Friday, March 29, 2013

ச்சே, என்ன மாதிரி ஜென்மங்களோ!?

காலை நேரம். தூக்கக் கலக்கம்.

"ஏ, பாப்பா கத்திக்கிட்டே இருக்கு பாரு, என்ன பண்ணிக்கிட்டிருக்க?"

"எனக்கு மட்டும் என்ன ஏழு கையா இருக்கு, நீங்கதான் கொஞ்சம் என்னன்னு பாக்குறது" 

முனகிக்கொண்டே எழுந்து, "ஏ, கன்னுக்குட்டி, செல்லம், என்னாச்சு, ஏன் அழுவுற" என்று குழந்தையைத் தூக்கி, ஏமாத்தி, பொம்மையைக் கொடுத்து சமாதானப்படுத்தினேன்.

"ஏய். காபியும், அந்த பேப்பரையும் கொண்டா" என்று கத்தி முடிக்கும் முன்பு இரண்டும் என் முன்னால் இருந்தது. "ச்சே ச்சே, எப்ப பாரு அங்க கற்பழிப்பு, இங்க பலாத்காரம், சினிமாவுல மதுரை அரிவாள் கலாசாரம் மாதிரி, இப்ப கற்பழிப்பு கலாச்சாரம் போலிருக்கு" என்றபடி, போய்க் குளித்து விட்டு வரும்போது, இட்லி தயாராக இருந்தது.

"ஏங்க, சாயந்திரம் வரும்போது நான் சொன்னத வாங்கிட்டு வாங்களேன்" என்றாள் மனைவி. "அதெல்லாம் போய் என்னால வாங்க முடியாது. பாப்பாவ தூங்க வச்சிட்டு நீயே போயி வாங்கிக்க. நான் வேற இன்னக்கி ஆபிஸ் வேலையா திருவள்ளூர் போகணும். ராத்திரி வர லேட்டாகும்" என்று கத்தி விட்டு கிளம்பினேன்.

பேருந்து நிறுத்தம் சென்று, தாம்பரம் பேருந்து ஏறினேன். "அப்பப்பா என்ன கும்பல்" என்று எண்ணியவாறே, ஒரு ஓரமாக நின்று கொண்டேன். இன்னும் அரை மணி நேரம் போகணுமே என்று எண்ணிக்கொண்டே, சும்மா உள்ளே நோட்டமிட்டேன்.



"அடப்பாவி, அந்தப் பொண்ண ஒரு பொறுக்கி எப்படி ஒரசிக்கிட்டிருக்கான், எவனாவது ஏதாவது கேக்குறானா பாரேன்" என்றபடி எல்லாரையும் பார்த்தேன். எல்லோரும் அங்கெ பார்த்து விட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டனர். "ச்சே, என்ன மனுஷங்களோ" என்றபடி மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். "இந்தப் பொண்ணாவது ஏதாவது சொல்லாம், யாருக்குத் தெரியும், அதுக்கும் ஆசையோ என்னவோ, ச்சே ச்சே" என்றபடி தாம்பரம் வந்து இறங்கினேன். அந்தப் பெண் கண்ணில் ஏதோ தூசி போல, தலையைக் குனிந்து கொண்டு, கண்களைத் தடவிக் கொண்டு போனது.

பின் ஓடிப்போய், திருவள்ளூர் செல்லும் பேருந்தைப் பார்த்தேன். முதல் பேருந்தில் உட்கார இடம் இல்லை. இன்னும் நேரம் இருந்ததால் அடுத்த பேருந்தில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சம் இந்தப் பேருந்தும் கும்பல் ஆனது.



பேருந்து கிளம்பும் நேரத்தில் ஒரு கணவன் மனைவி ஏறினர். அந்தப் பெண்ணுக்கு சற்றே மேடிட்ட வயிறு. ஏறியவுடன், அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்தனர். இடம் எங்குமில்லை. யாரும் எழுவது போல தெரியவில்லை. நான் எழ நினைத்தேன். பிறகு யோசித்து இன்னும் இரண்டு மணி நேரம் நிற்க வேண்டுமா, திரும்பி வரும்போது என்றால் பரவாயில்லை என்று யோசித்து, கண்களை மூடிக்கொண்டேன்.

மாலை வேலையெல்லாம் முடிந்து மீண்டும் தாம்பரம் வந்தேன். ஐந்தாறு வயதுள்ள சிறுவன் சிறுமி இருவரும் "சார் சார்" என்று பின்னாடியே வந்தார்கள். "போங்க போங்க, சில்லறை இல்லை, சும்மா நைனைன்னு பின்னாடி வராதீங்க" என்று விரட்டினேன்.

வீட்டுக்கு நடந்து போகும் வழியில், குழந்தைக்கு பொம்மைகள் வாங்கினேன். மனைவி கேட்டது நினைவுக்கு வந்தது. சரி, எப்படியும் வாங்கியிருப்பாள் என்று என்ன்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

டிவி ஓடிக்கொண்டிருந்தது. குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. "என்னடி, நீ கேட்டத வாங்கிட்டியா" என்றேன். எதுவும் பதில் இல்லை. "இதப் பாரு, அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம், நான் போயி எப்படிக் கேக்க முடியும்?" என்றபடி உடை மாற்றிக்கொண்டு வந்தேன். சாப்பாடு தயாராக இருந்தது. ரிமோட்டை எடுத்து வேறு மாற்றினேன். "அமில வீச்சால் இன்னொரு பெண் பலி" என்று செய்தி ஓடியது. "என்ன கொடுமையடா" என்று நினைத்துக்கொண்டே மீண்டும் மாற்றினேன். அந்நியன் படம் ஆரம்பித்திருந்தது. பின் சாப்பிட்டேன்.

மனைவியிடம் இன்று பேருந்தில் நடந்ததையெல்லாம் சொன்னேன். "எல்லோரும் வேடிக்கை பாத்துக்கிட்டே இருக்காங்க, என்ன மனுஷங்களோ" என்றேன். டிவியில் "யாராவது சோடா வங்கி வாங்களேன்" என்று ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். மனைவி பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு வந்தாள்.

"தூங்கலியா?" என்று கேட்டாள். "இல்ல ஒரு பதிவு எழுதலாம்னு இருக்கேன். நான் முடிச்சிட்டு தூங்கறேன்" என்றேன். "எதப்பத்தி?" என்றாள்.

"பாரேன், இந்த அமில கலாச்சாரம், கற்பழிப்பு. நாடு எவ்வளவு எவ்வளவு மோசமா இருக்கு. பெண்களுக்குன்னு பாதுகாப்பே இல்ல. இதப் பத்தி ஒரு பதிவு போட்டே ஆகணும் கண்டிப்பா. மாணவர்கள் எல்லாம் இலங்கைப் பிரச்சினைக்கு போராட்டம் பண்றாங்க. நம்மால முடிஞ்சத, ஒரு பதிவாவது போடனுமுல்ல" என்றேன்.

என் மனைவி என்னைப் பார்த்து சிரிப்பது போல தோன்றியது.

டிஸ்கி 1: உங்களில் யார் யோக்கியமானவனோ அவன் முதலில் கல்லை எரியட்டும். - இயேசு

டிஸ்கி 2: மத்தவங்க மனசு புண்படும்படி ஒரு வார்த்தை சொன்னாலும், மனசுல நினைத்தால் கூட அது குற்றம்தான் - ஈரம்.

2 comments:

  1. இன்றைய நிலையை உங்கள் ஒரு நாள் அனுபவத்தில் அழகாக விளக்கி உள்ளீர்கள்.

    ReplyDelete
  2. நன்றி கிருஷ்ணா. இது என்னுடைய அனுபவமாக மட்டும் இருக்காது என்று நினைக்கிறேன். அதனால்தான் 'தன்னிலையில்' எழுதியுள்ளேன்.

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..