்லை

எப்போது மனிதனாக. இந்தியனாக, தமிழனாக இருக்க வேண்டும் என்பதை நானும் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. எனக்கு இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால் நான் நானாகவே உள்ளேன். பார்க்கலாம்.

4 comments:

  1. தமிழ் நாட்டில் மனிதனாக மதிக்கப்பட்டால் தமிழன் என்ற உணர்வு மேலோங்கும். இந்தியாவில் தமிழன் எனக்கூறி ஒதுக்காமல் இருந்தால் இந்தியன் என்ற உணர்வு உறுதியாகும். ஆக, நாம் மனிதனாக இருப்பது மட்டும் நம் கையில் உள்ளது.
    :)

    ReplyDelete
  2. உமக்கு ஆங்கிலம் அயல்மொழி என்றால் அவருக்கு இந்தி ஆங்கிலம் இரன்டுமே அயல்மொழிகள்தாம் என்று சோ முஹம்மது பின் துக்ளக்கில் சொன்னது வடவருக்கு என்று தான் புரியுமோ?

    ReplyDelete
  3. உமக்கு ஆங்கிலம் அயல்மொழி என்றால் அவருக்கு இந்தி ஆங்கிலம் இரண்டுமே அயல்மொழிகள்தாம் என்று சோ முஹம்மது பின் துக்ளக்கில் சொன்னது வடவருக்கு என்று தான் புரியுமோ?

    ReplyDelete
  4. யார் மொழி சிறந்தது எந்த மொழியை கற்க வேண்டும் என்றெல்லாம் சில்லறைத்தனமாக சண்டைஇட்டுக்கொண்டிருப்பதனால் தான் சில்லறை வணிகம் செய்ய அயல்நாட்டார் வருகிறார்கள். இவர்கள் ஆங்கிலம் கற்பது தேவை இல்லை என்பார்களாம். 3 மொழி கற்கும் தண்டனை நமக்கு மட்டும் ஏன்? அதுவும் எக்கச்சக்கமாக எழுத்துக்கள் உள்ள மொழியை ஏன் கற்க வேண்டும்? இப்போதெல்லாம் மெஷின் ட்ரான்ஸ்லேஷன் வந்து விட்டதே?

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..